நமக்கு மிகவும் பிடித்த ஒன்றை, நாம் சற்றும் எதிர்பாராத நேரத்தில், நமக்கு அனுப்பி வைக்கும் அன்புள்ளங்களை என்னவென்று சொல்வது.
சென்னைப் புதுக்கல்லூரியில் மாணவராக அறிமுகமாகி, இன்று தமிழின் முக்கிய நாளிதழில் செய்தியாளராகப் பணியாற்றிவரும் அன்பு நண்பர் முஹம்மது ராஃபி (Rameswaram Rafi) சமீபத்தில் ஒரு கைப்பேசி அழைப்பில், "உங்களுக்கு ஒரு பரிசுப்பொதி வரும், வந்ததும் தெரியப்படுத்துங்கள்" எனப் பீடிகைப் போட்டார்.
அடுத்த நாளே வந்துவிட்டது. நான் சற்றும் எதிர்பாராதது அந்தப் பொதியில் இருந்தது. 1990களில் ரேடியோ ஜப்பான் அனுப்பிய அலைவரிசை விபரப்புத்தகத்தின் அட்டையில் மட்டுமேப் பார்த்த வானொலிப் பெட்டி அது.
நம் உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் அந்த சோனி வானொலிப் பெடிக்குத் தான் எவ்வளவு பாதுகாப்பு, மட்டுமல்ல இணைப்புகள்.
உலகை நம் உள்ளங்கைக்குள் அன்றே கொண்டுவந்தது இந்த சோனி வானொலிப் பெட்டி. கூடவே ஒரு அருமையான ஆக்டிவ் ஆண்டனாவையும் கொடுத்துள்ளனர். அவ்வளவு துள்ளியமாக தொலைத்தூர ஒலிபரப்புகள் கிடைக்கிறது.
உடனே ராஃபியை அழைத்து, "எங்கே பிடித்தீர்கள்? விலை எவ்வளவு?" எனக் கேட்டேன். "நீங்களேக் கூறுங்கள், எவ்வளவு இருக்கும்?" என்றார். "இன்று சோனி நிறுவனம் இந்த வானொலிப் பெட்டியின் உற்பத்தியை நிறுத்திவிட்டது. எனவே, இதற்கு மதிப்பீடு இல்லை" என்றேன்.
ஆம், இது போன்ற வானொலிப் பெட்டிகள், நல்ல நிலையில் கிடைப்பதே அரிது. அப்படியிருக்க, எப்படி விலையை நிர்ணயம் செய்ய!
சற்றும் எதிர்பாராத நேரத்தில் வரும் அன்புப் பரிசுக்குத்தான் விலையேது?! அதுவும் நம் மாணவர்கள் கொடுக்கும் பரிசுக்கு நிச்சயம் விலை நிர்ணயம் செய்துவிட முடியுமா என்ன!
நன்றி ராஃபி! வானொலி மீது தீராப்பற்றுதல் கொண்டமைக்கும், அது தொடர்பான தொடர் செய்திக் கட்டுரைகளுக்கும்.
For more details about this radio,
https://www.cryptomuseum.com/spy/sony/icfsw1/index.htm#:~:text=ICF%2DSW1%20is%20a%20miniature,the%20reception%20of%20Numbers%20Stations.