Wednesday, July 22, 2009

என் வானொலியை கேட்டீர்களா....!!


எந்த ஒரு மின்னணு சாதனங் களின் இடையூறுகளும் சக்தி வாய்ந்த ஒலி அலைகளின் தடங்களும் இல்லாமல் தெளிவான வானொலி நிகழ்ச்சிகள் என் ஊர் போன்ற அமைதியான கிராம சூழலுக்கு பின்னணி இசையாக ஒலித்துக் கொண்டிருந்த எழுபதுகளின் இறுதியில் எங்கள் வீட்டிலும் வானொலி இருந்தது.

வீட்டில் உள்ள வானொலி எப்பொழுது இருந்து இருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது. அந்த பழைய வானொலிக்குப் பதிலாக புதிதாக ஒன்று வாங்கும் எண்ணம் வந்தபொழுது, வானொலியின் வடிவம், வண்ணம் போன்றவை எப்படி இருக்க வேண்டும் என்பதை வீட்டில் உள்ளவர்கள் கூடிப் பேசியது, ஏதோ ஒரு கல்யாணத்தை செய்து முடிப்பதற்கான திட்ட மிடுதலாய் நீண்ட நேரம் போனது. அனைவரின் பேச்சின் முடிவில், அடுத்தநாள் புதிய வானொலி பெட்டி ஒன்று வரப்போகிறது என்று ஆவலோடு இருந்தேன். மாமாவும் வந்தார் கையில் வானொலிப் பெட்டி அளவிற்கு ஒன்றும் பெரிதாக இல்லை. சிறிது நேரத்தில் சட்டைப் பையில் இருந்து நான்காக மடிந்த ஒருதாளை எடுத்து விரித்தார். இந்த காலத்து ஜெராக்ஸ் காப்பி போல இருந்தது. வானொலி பெட்டி களுக்கான விபர அட்டவணை இருந்தது. அதில் அச்சிடப்பட்டிருந்த வானொலி படங்கள் மட்டும் எனக்குப் புரிந்தது.
அனைவரும் கலந்து பேசி புதிதாக வந்திருந்த மற்ற வானொலி பெட்டிகளினும் வித்தியாசமாக இருந்த படுக்கைவச வானொலி பெட்டியை தெரிவு செய்தார்கள். அடுத்தநாள் அந்தப் படுக்கைவச வானொலி பெட்டி வந்தது.

வந்தபின்தான் அதன் அசௌ கரியங்கள் புரிய வந்தது. அதை வைப்பதற்கு தனி மேசை தேவைப்பட்டது. அலைவரிசை தேடும்பொழுது கையில் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. வானொலிப் பெட்டியின் ஒலி பெருக்கி வீட்டின் கூரையைப் பார்த்து இருந்ததால் ஒலியின் அளவை கூட்டி வைத்தால்தான் சுற்றி உள்ளவர்களுக்கு கேட்கக் கூடியதாக இருந்தது.
ஆகையால் விரும்பாத விருந்தாளியாக நான்கு நாட்களுக்கு மேல் திருப்பி அனுப்பி விட்டு வளமையான நிற்கும் வச வானொலியே வீட்டிற்கு வந்தது. நல்ல மெலிதான தோலினால் தைக்கப்பட்ட உறையுடன் தோளில் தொங்கவிடக் கூடிய பட்டையுடன் இருந்தது.

பின்னாட்களில் வானொலியை சுத்தம் செய்ய அந்த உறையை கழட்டும்பொழுது எனது தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு பஸ் கண்டக்டர் என்று சொல்லி வீட்டில் உள்ளவர்களுக்கு டிக்கெட் கொடுத்து விளையாடு வேன். வீட்டுச் சுவற்றில் நல்லதொரு இடமாக தேடி உறுதியான ஆணி ஒன்றை அடித்து தொங்கவிட்ட பொழுது சரியாக எனது காது அளவிற்குத் தொங்கியது.

வீட்டார் அனைவரும் வெளியில் இருக்கும்பொழுது மெதுவாக உள்ளே சென்று தூங்கும் குழந்தையை கிள்ளி விடுவது போல் அமைதியாக தொங்கிக் கொண்டி ருக்கும் வானொலியின் குமிழை திருகி காதை வைத்துக் கேட்பேன். பெரும்பாலான நேரங்களில் கிர்ர்ர்....ர்.. எனும் சப்தம் மட்டும் கேட்கும். பல நேரங்களில் அவசரத்தில் குமிழை திருகி அணைக்காமல் விட்டு விடுவதால் வீட்டாரின் எதிர்பார்ப்புக்கு முன் பாகவே பேட்டரி பலவீனமாகி விடும். அதற்கு தண்டனையாக பேட்டரியை உச்சி வெயிலில் வீட்டுக் கூரையின் மேல் ஏற்றி விடுவார்கள். வெயில் சூடு ஏறினால் அதற்கு பலம் வந்து விடும் என்று ஒரு நம்பிக்கை. விரைவிலேயே எனது திருட்டுத்தனம் கண்டு பிடிக்கப்பட்டு, வீட்டுச் சுவற்றில் பலகை அடித்து அதன் மேல் வைத்து விட்டார்கள். இப்பொழுது என் கண்ணுக்கு மட்டுமே கிட்டியது. கைக்கு எட்டவில்லை.
காலை நேரத்தில் மாநிலச் செய்திகள் முடியும் வரை பெரியவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் வானொலி அதன்பிறகு இளைஞர்களின் செயல் 'பாட்டு' க்கு வந்து விடும்.
வானொலி யார் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அது ஒரு நேரத்தை உணர்த்தும் சாதனமாகத்தான் என்னை போன்ற சிறுவர்களுக்கு உதவியது.

காலையில், டி.எம். சௌந்திரராஜன், "பிறந்த நாள், இன்று பிறந்த நாள்" என்று பாடினார் என்றால் குளிக்கச் செல்ல வேண்டிய நேரம். குளத்துக்குப் போய் குளித்து விட்டு திரும்பினால், புல்லாங்குழலை முதன்மையாக்கி வரும் தலைப்பு இசையுடன் "பொங்கும் பூம்புணல்" என்று கூறுவார்கள். இலங்கை வானொலியில் என்ன நிகழ்ச்சி நடந்தாலும், "விவிதபாரதியின்" உங்கள் விருப்பம் நிகழ்ச்சிக்கு மாற்றி விடுவார்கள். காரணம் உள்ளூர் வானொலியின் தெளிவான ஒலிக்காக. உங்கள் விருப்பம் முடியும்பொழுது "பள்ளிக் கூடத்துக்கு நேரமாச்சு கிளம்பு" என்று வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் அனைவரும் சொல்லி முடித்து விடுவார்கள்.

புறப்பட்டுப் போனால், பள்ளிக்கு அருகே உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் முதல் அலைவரிசை ஒலிபரப்பாகும். ஏதோ ஒரு கர்நாடக இசை வந்து கொண்டிருக்கும். காலையில் பணியாளர் அந்த வானொலிப் பெட்டியை எழுப்பி அறையை பூட்டி விட்டு ஊரில் உள்ள மேல் நிலைத் தொட்டியில் நீரேற்றி முறை வைத்து ஒவ்வொரு பகுதியாக குழாய்களுக்குத் தண்ணீர் திறந்துவிட சென்று விடுவார். பெரும்பாலான நாட்களில் பள்ளி தொடங்கும்பொழுது, கிர்ர்...ர்.... எனும் ஓசை வானொலியில் கேட்கும், அதனுடன் "டேசன் மூடி எவ்வளவு நேரமாச்சி, இந்தப் பய வந்து நிறுத்துரானா பாரு..." எனும் வசவு எங்கள் பள்ளியின் உதவியாளரின் வெள்ளைத் தாடியின் இடையே இருந்து வெளிவரும்.

மதியம் பனிரெண்டு மணி ஆகப் போகிறது என்றால் எனக்கு ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்ளும். காரணம் ஐந்தாம் வகுப்பு ராஜு வாத்தியார், மெயின் ரோட்டில் உள்ள தங்கப்பன் கடைக்கு சுண்டல் வாங்க யாராவது ஒருவரை தேர்வு செய்வார். அவர் கொடுக்கும் நாலனாவை கையில் இறுகப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தால் எதிரில் இருக்கும் போஸ்ட் ஆபிஸ் வீட்டில், இங்கலிஸ் நியூஸ் கேட்கும்.

நான்காக கிழிக்கப்பட்ட செய்தித் தாளில் வாழைத் துண்டை வைத்து சுடச்சுட மசாலா சுண்டலை போட்டு மடித்து சணல் போட்டு கட்டி பத்து பைசா போக மிதி பதினைந்து பைசாவை கையில் திணிக்கும்பொழுது மசாலாவின் மணமும் அதன் சூட்டில் இளகும் வாழை இலையின் வாசனையுடன், தொழிலாளர்களுக்கான நிகழ்ச்சி என்று தங்கப்பன் கடை வானொலியில் இருந்து காற்றில் கலந்து வரும்.

பள்ளி வந்த சிறிது நேரத்தில் மதிய உணவு இடைவேளைக்கு வெளியே வரும்பொழுது 'ஆகாசவானி' என்று டில்லியிலிருந்து தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் வீடு போய் சாப்பிடும் பொழுது தேசபக்திப் பாடல்களோ மெல்லிசையோ பாடிக் கொண்டிருக்கும்.
அடுத்த அரை மணி நேரத்திற்கு பல்சுவை நிகழ்ச்சி அல்லது மகளிர் நிகழ்ச்சி முடிந்தவுடன் "தம்பி நேரமாகிடுச்சு! கிளம்பு.." என்று கட்டளை வருகையில் "நேரம் இப்பொழுது ஒரு மணி முப்பது நிமிடம்" என்று நேர அறிவிப்பு வரும்.

பள்ளியின் பிற்பகல் வேளையில் சில சமயம் அமைதியாக இருக்கும் பொழுது அருகில் உள்ள பானை செய்பவரின் வீட்டில் இருந்து வளைந்த பானையை ஈரபதத்துடன் கட்டை வைத்து தட்டும் பத்.. .பத் ... சத்தத்துடன் இலங்கை வானொலி யில் ஒலிக்கும் திரைப்படப் பாடல்கள் மெலிதாக கேட்கும்.

பஞ்சாயத்து ஆபிஸ் வானொலிப் பெட்டி பாட ஆரம்பித்து விட்டால், பள்ளி விடும் நேரம், எல்லாம் தயாராகி மணி அடித்தவுடன் மாணவர்களின் 'ஓ….ஓ….' என்னும் சத்தத்திற்கு இடையிலும், இலங்கை வானொலியின் காட்சியின் கானமும், மங்கையர் மஞ்சரி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கு பவர்களின் மென்மையான குரலில் இனிமையான தமிழ் என் காதுகளில் கேட்கும்.

மாலை நேர விளையாட்டு நேரங்களில் வீட்டார் சொல்லும் சிறு, சிறு வேலைகளை செய்வ தற்காக வீட்டினுள் வந்து போகும்பொழுது மாலை நேர 'விவத பாரதியில்' தமிழ் பாட்டு பாடிக் கொண்டிருக்கும். அவ்வாறு இல்லா மல் முதல் அலை வரிசையின் மாநிலச் செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தார்கள் என்றால் எனது விளையாட்டு நேரம் முடியப் போகிறது என்று அர்த்தம்.

செய்திகள் முடிந்தவுடன் பெரிய வர்களின் கவனம் என் மீது விழ "கால் கைய கழுவிட்டு உட்கார்ந்து படி" என்று உத்தரவு வரும். படிக்க உட்கார்ந்த சிறிது நேரத்தில் ஆகாசவானி என்று டில்லி செய்திகள் வாசிக்க ஆரம்பித்தால் எனக்கு தாலாட்டுவது போன்று இருக்கும். அரைகுறை தூக்கத்தில் இருக்கும் என்னை எழுப்பி சாப்பிட வைக்கும் பொழுது "மண்ணை எல்லாம் பொன் கொழிக்க செய்திடுவோம். அதில் பன்மடங்கு உற்பத்தியை பெருக்கிடுவோம்" என்று விவசாய நிகழ்ச்சிப் பாடலை கேட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்தால், "உடனே படுக்கக் கூடாது கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு படு" என்னும் பெரியவர்களின் வார்த்தைக்கு மதிப்பளித்து விட்டு படுக்கும்பொழுது மீண்டும் விவித பாரதிக்கு மாற்றப்பட்டு தேன் கிண்ணத்தின் ஓரிரு பாடல்கள் மட்டும் என் காதுகளில் தூக்கத்தில் கரைந்து விடும்.
இரவு வண்ணச்சுடரில் இடம் பெற்ற நாடகத்தைப் பற்றி மறுநாள் காலை பெரியவர்கள் பேசிக் கொள்ளும்பொழுது தான் வானொலியில் அப்படி ஒரு நிகழ்ச்சி உள்ளது என்பதே தெரியும்.
ஒருநாளின் ஒவ்வொரு பொழு தையும் வானொலி உணர்த்திக் கொண்டிருந்தபோது உயர்நிலைப் பள்ளியின் கடைசி மூன்று வகுப்புகளை முடிப்பதற்காக விடுதியில் தங்க நேரிட்டது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த பொழுது, நீள் செவ்வக வடிவத்தில் மின்சாரத்தால் இயங்கக் கூடிய பெரிய வானொலி பெட்டி இருந்தது. பேட்டரி தீர்ந்து விடுமே என்ற கவலை இல்லாது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று ஆவல் கூடுதலானது. தட்டச்சு வகுப்பிற்கு போன நேரம் போக மீதி நேரத்தை இந்த வானொலியில் செலவிடலாம் என்று திட்ட மிட்டேன்.

காலை நேரத்தில் வானொலியை இயக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே "தம்பி ரேடியோவை ஆஃப் பண்ணு. மிக்சி போடணும்" எனும் குரல் வரும். சொல்லி விட்டு ஓடும் எங்கள் வீட்டு மிக்சிக்கும் சொல்லாமல் ஓடும் பக்கத்து வீட்டு மிக்சிக்கும் நிறுத்த வேண்டி இருந்தது. பகல் நேரங்களிலோ, "இந்த கேசட்ட போடுப்பா நல்லா இருக்கும்" என்று ஒலி நாடாக்களுக்கு ஆதரவு கூடும். இரவு நேரத்தில் குழல் விளக்குகளால் 'கிர்ர்ர்...' என்ற ஓசையும் உறுத்தலாக இருக்கும்.

எனவே, பழைய சின்ன வானொலிப் பெட்டி எங்கே என்று கேட்டபொழுது ஏதோ ஒரு பெட்டிக்குள் இருந்து எடுத்துக் கொடுத்தார்கள். அதற்கு பேட்டரியை போட்டு விடுமுறையை கழித்தேன். மீண்டும், கூடுதல் இரண்டு வகுப்புகளுக்காக விடுதிவாசம் முடித்து விட்டு வீட்டிற்கு வந்தால் சாம்பல் நிற கண்ணாடி திரையுடன் தொலைக்காட்சி பெட்டி ஒன்று தனி சிம்மாசனத்தில் வீற்றிருந்தது.

இப்பொழுதெல்லாம், காலை நேரத்தில் ஊரில் யாரும் வானொலிப் பெட்டியை தொடுவதாகக் கூடத் தெரியவில்லை. பெரும்பாலான வீடுகளில் அவரவர் விருப்பத் திற்கேற்ப டி.எம்.எஸ். சீர்காழி, எல்.ஆர். ஈஸ்வரி என யாராவது ஒருவர் ஒலி நாடாவில் பக்தியுடன் பாடிக் கொண்டிருந்தார்கள்.

மாலை நேரங்களில் அந்த சாம்பல் நிற கண்ணாடி திரை உமிழ்ந்து கொண்டிருந்த கறுப்பு, வெள்ளை உருவங்களை பார்த்துக் கொண்டிருந் தார்கள். யாருக்கும் வானொலி ஞாபகமில்லை.
நான் எனது வானொலி பெட்டியை தேடிப் போனேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வைத்த அதே இடத்தில் தூசி, ஒட்டடையுடன் படுத்திருந்தது. உள்ளே பேட்டரி இருப்பதற்கான அடையாளமாய் கனமாய் இருந்தது. குமிழை திருகினேன். டிக்டிக் எனும் சப்தம் மட்டும் கேட்டது. அவசரமாய் உறைகளை கழட்டி னேன்.

பேட்டரி திரவமாக கசிந்து அதன் உட்பாகமெல்லாம் திராவக புற்றுக் களாய் பரவி இருந்தன. யாரும் மதிக்காமல் வீட்டில் இருக்கக் கூடாது என்று எண்ணி கொடுத்த உணவையே விஷமாக்கி உறைந்து போயிருந்தது.

என்னை எழுப்பி குளிக்க வைத்து பள்ளிக்கு அனுப்பி சாப்பாடு ஊட்டி உறக்கத்திற்குத் தாலாட்டுப் பாடிய அந்த வானொலி மௌனித்துக் கிடந்தது. அதற்கு செவி சாய்க்க யாரும் தயாராயில்லை ஓசை அதிகமாகிப் போன இக்கிராமமும் அதற்கு ஒத்துழைப்பதாய் இல்லை. கல்லூரியில் சேர்ந்தபொழுது வாழ்த்துச் சொல்ல வராமல் போன அந்த என் வானொலியை, உங்களுடைய ஊரில எங்காவது கேட்டீர்களா?.. - திருச்சி ஆர். கல்யாண்குமார் (9842412363)

No comments: