மீடியாகார்ப் ஒலி 96.8இன் மூத்த தயாரிப்பாளர் பாமா பாலகிருஷ்ணன் காலமானது குறித்து அமைச்சர் சண்முகம் வருத்தம் தெரிவித்திருக்கிறார். நீ சூன் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அமைச்சர் சண்முகம், தமது வட்டாரத்தில் திருமதி பாமா குடியிருந்ததை ஃபேஸ்புக் பதிவில் சுட்டினார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் அமரர் திரு லீ குவான் இயூவிற்காக நீ சூனில் அமைக்கப்பட்டிருந்த சமூக அஞ்சலித்தளத்தில் திருமதி பாமாவைச் சந்தித்ததாக திரு சண்முகம் கூறினார். திரு லீயைப் பற்றி திருமதி பாமா மிக உருக்கமாய் உரையாற்றியதாக அவர் சொன்னார். துடிப்பும் வசீகரமும் நிறைந்த திருமதி பாமாவின் குரல் ஒலி 96.8இன் நேயர்களுக்குப் பல நேரங்களில் ஆறுதலாய் அமைந்திருந்ததாகக் கூறினார் திரு சண்முகம்.
இந்தியச் சமூகத்தில் பிரபலமாகத் திகழ்ந்த திருமதி பாமா, சமூகப் பணிகளுக்கு ஆதரவாளராக இருந்ததையும் வானொலி வழியே பலருக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் கூறியதையும் அவர் சுட்டினார். பாமாவின் மென்மையான இயல்பே பலரையும் ஈர்த்தது. பாமாவின் மறைவு, வானலைகளில் மட்டுமல்லாமல் பலரின் மனங்களிலும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதாக நெகிழ்ந்தார் திரு. சண்முகம்.
திருமதி பாமா பாலகிருஷ்ணனின் இறுதிச்சடங்கு இன்று மண்டாய் தகனச்சாலையில் நடைபெறும்.
Source: http://seithi.mediacorp.sg/
No comments:
Post a Comment