Friday, July 15, 2016

கல்வெட்டு உடைக்கப்பட்டதை கண்டித்து வானொலி திடலில் பல்வேறு அமைப்புகள் உண்ணாவிரதம்

வானொலி திடல் கல்வெட்டு உடைக்கப்பட்டதை கண்டித்து வானொலி திடலில் பல்வேறு அமைப்புகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 

வானொலி திடல் 

புதுவை முதலியார்பேட்டையில் பழமை வாய்ந்த வானொலித்திடல் உள்ளது. இந்த திடலை கடந்த 1950-ம் ஆண்டு ராகவ செட்டியார் என்பவர் பொதுமக்கள் பயனடையும் வகையில் வானொலி பூங்காவாக செயல்பட அனுமதித்தார். இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளாக இந்த பூங்காவை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். மேலும் அந்த இடத்தை தனியார் ஒருவர் விலைக்கு வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் அந்த பகுதியை சேர்ந்த சிலர் வானொலி பூங்கா மீட்புக்குழு என்ற ஒரு குழுவை தொடங்கினர். இந்த குழுவிற்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி தலைவராக உள்ளார். இவர்கள் வானொலி திடலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 

உண்ணாவிரத போராட்டம் 

இந்த நிலையில் வானொலி திடலை மீட்டு தரக்கோரி அழகிரி தலைமையில் பலர் கவர்னரை நேற்று முன்தினம் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் படி தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரா அடையாளம் தெரியாத நபர்கள் வானொலி திடலில் கடந்த 1950-ம் ஆண்டு அமைக்கப்பட்ட கல்வெட்டை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அந்த இடத்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்து சுற்றுச்சுவரும் கட்டப்பட்டு இருந்தது. 

இது பற்றிய தகவல் அறிந்த உடன் வானொலி திடல் மீட்பு குழு தலைவர் அழகிரி அங்கு விரைந்து சென்றார். அவர் வானொலி திடலில் கல்வெட்டை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வானொலி திடல் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தினை தொடங்கினார். அவருக்கு ஆதரவாக மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன், மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் முருகானந்தம், வீரமணி, இன்பசேகரன் உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

சமாதான பேச்சுவார்த்தை 

இது பற்றிய தகவல் அறிந்த உடன் முதலியார்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே நள்ளிரவு 11.30 மணியளவில் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம், தெற்கு போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தார். அதையேற்று உண்ணாவிரதத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.
Source: http://www.dailythanthi.com/

No comments: