Friday, February 14, 2014

பெண்களும் வானொலியும்


சீனா, தமிழகத்தில் உள்ள பழமொழிகள் ஒன்றாகவே உள்ளதாக சீன வானொலி நிலைய பெண் பணியாளர்கள் தெரிவித்தனர்.
உலக வானொலி தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 13-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு “பெண்களும் வானொலியும்” என்ற தலைப்பினை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி பெண்களைக் கொண்டு உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக வானொலி தின விழாவில், சீன வானொலியில் தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் சோ சின் (ஈஸ்வரி) பேசியதாவது:
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரின் புத்தகத்தைப் படித்தபோது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வரலாறு, அழகு, தமிழர் பண்பாடு குறித்து அறிய முடிந்தது. அதைபடித்த பின்பே தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் படிக்கும் எண்ணம் எனக்குள் தோன்றியது. சீனாவில் 4 ஆண்டுகள் தமிழ் சிறப்புப் பாடத்தை பயின்று, சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் சேர்ந்தேன். இப்போது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுநிலை தமிழ் பயின்று வருகிறேன். சீன அரசு தமிழ் படிக்க ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
சீனா-தமிழ் பழமொழிகள் ஒன்றாகவே உள்ளன. சீன இளைஞர்களைக் காட்டிலும், இந்திய இளைஞர்கள் மத்தியில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் அதிகம் உள்ளது. வேலைவாய்ப்புக்காக மட்டுமன்றி, ஆர்வத்துடன் கற்பதால்தான் தமிழ் எளிதாகப் புரிகிறது என்றார்.
சன் குயிங் (இலக்கியா) பேசுகையில், தமிழ் முதுநிலை படிப்பை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து வருகிறேன். சீன வானொலி 1963-ம் ஆண்டில் தமிழ்ப் பிரிவைத் தொடங்கியது. இப்போது 61 மொழிகளில் சேவையாற்றி வருகிறது. படிப்பை முடித்துச் சென்றதும், வானொலி நிலையப் பணியுடன் சேர்த்து சீனப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பதே எனது முக்கியப் பணியாக இருக்கும் என்றார்.
இந்த விழாவில்,  தொடர்பியல் துறைத் தலைவர் பி.கோவிந்தராஜு, பேராசிரியர்கள் டி.ஜெய்சக்திவேல், மாணவர்-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
Source: Dinamani 14-2-2014

No comments: