நீண்ட நாட்களாக ஒரு எண்ணம். பி.பி.சி-யில் பணிபுரியும் போதே இந்த எண்ணம் இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த இவ்வளவு நாட்கள் ஆயிற்று. ஆம், செய்தி சாம்ராஜ்யத்தின் மன்னன் என அனைவராலும்
புகழ்ந்து கூறப்படும் பி.பி.சி. உலக சேவை பற்றிய முழுமையான வரலாறு தமிழில் இல்லை. எனவே அதை எழுத இந்த களம் சரியாக இருக்கும். மேலும்
பல வானொலி நேயர்களின் எண்ண ஓட்டங்களையும் இந்தத் தொடர் நிச்சயம் நிறைவேற்றும் என நம்பலாம்.
நீங்கள் அறிந்திராத பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை தாங்கி வரவுள்ள இதில் நிச்சயம் நீங்கள் அதிசயிக்கக் கூடிய பி.பி.சி. பற்றிய பல அறியத் தகவல்கள் இருக்கும்.
1920
ஸ்ரான்ட் பகுதியில் இருந்த மார்க்கோணி ஹவுஸில் பி.பி.சி.-யின் ஒலிபரப்பு தொடங்கப்பட்ட போது அதன் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா?. வெரும் நான்கு அலுவலர்கள். அப்பொழுது பி.பி.சி.-க்கு பெயர் பிரிட்டிஸ் புராட்காஸ்டிங் கம்பெனி. அதன் பின்னரே பி.பி.சி.யானது கார்ப்பசேனாக மாறியது.
வரலாற்றில் முதன் முறையாக செய்தி அறிக்கைகள் பி.பி.சி.-யில் இரண்டு முறை ஒலிபரப்பப்பட்ட பின் தான் அந்த தகவலினை அங்கு வெளிவந்த புகழ்பெற்ற நாளிதழ் ‘டெய்லி நியூஸ்’ வெளியிட்டது. வயர்லெஸ் உபகரணங்களைத் தயாரிப்பவர்கள் இந்த நிலையத்தினை வடிவமைத்த இரண்டு வாரங்களில் வானொலி ஒலிபரப்பானது தொடங்கப்பட்டது.
முதலில் இரண்டு செய்தி அறிக்கைகள் வாசிக்கப்பட்டது. முதல் செய்தி அறிக்கையானது மெதுவாகவும், அடுத்த செய்தி அறிக்கையானது வேகமாகவும் வாசிக்கப்பட்டது. இதனை வாசித்தவர் அன்றை பி.பி.சி.-யின் நிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக இருந்த ஆர்தர் பாரோவ்.
“அன்றைய தினம் செய்தி வாசித்தது பல்வேறு புதிய அனுபவங்களைக் வழங்கியது. காரணம் புதிய பெயர்களை உச்சரிக்கும் போது எந்தத் தவறுகளையும் செய்துவிடக்கூடாது என்ற கவனத்தில் குழந்தைகள் படிப்பது போன்று எழுத்துக்கூட்டி படித்தேன்.” அந்த சமயத்தில் தேர்தல் முடிவுகள் பிரிட்டிμல் வெளியாகிக் கொண்டு இருந்தது. அந்த காலகட்டத்தில்
மொத்தமே தோராயமாக 30,000 மக்களிடம் மட்டுமே வானொலிக் கேட்பதற்கான உரிமம் இருந்தது. தேர்தல் முடிவின் போது அனைத்து அரசியல் கட்சியினரும் வானொலியைக் கேட்டவாறு இருந்தனர் என ‘த டைம்ஸ்’ இதழ் செய்தி வெளியிட்டது.
*****
செய்திகளுக்குத் தடைசெய்திகள் என்றாலே பி.பி.சி. என்ற ஒரு நிலை இருந்த தொடக்க காலகட்டம். ஆனால் பி.பி.சி. செய்திகளுக்கே ஒரு காலகட்டத்தில் தடை விதிக்கப்பட்டது என்றால் நம்புவீர்களா?. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எல்லாம் காரசாரமாக பேசிக்கொண்டு இருந்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் முதலாளிகள் ஆகும். அவர்களில் ஒரு மூத்த பத்திரிகையாளர் “இனி பி.பி.சி. வானொலியில் செய்திகளை படிக்கக்கூடாது” என்று தனது வாதத்தினை வைத்துக்கொண்டு இருந்தார்.
அவரது அந்தக் கூற்றினை அங்கே கூட்டத்தில் இருந்த அனைவரும் ஆதரித்தனர். பி.பி.சி.யில் செய்திகளை வாசிக்கக்கூடாது என்று அவர்கள் கூறியதற்கான காரணத்தனை கேட்டால், இன்றைய காலகட்டத்தில் நகைச்சுவையாக இருக்கும். ஆம், அவர்கள் கூறியது இது தான், “பி.பி.சி. செய்திகளை முன்கூட்டியே ஒலிபரப்பி விடுவதால் எங்களது நாளிதழின்
விற்பனை சரிந்து வருகிறது. தொடர்ந்து இது போன்று ஒலிபரப்பினால் நாங்கள் அனைவரும் நாளிதழ்களை மூடிவிட்டு செல்ல வேண்டியது இருக்கும்.”
இதற்காக ஒரு தீர்வினையும் அவர்களே வழங்கினர். அதாவது நாளிதழ்கள் அனைவருக்கும் கிடைத்த பின்னரே செய்தி அறிக்கைகள் வாசிக்கப்பட வேண்டும் என்பது அவர்கள் தரப்பு வாதம். அந்த வாதத்தினை ஏற்றுக்கொண்ட அன்றைய பி.பி.சி. பொது மேலாளர் ஜான் ரீத், “செய்திகளை அவ்வளது சீக்கரத்தில் ஒலிபரப்புவதால் நேயர்களும் நன்மையில்லை” என்றார்.
33 வயதே ஆன ஜான் ரீத் பொது மேலாளர் பதவி ஏற்றதும் சந்தித்த முதல் பிரச்சனை இது. ‘பொது செய்தி அறிக்கை’ எனும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஒரு வாரம் ஆகிய நிலையிலேயே இந்தப் பிரச்சனை பூதாகாரமானது. காரணம் நாளிதழ்களில் வரும் அனைத்து செய்திகளும் இதில் வாசிக்கப்பட்டது. ஆனால் இதற்கு பி.பி.சி.-யின் சர் வில்லியம் நோபுள் கூறிய காரணம் ஒரு சில பத்திரிகையாளர்களை யோசிக்க வைத்தது.
“பி.பி.சி.-யின் பொது செய்தி அறிக்கையை கேட்கும் நேயர்கள் கூடுதல் செய்திகளுக்காக நாளிதழ்களை தொடர்ந்து வாங்குவர். அதனால் நாளிதழ்களின் விற்பனையும் கூட அதிகரிக்கும்” என்றார். செய்திகளை வழங்கிய ஏஜன்சிகளும் நாளிதழ்களுக்கு சாதகமாகவே இருந்தன. காரணம்
பி.பி.சி.யைத் தவிர வேறு வானொலிகள் செய்திகளை நியூஸ் ஏஜன்சிகளிடம் இருந்து வாங்குவதில்லை.
மாறாக ஏராளமான நாளிதழ்கள் அவர்களின் வாடிக்கையாளர்களாக
இருந்தனர். “இனால் செய்திகளுக்கு விலை மிக அதிகம் கொடுத்து வாங்க
வேண்டியிருந்ததாக” ஜான் ரீத் தனது சுய சரிதையில் கூறுகிறார். அந்த காலகட்டத்தில் மற்றும் ஒரு பிரச்சனையும் பி.பி.சி.க்கு இருந்தது. அதாவது செய்திகளை ஒலிபரப்பும் போது, இந்த செய்தியானது காப்புரிமை
செய்யப்பட்டது என வானொலி ஒலிபரப்பின் போதேக் கூறவேண்டும்.
இன்னும் தெளிவாக சொல்வதானால், “இந்த செய்தியானது ராய்டர், பிரஸ் அசோசியேசன், எக்ஸ்சேன்ஜ் டெலிகிராப் மற்றும் சென்ட்ரல் நியூஸ்
ஆகிய நிறுவனங்களின் காப்புரிமைக்கு பாத்தியப்பட்டது” என ஒவ்வொரு செய்தி அறிக்கையின் ஆரம்பத்திலும் முடிவிலும் கூறவேண்டியிருந்தது.
அன்றைய காலகட்டத்தில் செய்திகளை வானொலியில் ஒலிபரப்புவது ஒன்றும் அவ்வளவு எளிதானதாக இருந்துவிடவில்லை.
ஒரு பிரச்சனை முடிந்த பின் மீண்டும் ஒரு பிரச்சனை தலைத்தூக்கியது. ஆம், இனி பி.பி.சி.-யில் விளையாடடு செய்திகளை நேரடியாக ஒலிபரப்பக் கூடாது என்பது தான் அது. அதற்கும் பி.பி.சி. வளைந்து கொடுத்து சென்றது.
அதன் பின் 1926-ல் டெர்பியில் நடந்த ஒரு விளையாட்டுப் போட்டியை நேரடியாக ஒலிபரப்பியது. ஆனால் அந்த நேரடி ஒலிபரப்பு விசித்திரமாக இருந்தது. விளையாட்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் செய்த ஆரவாரமும் கைத்தட்டல்களுமே ஒலிபரப்பப்பட்டது. ஆனால் அந்த ஆரவாரம் எதற்கானது என்று அறிந்து கொள்ள நேயர்கள் அன்றைய இரவு பொது செய்தி அறிக்கை வரைக் காத்திருக்க வேண்டும்.
இப்படியெல்லாம் காத்திருந்து வானொலியைக் கேட்டுள்ளனர் அந்த கால பிரிட்டிஷ் மக்கள். இந்த பிரச்சனை முடிந்து ஆறுவதற்குள் மற்றும் ஒரு பிரச்சனையானது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பூதாகாரமானது. 1926 ஏப்ரல் 30, சுவாரஸ்யமான இசை நிகழ்ச்சி ஒன்றினை நேயர்கள் ரசித்துக்கொண்டு இருந்தனர். தீடிரென பாடலின் இடையே ஒரு அறிவிப்பு. அறிவிப்பு கொடுத்தவரின் குரல் அனைவருக்கும் பரிச்சியமாக இருந்தது.
பிரிட்டிஷ் சுரங்கத் தொழிளாலர்களின் வேலை நிறுத்தம் பற்றியது தான் அந்த பிளாஷ் நியூஸ். அந்த செய்தியனை வானொலியில் நேரடியாக அறிவித்தவர் வேறு யாருமல்ல, ஜான் ரீத். செய்தியை ஒலிபரப்பியது தான் தாமதம். அரசியல் கட்சிகள் சும்மா விடுமா என்ன? சர்ச்சில் தலைமையிலான அரசு எதிர்கட்சிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாடியது.
அது தவறான செய்தி என ஆளுங்கட்சி வாதாடியது. அப்படி சொன்னதோடு மட்டுமல்லாமல் தற்பொழுது பி.பி.சி தவறான செய்திகளையும் ஒலிபரப்ப ஆரம்பித்து விட்டது என்றார்கள். எனவே பி.பி.சி இனி ‘பிரிட்டிஷ் புராட்காஸ்டிங் கார்பரேசன்’ எனக்கூறுவதை விட ‘பிரிட்டிஷ் பால்ஸ்காட்டிங் கார்பரேசன்’ எனக் கூறலாம் என்றனர்.
அந்த வேலை நிறுத்தத்தின் நிறைவில் அந்த பிரச்சனையும் முடிவுக்கு வந்தது. அந்த செய்தியைப் பற்றி நாளிதழ்களும் பலவாறு செய்திகளை வெளியிட்டன. அன்றை பிரிட்டிஷ் பேரரசின் பிரதமர் ஸ்டான்லி பால்ட்வின் பி.பி.சி.-யைப் பாராட்டி கடிதம் ஒன்றை எழுதினார். அதில் அவர் கூறிய கருத்தின் சாராம்சம் இது தான், “பி.பி.சி. என்றுமே அரசுக்கு சாதகமாகவே செயல்பட்டு வந்துள்ளது.”
பெயர் மாற்றம் உலகின் எந்த மூலையில் இருந்தும் செய்திகளை பெற்று உடனுக்குடன் ஒலிபரப்பக் கூடிய திறனை 1927-ல் பெற்றது பி.பி.சி. 1927 ஜனவரி 1-ல் தனது பெயரிலும் ஒரு மாற்றத்தினை செய்தது பி.பி.சி. அது நாள் வரை பிரிட்டிஷ் புராட்காஸ்டிங் கம்பெனி என அழைக்கப்பட்டு வந்த பி.பி.சி.யானது இனி பிரிட்டிஷ் புராட்காஸ்டிங் கார்ப்பரேசன் என அழைக்கப்படும் என அறிவித்தார் ஜான் ரீத்.
ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு மட்டுமே இயக்குனராக இருந்த ஜான் ரீத் அவர்களின் பதவியும் உயர்தப்பட்டு டைரக்டர் ஜெனரலாக பணியமர்தப்பட்டார். செய்தி அறிக்கைகளும் அதிகரிக்கப்பட்டன. செய்தி நிறுவனங்கள் மற்றும் நாளிதழ்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தினை அடுத்து விளையாட்டு செய்திகள் நேரடியாக ஒலிபரப்பப்பட்டன.
அதுநாள் வரை அரசின் ஒரு சில கொள்கைகளில் பி.பி.சி.-க்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அவற்றை ஆதரித்து வந்தது. ஆனால் அது உண்மை செய்திகளுக்கு உலை வைப்பதாகவே இருந்தது. இந்த பிரச்சனைகளுக்கு 1928-ல் ஒரு முடிவு கிடைத்தது. அது வரை அரசியல், தொழில் மற்றும் மதசார்ந்த செய்திகளுக்கு இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. 1929 அடுத்தக்கட்ட பயணத்திற்கு தயாரானது பி.பி.சி. ஆம் தொலைகாட்சியின் வரவு பி.பி.சி.-யை
வெகுவாக மாற்றும் என்று அவர்களே அன்றைய காலகட்டத்தில் நினைக்கவில்லை. தொழில்நுட்பமானது அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தது.
1930
உலக நாடுகள் பலவும் சிற்றலையில் சீறிப்பாய்ந்த நேரமது. உலகையே தன் கைக்குள் வைத்திருந்த பிரிட்டிஸ் பேரரசு மட்டும் சும்மா இருக்குமா என்ன. அதுவும் அந்த காலகட்டத்தில் சிற்றலை ஒலிபரப்பின் வீச்சு அபாரமானதாக இருந்தது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை, சிற்றலைத் தொழில்நுட்பமானது தொலைதூர நாடுகளையும் சென்றடைவதாக இருந்தது. ஐரோப்பிய நாடுகள் பலவும் ஏற்றகனவே தனது சர்வதேச சிற்றலைச் சேவையை செய்யத் துவங்கியிருந்தன.அப்படியிருக்க பேரரசு சும்மா இருக்குமா என்ன? பிரிட்டிஸ் அரசாங்கம் சிற்றலை வானொலியைத் தொடங்க அனுமதியளித்த அதே சமயத்தில் பிரிட்டிஸ் ஆட்சிக்குட்பட்ட நாடுகளும் இதற்கு ஆதரவு அளித்தன. 1927ல் நடைபெற்ற காலனிய கருத்தரங்கம் பி.பி.சி. ஆரம்பிக்க முழு மனதாக ஆதரவு வழங்கினாலும் அதற்கான பணத்தினை வழங்க யோசித்தது.
அப்படியே பணம் போட்டாலும் அந்த ஒலிபரப்பானது உலகம் முழுமைக்கும் கேட்குமா என்ற சந்தேகமும் இருக்கத்தான் செய்தது. குறிப்பாக அந்த ஒலிபரப்பானது காலனிய நாடுகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தது.
ஒரு காலை நேரத்தில் தனது வழக்கமான பணிகளுக்கு நடுவே ஒரு சிந்தனை தோன்றியது அவருக்கு. ஆம், பி.பி.சி-யின் முதல் இயக்குனராக பணியமர்த்தப்பட்ட சர் ஜான் ரீத் ஒரு முடிவுக்கு வந்தார். அவரது முடிவு ஒரு சிலருக்கு ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியது. ஆனால் ஒரு சிலர் அதனை வரவேற்றனர். அப்படி எடுக்கபட்ட முடிவு ஆண்டுகள் பல கடந்தும் இன்றும்
நடைமுறையில் உள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது. “பிரிட்டிஸ் ஆளுகைக்கு உட்பட்ட அனைவரும் வானொலி வைத்திருந்தால் ஆண்டிற்கு ஒரு முறை வரி செலுத்த வேண்டும். மேலும் பெறப்படும் அந்த வரியின் மூலமே பி.பி.சி ஒலிபரப்பிற்கு தேவையான செலவினங்களைப் பூர்த்தி செய்து கொள்ளவேண்டும்” என முடிவெடுக்கப்பட்டது.
ஜான் ரீத் ஒரு உறுதி மொழியையும் அப்பொழுது வழங்கினார். அதாவது, “பி.பி.சி-யின் நிகழ்ச்சிகள் அனைத்தும் உங்கள் அனைவரையும் தெளிவாக வந்தடையும். ஆனால் அதே சமயத்தில் அதில் ஒலிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் உங்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும் என்று எண்ணிவிட வேண்டாம்” என்று கண்டிப்பாக கூறினார். இது தான்
இன்றளவும் பி.பி.சி-யின் தனித்துவத்திற்கு காரணமாக இருக்கிறது. அரசாங்கம் பணம் கொடுக்கிறதே என்பதற்காக அரசாங்கம் செய்கின்றத் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தவறியதில்லை பி.பி.சி.
அவர் அவ்வாறு கூறியதற்கு காரணம் இல்லாமல் இல்லை, “பணம் கட்டி நிகழ்ச்சிகளை கேட்கும் எங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகள் இல்லாத பட்சத்தில் நாங்கள் பணம் கட்ட முடியாது” என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக குரல்கள் ஒலித்தவண்ணம் இருந்தது. இதன் காரணமாக அவர் ஒரு சிலவற்றை மக்களுக்குத் தெளிவுப்படுத்த வேண்டி இருந்தது.
(தொடரும்..)
No comments:
Post a Comment