தேசிய விருது பெற்ற நாகர்கோவில் அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் கீழப்பாவூர் ஆ. சண்முகையாவுக்கு விவசாயிகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நாகர்கோவில் அகில இந்திய வானொலி நிலையம் வர்த்தகம், நேயர் எண்ணிக்கையில் பல மடங்கு அதிகரித்து அண்மையில் தேசிய விருது பெற்றது. மேலும், வானொலியில் விவசாயிகளுக்கு பயன்படும்படியாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. இதையொட்டி, குமரி மாவட்ட விவசாயிகள் சார்பில், விருது பெற்ற வானொலி நிலையத்தின் இயக்குநர் கீழப்பாவூர் ஆ. சண்முகையாவுக்கு நாகர்கோவிலில் பாராட்டு விழா நடைபெற்றது.
நாஞ்சில் நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் உற்பத்திக் குழு உறுப்பினர் செண்பகசேகரன் வரவேற்றார்.
இதில் பொன்.காமராஜ் சுவாமிகள், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன், அகமதுகான், வின்ஸ் ஆன்றோ, வேளாண் இணை இயக்குநர் சந்திரசேனன்நாயர், விடுதலைப் போராளி கொடிக்கால் ஷேக் அப்துல்லா, புலவர் செல்லப்பா, வரலாற்று ஆய்வாளர் டாக்டர் பத்மநாபன், தியாகி முத்துகருப்பன், பழனி சுவாமிகள், உழவர் பெருமன்றத் தலைவர் மீனாட்சி சுந்தரம், டாக்டர் மனகாவலப் பெருமாள் உள்ளிட்ட ஏராளமானோர் பேசினர். சண்முகையா ஏற்புரையாற்றினார். உழவர் மன்றச் செயலர் ஹென்றி நன்றி கூறினார்.
Source: Dinamani