Sunday, December 23, 2012

பல நூறு ஆண்டுகளின் பழமை


சீனப் பெருஞ்சுவர் பற்றி ஏராளம் சொல்ல வேண்டும். வாரலாற்றுத் தகவல்கள் உங்களுக்கு இணையத்தில் கிடைக்கும். ஆனால் அனுபவப் குறிப்புகள் கிடைப்பது மிகவும் அறிது. எனது அனுபவத்தினில் மனிதாராக பிறந்த ஒவ்வொருவரும் கட்டயாம் தனது வாழ்நாளில் பார்த்தே தீரவேண்டிய ஒரு சில இடங்களை நினைத்து வைத்திருப்போம். அதில் நிச்சயம் இந்த இடத்தினையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


பெருஞ்சுவரில் ஏறுவதற்கான அந்தப் படிகள் பல நூறு ஆண்டுகளின் பழமையான தன்னோடு சேர்த்து பதிய வைத்து இருந்தது. காரணம் அதன் சுவடுகள் மற்றும் பல லட்சம் மக்களின் கால் தடம் பட்டு அவை தேய்ந்து போய் காணப்பட்டது.

மேலே ஏற ஏற காற்றின் வேகம் கூடிக்கொண்டே சென்றது. இதனால் காற்று முகத்திற்கு நேராக பட்டு நமது தோளினை உளர்த்தியது. அந்த சமயத்தில் படிக்கட்டின் மேலே பார்த்தபோது ஒரு அதிசயம் காத்து இருந்தது. அது என்ன! அறிய காத்திருங்கள். சந்திப்போம் நாளை. - தங்க.ஜெய்சக்திவேல் (எழுதி முடித நேரம் நள்ளிரவு 12.45)

Saturday, December 22, 2012

பூஜ்ஜியத்திற்கு குறைவாக நான்கு டிகிரி செல்சியஸ்


தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து ஒரு மணிநேர மகிழ்வுந்து பயணத்தினை அடுத்து நாங்கள் அடைந்தோம் சீனப் பெருஞ்சுவருக்கு. மிகவும் குளிராக இருந்தது. காற்றும் பலமாக அடித்தது. 40 யுவான் கொடுத்து சீனப் பெருஞ்சுரவிரின் மேல் ஏறுவதற்கான அனுமதி சீட்டினை வாங்கினோம். இங்கு ஒரு மகிழ்ச்சியான விடையம் என்னவென்றால், நாம் கொண்டு செல்லும் வீடியோ மற்றும் டிஜிட்டல் கேமராக்களுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டியது இல்லை.


நாங்கள் சுவரின் மேல் ஏறுவதற்கு முன் பார்த்த ஒரு அதியசய மிருகத்தினப் பற்றி இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது சீன ஒட்டகம். ஆம் அந்த ஒட்டகம், நமது நாட்டில் உள்ளது போன்றது அல்ல. அது சற்றே வேறுபட்டு காணப்பட்டது. அதன் முதுகு சற்றே மேல் தூக்கியவாறும் அதன் முடிகள் பணிபிரதேசத்திற்கு ஏற்றது போன்று அதிகமாக இருந்தது. ஆனால் பாவம் அதன் கண்கள் எதனையோ பரிதாபமாகத் தேடிக்கொண்டு இருந்தது.

சீனப் பெருஞ்சுவரின் மீது ஏறத்துவங்கினோம். காற்று சற்றே அதிகமாக வீசியதில். மோகன் சொன்னார், "இன்று பூஜ்ஜியத்திற்கு குறைவாக நான்கு டிகிரி செல்சியஸ்" என்று. எனக்கு தூக்கி வாரிப்போட்டது. காரணம் நான் ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களில் 18 டிகிரி செல்சியஸை மட்டுமே அனுபவித்து உள்ளோம், அதுவே நமக்கு மிகவும் குளிராக இருந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் எனது ஹரித்துவார் மற்றும் சண்டிகர் பயணத்தின் போது கூட10 டிகிரியில் இருந்துள்ளேன். அப்பொழுது எல்லாம் அதுவே மிகுந்த குளிர் என்று நினைத்து உள்ளேன். ஆனால் முதன் முறையாக பூஜ்ஜியத்திற்கும் குறைவான டிகிரியில் இருப்பது மகிழ்ச்சியாகவும் அதே சமயத்தினில் நடுக்கமாகவும் இருந்தது. 

Friday, December 21, 2012

ஓவியாவுடன் சீனப் பெருஞ்சுவருக்கு

எனது சீனப் பயணத்தின் இரண்டாவது நாளில் நான் இன்று சென்றது உலகின் மிகவும் புகழ்பெற்ற இடமான சீனப் பெருஞ்சுவருக்கு. காலை எட்டு மணிக்கு தாயாராகி காலை உணவினை ஓவியாவுடன் இணைந்து சாப்பிட்டோம். இன்றைய காலை உணவும் சீன வானொலியின் பணியாளர்கள் சாப்பிடும் உணவகம் தான். மிகவும் தூய்மையாக வைக்கப்பட்டுள்ள அந்த உணவகத்தில் சீன மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்காக வெளிநாட்டு உணவு வகைகளும் தயாரித்து விற்கப்படுகின்றன.


இன்றைய எனது காலை உணவினை சற்றே சுவையானதாக சாப்பிட விரும்பினேன். அதனால் சீனாவின் பாரம்பரிய ஒரு வகையான அரிசி கஞ்சிஅதனுடன் கீரை ரொட்டி மற்றும் சீன பிரட் ஆம்லெட் ஆகியவற்றினை சாப்பிட்டோம். அதன் பின் ஹிந்திப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சிறப்பு நேயருடன் எனது சீனப் பெருஞ்சுவர் பயணம் துவங்கியது. நேற்றய பயணத்தில் இல்லாத சிறப்பு ஒன்று இன்றைய பயணத்தில் இருந்தது. காரணம் நேற்று என்னுடன் தமிழ் பிரிவில் இருந்து நிறைமதி மட்டுமே வந்தார்கள். ஆனால் இன்று என்னுடன் இரண்டு பேர் தமிழ் பிரிவில் இருந்து இணைந்து கொண்டனர். ஒருவர் ஓவியா மற்றொருவர் மோகன். இன்றைய தினம் என்னுடன் இருவர் சேர்ந்துகொள்ளக் காரணம், சீனப் பெருஞ்சுவரை மையப்படுத்தி ஒரு சிறு ஆவணப்படம் எடுக்க உள்ளோம்.

மேலும் ஒரு நண்பர் என்னுடன் இன்றைய பயணத்துடன் இணைந்து கொண்டார். அவர் நான் ஏற்கனவே கூறிய திரு.ரவிசங்கர் போஸ், ஹிந்திப் பிரிவின் சிறப்பு நேயராக மேற்கு வங்காளத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டு இன்றைய தினம் முதல் என்னுடன் பெய்ஜிங் சுற்றுலாவில் கலந்துகொள்ள உள்ளார். இதில் எனக்கு என்ன ஒரு மகிழ்ச்சி என்றால், அவரை நான் ஏற்கனவே சந்தித்து உள்ளேன். நீண்ட காலமாக சர்வதேச வானொலிகளைக் கேட்டுக்கொண்டு இருப்பவர்...

Thursday, December 20, 2012

ஒரு முக்கியமான இடத்திற்கு


அதன் பின் மாலையில் நாங்கள் மற்றும் ஒரு முக்கியமான இடத்திற்கு சென்றோம். கலைநயம் மிக்க அந்த இடம் சீனாவின் கலைக்காக மிகவும் புகழ்பெற்றது. முக்கியமாக உலகின் முக்கிய ஓவியர்களின் பாதம் பட்ட இடம் என்று கூறலாம். ஆம் லியோ லீ சாங் எனும் அந்தப் பகுதி ஒரு பழமையான சீனாவின் கிராமப் பகுதியை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது.


அந்தப்பகுதியில் ஓவியம் வரையத் தேவையான தூரிகைகள் மற்றும் அதற்குத் தேவையான வண்ண மைகள் எந்தப்புரம் திரும்பினாலும் விறகப்படுகின்றன. காலத்தால் அழிக்க முடியாத கலைபொக்கிசங்கள் நிறைந்த பகுதியில் எனது கால் தடம் பட்டதில் எனக்கும் மகிழ்ச்சியே. நாளை சீனாவின் முக்கியமான மற்றும் ஒரு நினைவுச் சின்னத்திற்கு செல்ல உள்ளேன். அந்த அனுபவத்தினையும் படிக்க ஆர்வமுடன் இருப்பீர்கள் என நம்புகின்றேன். சந்திப்போம் நாளை.

Wednesday, December 19, 2012

'சொர்கக் கோவிலுக்கு'


காலை சீன வானொலியின் தமிழ் பிரிவுக்கு சென்றேன். அங்கு கடமையாற்றிக் கொண்டு இருந்த துணைத் தலைவர் வாணி உட்பட அனைவரையும் சந்துத்து எனது வணக்கத்தினை வாழ்த்துக்கலையும் தமிழக நேயர்களின் சார்பாகவும் எனது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பாகவும் தெரிவித்துக் கொண்டேன். அதன் பின் தமிழ் பிரிவின் கலையகங்களைக் காணச் சென்றேன். மிகவும் அருமையாக இருந்தது.


குறிப்பாக டாஸ்கன் டெக் மற்றும் ஸ்டுடர் கன்சோல்களைப் பார்த்து வியந்தேன். காரணம் இது போன்ற கன்சோல்கள் ஒலிபதிவின் தரத்தினைக் கூட்டக் கூடியது. அதன் பின் சக பணியாளர்களுக்கு நான் திருநெல்வேலியில் இருந்து வாங்கிச் சென்ற தனிச் சிறப்பான இனிப்பினை வழங்கினேன். அனைவரும் அதனை சுவைத்து பார்த்து மகிழ்ந்தனர். மதியம் வாணி, சரஸ்வதி மற்றும் தேன்மொழி ஆகியோருடன் இணைந்து மதிய உணவினை சீன வானொலியின் பிரத்தியேக உணவகத்தில் உண்டோம். உணவின் சுவை மற்றும் மணத்தினை பிரிதொரு பதிவில் நிச்சயம் கூறுவேன்.

மதியம் எனது சுற்றுலாவின் முதல் இடமான 'சொர்கக் கோவிலுக்கு' நிறைமதியுடன் நிறைந்த மனதுடன் சென்றேன். சீன வானொலிக்கு சொந்தமான பிரித்தியேக மகிழ்வுந்திலேயே என்னை அழைத்துச் சென்றார்கள். அந்த வாகனத்தின் முன் புறம் சீன வானொலியின் முத்திரையோடு 'சீன வானொலி நிலையம்' என்று எழுதப்பட்டு இருந்தது எனக்கு மிகுந்த மகிழ்வைத் தந்தது. காரணம் இது போன்ற வானொலிக்கு சொந்தமான வாகனங்களில் செல்வது ஒரு தனி மகிழ்ச்சியையும் மரியாதையையும் எனக்குள் ஏற்படுத்தும். அந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவித்தேன்.
சீனாவின் மிக முக்கிய இடமான சொர்கக் கோவில் பற்றி விரிவான கட்டுரையை எழுத வேண்டும் எனவே அந்த அனுபவத்தினை வேறு ஒரு பதிவில் உங்களோடு நிச்சயம் பகிர்ந்துகொள்வேன்....

Tuesday, December 18, 2012

இலங்கையிலிருந்து சீனாவிற்கு

வணக்கம் நண்பர்களே, இலங்கையிலிருந்து சீனாவிற்கு ஞாயிறு மதியம் வந்து சேர்ந்தேன். விமான நிலையத்திற்கு சீன வானொலி நிலையத்தின் தமிழ் பிரிவில் இருந்து தேன்மொழி அவர்கள் வந்து என்னை வரவேற்று அழைத்துச் சென்றார்கள். நான் இலங்கையில் தங்கியபோது ஏற்பட்ட எனது அனுபவத்தினை விட இந்தப் பயணம் இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது.

நான் கொழும்புவில் இருந்து புறப்பட்ட போது இலங்கை நேரம் அதிகாலை 1.30. இங்கு சீனாவிற்கு சரியாக மதியம் சீன நேரம் 12.30க்கு வந்து சேர்ந்தேன். அன்றைய தினம் விமானம் சற்று முன்னதாக வந்துவிட்டதாக தேன்மொழி கூறினார்கள்.

விமான நிலையத்தில் இருந்து சரியாக 45 நிமிடப் பயணத்தில் நான் தங்குமிடத்துக்கு வந்து சேர்ந்தேன். எனது சுற்றுப்பயணம் தொடங்கும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே வந்துவிட்டபடியால் நான் தமிழ்ப் பிரிவின் பணியாளர் திரு.தமிழன்பன் அவர்களுடன் தங்கினேன். அருமையான இரவு உணவினைத் தயார் செய்து கொடுத்தார் தமிழன்பன்.

இரவு ஒரு நல்ல தூக்கத்தினை தூங்கினேன். திங்கள் காலை முதல் எனது முறையான சீனச் சுற்றுலா தொடங்கியது...