Tuesday, February 24, 2015

சென்னை பல்கலைக்கழகத்தில் பொது வானொலி சேவை: மக்கள் ஆர்வத்தை ஊக்குவிக்க மாணவர்கள் முயற்சி

பொது வெளிகளில் வானொலி கேட்கும் பழக்கத்தை மீண்டும் உயிர்பிக்க சென்னை பல்கலைக் கழகத்தில் பொது வானொலியை மாணவர்கள் அமைத்துள்ளனர்.
சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் தேனீர் கடைக்கு அருகில் வானொலிப் பெட்டி ஒன்றை வைத்து, அதன் மூலம் சிற்றலை யில் செய்திகள், நிகழ்ச்சிகள் கேட்க ஆரம்பித்துள்ளனர். இதன் தொடக்க விழா உலக வானொலி தினத்தையொட்டி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தேநீர் கடையை நடத்தும் கார்த்திக் மற்றும் ராஜா வானொலி சேவையை தொடக்கி வைத்தனர்.
இதில் அகில இந்திய வானொலியின் முன்னாள் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ‘வானொலி அண்ணா’ சி.ஞான பிரகாசம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: இன்று எத்தனை ஊடகங்கள் வந்தாலும் அவை எல்லாவற்றுக்கும் தாய் வானொலிதான். நல்ல செய்திகளை கேட்க இளைய தலைமுறையினர் கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும். அரசு நடத்தும் வானொலி நிலைய செய்திகளில் நம்பகத்தன்மை இருக்கும். நாங்கள் தவறு செய்தால் அதை கண்ணியமாக ஒப்புக் கொள்வோம்” என்றார்.
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த இதழியல் துறையின் தலைவர் பேராசிரியர் கோபாலன் ரவீந்திரன் கூறும்போது, “சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலும், கண்ணகி சிலை அருகிலும்தான் சென்னையின் முதல் வானொலிகள் பொது மக்கள் கேட்பதற்காக வைக்கப் பட்டிருந்தன. அதன் பிறகு நரிக்குறவர்கள் வானொலிப் பெட்டிகளை தங்கள் உடையுடன் அணிந்து கொண்டு வானொலி கேட்பதை பிரபலப்படுத்தினர். காலப்போக்கில் வானொலியை மறந்து விட்டோம். அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சி அனைத்து தரப்பிலும் தேவை,” என்றார்.
தமிழ் ஒலி வானொலி மன்றத்தை சேர்ந்த எஸ்.உமாகாந்தன், வானொலி நேயர் வட்டங்களை சேர்ந்த கு.மா.பா.கபிலன், மயிலை பட்டாபி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தோடு இணைந்து இணையதள வானொலி நிலையத்தை சோதனை முறையில் நடத்தி வருகின்றனர்.
நன்றி தி இந்து 

No comments: