Wednesday, June 10, 2009

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 8

ஒரு காலத்தில் நம் சூரியனில் போதிய ஆற்றல் உண்டாக்க அணுக்கருக்கள் தீர்ந்து போகும். அன்று நசுக்கத்தை ஈடு செய்ய வெப்ப விரிவு இல்லாது போய்விடும் உடனே நம் சூரியன் சுருங்கி முடிவில் சிறிய கொட்டைப் பாக்கு அளவுக்கு நொறுங்கிப் போய்விடும்! எனினும் எதுவுமே இல்லாத சூரியன் அல்ல அது. ஆரம்பத்தில் அந்த சூரியனில் இருந்த அதன் அளவற்ற எடையும், ஈர்ப்பு விசையும் அந்த சிறிய கொட்டைப் பாக்கு அளவு சூரியனுக்கும் இருக்கும்.

பல மில்லியன் சூரியன்கள் சேர்ந்து நசுங்கி மகா சக்தி வாய்ந்த மையக் கரும்துளைகள் உண்டாகி எப்போதும் இருந்து வருகின்றன. அவற்றைக் காண வானவியல் வல்லுநர்கள் பாடுபட்டு வருகிறார்கள்.

நல்ல வேளையாக நம் விண்வெளி வல்லுநர்கள் ஹப்புள் என்ற டெலஸ்கோப் அனுப்பியதுடன் மேலும் பல கோள்களை ஆராய செயற்கை கோள்களை அனுப்பி பல புதிய தகவல்களைப் பெற்றுள்ளனர். 3சி120 என்ற எண்ணுள்ள விண்மீன் குவியல் (கேலக்ஸி)நடுவில் ஒரு கரும்துளை ஆராய்ச்சி மேற்கொள்ளத் தக்கதாக ஒரு நிகழ்வு அமைந்தது. வாயைப்பிளந்தபடி பிரபஞ்சத்தின் நாடகக் காட்சிகளை வல்லுநர்கள் பார்த்து அதிசயித்தனர்.
கரும்துளைகளின் அபரிவிதமான ஈர்ப்பு விசையால் அதைச் சுற்றி உள்ள பொருள்களை எல்லாம் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும். (நீங்கள் ஸ்ட்ரா வைத்து ஜூஸ் உறிஞ்சுவது போல்). பள்ளத்தில் மண் சரிவது போல் மளமளவென்று அருகில் உள்ள பொருள்கள்யாவும் சரிந்து ஈர்க்கப்படும். தள்ளி நிற்கும் பொருள்கள் ஒரு வளையம் மாதிரி கரும்துளையைச் சுற்றி நின்று விடும். அதன்பிறகு பொருள் சரிவு மிதமாக தொடர்ந்து நடைபெறும்.

மேற்கூறிய வளையத்தை அக்ரீஷன் டிஸ்க் (திரட்சித் தட்டு) என்பார்கள். இந்தத் தட்டிலிருந்து ஆவேசமாக பல எக்ஸ் (ல) கதிர்கள் அடிக்கடி வெளிப்படும். இடைஇடையே ரேடியோ நுண் அலைகளும் வெளிப் படும். ஏற்கனவே இந்த நிகழ்வுகளைப் பற்றி நன்கு அறிந்த பிரபஞ்சவியல் வல்லுநர்கள், கரும்துளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்கூடாக அறிந்துள்ளனர்.
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

No comments: