Thursday, January 27, 2011

பிபிசி உலக சேவையில் பெரும் வெட்டுக்கள்


பிபிசி உலக சேவை
பிபிசி உலக சேவை நிறுவனம் 30 மொழிகளில் வானொலி ஒலிபரப்பு செய்துவந்தது.
பிரித்தானிய அரசாங்கத்தின் நிதியுதவி குறைக்கப்பட்டதால், பிபிசி உலக சேவை நிறுவனம் தனது சேவைகளிலும், ஊழியர்களின் எண்ணிக்கையிலும் பெரும் குறைப்பை அறிவித்துள்ளது.

2400 ஊழியர்களைக் கொண்ட இந்நிறுவனத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 650 பேர் வேலையிழப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்படும் மொழிச் சேவைகள்

செர்பிய சேவை, அல்பேனிய சேவை, மாசிடோனிய பிரிவுகள் சேவை, ஆப்ரிக்காவுக்கான போர்த்துகீசிய மொழிப் பிரிவு மற்றும் கரீபியன் தீவுகளுக்கான ஆங்கில மொழிச் சேவை ஆகிய ஐந்து மொழிப் பிரிவுகள் முழுமையாக மூடப்படுகின்றன.

இது தவிர, சீன மொழியான மாண்டரின், ரஷ்யா, வியட்நாமிய மொழி என வேறு பல மொழிப்பிரிவுகளில் வானொலிச் சேவை மட்டும் மூடப்படுகிறது. ஆனால் இந்த மொழிப் பிரிவுகளில் இணையதள மற்றும் கைத்தொலைபேசி மூலம் சேவைகள் தொடரும்.

அதேபோல சிற்றலை ஒலிபரப்புகளும் கடுமையாக குறைக்கப்படும்.

இந்திய மொழியான ஹிந்தியில் சிற்றலை ஒலிபரப்புகள் இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறுத்தப்படும்.

ஆனால் பண்பலை ஒலிபரப்புகள் ஊடாக ஹிந்தி சேவையின் நிகழ்ச்சி நீடிக்கும்.

தமிழோசை

இந்த ஆண்டு தனது 70வது ஆண்டு நிறைவை எட்டும் தமிழோசையைப் பொறுத்தவரை, அதற்கு அளிக்கப்பட்டுவரும் நிதியில் அடுத்த மூன்றாண்டு காலகட்டத்தில் 10 சதவீதம் சிக்கன சேமிப்பு என்ற இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த இலக்கு காரணமாக, தமிழோசையில் பணிபுரிவோர் எண்ணிக்கை, ஒலிபரப்பு நேரம் மற்றும் ஒலிபரப்பு தன்மை போன்றவற்றில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.

ஆனால் உடனடியாக இந்த சேமிப்பு இலக்கு காரணமாக தமிழோசையின் சேவையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை


No comments: