Sunday, August 26, 2012

இலவசமாக வெளிநாட்டு மொழிகளைக் கற்கலாம்


மாணவர்கள் மத்தியில் என்றுமே வெளிநாட்டு மொழிகள் மீது ஒரு மோகம் உண்டு. இன்று வெளிநாட்டு மொழி ஒன்றினை கற்றுக்கொள்வது அவசியமாக உள்ளது. அதுவும் மாணவர்கள் அதனைக் கற்றுக்கொள்வது, வேலை வாய்பிற்கு பெரிதும் உதவுகிறது.

நம்மில் பலருக்கு, வெளிநாட்டு மொழிகள் என்றாலே முதலில் ஞாபகம் வருவது பிரான்ஸ் கலாச்சார மையமும் ஜெர்மனியின் மேக்ஸ் முல்லர் பவனும் தான். சென்னையில் இவை இரண்டும் புகழ்பெற்றவை. சென்னையில் உள்ளவர்கள் எளிதாக இம்மையத்தின் மூலம் கற்கலாம். ஆனால் பைசா கொஞ்சம் அதிகம்.

ஆனால், சென்னையில் வசிக்காதவர்கள் எங்கே கற்பது? அதற்கும் வழி உண்டு. அதுவும் நயா பைசா செலவின்றி கற்கலாம். அது எப்படி சாத்தியம் என நீங்கள் கேட்பது புரிகிறது. சாத்தியம் இல்லாததை என்றுமே மாணவர் மலர் கூறாது.

வானொலிகளை கேட்பவரா நீங்கள்? இல்லையென்றாலும் கவலை வேண்டாம். உலகின் பல்வேறு நாடுகள் நமது அகில இந்திய வானொலி போன்று வெளிநாட்டு சேவையை இந்திய நேயர்களுக்காக பல வெளிநாட்டு வானொலிகள் செய்து வருகின்றன.


அவை தங்கள் நாட்டு தேசிய மொழியை நம் போன்ற நாட்டினர் கற்றுக்கொள்ள வேண்டி வானொலி ஊடாக மொழிப் பாடங்களை நடத்துகின்றனர்.”அட போங்கப்பா… வானொலி மூலம் நடத்துற பாடத்த புத்தகம் இல்லாம எப்படி கத்துக்குகிறது…” என நீங்கள் ஆதங்கப் படுவது புரிகிறது.

கற்றுக் கொள்ள ஆர்வம் இருந்தால் மட்டும் போதும். நீங்கள் எதன் துணையுடனும் வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம். வானொலி மூலமாக பாடம் நடத்தினாலும், அதற்கான புத்தகங்களை இலவசமாகவே அந்த அந்த வானொலிகள் உங்களுக்கு அனுப்பி விடுகின்றனர்.
இனி என்ன கவலை?! பைசா செலவில்லை…ஆனால் ஆர்வம்?! ஆம் அது முக்கியம். ஜெர்மன், பிரென்ச்சு, ஜப்பானீஸ், பெர்சியன், சைனீஸ் மற்றும் அங்கிலத்தினை பல்வேறு வெளிநாட்டு வானொலிகள் நம் வரவேற்பறைக்கே வந்து கற்றுத்தருகின்றனர்.

ஜெர்மன் – டொய்சு வெள்ள (Deutsche Welle)
ஜெர்மனியின் குரல் என்று ஒலிபரப்பி வந்த டொய்சு வெள்ள இந்திய நேயர்களுக்காக செய்து வந்த சிற்றலை சேவை நிறுத்தப்பட்டாலும் ஜெர்மன் மொழியை கற்றுத்தர தவரவில்லை. ’ரேடியோ டி’ என்ற பெயரில் ஆங்கிலம் மூலம் ஜெர்மன் மொழியை தனது நேயர்களுக்கு வானொலி மூலம் கற்றுத்தருகிறது.

இதற்கான பாடதிட்டத்தினை கோத்தே மையத்தின் வல்லுனர்களைக் கொண்டு தாயாரித்துள்ளது. வானொலியில் ஒலிப்பரப்பாகும் பாடதிட்டத்தின் அடிப்படையில் ‘ரேடியோ டி’ என்ற புத்தகம் மற்றும் இரண்டு குறுந்தகட்டினையும் இணைத்து நேயர்களுக்கு இலவசமாக அனுப்பி வருகிறது. ஆனால், தொடர்ந்து இவர்களது நிகழ்ச்சிகளைக் கேட்பவர்களுக்கு மட்டுமே இது அனுப்பப்படுகிறது.

இதைப் படித்தவுடன், எனக்கும் ஒன்று இலவசமாக அனுப்பி உதவுங்கள் என்று கேட்டு கடிதம் எழுதினால் உங்களுக்கு அனுப்புவது சந்தேகமே. காரணம், நீங்கள் எந்த அளவு அவர்கள் மொழி மீது ஆர்வம் கொண்டுள்ளீர்கள் என்பதனை அறிந்த பின்னரே அவர்கள் உங்களுக்கு அனுப்புவர்.


பெட்டிச் செய்தி-1
ஜெர்மன் வானொலியின் நிகழ்ச்சிகளை தினமும் காலை 9.30 முதல் 10.30 வரை 6180(49மீ),7240(41மீ),9470(31மீ),12045(22மீ) மற்றும் இரவு 12.30 முதல் 1.00 மணி வரை 7365(41மீ),9735(31மீ),11800(25மீ) ஆகிய சிற்றலைவரிசைகளில் கேட்கலாம்.
ஜெர்மன் வானொலியை தொடர்பு கொள்ள அவர்களது இந்திய முகவரி: Deutsche Welle, Voice of Germany, P.O.Box: 5211, Chanakyapuri, New Delhi - 110021   
தாமதம் தவிர்க நேரடியாக தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் எழுத வான் அஞ்சல் முகவரி: Radio D, Deutsche Welle, D-53110 Bonn, Germany. Email: info@dw.de, Web: www.dw.de


பிரென்ச்சு – ரேடியோ பிரான்ஸ் இண்டர்நேசனல்
இந்தியர்கள் ஆங்கிலத்துக்கு அடுத்து விரும்பி கற்கும் மொழி பிரென்ச்சு என்றால் அது மிகையாகாது. காரணம் உலக மொழிகளில் பிரென்ச்சுக்கு என்றுமே ஒரு முக்கியத்துவம் உண்டு. ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்தால், உங்களுக்கு பிரென்சு மற்றும் தெரிந்திருந்தால் போதுமானது.

காரணம், அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இந்த மொழியினை நன்கு அறிவர். மேலும் பிரென்ச்சு காலனியாதிக்கம் செய்த நாடுகள் ஏராளம். அப்படிப்பட்ட மொழியினை கற்றுக்கொள்ள யாருக்கு தான் ஆர்வம் இருக்காது.

ரேடியோ பிரான்ஸ் இண்டர்நேசனல், சிற்றலை ஒலிபரப்பு மட்டுமல்லாமல் இணையத்தின் ஊடாகவும் தனது வெளிநாட்டு நேயர்களுக்கு பிரென்ச்சு மொழியினைக் கற்றுக் கொடுக்கிறது. அதனைக் கற்றுக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான். அவர்களது வானொலி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கேட்க வேண்டும்.

La Talisman Brise எனும் தலைப்பினில் பிரென்சு மொழிப் பாடத்தினை தற்பொழுது ஒலிபரப்பி வருகிறது. இந்த பாடத்திட்டம் மற்றும் புத்தகங்களை பதிவு இறக்கம் செய்ய http://www.rfi.fr/lfen/statiques/accueil.asp

பெட்டிச் செய்தி-2
ரேடியோ பிரான்ஸ் இண்டர்நேசனல் வானொலியின் நிகழ்ச்சிகளை தினமும் காலை 9.30 முதல் 10.30 வரை 7425(41மீ),11995(25மீ),9805(31மீ) மற்றும் மதியம் 12.30 முதல் 1.30 மணி வரை 15615(19மீ) ஆகிய சிற்றலைவரிசைகளில் கேட்கலாம்.
ரேடியோ பிரான்ஸ் இண்டர்நேசனலைத் தொடர்பு கொள்ள அவர்களது இந்திய முகவரி: Radio France International, C/o French Cultural Centre, 2, Aurangzeb Road, New Delhi – 110011. 
தாமதம் தவிர்க நேரடியாக தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் எழுத வான் அஞ்சல் முகவரி: Radio France International, Maison de la Radio, 116 Avenue du President-Kennedy, F-75762 Paris Cedex 16, France. Email: english.service@rfi.fr, Web: www.rfi.fr

ஜப்பானீஸ் – ரேடியோ ஜப்பான்
சித்திர எழுத்தால் ஆன மொழி என்பதாலோ என்னவோ நம்மில் பலருக்கு ஜப்பானிய மொழி மீது ஒரு விருப்பம் என்றுமே உண்டு. அந்த மொழியை தமிழகத்தில் கற்றுக்கொடுக்க பல்வேறு அமைப்புகள் இருந்தாலும் அதில் முதன்மையானது ஜப்பானிய தூதரகம் ஜப்பானிய வர்த்தக கூட்டமைப்புடன் இணைந்து நடத்தும் படிப்பு.

ஜப்பான் வானொலியானது இந்திய மொழிகளில் இந்தி மற்றும் வங்காள மொழிகளில் தனது சேவையைச் செய்துவருகிறது. இவர்களின் ஆங்கில சேவையின் ஊடாக நாமும் ஜப்பானிய மொழியைக் கற்க ஏற்பாடு செய்துள்ளனர்.

Japanese Lessons ன்ற தலைப்பினில் பாடத்திட்டத்தினை வகுத்து உலகின் 17 மொழிகளில் ஒலிபரப்பி வருகின்றனர். பாடங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்வதோடு, உங்களின் ஆர்வத்தினைப் பொருத்து இலவச புத்தகங்களையும் உங்களுக்கு அனுப்பி உதவுகின்றனர். அவர்கள் நடத்தும் பாடங்களை http://www3.nhk.or.jp/lesson/english/ எனும் இணைய முகவரியில் காணலாம்.



பெட்டிச் செய்தி-3
ரேடியோ ஜப்பான் நிகழ்ச்சிகளை இந்திய நேயர்கள் தினமும் இரவு 7.30 முதல் 8.00 மணி வரை 15735(19மீ),11705(25மீ) ஆகிய அலைவரிசைகளில் கேட்கலாம். இது தவிர தினமும் மதியம் அவர்களின் நிகழ்ச்சிகள் மறு ஒலிபரப்பு செய்யப்படுகின்றது. அதனை தினமும் மதியம் 3.30 முதல் 4.00 மணி வரை 9625,9695(31 மீட்டர்களில்) கேட்கலாம்.
 
ரேடியோ ஜப்பானை தொடர்பு கொள்ள இந்திய அஞ்சல் அட்டைப் போதுமானது. நீங்கள் கேட்கும் விபரங்களுக்கு உடனுக்குடன் பதில்களை நேரடியாக ஜப்பானில் இருந்து அனுப்பி வைக்கின்றனர். முகவரி: Radio Japan NHK, New Delhi Bureau, 6th Floor, Meridian Commercial Complex, 8, Windsor Place, Janpath, New Delhi – 110001.
 
வான் அஞ்சல் மூலமும் இவர்களை தொடர்பு கொள்ளலாம். முகவரி: Japanese Lessons, Radio Japan (NHK World), 2-1, Jinnan 2-chome, Shibuya-ku, Tokyo, 150-8001, Japan. Email: nhkworld@nhk.jp, Web: www.nhk.or.jp/nhkworld
 
 
பெர்சியன் – ஈரான் வானொலி
 
ஈரானின் தேசிய வானொலி பெர்சியன் மொழியைத் தனது நேயர்களுக்கு கற்றுக் கொடுக்கிறது. அரபு நாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் இந்த மொழியை கற்று இருந்தால் அவர்களுக்கு உடனே வாய்ப்பு கிடைக்கிறது.
 
இஸ்லாமிய வானொலியான ‘இஸ்லாமியக் குடியரசின் ஈரான் ஒலிபரப்பு’ என்ற பெயரில் ஒலிபரப்பும் இந்த வானொலி எளிதாக புரியும் வகையில் பெர்சிய மொழியை கற்பிக்கிறது எனலாம்.
 
அடிப்படையில் இருந்து தொடங்குவதால், அனைவரும் இவர்களது பாடதிட்டத்தினை வரவேற்கினறனர். 112 பாகங்களாக உள்ள அனைத்து பகுதிகளையும் http://english.irib.ir/component/k2/item/54616-part-1 எனும் தொடுப்பில் பெறலாம். அதற்கான பாடப் புத்தகங்களையும் அவர்களுக்கு எழுதிப் பெறலாம்.
 
பெட்டிச் செய்தி-4
 
இஸ்லாமிக் குடியரசின் ஈரான் ஒலிபரப்பினை இந்திய நேயர்கள் தினமும் கேட்கலாம். சிற்றலையில் ஒலிபரப்புவதோடு இணையத்திலும் அதே சமயத்தில் கேட்கலாம். இந்திய நேயர்கள், தினமும் மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை 21590, 21640(13மீட்டர்கள்) மற்றும் இரவு 9.00 மணி முதல் 10.00 மணிவரை 11945(மீ),13780(22மீ) அலைஎண்களிலும் கேட்கலாம்.
 
இவர்களையும் இந்திய முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். முகவரி: Voice of the Islamic Rebublic of Iran (VOIRI), 5, Barkhamba Road, New Delhi – 110001.
 
வான் அஞ்சல் வழியாகவும், மின் அஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ள: Voice of the Islamic Rebublic of Iran (VOIRI), P.O.Box: 19395-6767, Tehran, Iran. Email: englishradio@irib.ir, Web: www.irib.ir/worldservice 
 
சைனீஸ் – சீன வானொலி நிலையம்
 
உலக மொழிகளில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் பேசும் மொழியாக சீன மொழி உள்ளது. உலகின் வல்லரசாக போட்டியிட்டு வரும் சீனாவில் வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. இன்று அமெரிக்கா போன்று சீனாவிற்கும் தமிழர்கள் பலர் வேலைக்கு செல்கின்றனர்.
சீன மொழியும் சித்திர எழுத்துக்களைக் கொண்ட ஒரு பழமையான மொழி. கற்றுக்கொள்வதில் கொஞ்சம் சிரமம் உண்டு, ஆனாலும் தமிழ் மொழியில் கற்றுக்கொடுத்தால் புரியாமல் போகுமா?! ஆம், சீன வானொலி நிலையம் தமிழ் நேயர்களுக்காக சீன மொழியை எளிதாகக் கற்றுக்கொடுக்கின்றனர்.

இதுவரை பார்த்த வானொலிகள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் அவர்களின் மொழிகளை கற்றுக்கொடுத்து வருகிறது. ஆனால் சீன வானொலி, நமது தாய் மொழியிலேயே கற்றுத்தருவதோடு, அதற்கான புத்தகங்களையும் அன்பளிப்பாக அனுப்பி வைக்கின்றனர்.

பெட்டிச் செய்தி-5
ஒரு வெளிநாட்டு வானொலி மிக அதிக நேரம் தமிழில் சிற்றலையில் ஒலிபரப்பி
வருகிறது என்றால், அது சீன வானொலி மட்டும் தான். காரணம், தமிழ் பேசாத, தமிழர்களே இல்லாத ஒரு நாட்டில் இருந்து நான்கு மணிநேரம் சீன வானொலி தமிழில் ஒலிபரப்பி வருகிறது.
தமிழக நேயர்கள் இவர்களது நிகழ்ச்சியை தினமும் இரவு 7.30 முதல் 8.30 வரை 11685(25மீ), 13600(22மீ) மீண்டும் 8.30 முதல் 9.30 வரை 9490(31மீ), 11800(25மீ) ஆகிய அலைவரிசைகளிலும் ஒலிபரப்பாகிறது. இதே நிகழ்ச்சிகள் மறுநாள் காலை 7.30 முதல் 8.30 வரை 13600(22மீ) அலைவரிசையிலும் மீண்டும் 8.30 முதல் 9.30 வரை 13600,13730(22 மீட்டர்கள்)ஆகிய அலைவரிசைகளில் மறுஒலிபரப்பு செய்யப்படுகிறது.

சீன வானொலியை தொடர்பு கொள்ள இந்திய அஞ்சல் அட்டைப் போதுமானது. நீங்கள் கேட்கும் விபரங்களுக்கு உடனுக்குடன் பதில்களை நேரடியாக சீனாவில் இருந்து அனுப்பி வைக்கின்றனர். அத்துடன் அடுத்த முறை நீங்கள் எழுத இலவச கடித உரையையும் அனுப்புகின்றனர். முகவரி: Tamil Section, China Radio International, 50D, Shantipath, Chanakyapuri, New Delhi - 110021 .

 
வான் அஞ்சல் மூலமும் இவர்களை தொடர்பு கொள்ளலாம். முகவரி: Tamil section, China Radio International, 16a, Shijingshan Road, Beijing – 100040, China, Email: tamil@cri.com.cn, Web: www.tamil.cri.cn 





No comments: