வத்திக்கான் ஊடகத்துறையில் ஏற்படும் சீர்திருத்தத்தை நம்பிக்கையோடு நோக்குவதாக, வத்திக்கான் வானொலியில் தனது தலைமை இயக்குனர் பணியை இத்திங்களன்று நிறைவு செய்த இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.
உரோம் த்ராஸ்பொந்தினா ஆலயத்தில் இத்திங்களன்று நிறைவேற்றிய நன்றித் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றி மறையுரையாற்றிய அருள்பணி லொம்பார்தி அவர்கள் இவ்வாறு கூறினார்.
மறைப்பணி, மனம்மாற்றம், ஒன்றிப்பு ஆகிய மூன்று தலைப்புகளில் மறையுரையாற்றிய அருள்பணி லொம்பார்தி அவர்கள், உலகின் கடைசி எல்லைவரைக்கும் நற்செய்தியை எடுத்துச் செல்வதே வத்திக்கான் வானொலியின் பணி என்றும், வத்திக்கான் வானொலிப் பணியாளர்கள் தங்கள் வாழ்விலும், வானொலிப் பணியிலும் தாங்கள் எதற்காக அழைக்கப்பட்டுள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டு அதற்காகச் செபிக்குமாறும் கூறினார்.
உலகின் கடைசி எல்லைவரைக்கும் மீட்பரைக் கொணரவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்றும், திருஅவையும், திருத்தந்தையரும் இயேசுவின் இப்பணியை தொடர்ந்து ஆற்றுகின்றனர் என்றும், இந்தப் பணியில் ஒத்துழைப்பு வழங்க வத்திக்கான் வானொலிப் பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் அருள்பணி லொம்பார்தி.
வத்திக்கான் வானொலி மையத்தில், பல்வேறு மொழிகளில் வழங்கப்படும் வானொலி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் இயக்குனராக முதல் 15 ஆண்டுகளும், 2005ம் ஆண்டு முதல், 2016ம் ஆண்டு வரை, வானொலியின் தலைமை இயக்குனராகவும் பணியாற்றிவந்தார் அருள்பணி லொம்பார்தி.
வத்திக்கான் வானொலியில் பணியாற்றிய அதே வேளையில், 2001ம் ஆண்டு முதல் ஏறத்தாழ பத்தாண்டுகள் வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின் இயக்குனராகவும், 2006ம் ஆண்டு முதல் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குனராகவும் பணியாற்றிவந்த அருள்பணி லொம்பார்தி அவர்கள், திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குனராகத் தொடர்ந்து பணியாற்றுவார்.
இத்திங்களன்று வழங்கப்பட்ட பிரியாவிடை நிகழ்வில் வானொலிப் பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களின் நன்றியைத் தெரிவித்தனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
No comments:
Post a Comment