பொது ஒலிபரப்பு சேவையின் 65-வது ஆண்டு நவம்பர் 12, 2012 அன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பொதுத்துறை ஒலிபரப்பு என்றால், அது "அகில இந்திய வானொலி'தான்.
ஒவ்வொரு ஆண்டும் 12 நவம்பரை பொது ஒலிபரப்பு சேவை நாளாக கொண்டாடக் காரணம், மகாத்மா காந்தி குருúக்ஷத்திர நகரில் உள்ள அகில இந்திய வானொலி மூலம் பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளுக்கு ஆறுதல் செய்தியை வழங்கினார். இது நடந்தது 12 நவம்பர் 1947. எனவே அந்த நாளையே பொது ஒலிபரப்பு சேவையின் நாளாக இன்று வரை அகில இந்திய வானொலி கொண்டாடி வருகிறது.
இதில் ஒரு ஆச்சரியம் என்னவெனில், மகாத்மா காந்தி முதலும் கடைசியுமாகச் சென்ற ஒரே வானொலி நிலையம் இதுதான்.
பொதுமக்கள் தகவல்களைப் பெறவும், அவர்களின் அறிவாற்றலை கல்வி கற்பிப்பதன் மூலம் வளர்க்கவும், அதே சமயத்தில் மகிழ்ச்சியூட்டவும் செய்வதே நோக்கமாகும். அது இன்றளவும் அகில இந்திய வானொலியில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பொது ஒலிபரப்பு சேவையானது இந்திய ஒலிபரப்பு நிறுவனம் என்ற பெயரில் 1927இல் தொடங்கப்பட்டது. 1936இல் அகில இந்திய வானொலி எனப் பெயர் மாற்றம் அடையும் வரை இது வேகமாக வளர்ந்தது.
அதன் பின் பொது ஒளிபரப்பு சேவையில் தூர்தர்சனும் இணைந்து கொண்டது.
1990இல் தனியார் தொலைக்காட்சிகள் வரும்வரை தனிக்காட்டு ராஜாவாக இருந்தது தூர்தர்சன். இந்தியாவில் 1970இல் தொடங்கப்பட்ட தூர்தர்சன் பொது ஒளிபரப்பு சேவையில் முடி சூடா மன்னனாகத் திகழ்ந்தது ஒரு காலம். 600 ஒளிபரப்பிகளைக் கொண்டு இந்தியாவின் அனைத்து இடங்களையும் சென்று சேர்ந்த முதல் தொலைக்காட்சி இதுவாகும்.
இன்று உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமாக தூர்தர்சன் இருக்கிறது.
பிரசார் பாரதி (இந்திய ஒலி-ஒளிபரப்பு கார்ப்பரேஷன்) நவம்பர் 23, 1997இல் அமைக்கப்பட்டது. இதன் நோக்கமே, அரசின் எந்த ஊடகமும் அதன் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனித்துச் சுதந்திரமாக மக்களுக்கான சேவையைச் செய்ய வேண்டும் என்பதே ஆகும். 1990இல் நாடாளுமன்றத்தில் பிரசார் பாரதி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் செப்டம்பர் 15, 1997இல் தான் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் அரசு ஊடகங்களான அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்சன் சுதந்திரமாகச் செயல்பட பிரசார் பாரதி சட்டம் வழிவகை செய்தது.
வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவையில் இன்று பிரசார் பாரதி உலகின் முன்னணி நிறுவனமாக உள்ளதில் நமக்கெல்லாம் பெருமையே. அரசின் 250க்கும் மேற்பட்ட வானொலிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் முறையே 350க்கும் மேற்பட்ட வானொலி ஒலிபரப்பிகள் மற்றும் 1400க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பிகள் மூலம் இந்திய நாட்டின் மூலை முடுக்குகளையெல்லாம் சென்றடைகிறது. இதன் மூலம் 40 கோடி மக்கள் பயனடைகின்றனர்.
First Published : 12 November 2012 03:47 AM IST
நன்றி: தினமணி
No comments:
Post a Comment