மத்திய அரசின் ஒவ்வோர் அறிக்கை வெளியாகும்போதும், நமக்கு ஏதேனும் ஓர் அதிர்ச்சித் தகவல் காத்திருக்கும். அந்தவகையில், சமீபத்தில் மத்திய அரசு இந்திய மக்களிடம் உள்ள வீட்டு உபயோகப் பொருள்களைப் பற்றி கணக்கெடுத்து அறிக்கையை வெளியிட்டது. அதில் அதிர்ச்சி தரக்கூடிய பல தகவல்கள் நமக்குக் கிடைத்தன. குறிப்பாக, இனி நாம் நம் கிராமங்களில்கூட வானொலிப் பெட்டிகளைக் காண முடியாது என்பதுதான் அது.
இந்தியாவில் கடந்த 2001 கணக்கெடுப்பின்போது 35.1 சதவிகிதமாக இருந்த வானொலிப் பெட்டிகள் 2011 கணக்கெடுப்பின் முடிவில் 19.9 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. இது எதைக் காட்டுகிறது எனில், வானொலிப் பெட்டியைத் தனியாக வாங்கி வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது என்பதையே.
அதேசமயத்தில் தொலைக்காட்சி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 2001 கணக்கெடுப்பின்போது 31.1 சதவிகிதமாக இருந்தது. 2011-ல் 47.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஆக, வானொலி கேட்ட அனைவரும் தொலைக்காட்சியின் பக்கம் சென்றுவிட்டனர் என்றும் கருதுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்தச் சமயத்தில் நாம் இங்கு இன்னொன்றையும் உற்று நோக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் தொலைபேசி வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளது என்பதைக் கண்கூடாக இந்த கணக்கெடுப்பு முடிவுகளில் காண முடிகிறது.
அதை நமது கணக்கெடுப்பு அறிக்கையும் உறுதி செய்கிறது. குறிப்பாக, கடந்த 2001-ன் கணக்கெடுப்பின்படி தொலைபேசி வைத்திருந்தவர்கள் வெறும் 9.1 சதவிகிதம் மட்டுமே. ஆனால், 2011-ல் இது அசுர வேகத்தில் வளர்ந்து 63.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆக, இங்கு நாம் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் ஒன்றுள்ளது.
வானொலியைத் தனியாக வானொலிப் பெட்டியில் கேட்போர் குறைந்து கைப்பேசி ஊடாக கேட்பவர்கள் அதிகரித்துள்ளனர் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஆனாலும் இன்றைய கைப்பேசிகளில் பண்பலை ஒலிபரப்புகளை மட்டுமே கேட்க முடியும் என்பதால் மத்திய அலை மற்றும் சிற்றலை வானொலிகளைக் கேட்க முடியாது. இதற்கான தொழில்நுட்பமும் விரைவில் வந்துவிட்டால் இனி தனியான வானொலிப் பெட்டிகளுக்குத் தேவை இருக்காது. இருந்தாலும் நம்மில் எத்தனைபேர் கைப்பேசியில் வானொலியைக் கேட்கிறோம் எனத் தெரியவில்லை.
நமது நாடு அதிவேகத்தில் முன்னேறி வருகிறது என்பதற்கு மட்டும் ஒரு முக்கியச் சான்று இந்தக் கணக்கெடுப்பில் கிடைத்துள்ளது. 2001-ல் நமது நாட்டில் வானொலி, தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி என எதுவுமே இல்லாதவர்கள் மொத்தம் 50.4 சதவிகிதம். 2011-ல் இந்த விகிதாசாரம் வெகுவாகக் குறைந்து 27.4 சதவிகிதமாகியுள்ளது. ஆக, பாதிக்குப் பாதி இதில் வளர்ச்சி கண்டுள்ளோம்.
இனி தமிழகத்துக்கு வருவோம். 43.5 சதவிகிதமாக இருந்த வானொலிப் பெட்டிகள் 2011-ல் 22.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஆக, தமிழகத்திலும் வானொலிப் பெட்டி வைத்திருப்போர் வெகுவாகக் குறைந்துள்ளனர். 39.5 சதவிகிதமாக இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் இப்பொழுது 87 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதற்கு கடந்த ஆட்சி வழங்கிய இலவச வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகளும் ஒரு காரணம் எனலாம்.
தொலைபேசி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் 11.2-ல் இருந்து 74.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வானொலி, தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி என எதுவுமே இல்லாதவர்களின் எண்ணிக்கையும் 42.3-ல் இருந்து 6.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
வானொலி கேட்டல் என்பது ஒரு கலை. ஆனால், அது இன்று பொழுதைப்போக்கத் தேவையான ஓர் ஊடகமாகிவிட்டது. வானொலி கேட்டல் பல்வேறு வகைகளில் பயன் மிகுந்ததாக ஒரு காலகட்டத்தில் இருந்தது. இடைப்பட்ட காலம் வானொலி கேட்டலை ஒரு பொழுதுபோக்கு ஊடகமாகவே சித்திரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது தனியார் துறை பண்பலை வானொலிகள் என்றால் அது மிகையில்லை.
கிராமப்புறங்களில் இன்றும் வானொலி கேட்பவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்கிற வாதம் ஒன்று என்றுமே நம்மிடையே உண்டு. அதற்கும் இந்த 2011 கணக்கெடுப்பு முடிவுகள் விடை கண்டுள்ளது. கிராமப்புறங்களில் 2001-ல் 35.1 சதவிகிதமாக இருந்த வானொலிப் பெட்டிகள் 2011-ல் 17.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஆக, பொதுவாக கூறப்பட்டு வந்த கருத்தும் இங்கு உடைபடுகிறது. இதுநாள் வரை கிராம மக்கள் வானொலி கேட்டலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பதை இனி யாரும் கூற முடியாது.
தமிழக கிராமங்களில் வானொலி கேட்பவர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி அடுத்து நம் மனதில் கண்டிப்பாக உதிக்கும். 2001-ல் 38.6 சதவிகிதமாக இருந்த வானொலிப் பெட்டிகள் 2011 கணக்கெடுப்பில் 18.7 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.
ஆக, தமிழகமும் இதில் விதிவிலக்கல்ல என்பது இங்கு நிரூபணம் ஆகிறது. வானொலிப் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை மட்டுமே கொண்டு அந்த மாநிலங்களில் வானொலியை அதிகமானோர் கேட்கிறார்கள் என்ற முடிவுக்கும் வர முடியாது.
நம்மில் பலரது வீடுகளிலும் வானொலிப் பெட்டி உண்டு. ஆக, கணக்கெடுப்பின்போது நம்மிடம் வானொலி வீட்டில் இருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, நாம் இருக்கிறது என்றே பதில் கூறியிருப்போம். ஆனால், உண்மையில் நம்மில் எத்தனை பேர் வானொலியைத் தொடர்ந்து உபயோகிப்பவர்களாக உள்ளோம் என்பதையும் இங்கு சிந்தித்தாக வேண்டும். மேலும், எத்தனை பேர் வீடுகளில் வானொலிப் பெட்டியானது பரண் மேல் இருக்கிறது என்பதையும் இங்கு கணக்கில்கொள்ள வேண்டும். ஆக, பரண் மேல் கிடக்கும் வானொலிப் பெட்டிகளும் இந்தக் கணக்கெடுப்பில் வந்திருக்கும்.
ஆனால், மணிப்பூர் மாநிலத்தில் வானொலிப் பெட்டி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. இந்தியாவிலேயே இந்த ஒரு மாநிலத்தில் மட்டும்தான் வானொலிப் பெட்டிகளின் எண்ணிக்கை கூடியுள்ளது அதிசயப்பட வைக்கிறது. 2001-ல் இங்கு வானொலிப் பெட்டி வைத்திருந்த வீடுகளின் எண்ணிக்கை 43 சதவிகிதமாகும்.
2011-ல் இது 54.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த மாநிலத்தில் மட்டும் வானொலிப் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என்ன என்பதைக் கண்டிப்பாக ஆராய வேண்டியுள்ளது.
மிகக் குறைந்த வானொலிப் பெட்டிகளைக் கொண்ட மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உள்ளது. 2011-ன் கணக்கெடுப்பின்படி 9.3 சதவிகித வீடுகளில் மட்டுமே வானொலிப் பெட்டிகள் உள்ளன. இதுவே 2001-ன் கணக்கெடுப்பின்படி 21.6 சதவிகிதமாக இருந்தது மறக்கலாகாது. ஆக, ஆந்திரத்தில் வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்க வாய்ப்பு உண்டு.
தொடர்பியலின் முக்கிய சாதனங்களாக வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசியுடன் இன்று இணையமும் சேர்ந்து கொண்டது. இதில் முதன்மையானது வானொலி. இதற்குக் காரணம் இது ஏழைகளின் ஊடகம். வானொலிப் பெட்டியை எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று கேட்க முடியும். வானொலிப் பெட்டி ஒன்றை வாங்கிவிட்டால் போதும். அதன் பிறகு அதற்கு முதலீடு தேவையில்லை. ஆனால், மற்ற ஊடகங்களுக்கு நாம் ஏதேனும் ஒருவகையில் பணம் செலுத்த வேண்டியுள்ளது.
இன்று வானொலிக்குப் போட்டியாக இணையம் வந்துள்ளது. அதுவும் நம் கைப்பேசிகளின் ஊடாக இணையத்தைப் பயன்படுத்த வசதிகள் வந்தபின், இணையம் இன்னும் எளிமையாகிவிட்டது. என்ன ஒன்று, அதற்குத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
கிராமப்புறங்களில் மட்டும்தான் வானொலிப் பெட்டி வைத்திருப்போர் குறைந்துவிட்டனர் என்றில்லை. நகர்ப்புறங்களிலும் வானொலிப் பெட்டி வைத்திருப்போர் பெரிதும் குறைந்துள்ளனர். 2001-ல் 44.5 சதவிகிதமாக இருந்த வானொலிப் பெட்டிகள் 2011-ல் அது வெறும் 25.3 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.
ஆக, பண்பலை வானொலிகள் நகர்ப்புறங்களில் அதிகமாகத் தொடங்கப்பட்டாலும், வானொலிப் பெட்டி வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மாறாக, கைப்பேசியின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் மனதில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
வருங்காலத்தில் ஒருங்கிணைந்த வானொலிப் பெட்டி நம்மிடம் இருக்கலாம். அதாவது, நம் கைப்பேசியிலேயே அனைத்து வானொலிகளையும் கேட்கலாம். மாறாக தனியான வானொலிப் பெட்டிகளை இனி யாரும் விலை கொடுத்து வாங்குவது சந்தேகம்தான். எனவே, அவை இனி அருங்காட்சியகங்களுக்குச் சென்றாலும் ஆச்சரியப்பட வேண்டாம். அதற்கு அச்சாரமாக உள்ளது இந்த 2011 கணக்கெடுப்பு முடிவுகள்.
கட்டுரையாளர்: பேராசிரியர்,
தொடர்பியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
கணக்கெடுப்பின்போது நம்மிடம் வானொலி வீட்டில் இருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, நாம் இருக்கிறது என்றே பதில் கூறியிருப்போம். ஆனால், உண்மையில் நம்மில் எத்தனை பேர் வானொலியைத் தொடர்ந்து உபயோகிப்பவர்களாக
First Published : 10 April 2012 01:03 AM IST
நன்றி: தினமணி