Saturday, August 20, 2016

கொழும்பில் ஆசிய ஒலிபரப்பு ஒன்றியத்தின் ”வானொலி நாடக செயலமர்வு 2016”

ஆசிய ஒலிபரப்பு ஒன்றியத்தின் ”வானொலி நாடக செயலமர்வு 2016” எனும் தலைப்பிலான செயலமர்வொன்று கொழும்பில் இன்று நடைபெற்றது.
MBC ஊடக வலையமைப்பினால் இந்த செயலமர்விற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இன்றைய செயலமர்வில் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த செயலமர்வு எதிர்வரும் 29 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
ஒலி வடிவிலான நாடகக் கலையின் படைப்புகள், நடைமுறை ரீதியிலான செயல் நுணுக்கங்கள், அவை குறித்த பகுப்பாய்வுகள், ஒத்துழைப்புகள் மற்றும் அறிவுரைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தொடர்பில் மூன்று நாட்கள் இடம்பெறும் இந்த செயலமர்வில் தெளிவுபடுத்தப்படவுள்ளது.
வானொலி நாடகக் கலைகளைத் தத்தமது வானொலி நிலையங்களில் மேலும் திறம்பட முன்னெடுப்பதற்காக ஆசிய ஒலிபரப்பு ஒன்றிய உறுப்பினர்களுக்குப் பயிற்சிகளை வழங்குவதே இந்த செயலமர்வின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.
Source: Newsfirst.lk

Saturday, August 13, 2016

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முழு நேர வானொலி

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முழு நேர வானொலி பண்பலை அலைவரிசை விரைவில் தொடங்கப்பட உள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் தற்போது பண்பலை அலைவரிசையில் பாடல்களைக் கேட்டு வருகின்றனர். அதனால் பல முன்னணி நிறுவனங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் பண்பலை வானொலி மூலம் சேவையை அளித்து வருகிறது.
அதன் வரிசையில் தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானமும் சேர உள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு கல்வி சேவைக்காக தேவஸ்தானம் ஓரியண்டல் கல்வி நிறுவனம் என்ற பெயரில் ஒரு பண்பலை அலைவரிசையை தொடங்க உரிமம் பெற்றது.
2007-ஆம் ஆண்டு 50 வாட் ஒலிபரப்பு திறன் கொண்ட (ச்ழ்ங்வ்ன்ங்ய்ஸ்ரீஹ்) பண்பலையை தொடங்கியது. அதன் மூலம் திருப்பதி நகரைச் சுற்றி 10 கி.மீ. சுற்றளவுக்கு பண்பலை சேவை தொடங்கப்பட்டது. இந்த பண்பலை அலைவரிசை மூலம் தற்போது 10 மணிநேரம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பட்டு வருகிறது.
இதை மேலும் விரிவுபடுத்த தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்து வரும் 20-ஆம் தேதி முதல் 250 வாட் ஒலிபரப்புத் திறன் கொண்ட முழுநேர பண்பலை அலைவரிசையை தொடங்க ப்பட உள்ளது. இதற்காக புதிய குழு ஒன்றை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.
Source: Dinamani

Saturday, August 06, 2016

ரெயில்களில் வானொலி சேவை

ரெயில்களில் வானொலி சேவை தொடங்க ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதில் பாடல்கள், இசை மட்டுமல்லாமல் நகைச்சுவை, ஜோதிடம் உள்ளிட்ட அம்சங்களும், ரெயில்வே சம்பந்தப்பட்ட தகவல்களும் இடம்பெறும். விபத்து, இயற்கை சீற்றங்கள் குறித்த முக்கிய தகவல்களும் இதன் மூலமாக பயணிகளுக்கு தெரிவிக்கப்படும்.

முதல்கட்டமாக ஆயிரம் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வானொலி சேவை தொடங்கப்படும். பின்னர் படிப்படியாக மற்ற ரெயில்களுக்கும் விரிவுபடுத்தப்பட இருப்பதாகவும், இறுதி கட்டப்பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரெயில் வானொலி சேவையில், கல்வி குறித்த நிகழ்ச்சிகளும், பயணிகள் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிகளும் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Source: Daily Thanthi