சீன வானொலியின் தமிழ் பிரிவு தலைவரும், சீன எழுத்தாளருமான சாவோ ஜியாங் என்னும் கலைமகள் என்பவர் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ளார். அவர் நேற்று மாலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சீன வானொலி 1911-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதில் தமிழ் பிரிவு தொடங்கி 50-வது ஆண்டு நிறைவு விழாவை கடந்த ஆண்டு (2013)-ல் பொன் விழாவாக கொண்டாடப்பட்டது. சீனாவில் தமிழக பிரிவு ஊடக சேவை என்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.
தமிழ் பிரிவின் செல்வாக்கு நாளுக்கு நாள் சீனாவில் அதிகரித்து வருகிறது. தமிழ் பிரிவு தொடங்கப்பட்டதன் நோக்கம், சீனா-இந்தியா நட்புறவை வளர்ப்பதுதான். சீன-தமிழ் வானொலி தொலை தொடர்பானது, சீன-தமிழக வணிக வாய்ப்பு மற்றும் சுற்றுலா துறையின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும். அதன் மூலம் தமிழகத்தில் உள்ள இயற்கை எழிலை சீனர்கள் பெரும் அளவில் கண்டு களிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
சீனா தலைநகரம் பெய்ஜிங்கில், இந்திய உணவு விழா மற்றும் திரைப்பட விழாக்கள் நடைபெற்றன. இதனை தமிழ் பிரிவில் ஒளிபரப்பு செய்தோம். இந்த தமிழ் நிகழ்ச்சிகள் எண்ணற்ற சீனர்களை ஈர்த்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி திங்கள் சென்னையில் நடைபெற்ற 36-வது புத்தக கண்காட்சியில் ‘சீனாவில் இன்ப உலா’ என்ற புத்தகத்தை தமிழில் அச்சடித்து வெளியிட்டேன். இது ஒரு சீனர் தமிழில் எழுதி இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் மொழி புத்தகம் ஆகும். இது என்னுடைய தனிப்பட்ட பெருமையாகும். இதில் சீனாவை பற்றி விளக்கமாக எழுதி உள்ளேன்.
இதே போன்று சீனம்-தமிழ் மொழிகளுக்கிடையே நேரடி அகராதி இல்லாத நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு சீனாவில் உள்ள பிரபலமான அகராதி நிறுவனத்துடன் இணைந்து, சீனம்-தமிழ் கலைச் சொல் அகராதியை வெளியிட்டேன். இந்த அகராதியில் 27 ஆயிரம் சொற்கள் உள்ளன. சீனம்-தமிழ் மொழி ஒளிபரப்பை உலக அளவில் மிகவும் புகழ் பெற்றதாகவும், அருமையான ஒளிபரப்பாகவும் வளரச்செய்து, இந்தியா-சீனா இடையிலான உறவை வளர்க்க பாடுபடுவேன் என அவர் கூறினார்.
படங்கள்: ஸ்டாலின்
நன்றி:நக்கீரன்
No comments:
Post a Comment