Monday, June 30, 2014

இளம் வானொலி தொகுப்பாளர்: 9 வயது மாணவி சாதனை

சென்னையை சேர்ந்த 9 வயது மாணவி இளம் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராக இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார்.
சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் நகரைச் சேர்ந்தவர் கோபி வெங்கடேசன். இவரது 9 வயது மகள் ராதா ராகமாலிகா.
இவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள இணையதள ஏஃப்.எம் ரேடியோவில் (ஜ்ஜ்ஜ்.ம்ஹள்ஹப்ஹ.ச்ம்) 1 மணி நேர நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை காலை (ஜூன் 6) அவர் தொகுத்து வழங்கினார். இதனை, இளம் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராக இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்டு ஆகியவை அங்கீகரித்துள்ளது. இதற்கான சான்றிதழ்களை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டின் நடுவர் விவேக் ராஜா மற்றும் தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்டின் நடுவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வெள்ளிக்கிழமை வழங்கினர்.
இது குறித்து ராதா ராகமாலிகாவின் தத்தை கோபி வெங்கடேஷ், தாய் பாபி ஆகியோர் கூறியது:
சிறு வயதிலிருந்தே படிப்பு, விளையாட்டு, கலை என அனைத்திலும் ஆர்வம் கொண்டவராக ராதா ராகமாலிகா விளங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தற்போது இளம் ரேடியோ நிகழ்ச்சித் தொகுப்பாளராகச் சாதனைப் படைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கான பயிற்சியை கடந்த 6 மாதங்களாக அவர் எடுத்து வந்ததாக அவர்கள் கூறினர்.
நன்றி: http://www.dinamani.com/ First Published : 07 June 2014 

Friday, June 27, 2014

எஃப்.எம். வானொலி முதன்முதலில் ஒலித்த நாள்

பாடல்கள், நகைச்சுவைத் துணுக்குகள், வானிலை அறிவிப்புகள், திரைநட்சத்திரங்களின் நேர் காணல்கள் என்று பல நிகழ்ச்சிகளை இன்று பண்பலை வானொலி நிலையங்கள் காலை தொடங்கி நள்ளிரவு வரை ஒலிபரப்புகின்றன. ஆனால், போன தலைமுறை ரேடியோ ரசிகர்களுக்கு இந்த ரசிப்பு சுகம் கிடைக்கவில்லை.
அன்று இவ்வளவு வானொலி நிலையங்களும் கிடையாது. இலங்கை, சிங்கப்பூர், பி.பி.சி., சீனத் தமிழ் வானொலிகளை இரைச்சலையும் பொருட்படுத்தாது காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு கேட்டு ரசிப்பார்கள் அந்தக் கால வானொலி நேயர்கள். ஏ.எம். அலைவரிசை, ஷார்ட்வேவ் (குறுகிய அலை) அலைவரிசை என இருவித ஒலிபரப்புகள் இருந்தாலும் இரண்டும் இரைச்சல் கலந்தே ஒலித்தன.
கல்லையும் அரிசியையும் கலந்து கடித்ததைப் போல இருந்தது அன்றைய ரசிகர்களின் நிலை. வானொலியின் இரைச்சலைப் பெரிய அளவு குறைக் கும் நோக்கில் எஃப்.எம். ஒலிபரப்பு அறிமுகமானது.
அதனைக் கண்டுபிடித்தவர் எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் (1890-1954). அமெரிக்காவில் பிறந் தவர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து அதிலேயே பேராசிரியராகவும் பணிபுரிந்தவர்.
1933-ல் அவர் எஃப்.எம். ரேடியோவுக்கான காப் புரிமையைப் பெற்றார். 1935-ல் அதனை நியூஜெர்ஸி மாநிலத்தில் பொதுமக்களுக்காக ஒலிபரப்பிய நாள் இன்று.
எஃப்.எம். அலைவரிசையைப் பயன்படுத்திப் பலனடைந்த பல தனியார் நிறுவனங்கள், எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங்குக்கான கண்டுபிடிப்புக் கட்டணத் ைதத் தராமல், அவரை அலைக்கழித்தன. நீதிமன்ற வழக்குகளால் அவர் நிம்மதியிழந்தார். ஒருநாள் வீட்டின் மாடியிலிருந்து குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்துக்குப் பிறகு, அவருக்குச் சாதகமாக வழக்குகள் முடிந்தன. நீதிமன்றங்களுக்கு ரேடியோ தொழில்நுட்பங்கள் புரியவில்லை எனக் காரணம் சொல்லப்பட்டது. வாழ்க்கையில் வலிகளை அனுபவித்த எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங், நமக்கு விட்டுச் சென்ற சொத்துதான் பண்பலை வானொலி எனலாம்.

நன்றி:: http://tamil.thehindu.com/

Thursday, June 12, 2014

வத்திகான் வானொலியின் வரலாறு

இயேசுவின் நற்செய்தியும் மானிட நட்பும் ஒன்றாகக் கலந்ததன் விளைவே வத்திக்கான் வானொலி. திருத்தந்தை பதினோராம் பத்திநாதரும் குலியெல்மோ மார்க்கோனியும் நண்பர்கள். இத்திருத்தந்தை திருச்சபையின் தலைமைப்பணியை ஏற்றதும் தமது செய்தி பாரெங்கும் செல்ல வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டார். இதற்கென வானொலி ஒன்றை வடிவமைக்குமாறு தனது நண்பர் மார்க்கோனியைக் கேட்டார். அப்போதுதான் வானொலியைக் கண்டுபிடித்திருந்த மார்க்கோனி, திருத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் பணியில் இறங்கினார். 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி, வத்திக்கான் வாரலாற்றின் பொன்னான நாட்களில் ஒன்று. திருத்தந்தைக்கென வானொலி ஒன்று தனது ஒலிபரப்புக்குத் தயாரானது. திருத்தந்தை பதினோராம் பத்திநாதர் முன் முழந்தாளிட்டு அவர் கரங்களை முத்தி செய்த பின்னர் ஒலிவாங்கியைப் பிடித்தார் மார்க்கோனி. அவரின் ஒலி அலைகள் காற்றில் வான் அலைகாளாகச் சிதறின. “இயற்கையின் புதிரான சக்திகளை மனிதன் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் எல்லாம் வல்ல இறைவனின் பெருந்துணையுடன் ஒரு கருவியைக் கண்டுபிடிக்க முடிந்தது. திருத்தந்தையின் குரல் உலகெங்கும் கேட்க வழி செய்தது” என்று பேசினார்.
பின்னர் திருத்தந்தை பதினோராம் பத்திநாதர் பக்கம் திரும்பி, “திருத்தந்தையே! தாங்கள் என்னிடம் செய்யப் பணித்த பணியை இன்று உம்மிடமே திருப்பி அளிக்கின்றேன். தங்களது செய்தியை உலக மக்கள் எல்லாரும் கேட்கச் செய்யுங்கள்” என்றார். இவ்வரிய நிகழ்வினைப் பற்றி ஒரு நிருபர் பின் வருமாறு எழுதியிருந்தார் : “இத்தருணத்தில் அகில உலகும் காத்திருக்கிறது. கிறிஸ்துவின் பிரதிநிதியாகிய திருத்தந்தை, இந்தப் புதிய கருவி மூலம் தெளிவான குரலில் பேசத் தொடங்கினார். அப்போது நேரம் சரியாக மாலை 4.49. அது 1931ம் ஆண்டு பிப்ரவரி 12”.
திருத்தந்தை பதினோராம் பத்திநாதரும் இலத்தீனில் தான் கைப்பட எழுதிய முதல் வானொலிச் செய்தியைக் கணீர் குரலில் வாசித்தார். அவருடைய செய்தி திருவிவிலியத்திலிருந்து எடுக்கப்பட்டதாய் நற்செய்தியின் உலகளாவியத் தன்மையை வலியுறுத்துவதாய் அமைந்திருந்தது. “வானங்களே! கேளுங்கள். பூவுலகே! பூமியின் கடைக்கோடியில் வாழ்பவர்களே, என் வாயிலிருந்து வருவதை உற்றுக் கேளுங்கள்” என்றார்.
அந்நாளிலிருந்து வத்திக்கான் வானொலி திருத்தந்தையரின் குரலை ஊருக்கும் உலகுக்கும் (Urbi et Orbi) ஒலிபரப்பி வருகிறது. திருத்தந்தையின் வானொலி உலகப் பாரம்பரியச் சொத்துக்களில் விலைமதிப்பற்ற ஒன்று.
நடந்துவந்த பாதை :
1940ம் ஆண்டு ஜனவரியில் நாத்ஸி வதைப்போர் முகாம்களைக் கண்டித்து முதன் முதலாகச் செய்திகளை ஒலிபரப்பியது வத்திக்கான் வானொலியே. குடும்பங்கள் போர்க்கைதிகளைத் தொடர்புகொள்வதற்கு உதவியாக தகவல் அலுவலகம் ஒன்றையும் வானொலி நிறுவியது. 1940 க்கும் 1946 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 12 இலட்சத்து நாற்பதாயிரத்துக்கு(12,40,000) அதிகமான உதவித்தகவல்கள் ஒலிபரப்பப்பட்டன.
இரண்டாம் உலகப் போர் முடிவதற்குள் வத்திக்கான் வானொலி இன்னும் பல மொழிகளில் ஒலிபரப்பைத் தொடங்கியது. அதனால் அதிக சக்திமிக்க வானலைக் கொடிகள் (Antennas) தேவைப்பட்டன. உரோமைக்கு வடக்கே 20 மைல்களுக்கு அப்பால், பிராச்சானோ ஏரிக்கு அருகே, சாந்தா மரியா தி கலேரியா (Santa Maria di Galeria) என்ற இடத்தில் 440 ஹெக்டேர் நிலப்பரப்பில் புதிய ஒலிபரப்பு மையத்தை திருத்தந்தை 12ம் பத்திநாதர் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி திறந்து வைத்தார். இங்கே 11 நீட்சி அலை மற்றும் சிற்றலை ஒலிபரப்பிகள் ( 100 மற்றும் 500 கி.வா. இடைப்பட்டவை) நேரடி வானலைக் கொடிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. உலகிலே மிகப் பெரிய சுழலும் வானலைக் கொடிகளுள் ஒன்று இங்கே உள்ளது.
1958ம் ஆண்டு கர்தினால் ஜூசப்பே ஜான் ரொன்காலி, திருத்தந்தை 23ம் ஜான் என்ற பெயருடன் பொறுப்பேற்ற போது வத்திக்கான் வானொலி 32 மொழிகளில் ஒலிபரப்பி வந்தது. பேத்ரியானோ (Petriano) அருங்காட்சியகம் இருந்த இடத்தில் புதிய அலுவலகங்களும் ஒலிப்பதிவுக் கூடங்களும் அமைக்கப்பட்டன. இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் பற்றிய நேரடி வருணனைகள் மற்றும் செய்திகளை ஒலிபரப்புவதற்கு 3000த்துக்கும் அதிகமான மணி நேரத்தை ஒதுக்கியது. 1963ம் ஆண்டில் திருத்தந்தை 6ம் பால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டில் அவர் புனித பூமிக்கு அப்போஸ்தலிக்கத் திருப்பயணம் மேற்கொண்டார். வத்திக்கான் வானொலி நிருபர்களும், தொழிற்நுட்ப கலைஞர்களும் திருத்தந்தையர்களின் திருப்பயணங்களில் அவர்களுடன் சென்று அப்பயணங்கள் பற்றிய நேரடி வருணனைகளையும் மற்றும் பல செய்திகளையும் ஒலிபரப்புவதற்கு இத்திருப்பயணமே தொடக்கமாக அமைந்தது.
1970ம் ஆண்டு வத்திக்கான் வானொலியின் தயாரிப்பு மையம் பலாஸ்தோ பியோ எனும் பியோ மாளிகைக்கு (Palazzo Pio) இடமாற்றம் செய்யப்பட்டது. அச்சமயத்தில் இந்தியா உட்பட 35 நாடுகளிலிருந்து 260 பேர் பணியாற்றி வந்தனர். திருத்தந்தை முதலாம் ஜான் பால் 33 நாட்களே பாப்பிறைப் பணியாற்றி இறந்ததையொட்டி 1978ம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி கர்தினால் கரோல் வொய்த்தில்வா, திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இத்தாலி மற்றும் வெளிநாடுகளில் அதிகமான திருப்பயணங்களை மேற்கொண்ட திருப்பயணத் திருத்தந்தை என்ற பெயரைப் பெற்றிருப்பவர்.
மைல் கற்கள் :
1980களின் இறுதிக்குள் திருப்பயணத் திருத்தந்தையின் வியப்புக்குரிய மேய்ப்புப் பணி நடவடிக்கைகளை ஒலிபரப்புவதற்கென வத்திக்கான் வானொலி தனது தொழிற்நுட்ப மற்றும் மனித வளங்களைத் தொடர்ந்து மேம்படுத்தி உலக அளவில் ஒலிபரப்பில் ஓர் உயரிய இடத்தைப் பிடித்து விட்டது. 1990களில் செயற்கைக்கோள் வழியான ஒலிபரப்பையும் தொடங்கியது. உரோமையிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் மக்கள் கேட்பதற்கு வசதியாக தல அலைவரிசையிலும் ஒலிபரப்புகள் இடம் பெறுகின்றன. 1995ம் ஆண்டில் வத்திக்கானை மையமாகக் கொண்ட செயற்கைக்கோள் தொடர்பு மையம் கட்டப்பட்டது. உலகில் இயங்கும் வானொலிகளில் அதிகமான மொழிகளில் ஒலிபரப்பை நடத்துவது வத்திக்கான் வானொலி. தற்சமயம் 45 மொழிகளில் ஒலிபரப்பை நடத்துகின்றது. இதில் நிர்வாகத்தினர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், தொழிற்நுட்பத் துறையினர் என ஏறக்குறைய 59 நாடுகளிலிருந்து சுமார் 400 பேர் பணியில் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் பொதுநிலையினர். திருத்தந்தையின் இவ்வானொலியை பல்வேறு நாட்டு மக்களைக் கொண்ட ஒரு மினி கத்தோலிக்க உலகம் என்று அழைக்கலாம்.
வானொலி நிகழ்ச்சிகள் :
இங்கு தயாரித்து வழங்கப்படும் நிகழ்ச்சிகள் பலதரப்பட்டவை. இவற்றில் சில ஐரோப்பிய மொழிகளில் நேரடிச் செய்தி ஒலிபரப்பு உண்டு. தினமும் இலத்தீனில் திருப்பலி, செபமாலை, இன்னும், வாரம் இருமுறை ஆங்கிலத்தில் திருப்பலி என திருவழிப்பாட்டுத் திருப்பணிகள் உண்டு. இசை, பக்திஇசை நிகழ்ச்சிகள் உண்டு. விவிலிய விளக்கங்கள் உண்டு. கலாச்சாரம் மற்றும் பொதுப்படையான நிகழ்ச்சிகளில் விவாதங்கள், கலந்துரையாடல், உலகில் முக்கியமான நபர்களோடு நேர்முகச் சந்திப்பு போன்றவை இடம் பெறுகின்றன. வத்திக்கான் தூய பேதுரு பேராலயப் பசிலிக்கா மணி முழங்க, “Christus Vincit” அதாவது கிறிஸ்து வெல்கிறார் என்ற இசையுடன், இயேசு கிறிஸ்துவுக்குப் புகழ் என்ற வாழ்த்துடன் தினந்தோறும் ஒவ்வொரு மொழியிலும் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. பெரும்பாலும் இந்த ஒலிபரப்புகள் மீண்டும் அன்றைய நாளில் மறுஒலிபரப்பு செய்யப்படுகின்றன.
திருத்தந்தையின் குரல்:
திருத்தந்தை அகிலத் திருச்சபையின் இயக்கத்திலும், அதன் வளாச்சியிலும் நாளுக்கு நாள் அதிகக் கவனம் செலுத்தி வருகிறார். உலகமெனும் இப்பெரிய மனிதக் குடும்பத்தின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுப்பதற்கான தமது விருப்பத்தையும் தெரிவித்து வருகிறார். இதனாலே அவர் ஒவ்வொரு நாளும் வத்திக்கானில் நாடுகளின் தலைவர்கள், தூதரக அதிகாரிகள், தேசிய, சர்வதேச கழகங்களின் பிரதிநிதிகள், திருச்சபை, அரசியல் பிரமுகர்கள் எனப் பலரைச் சந்தித்து வருகிறார். சிறிய, பெரிய எண்ணிக்கையிலும் தம் மந்தையைச் சந்திக்கிறார். இத்தாலியிலும் மற்ற நாடுகளிலும் மேய்ப்புப் பணி திருப்பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார். அச்சமயங்களில் அவர் நிகழ்த்தும் திருப்பலிகள், மறையுரைகள், உரைகள், செய்திகள், வாழ்த்துக்கள் என எல்லாவற்றையும் வத்திக்கான் வானொலியின் தொழிற் நுட்பக் கலைஞர்கள் கணிப் பொறியில் பதிவு செய்கின்றனர். வானொலிப் பணியாளர்கள் அவற்றைத் தங்கள் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி திருத்தந்தையின் குரல் உலகெங்கும் ஒலிக்கச் செய்கின்றனர்.
மிகவும் பிரபல்யமான திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம் மற்றும் ஞாயிறு மூவேளை செப உரை கணனி வலைத் தொடர்பு (Internet) மூலமும் ஒலிபரப்பப்படுகின்றன. அவற்றை அந்தந்த நாட்களில் மட்டுமல்ல, ஒருவாரம் வரையிலும் வலைத் தொடர்பு மூலம் கேட்கலாம். இவை தவிர, திருத்தந்தை நிகழ்த்தும் மற்றும் கலந்து கொள்ளும் சிறப்புத் திருவழிபாடுகள், அவர் கலந்து கொள்ளும் கூட்டங்கள் பற்றிய நேரடி ஒலிபரப்பையும் வத்திக்கான் வானொலி நடத்தி வருகிறது.
திருத்தந்தை இத்தாலிக்கு வெளியே மற்ற நாடுகளுக்குத் திருப்பயணங்கள் மேற்கொள்ளும்போது, வத்திக்கான் வானொலி நிருபர்களும், தொழிற் நுட்பக் கலைஞர்களும் அவருடன் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் ஒலிபரப்புகிறார்கள்.
CHRISTUS VINCIT
CHRISTUS VINCIT CHRISTUS REGNAT CHRISTUS IMPERAT - இந்த இலத்தீன் சொற்களுக்கு கிறிஸ்து வெல்கிறார், கிறிஸ்து அரசாள்கிறார், கிறிஸ்து வழிநடத்துகிறார் என்பது பொருள். வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் உள்ள நினைவுத் தூணில் இவ்வார்த்தைகளைப் பொறித்து வைத்தார் திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ். இச்சொற்கள் வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிகள் தொடங்கு முன்னர் ஒலிக்கும் தொடக்க இசையாக 1949 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாந் தேதி அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இது யான் கான்க் (Jan Kanc) என்பவரால் எழுதப்பட்டு ஆல்பெரிக்கோ வித்தாலினி (Alberico Vitalini) என்பவரால் சீர்படுத்தப்பட்டது. இவ்விசை ஒலித்தபின்னர் இயேசு கிறிஸ்துவுக்குப் புகழ் (Laudetur Jesus Christus) என்ற இறை வாழ்த்தும் தொடர்ந்து ஒலிக்கும்.
பொதுத் தகவல்:
ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு : 1931
மொழிகள் : 45
ஓர் ஆண்டில் ஒலிபரப்பாகும் கால அளவு : 24, 117 மணிகள் 36 நிமிடங்கள்.
ஒரு வாரத்தில் ஒலிபரப்பாகும் கால அளவு : 463 மணிகள் 48 நிமிடங்கள்.
74 நாடுகளைச் சேர்ந்த 1200 வானொலி நிலையங்கள் எமது நிகழ்ச்சிகளை மறு ஒலிபரப்புச் செய்கின்றன.
பணியாளர் பற்றிய விபரங்கள்:
பணியாளர்கள் 355 பேர்
நாடுகள் 59
துறவியர் 44
பொதுநிலையினர் 311
ஆண்கள் 240
பெண்கள் 115
வத்திக்கான் வானொலியில் இந்திய மொழிகள் பிறந்த வரலாறு
உலகில் இயங்கும் வானொலிகளில் அதிகமான மொழிகளில் ஒலிபரப்பை நடத்துவது வத்திக்கான் வானொலி. அதுவும் இது வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனியால் வடிவமைக்கப்பட்டது என்பது பெருமைக்குரியது. தற்சமயம் 45 மொழிகளில் ஒலிபரப்பை நடத்துகின்றது. இதில் இந்திய துணைக்கண்டத்திற்கென 5 மொழிகளில் ஒலிபரப்பு இடம்பெறுகிறது. 1964 டிசம்பரில் மும்பையில் (பம்பாய்) நடைபெற்ற 38வது உலக திருநற்கருணை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திருத்தந்தை ஆறாம் பால் அங்குச் சென்றதைத் தொடர்ந்து, 1965 மே மாதம் வத்திக்கான் வானொலியின் இந்தியப் பிரிவு உதயமானது.
முதலில்; இந்தி, தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பத்து நிமிட இரவு ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. திங்களும் வியாழனும் இந்தியிலும், செவ்வாயும் வெள்ளியும் தமிழிலும், புதனும் சனியும் மலயாளத்திலும்;, திங்கள் முதல் சனி வரை ஆங்கிலத்திலும் பத்து நிமிட ஒலிபரப்பு இடம் பெற்றது.
1982 - இந்த நான்கு மொழிகளும் நடத்தி வந்த இரவு ஒலிபரப்பு காலையில் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
12 மே, 1985 - மலயாள மொழியில் 15 நிமிட காலை தினசரி ஒலிபரப்பு தொடங்கியது.
07 ஜனவரி 1986 - இந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 15 நிமிட காலை தினசரி ஒலிபரப்பு தொடங்கியது. (திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் இந்தியாவுக்கான முதல் திருப்பயணத்தையொட்டி தினசரி ஒலிபரப்பு துவங்கியது). இரவு ஒலிபரப்பு ஆறு நிமிடங்களே அதுவும் செய்தி ஒலிபரப்பாகவே அமைந்திருந்தது. இதே ஆண்டின் இறுதியில் அந்த நான்கு மொழிகளும் பத்து நிமிட இரவு தினசரி ஒலிபரப்பைத் தொடங்கின.
25 மார்ச் 1990 - இந்தி, தமிழ், மலயாளம் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் தினசரி 15 நிமிட ஒலிபரப்பைத் தொடங்கின. இரவு ஒலிபரப்பு காலையில் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
23, செப். 1993 - இந்நான்கு மொழிகளும் காலை மற்றும் இரவில் தினசரி 20 நிமிட ஒலிபரப்பைத் தொடங்கின. இரவு ஒலிபரப்பு காலையில் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
24 அக். 1993 - உருது மொழியில் ஞாயிறு மட்டும் 7 நிமிட ஒலிபரப்பு ஆரம்பமானது. இது இந்தி ஒலிபரப்போடு சேர்ந்து இடம் பெற்றது.
30 மார்ச் 2003 - உருது மொழி ஞாயிறு மற்றும் புதன் மாலையில் 15 நிமிட ஒலிபரப்பைத் தொடங்கியது. இந்நிகழ்ச்சிகள் மறுபடியும் அடுத்த நாள் காலையிலும் ஒலிபரப்பப்படுகின்றன.
26 அக். 2003 - இந்தி, தமிழ், மலயாளம் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் இர்க்குட்ஸ்க்கிலிருந்து ( இரஷ்யா) காலை மறு ஒலிபரப்பைத் தொடங்கின.
திருத்தந்தையரும் தென்கிழக்கு ஆசியாவும்:
இவ்வுலகில் கிறிஸ்துவின் பிரதிநிதியாக இருக்கும் திருத்தந்தையர், தென்கிழக்கு ஆசியாவுடன் மிக நெருங்கிய உறவு வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் அப்பகுதிக்கு மேற்கொண்ட பயணங்கள் தெளிவாக்குகின்றன.
1964 - திருத்தந்தையர் வரலாற்றில் முதன் முறையாக திருத்தந்தை ஒருவர் இந்தியா உட்பட தென்கிழக்கு ஆசியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். மும்பையில் (பம்பாய்) நடைபெற்ற 38வது உலக திருநற்கருணை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டிசம்பர் 2 முதல் 5 வரை திருத்தந்தை ஆறாம் பால் அங்குச் சென்றார்.
1981 - திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் தென்கிழக்கு ஆசிய மண்ணில் முதன் முறையாகக் கால்தடம் பதித்தார். 16 பெப்ருவரி 1981இல் கராச்சியில் (பாகிஸ்தான்) திருப்பயணம் மேற்கொண்டார்.
1986 - திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இந்தியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். இது அவரின் 29 வது வெளிநாட்டுத் திருப்பயணம்.
1986 - திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 19 டிசம்பர், 1986 அன்று பங்களாதேஷிக்கு முதன் முறையாகத் திருப்பயணம் மேற்கொண்டார். இது அவரின் 32 வது வெளிநாட்டுத் திருப்பயணம்.
1995 - திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவ்வாண்டு ஜனவரியில் இலங்கைக்கு முதன் முறையாகத் திருப்பயணம் மேற்கொண்டார். இலங்கையின் திருத்தூதர் என அழைக்கப்படும் இறையடியார் ஜோசப் வாஸ் என்பவரை ஜனவரி 21 ந்தேதி அருளாளர் (முத்தி பெற்றவர்) என்ற நிலைக்கு உயர்த்தினார்.
1999 - திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் தனது 89 வது வெளிநாட்டுத் திருப்பயணமாக இந்தியத் தலைநகர் டெல்லிக்குச் சென்றார். அங்கு ‘ஆசியாவில் திருச்சபை’ என்னும் அப்போஸ்தலிக்க ஏட்டை நவம்பர் ஆறாம் தேதி வெளியட்டார். இது, வத்திக்கானில் நடைபெற்ற ஆசிய ஆயர் மன்றத் தீர்மானத் தொகுப்பாகும்.
நன்றி: http://ta.radiovaticana.va/

Thursday, June 05, 2014

வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப விருப்பமா?

வத்திக்கான் வானொலி தன் நிகழ்ச்சிகளை ஐந்து கண்டங்களுக்கும் நேரடியாக ஒலிபரப்புவது மட்டுமல்ல, பல நாடுகளின் வானொலிகள் மூலம் மறு ஒலிபரப்பும் செய்கிறது.(2007ல் ஏறத்தாழ 1000 வானொலிகள் இதை ஆற்றின). இதற்கென பல வானொலிகள் ஒப்பந்தமும் இட்டுள்ளன. பெரும்பாலும் இவை கிறிஸ்தவ வானொலிகளே. இத்தகைய செயற்பாட்டின் மூலம் வத்திக்கான் வானொலி ஒலிபரப்பு அதிக மக்களை அடைய முடிகிறது. 24 ஐரோப்பிய, 22 ஆப்ரிக்க, 22 அமெரிக்க, 6 ஆசிய மற்றும் ஓசியானியா பகுதி நாடுகளைச் சேர்ந்த எண்ணற்ற வானொலிகள் வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிகளை மறு ஒலிபரப்பு செய்து வருகின்றன.
வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிகளை மறு ஒலிபரப்பு செய்ய விரும்புவோர், அதன் பன்னாட்டு உறவுகளுக்கான அலுவலகத்தின் அனுமதி பெற்றிருத்தல் அவசியம். அவ்வனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : relint@vatiradio.va or fax number +39 06 6988 3237 (Mr. Giacomo Ghisani, Head of International Relations, tel. number +39 06 6988 3945). இவ்விண்ணப்பத்தைத் தொடர்ந்து, மறு ஒலிபரப்புக்குத் தேவையான விவரங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
நன்றி: வத்திக்கான் வானொலி