திருச்சி: "சமுதாய ரேடியோவுக்கு உரிமை (லைசன்ஸ்) கட்டணம் உயர்த்துவதை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்' என தென் மண்டல சமுதாய ரேடியா சங்கத்தின் முதலாவாது மாநாட்டில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தென் மண்டல சமுதாய ரேடியோ சங்கத்தின் கீழ் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என நான்கு மாநிலங்களும், ஒரு யூனியன் பிரதேசமும் உள்ளது. தென் மண்டல சமுதாய ரேடியோ சங்கத்தின் முதலாவது மாநாடு தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலை டாக்கின்ஸ் ஹாலில் நேற்று நடந்தது.தமிழகம்-புதுச்சேரி சமுதாய ரேடியோ சங்கப் புரவலரும், தினமலர் வெளியீட்டாளருமான ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்து பேசினார். பெரியார் மணியம்மை பல்கலை துணைவேந்தர் ராமச்சந்திரன், பதிவாளர் அய்யாவு, தமிழகம்-புதுச்சேரி சமுதாய ரேடியோ சங்க தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் தாமஸ் ஜோஸப் தெரக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் சமுதாய ரேடியே சங்க பொதுச்செயலாளர் வீரேந்திரா சிங் சவுக்கான் பேசியதாவது: சமுதாய ரேடியோ உரிமைக்கான (லைசன்ஸ்) ஆண்டு கட்டணமாக மத்திய அரசுக்கு 19 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இதை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சமுதாய ரேடியோக்கள் 91 ஆயிரம் ரூபாய் ஆண்டு கட்டணமாக செலுத்த வேண்டும்.எந்தவித வருமானமும் இல்லாமல், பொதுசேவைக்காக நடத்தப்படும் இதுபோன்ற சமுதாய ரேடியோக்களால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்துவது என்பது இயலாத காரியம். எனவே, டில்லியில் நடக்கும் கூட்டத்தில் இதுதொடர்பாக பேச உள்ளேன்.இந்த கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக நாம் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கையை உயர்த்துங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.அனைவரும் கையை உயர்த்தி தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, தீர்மானம் முழுமனதாக நிறைவேறியது."சமுதாய ரேடியோவுக்கு ஆண்டு லைசன்ஸ் கட்டணம் உயர்த்தும் முடிவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்' என எழுத்து மூலமான தீர்மானத்தில் அனைவரும் கையெழுத்திட்டனர். [தினமலர் ஏப்ரல் 23,2012]
No comments:
Post a Comment