Thursday, July 31, 2014

இலங்கை வானொலியின் புகழ்

தற்செயலாக தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. விஜே தொலைக்காட்சியின் நீயா நானா என்ற அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஒருவர் இலங்கை வானெலியைப் பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பலரும் இலங்கை வானொலியைப் பற்றியே புகழாரம் சூடிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது நிகழ்ச்சி அமைப்பாளர் கோபிநாத்தும் அதைப்பற்றியே புகழாரம் சூடிக்கொண்டிருந்தார். இப்படிப் புகழ்ந்தவர்கள் வேறுயாருமல்ல, அத்தனை பேரும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இலங்கை வானொலி நேயர்கள். அவர்கள் புகழ்ந்தது இன்றைய இலங்கை வானொலியை அல்ல, எழுபது, எண்பதுகளில் ஒலிபரப்பிய அன்றைய இலங்கை வானொலியை என்பது அவர்கள் குறிப்பிட்ட பாடல்களில் இருந்து தெரிய வந்தது. அப்பொழுது அவர்கள் மாணவர்களாக, இளம்பருவத்தில் துள்ளித்திரிந்த காலம்.  கிராமங்களிலோ அல்லது நாட்டுப் பக்கங்களிலோ தொலைக்காட்சியே எட்டிப் பார்க்காத காலமது. அப்போது வானொலி ஒன்றுதான் அவர்களின் பொழுது போக்குச்சாதனமாக இருந்ததாம்.


அந்த நாட்களில் இந்திய வானொலியில் வர்த்தகசேவை இருந்தாலும் அது சரியான முறையில் இயங்கவில்லை. அதாவது மக்களைக் கவரக்கூடியதாக அதன் சேவை முழுநேர சேவையாக அமையவில்லை. அப்படி இல்லை என்று வானொலியைத் திருப்பினாலும் கர்நாடக சங்கீதமே காதில் கேட்கும். அதனால்தான் தென்னிந்தியாவில் பலரும் முழுநேர சேவையாற்றிய திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பிய இலங்கை வானொலியின் நேயர்களாக மாறியிருந்தனர். இதற்கு இன்னுமொரு காரணமும் சொல்லியிருந்தனர். அதாவது அந்த நாட்களில் எல்லோரிடமும் வானொலிப் பெட்டியை வைத்திருக்கும்  வசதி இருக்கவில்லையாம். நவீன சாதனங்களான ஒலிப்பதிவுக் கருவிகளும் அதிகம் இருக்கவில்லையாம். எனவே இசை ஆர்வலர்கள் இலங்கை வானொலி ஒலிபரப்பையே அதிகம் நம்பியிருந்தார்களாம். இளம் வயதினர் பலர் பக்கத்து வீட்டிலேயோ அல்லத உணவு விடுதிகளிலேயோ இருந்து ஒலிபரப்பாகும் இலங்கை வானொலிப் பாடல்களைக் கேட்கவேண்டிய சூழ்நிலையில் இருந்தார்களாம்.


இத்தனை பேரைக் கவர்ந்திழுத்த இலங்கை வானொலி 1922ம் ஆண்டுதான்  சோதனை முறையில் முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்டது. 1925ம் ஆண்டு கொழும்பு வானொலி என்ற பெயரில் இயங்கினாலும் 1949ல் தான் இலங்கை வானொலி எனப் பெயர் மாற்றப்பட்டது. பின் இதே இலங்கை வானொலிதான் 1967ல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டது. இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தக சேவை ஒலிபரப்பாளராக ஈடுபட்ட அனைவருமே ஒரு காலத்தில் சினிமா கதாநாயருக்கு நிகராகக் கணிக்கப்பட்டார்கள். தமது கம்பீரமான குரலால் சர்வதேசம் எங்கும் நேயர்களைத் தேடிக் கொண்டவர்கள். முகம் காட்டாத கதாநாயகர்களாக, கதாநாயகிகளாக இருந்த இவர்களை நேரிலே சந்திக்க வேண்டும் என்று நேரடியாகவே பல மைல்கள் பயணம் செய்து இலங்கை வானொலி நிலையத்திற்கு வந்தவர்கள் பலர். இலங்கை வானொலி முற்றத்து மண்ணை எடுத்துச் சென்று பாதுகாப்பாகப் பூசை அறையில் வைத்த தமிழ் நாட்டு நேயர்களும் உண்டு என்று வானொலி நடிகர் கே. எஸ். பாலச்சந்திரன் ஒருமுறை குறிப்பிட்டதும் ஞாபகம் வருகின்றது.
அந்த வகையில் நான் சிறுவனாக இருந்தபோதும் சரி, பிற்காலத்தில் அந்த மண்ணில் வாழ்ந்த காலம் வரை இலங்கை வானொலி ஒலிபரப்பாளர்களாக ஈடுபட்டிருந்த பலரின் பெயர்கள் இப்பொழுதும் நினைவில் நிற்கின்றன. இவர்களில் வர்த்தக ஒலிபரப்பின் மூத்த அறிவிப்பாளராகக் கடமையாற்றிய எஸ்.பி. மயில்வாகனன் மறக்கமுடியாதவர். இவரைவிட வீ. சுந்தரலிங்கம், ராஜகுரு சேனாபதி கனகரட்ணம், வீ.ஏ. கபூர், எஸ். புண்ணியமூர்த்தி, எஸ்.கே. பரராஜசிங்கம், சற்சொரூபவதிநாதன், கே. எஸ். ராஜா, பி.எச். அப்துல் ஹமீட், விமல் சொக்கநாதன், சரா இமானுவேல், சில்வெஸ்டர் பாலசுப்ரமணியம், ராஜேஸ்வரி சண்முகம், பி.விக்னேஸ்வரன், ஜோர்ச் சந்திரசேகரன், எஸ். நடராஜசிவம், ஜோர்க்கிம் பெர்னாண்டோ, வி.என்.மதியழகன், மயில்வாகனம் சர்வானந்தா, ஆர். சந்திரமோகன், செல்வம் பெர்ணான்டோ, எஸ் கணேஷ்வரன், எழில் வேந்தன், கமலினி செல்வராஜன், கமலா தம்பிராஜா ,ஆகியோர் இப்பொழுதும் எனது நினைவில் நிற்கின்றார்கள். அதன் பின் பல அறிவிப்பாளர்கள் இலங்கை வானொலியில் திறம்படச் சேவையாற்றினாலும் அவர்களின் பெயர்களை எல்லாம் நினைவில் வைத்திருக்க முடியவில்லை.


இலங்கை வானொலியின் தமிழ் சேவை ஒன்றில் நாடகங்கள் பல இடம் பெற்றாலும், நான் அறிந்த வகையில் பி. விக்னேஸ்வரனின் நாடகங்கள் ஒரு காலகட்டத்தில் பல நேயர்களின் பாராட்டைப் பெற்றிருந்தன. எனது ஊரவர் மட்டுமல்ல, நான் படித்த நடேஸ்வராக்கல்லூரியில் அவரும் படித்ததால் படிக்கிற காலத்திலிருந்தே நான் அவரை அறிவேன். அதேபோல வர்த்தக சேவையான தமிழ் சேவை இரண்டில் இடம் பெற்ற நாடகங்கள் சில புகழ் பெற்ற நாடகங்களாக பலர் நேயர்கள் விரும்பிக் கேட்ட நாடகங்களாக இருந்தன. சில்லையூர் செல்வராஜனின் தணியாத தாகம், வரணியூரானின் இரைதேடும் பறவைகள், ராமதாஸின் கோமாளிகளின் கும்மாளம், கே. எஸ். பாலச்சந்திரனின் கிராமத்துக் கனவுகள் போன்றவை அந்தக் காலகட்டத்தில் பலராலும் கேட்கப்பட்ட புகழ்பெற்ற வானொலி நாடகங்களாக இருந்தன.


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாடல்கள் பிடிக்கலாம். அந்தப் பாடலின் இசைக்காக, அதன் பாடல் வரிகளில் வெளிப்படும் கருத்திற்காக, அந்தப் பாடல் வரிகளில் வரும் சம்பவங்களோடு அவர்களுக்கும் ஏதோ வகையில் தொடர்பிருப்பதற்காக, அந்தப் பருவத்தில் அவர்களைக் கவருவதற்கு ஏதாவது காரணமிருக்கலாம். விஜே தொலைக்காட்சியில் நடந்த அந்த நிகழ்ச்சியின்போது ஒருவர் நேரத்தின் மகத்துவத்தைச் சொல்லித் தந்தது இலங்கை வானொலிதான் என்று அதற்குரிய விளக்கமும் தந்தர்ர். இன்னுமொருவர் பிறந்தநாள் இன்று பிறந்தநாள் என்று தமிழில் தொடங்கும் போதே ஒரு புத்துணர்ச்சி மனசுக்கள் ஏற்பட்டுவிடும், இப்போதெல்லாம் ஹப்பி பார்த்டே என்று ஆங்கிலத்தில்தான் தொடங்குகிறார்கள் என்று குறைப்பட்டுக் கொண்டார். இன்னுமொரு நேயர் ‘தோல்வி நிலையென நினைத்தால்’ என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கப் பழகிக் கொண்டதாகக் குறிப்பிட்டார். நான்கூட மாணவனாக இருந்தபோது இந்தப் பாடலைக் கேட்டிருக்கின்றேன். இந்தப் பாடலை புளட் இயக்கத்தினர் தங்கள் சிற்றலை வரிசை வானொலியில் தங்கள் நிகழ்ச்சி தொடங்கும்போது தினமும் ஒலிபரப்புவார்கள். அகிம்சை முறைப் போராட்டம் எந்தப் பலனையும் தராது தோற்றுப் போனதால், தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டம் நோக்கித் தங்கள் பார்வையைத் திருப்பிய காலக்கட்டம் அதுவாக இருந்தது.


இதைவிட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தங்களுக்குப் பிடித்தமன பாடல்களின் சில வரிகளைப் பாடியும் காட்டினார்கள். இளமைப் பருவத்தில் இசையை ரசிக்கவும் நல்ல உணர்வுகளைத் துண்டிவிடுவதற்கும் காரணமாக இந்தப் பாடல்கள் இருந்தனவாம். ஜோடிகளாக வந்திருந்த பலர் தாங்கள் காதல் திருமணம் செய்வதற்கு இலங்கை வானொலியில் ஒலிபரப்பிய சிலபாடல்கள் ஒருவகையில் தங்களுக்கு உதவியதாகக் குறிப்பிட்டனர். பழைய நினைவுகளை மீட்டபோது, அவர்கள் குறிப்பிட்ட பாடல்களின் சிலவரிகளை இங்கே தருகின்றேன். நல்ல இசையோடு கூடிய அர்த்தமுள்ள பாடல்களாக அவை இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இசையில் ஆர்வம் இருந்திருந்தால், நீங்கள்கூட இப்படியான பாடல்களைக் கேட்டிருக்கலாம். உங்களுக்குக்கூட இது போன்ற சில பாடல் அனுபவங்கள் கடந்தகாலத்தில் என்றாவது ஒருநாள் ஏற்பட்டிருக்கலாம். அப்படியானால், இப்போது உங்கள் நினைவுகளையும் ஒருமுறை மீட்டிப் பாருங்கள்.
இதோ அவர்கள் குறிப்பிட்ட பாடல் வரிகளைப் பாருங்கள். கண்ணில் என்ன கார்காலம், (படம்-உன்கண்ணில் நீர் வழிந்தால். வைரமுத்துவின் பாடல் வரிகள்) நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா (படம் இதயக்கோயில். வைரமுத்துவின் பாடல் வரிகள்), அன்னக்கிளி உன்னைத் தேடுதே, ஈரமான ரோஜாவே (இளமைக்காலங்கள்), அந்தி மழை பொழிகிறது, உனக்குமட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன், ஒரு நாள் உன்னை நான் பார்த்தது, மலரே என்னென்ன கோலம், விழியிலே கலந்தது உறவிலே மலர்ந்தது, உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது, கண்ணன் ஒரு கைக் குழந்தை, நினைவோ ஒரு பறவை, என் தாய் என்னும் கோயிலிலே, உறவென்னும் புதிய,  வண்ணப்பூ சூடவா வெண்ணிலா, இந்த மேகக் கூந்தல் கலைந்தால், காதல் ஓவியம், ஆயிரம் மலர்களே மலருங்கள், உன் நெஞ்சிலே பாரம், உறவுகள் தொடர்கதை, உன்னை நான் பார்த்தது, கோவில் மணி ஓசை கேட்டது, மாஞ்சோலைக் குயிலே, பார்வை நூறு போச்சு, மின் மினிக்கு, நான் உங்கவீட்டுப் பிள்ளை, குயிலே குயிலே கவிக்குயிலே, நாலு பக்கம் வேடர் உண்டு., சித்திரச் செவ்வானம் சிரிக்க் கண்டேனே, என் இனிய வெண்ணிலாவே, ஒரே நாள் உனைநான் நிலாவில் பார்த்தது, மீன் கொடித் தேரில் மன்மத ராஜன், வான் நிலா நிலா அல்ல, மெட்டி ஒலி காற்றோடு, புத்தம் புதுக் காளை, பட்டுக் கன்னம் தொட்டு, அந்த மானைப் பாருங்கள் அழகு, நினைவாலே சிலை செய்து உனக்காக, காத்தாடி பாவாடை காத்தாட,  எங்கும் மைதிலி..மைதிலி என்னைக் காதலி, என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா, நான் தேடும் செவ்வந்திப் பூவிது (தர்மபத்தினி). இது போன்ற பல பாடல்களை அந்த நாட்களில் அவர்கள் கேட்டு ரசித்தார்களாம். இன்றும் நவீன வசதிகளைப் பயன்படுத்தித் தங்களுக்கு விருப்பமான அந்தப் பாடல்களை ஒலிப்பதிவு செய்து விரும்பிய நேரங்களில் போட்டுக் கேட்பதாகவும் அவர்களில் பலர் குறிப்பிட்டனர். இலங்கை வானொலி இன்று தென்றலாக மாறிவிட்டது. தெற்கேயிருந்த வருவதால் பொருத்தமானதுதான் என்கிறார்கள் தமிழகத்து நேயர்கள்.


இலங்கை வானொலியில் ஒலிபரப்பான பழைய பாடல்களில் எனக்குப் பிடித்தமான சில பாடல்களும் உண்டு. பாவாடைதாவணியில் பார்த்த உருவமா, நான் மலரோடு தனியாக ஏன் அங்கு நின்றேன் (இருவல்லவர்கள்), துயிலாத பெண் ஒன்று கண்டேன்.., காதல் நிலவே கண்மணிராதா.., நெஞ்சம் அலை மோதவே கண்ணும் குளமாகவே கொஞ்சும் ராதையைப் பிரிந்தே போகிறான்.. கண்ணன் ராதையைப் பிரிந்தே போகிறான். ( இந்தப் பாடல் எந்தப் படத்தில் என்று தெரியவில்லை. யாராவது தெரிந்தால் தயவு செய்து அறியத்தரவும்.) துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? இசைக்காகவோ அல்லது அதில் உள்ள கருத்திற்காகவோ எனக்குப் பிடித்த பாடல் வரிசையில் இந்தப் பாடல்களும் அடங்கும்.
 
 
இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்படாத பல பாடல்களும் உண்டு. நான் குறிப்பிடும் இந்தப் பாடல் தடைசெய்யப்பட்டதாகும். இந்தப் பாடல் என்றைக்குமே இலங்கை வானொலியில் ஒலிபரப்பப் போவதில்லை. என்னதான் உங்கள் மனம் கல்லாக இருந்தாலும்,‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே’என்ற இந்தப் பாடலை ஒரு கணம் கண்களை மூடி மௌனமாகக் கேட்டால் கரையாத கல்லையும் கரைய வைக்கும் யதார்த்தத்தைக் கொண்டதாகும். இந்தப் பாடல் ஒவ்வொரு தமிழனின் இரத்தத்திலும் கலந்து, உயிரில் உறைந்திருக்கிறது என்பதை மறுக்கவோ, மறைக்கவோ  முடியாது.

Via http://www.yarl.com/

Friday, July 25, 2014

அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர் பணி

புதுதில்லியில் செயல்பட்டும் வரும் All India Radio நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளரக் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: News Reader-cum-Translator(Tamil)
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 23,000
கல்வித் தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட பட்டப்படிப்புடன் தமிழ் மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல் வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருப்பதும் விரும்பத்தக்கது. முதுகலை பட்டப்படிப்புடன் தமிழை ஒரு பாடமாக படித்திருப்பது விரும்பத்தக்கது.
பணித்தன்மை: ஆங்கிலத்திருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்யவும், தமிழில் செய்திகளை தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: News Reader-cum-Translator (Malayalam)
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.23,000
கல்வித்தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட பட்டப்படிப்புடன் மலையாள மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல்வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சு செய்யும் வேகத்துடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் நல்ல அறிவும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் முதுகலை பட்டப்படிப்புடன் மலையாளத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
பணித்தன்மை: ஆங்கிலத்திலிருந்து மலையாள மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்யவும், மலையாளத்தில் தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.225. இதனை Director General(News) AIR, New DElhi என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, குரல்வளத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வில் தமிழ், மலையாள மொழிகளில் பெற்றிருக்கும் அறிவு, மொழி பெயர்ப்பு திறன் மற்றும் தற்போதைய நடப்புகள் போன்றவற்றிலிருந்து வினாக்கள் அமைந்திருக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Inspector of Accounts, News Services Division, All India Radio, New Broad Casting House, Parliament Street, New Delhi-110001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:28.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதிகள், தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://newsonair.nic.in/vacancy/NRT-Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, July 14, 2014

செய்தி ஊடகத் துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு? மத்திய அரசு பரிசீலனை: ஜாவடேகர்

செய்தி ஊடகத் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) அனுமதிப்பது குறித்து அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் மத்திய அரசு கருத்து கேட்டு வருவதாக மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
செய்தி ஊடகத் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன் இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்தையும் பெற விரும்புகிறோம்.
தற்போது, செய்தி ஊடகங்களில் 26 சதவீத அன்னிய நேரடி முதலீடு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. செய்திகள் அல்லாத வர்த்தகப் பதிப்புகள், பொதுப் பொழுதுபோக்கு ஊடகங்கள் ஆகியவற்றில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி உண்டு.
கையூட்டுச் செய்திகள் (பெய்டு நியூஸ்) தொடர்பான விவகாரத்தை ஆராய அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் கடைசிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. நானும் அக்குழுவில் இடம்பெற்றுள்ளேன்.
மத்திய அமைச்சர்கள் தங்கள் முதல் 100 நாள்களுக்கான முன்னுரிமைகளைப் பட்டியலிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரியுள்ளார். அதன்படி, அறிக்கை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம்.
தனியார் எஃப்.எம். வானொலியில் செய்திகள்?:
தனியாருக்குச் சொந்தமான பண்பலை வானொலிகளில் (எஃப்.எம்.) தற்போது செய்திகளை ஒலிபரப்ப அனுமதி இல்லை. எனவே, அவற்றில் செய்திகளை ஒலிபரப்புவதற்கு அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
எஃப்.எம். வானொலி நிலையங்களுக்கான ஏலம் மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது. இந்த விஷயத்தில் விரைவில் விதிமுறைகளை வெளியிடுவோம் என்றார் ஜாவடேகர்.
நன்றி: http://www.dinamani.com/ First Published : 02 June 2014 

Tuesday, July 08, 2014

தமிழ் மூலம் சீனம் கற்கலாம்! (வீட்டிலிருந்தபடியே!)

எளிமையான தமிழ் வழியே சீன வானொலி, 
சீன மொழி கற்றுத் தருகிறது!
உலகில் ஒரு பெரும் பொருளாதார சக்தியாக வளர்ந்து வருகிறது சீனா. இந்த நூற்றாண்டு சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்குரிய ஆண்டாக இருக்கும் எனப் பல வல்லுநர்கள் சொல்லிவிட்டார்கள்.
ஆங்கிலேயர்கள், சீனத்தை ஆண்டதில்லை. அதனால் சீனாவின் வர்த்தகத்தில் சீன மொழி முக்கியத்துவம் வகிக்கிறது. 
இன்னொருபுறம், உலகில் நால்வரில் ஒருவர் சீனர். ஒவ்வொரு ஆண்டும் அதிகமான வெளிநாட்டவர் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர் அல்லது வணிகம் செகின்றனர். இதன் காரணமாக சீன மொழி முக்கியத்துவம் பெறுகிறது.
இப்போது தமிழ் மூலம் சீன மொழியைக் கற்க முடியும். சீன வானொலி இதற்கான வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்தப் பாடங்களை அதனுடைய இணையதளத்திலும் வெளியிட்டு வருகிறது. பாடங்கள் எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 
கீழே ஓர் உதாரணம்:
வணக்கம் நேயர்களே, இன்று முதலாவது பாடம். அதன் தலைப்பு WEN HOU
என்பதாகும். தமிழ் மொழியில் வணக்கம் தெரிவிப்பது என்று பொருள். 
சீன வழக்கத்தின் படி, இருவர் சந்திக்கும் போது, ஒருவருக்கொருவர் NI HAO
என்று கூறுவர். 
NI என்றால், தமிழில் நீ என்பது பொருள். HAO என்றால், நன்று என்று பொருள். இதை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எவரும் பயன்படுத்தலாம். 
NI HAO என்று ஒருவருக்குச் சோல்லும்போது, எதிர்த்தரப்பினரும் NI HAO என்று பதிலளிப்பார். தமிழரும் இப்படித்தானே? இருவர் சந்திக்கும்போது, பரஸ்பரம் வணக்கம் தெரிவிப்பது வழக்கம் அல்லவா?
இப்போது நீங்கள் எங்களுடன் சேர்ந்து படியுங்கள், NI HAO (இதன் மூலம் உச்சரிப்புச் சோல்லிக் கொடுக்கிறார்கள்).
சீன மக்கள் காலத்தைக் குறிப்பிட்டு வணக்கம் தெரிவிப்பது உண்டு. எடுத்துக்காட்டாக, காலையில் ZAO SHANG HAO என்று கூறுவர். ZAO SHANGஎன்றால், காலை என்று பொருள். 
இப்போது, எங்களுடன் சேர்ந்து படியுங்கள். ஙூஅZAO SHANG HAO
முற்பகல் SHANG WU HAO என்று கூறுவர். SHANG WU என்றால், முற்பகலைக் குறிக்கும். இப்போது எங்களுடன் சேர்ந்து படியுங்கள்.

இப்படிப் போகிறது பாடம்...
'இன்று 4 சோற்களைத் தெரிந்து கொண்டோம். இந்த 4 சோற்களும், உங்கள் மனதில் பதிந்திருக்கின்றனவா? பாடத்துக்குப் பின் அதிக முறை பயிற்சி செயுங்கள். இந்த நிகழ்ச்சி பற்றி யோசனை தெரிவிக்க விரும்பினால், வான் அஞ்சல் அல்லது இ-மெயில் மூலம் எங்களுக்குத் தாராளமாகத் தெரிவியுங்கள். மீண்டும் சந்திப்போம்' என்று சோல்லி நிகழ்ச்சி நிறைவடைகின்றது.
தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி செவ்வா, வெள்ளி இரு தினங்கள் ஒலிபரப்பாகின்றன. சீன வானொலியின் நிகழ்ச்சிகளை இரவு 7:30-8:30 வரை சிற்றலை 31.35 மீட்டர்-9570 கி.ஹர்ட்ஸ் , 31.04 மீட்டர்-9665 கி.ஹர்ட்ஸ் ஆகிய அலைவரிசைகளில் கேட்கலாம். 
பாடங்களை இணையதளத்திலும் தமிழில் பார்க்கலாம். இணையதள முகவரி: www.tamil.cri.cn
 
Source: Puthiya Thalaimurai FB

Monday, July 07, 2014

ஜூன் 2, 1896- வானொலிக்கான காப்புரிமையை மார்க்கோனி பெற்ற நாள்

கூப்பிடுகிற தூரம் என மக்கள் சொல்வார்கள். “கூப்பிடுகிற தூரத்தை” அதிகமாக்க உழைத்த பலரில் மார்க்கோனி ( 1874 -1937) முக்கியமானவர்.
மார்க்கோனி இத்தாலி நாட்டின் ஒரு பணக்கார வீட்டு பிள்ளை. அவர் பள்ளிக்கு போகவில்லை.வீட்டிலேயே படித்தவர். 20 வயதில் தனது வீட்டில் வேலைக்காரருடன் சேர்ந்து ஒரு ஆய்வுக்கூடத்தை அவர் அமைத்தார். அதில் கம்பியில்லா தந்திக்கான ஆரம்ப கட்ட கருவிகளை உருவாக்கினார்.தந்திக் குறியீடுகளை அலையாக்கி பரப்பும் கருவியும் அந்த அலையை வாங்கி திரும்பவும் தந்திக் குறியீடுகளாக மாற்றி பதிவு செய்யும் கருவியும் அதில் இருந்தது.
தனது கண்டுபிடிப்பை பற்றி இத்தாலியின் தபால்-தந்தி அமைச்சருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் “பைத்தியக்கார விடுதிக்கு அனுப்பவேண்டியவன்” என அமைச்சர் எழுதினார். பிறகு மார்க்கோனி இங்கிலாந்திற்கு போனார்.
லண்டனின் தபால்-தந்தி துறை இன்ஜீனியர் வில்லியம் பிரீஸ் மார்க்கோனிக்கு ஆதரவு அளித்தார். மார்க்கோனி யின் கண்டுபிடிப்புக்கு இங்கிலாந்து அரசாங்கத்தின் காப்புரிமை கிடைத்தநாள் இன்று. பல தொடர் ஆராய்ச்சி களுக்குப் பிறகு 1897ல் டிரான்ஸ்மீட்டரை அவர் உருவாக்கி னார். 1897-ல் மே 13 ந் தேதி ‘நீங்கள் தயாரா?' என்ற செய்தியை சுமார் 14 கி. மீ தூரத்திற்கு செலுத்தினார். மூழ்கும் கப்பலில் இருந்து பயணிகள் அவரது கருவியால் காப்பாற்றப்பட்டனர். அமெரிக்காவில் படகுப்போட்டி முடிவுகள் உடனுக்குடன் கிடைத்தன. 1901-ல் 2100 மைல்களை கடந்து செய்தியை அனுப்பினார்.
நிறைவாக மார்க்கோனியின் அங்கீகரிக்கப்பட்டார். இத்தாலி அவரை அழைத்து மரியாதை செய்தது. 1909-ல் கம்பியில்லாத் தந்திமுறையில் ஏற்கனவே பல ஆய்வுகள் செய்திருந்த 'கார்ல் பெர்டினாண்ட் பிரவுன்' என்ற ஜெர்மானி யருடன் இணைந்து மார்க்கோனிக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இன்று கம்பியில்லாத தந்தி காலாவதி யாகி விட்டது. ஆனால் அதன் வாரிசுகளான வானொலி, தொலைக்காட்சி, செல்போன் ஆகியவற்றால் கம்பியில்லா அலைபரப்பும் முறை விண்ணை தாண்டிவிட்டது.
மனிதனின் குரல் கூப்பிடும் தூரத்தை தாண்டி இன்று பிரபஞ்சம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டு இருக்கிறது.

நன்றி: http://tamil.thehindu.com/ Published: June 2, 2014 

Tuesday, July 01, 2014

தனியார் எப். எம் .ரேடியோக்களில் செய்தி ஒலிபரப்ப அரசு முடிவு

தனியார் எப்.எம் ரேடியோக்களில் செய்திகளை ஒலிபரப்பு வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது:
24மணி நேரமும் ஒளிபரப்பாகும் செய்தி தொலைக்காட்சிகள் இருக்கின்றன. அதேபோன்று எப்.எம் ரேடியோக்களில் செய்தி ஒலிபரப்புவதற்கு ஏன் கட்டுப்பாடு என்று தெரிய வில்லை.அகில இந்திய வானொலி செய்தி சாராம்சத்தை மட்டும் ஒலிபரப்ப வேண்டும் என நிர்ப்பந்திக்க வேண்டும்? 3-4 முறையில் உள்ள வாய்ப்புகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.ஊடகம் மற்றும் பொழுது போக்கு தொழில்துறையின் தலைமைச்செயல் அதிகாரிகள் கூட்டத்தில் பேசுகையில் அமைச்சர் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது, அகில இந்திய வானொலி செய்தி சாராம்சம் எப்எம் ரேடியோக்களில் செய்தி இடம் பெறலாம் தெரிவிக்கப்பட்டிருந்தது.தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மேலும் 20நகரங்களில் 800எப்.எம் வானொலிகளை துவக்குவதற்கு ஏலும் விட முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன என்று பிரகாஷ் ஜாவேத்கர் தெரிவித்தார்.
- See more at: http://newsalai.com/