Tuesday, September 27, 2016

புதிய இலங்கை ஓலிபரப்புக்கூட்டுத்தாபனம் ஒலிப்பதிவுக்கூடம்

இலங்கை ஓலிபரப்புக்கூட்டுத்தாபனம்
"2017ஆண்டின் முற்பகுதியில் முற்றிலுமாக நவீனமாகிவிடும். புதிய கலையகம், ஒலிப்பதிவுக்கூடம் எனச் சகல பிரிவுகளும் நவீனமயமாகிவிடும். இதற்கு 283 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என்கிறார்.....
ஏரானந்த ஹெட்டியாராச்சி!
பணிப்பாளர் நாயகம்
இலங்கை ஓலிபரப்புக்கூட்டுத்தாபனம்.
சிங்கிங் ஸ்ரார், யூத் ரெலன்ற்ஸ் போட்டிகள் ஒலிபரப்புக்கூட்டுத்தானத்தின் திருப்பம்
தனித்துவத்தைப் பாதுகாத்து நவீன வர்த்தகமய சமூகத்தில் மாற்றத்தைக் கண்டுவருகிறது இலங்கை தாய் வானொலி.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் காலத்திற்குக் காலம் அறிவிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் எனப் பல்துறை சார்ந்தோரை உருவாக்கி வருகிறது. இங்குப் பயின்றோர்கள், பட்டை தீட்டப்பட்டவர்கள்தான் பின்னர் வெளிநாடுகளுக்கும் வேறு நிறுவனங்களுக்கும் சென்று கோலோச்சிக்ெகாண்டிருக்கிறார்கள். ஓர் அறிவிப்பாளரோ பாடகரோ ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அங்கீகரிக்கப்பட்டால், அவர் உலகில் எங்குச் சென்றாலும் அங்கீகரிக்கப்படுவார். அவரின் திறமைகளுக்கான உரிய மரியாதையும் கௌரவமும் அவருக்குக் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்குச் சென்றால், அவரது திறமையையும் ஆளுமையையும் பரீட்சித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. இது தமிழ் உலகறிந்த உண்மை. இந்தக் கருத்தியலுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், கூட்டுத்தாபனம் தற்போது புதிய பரிணாமத்தில் பயணித்துக்ெகாண்டிருக்கிறது என்கிறார் அதன் பணிப்பாளர் நாயகம் ஏரானந்த ஹெட்டியாராச்சி.
ஏரானந்த ஹெட்டியாராச்சி!
பணிப்பாளர் நாயகம்
இலங்கை ஓலிபரப்புக்கூட்டுத்தாபனம்
கூட்டுத்தாபனத்தில் ஓர் அறிவிப்பாளராக இணைந்து கொண்டவர். பல்வேறு துறைகளிலும் தம்மைப் புடம்போட்டுக்கொண்டு, பதவிகளை வகித்து, இன்று கூட்டுத்தாபனத்தில் உயர் பதவியில் மிளிர்கிறார். தமிழ் ஒலிபரப்புத்துறையில் புதிய வரலாற்றைப் பதிவுசெய்ய வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு என்கிறார். அந்தப் பயணத்தில் தென்றல் எப்எம் நடத்தும் சிங்கிங் ஸ்ரார், சிட்டி எப்எம் நடத்தும் யூத் ரெலன்ற்ஸ் போன்ற போட்டிகள் புதிய திருப்பம் என்கிறார் ஏரானந்த.
"தென்றல் சிங்கிங் ஸ்ரார் போட்டி நிகழ்ச்சியை இரண்டாவது தடவையாக நடத்துகின்றோம். இலங்கை முழுவதிலும் உள்ள பாடும் திறமையுள்ள தமிழ் இளைஞர், யுவதிகளின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களை இறுதியில் மெல்லிசைப் பாடகர்களாக அறிமுகம் செய்வதே இதன் நோக்கமாகும். இந்தப் போட்டி நேரலை ஒலிபரப்பு நிகழ்ச்சியாகவே நடத்தப்படுகிறது. இலங்கையில் நேரடி ஒலிபரப்பாக நடத்தப்படும் ஒரே நிகழ்ச்சி இதுவாகும்.
இது தென்றல் சேவையில் பிரதி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் முற்பகல் 1130 முதல் 1230 வரை ஒரு மணித்தியால நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. போட்டியாளர்கள் இசையமைப்பாளர்களுடன் நேரடியாகப் பாடல்களைப் பாட வேண்டும். பதிவு செய்து ஒலிபரப்புவதோ, பாடல் மெட்டைப் பதிவுசெய்து ட்ரக்குக்குப் பாடுவதோ கிடையாது. அவ்வாறுதான் ஆரம்பகாலத்தில் போட்டிகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
நாட்டின் வடக்கு கிழக்கு, மேற்கு என நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் போட்டியாளர்கள் இதில் பங்குபற்றுகிறார்கள். ஆயிரக்கணக்கான போட்டியாளர்களில் இருந்து ஐம்பது பேரைத் தெரிவுசெய்து அவர்களுக்கிடையில் சிறந்த பாடகர்களைத் தெரிவுசெய்து நாட்டுக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றோம். கடந்த முறை சிறந்த பாடகர்களைத் தெரிவு செய்து அவர்களை மெல்லிசைத்துறையில் பிரகாசிக்கச் செய்திருக்கின்றோம். கடந்த போட்டியில் பெற்றுக்கொண்ட அனுபவத்தையும் இம்முறை செயற்படுத்துகின்றோம். சிறந்த பாடகர் என்றால் அவருக்கு நேரலையாகப் பாடல்களைப் பாடும் திறன் இருக்க வேண்டும்.
மூன்று சுற்றுகளாக நடத்தப்படும் இந்தப் போட்டியில், முதலாவது சுற்றில் போட்டியாளர்கள் விரும்பிய பாடலைப் பாடுவதற்கு அனுமதிக்கப்படும். இரண்டாவது சுற்றில் மூன்று பாடல்களை நாம் தெரிவுசெய்துகொடுத்து அதில் ஒன்றைப் பாடச்சொல்வோம். இறுதிச் சுற்றின்போது, ஏற்கனவே இரண்டு சுற்றுகளில் பாடிய தாம் விரும்பிய பாடலைப் பாடுவதற்கு இடமளிப்போம். நடுவர் குழாமே வெற்றியாளரைத் தெரிவு செய்யும். குறுந்தகவல் முறையில் நாம் போட்டியாளரைத் தெரிவுசெய்வதில்லை. ஆனால், நேயர்கள் தாம் விரும்பும் பாடகரை குறுந்தகவலில் பெயரிடுவதற்கு இடமளிக்கப்படும்.
எனினும் வெற்றியாளரை நடுவர்கள்தான் தெரிவுசெய்வார்கள். நடுவர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது. அவர்களைச் சந்திப்பதற்கோ, பார்ப்பதற்கோ வாய்ப்பிருக்காது. போட்டியாளர்களின் குரல் மட்டுமே நடுவர்களுக்குக் கேட்கும். மூன்று சுற்றுகளும் அவ்வாறுதான் நடத்தப்படும். நாங்கள் மில்லியன் கணக்கில் பணப்பரிசு கொடுக்காவிட்டாலும், பாடகருக்கான திறமைத் தரச்சான்றுப் பத்திரத்தைக் கொடுக்கின்றோம். இலட்சம் இலட்சமாய் கொடுத்தாலும் தகுதியின்றித் தரச்சான்றுப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது.
எனவே, பாடக, பாடகிகளுக்குத் தமது எதிர்காலத்திற்கு இந்தச் சான்றிதழ் மிக மிக முக்கியமானது. உண்மையான திறமைசாலிகளை இனங்காணவே நாம் இந்தப் போட்டியினை நடத்துகின்றோம்"என்கிறார் பணிப்பாளர் நாயகம் ஏரானந்த ஹெட்டியாராச்சி.
"கூட்டுத்தாபனத்தின் ஆனந்த சமரக்கோன் கலையகத்தில் நடைபெறும் போட்டியைக் கண்டுகளிக்க பல நேயர்கள் தொலைபேசியில் விருப்பம் தெரிவிப்பதாகத் தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் ஆர். கணபதிப்பிள்ளை கூறுகிறார். இதனை நான் வரவேற்கின்றேன். அத்துடன் போட்டியாளர்கள் மீது விருப்பமுள்ள யாரும் நேரில் வந்து அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனப் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்" என்கிறார் அவர்.
இந்நிலையில், சிங்களத்தில் ஒலிபரப்பாகும் சிட்டி எப்எம் சேவையில் கடந்த ஜூலை முதலாந்திகதி முதல் யூத் ரெலன்ற்ஸ் என்ற போட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் பங்குபற்றுகிறார்கள். போட்டிக்கான பாடலை எழுதி, அவர்களே இசையமைத்துப் பாடவேண்டும். இதற்கு மூவர் பங்குகொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது. இதுபற்றிஅவர் விளக்கும்போது,
"யூத் ரெலன்ற்ஸ் போட்டியைப் பொறுத்தவரை, போட்டியாளர்களின் பாடல்கள் தயாரிக்கப்பட்டு ஒரு மணித்தியாலயத்திற்கு ஒரு தடவை ஒலிபரப்பப்படும். இரண்டாம் சுற்றும் அவ்வாறு நடத்தப்பட்டு இறுதிச் சுற்றில் மிகச் சிறந்த பாடல்கள் வெளிக் கொணரப்படும். இளைஞர் யுவதிகளின் திறமைகளை வெளிக்கொணர வேண்டியது தேசிய வானொலியின் பொறுப்பாகும். எமது முன்மாதிரியை வேறு அலைவரிசைகளும் பின்பற்றக்கூடும். எல்லோருக்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதே எமது நோக்கம்"
"இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான கால எல்லையை நிர்ணயித்திருக்கிறீர்களா?"
"நிச்சயமாக. கால எல்லை உண்டு. ஆறு மாதங்கள் வரை இந்தப் போட்டிகள் நடத்தப்படும். தென்றல் சிங்கிங் ஸ்ரார் ஒரு மாதம் ஒலிபரப்பாகிவிட்டது. இன்னும் ஆறு மாதங்கள் ஒலிபரப்பாகும்"
"கடந்த முறை நடத்தப்பட்ட போட்டியில் எத்தனைப் பாடகர்களை உருவாக்கியிருக்கிறீர்கள்?"
"இறுதிப்போட்டியில் பத்துப்பேரைத் தெரிவுசெய்து அவர்களை மெல்லிசைப்பாடகர்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அவர்கள் இந்தத் துறையில் முன்னேறிச்செல்ல வேண்டியது அவர்களின் திறமையிலும் முயற்சியிலும் தங்கியிருக்கிறது. முதலிடத்திற்கு வந்த சித்தாரா முன்னணியில் இருக்கிறார். அவர் தமிழ், சிங்கள நிகழ்ச்சியில் பங்குபற்றி வருகிறார். முன்னைய போட்டியில் வெற்றி பெற்றவர்களை இந்த இரண்டாவது போட்டியில் கௌரவ விருந்தினர்களாக அழைத்து, அவர்களை, இலங்கைப் பாடல்களைப் பாடுமாறு கேட்டிருக்கிறோம். இன்று வீ. முத்தழகை எடுத்துக்கொண்டால், அவர் எந்த மேடையிலும் இலங்கைப் பாடல்களைத்தான் பாடுவார். எமது இசைக்களஞ்சியத்தில் எவ்வளவோ நம் நாட்டுப் பாடல்கள் இருக்கின்றன. எல்லா அலைவரிசைகளும் தென்னிந்திய திரைப்படப் பாடல்களையல்லவா ஒலிபரப்புகின்றன. அப்படியாயின் எமது திறமைகள் எங்கே? அண்மையில் நாம் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தபோது பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்தோம். அவர்கள் மிக அருமையான பாடல்களை இயற்றி இசையமைத்து வழங்கினார்கள். ஆகவே, எமது படைப்புகளை வெளிக்கொண்டு வருவதற்கான காலம் தற்போது வந்துள்ளது. இந்தப்போட்டியில் தென்னிந்திய பாடல்களைப் பாடியபோதிலும் அடுத்த தென்றல் சிங்கிங் ஸ்ரார் நிகழ்ச்சி முற்றிலும் நமது இளைய சமுதாயத்தின் சுய முயற்சியில் உருவான பாடல்களைப் பாடும் போட்டியாக மாற்றியமைப்போம். எமது இறுதி இலக்கானது நமக்கே உரிய, நமது முயற்சியில் உருவான பாடல்களைக் கொண்டு வருவதாகும்."
"இந்தப் போட்டியை நடத்துவதில் இதுவரை நீங்கள் சவால்களைச் சந்தித்திருக்கிறீர்களா?"
"சவால்களை எதிர்கொண்டு வெற்றியடைக்கூடிய குழுவினர் எம்மிடம் இருக்கிறார்கள். தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைப்பதில் சிங்களக் கலைஞர்கள் சம்பந்தப்படுகிறார்கள். ஆகவே, இசைக்கு மொழி கிடையாது. அதனால், பாடல்களைச் சிதைக்காமல் பாடக்கூடிய வாய்ப்பு தமிழ்ப் பாடகர்களுக்குக் கிடைத்தது. இதுதான் முக்கிய சவால். இரண்டாவது சவால், நல்ல விடயங்களுக்கு அனுசரணை வழங்குவதில் தனவந்தர்கள் முன்வருவதில் நிலவும் குறைபாடு. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் இவ்வாறான முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்"
"ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்து உருவாகிய பலர், காலப்போக்கில் அதிலிருந்து விலகி அந்நியப்பட்ட நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். அவர்களைத்தக்க வைத்துக்ெகாள்வதில் நிலவுகின்ற தடைகள் யாவை, இதற்கு உண்மையான காரணம் என்னவாக இருக்கலாம் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?"
"பல்கலைக்கழகங்களில் பயில்கின்ற மாணவர்கள் அங்குப் பட்டம் பெறுகிறார்கள். இறுதியில் அவர்கள் அனைவரும் அங்கேயே பணிபுரிவதில்லையே! அவர்களுக்கு வேறு வேறு இடங்கள் இருக்கின்றன. ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் அநேகருக்கு ஒரு பல்கலைக்கழகம். இங்குப் பயின்று தேறி, எந்த இடத்திற்குச் சென்றும் தம் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டு. அதேநேரம், நாம் உருவாக்கியதன் பின்னர், இன்றைய வாணிப சமூகத்தில் சிறந்த திறமைக்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது. எங்கு உருவானாலும், தமக்குக் கூடுதல் வரவேற்பு உள்ள இடத்திற்குச் செல்வதற்குத்தான் யாரும் விரும்புவார்கள். ஆகவே, அவர்கள் செல்வது நியாயமற்றது என நான் நினைக்கவில்லை. நாம் அரச நிறுவனம். ஒரு கலைஞருக்குக் கொடுப்பனவொன்றை வழங்குவதென்றால் அதற்குச் சட்ட திட்டங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் எமக்குச் செல்ல முடியாது. படைப்பின் மூலம் திருப்தியடைவோரும் இருக்கிறார்கள், பணத்தின் மூலம் திருப்தியடைவோரும் இருக்கிறார்கள். ஆதலால், அவர்கள் எங்கோ ஓர் இடத்தில் தங்கிவிடுகிறார்கள். அவ்வாறு எங்கிருந்தாலும் நல்ல திறமைசாலிகளாக மிளிரும் வகையில் நாம் உருவாக்குகிறோம். இதில் கட்டுப்பாடுகளை விதிக்கும் நோக்கம் எமக்கில்லை. அதே வேளை, இங்கு உருவானவர்களுள் நாம் அழைத்தவுடன் நன்றியுடன் வருபவர்களும் இருக்கிறார்கள். எமக்கு இரண்டாம் இடம் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். அது ஒவ்வொருவரின் பண்பாட்டைப் பொறுத்ததுதானே! எவ்வாறிருப்பினும் வரையறையை நிர்ணயிப்பது சரியானது அல்ல. அவர்களை எங்குச் சந்தித்தாலும் நான் மகிழ்ச்சியடைவேன். தேசிய நிறுவனமொன்றின் பொறுப்பு பலனை எதிர்பாராமல் சரியானதைச் செய்வது. அவர்கள் எங்காவது வேர்விட்டு வளரட்டும்"
"தற்கால வர்த்தகமயமான சமூகத்தில் ஒலிபரப்புத் துறையில் நிலவும் போட்டித்தன்மைக்கு எவ்வாறு முகங்கொடுக்கிறீர்கள். போட்டியை எதிர்கொண்டு முன்செல்வதற்குத் திட்டங்கள் எதனையும் வைத்திருக்கிறீர்களா?"
"இன்று அரச ஊடகத்திற்கு இருக்கின்ற முக்கிய சவால் இதுதான். வர்த்தகமய சவாலை வெற்றிகொள்வதா, அல்லது நாட்டின் நன்மைக்கான எமது நல்ல நோக்கத்தை அடைவதா? இதில் இரண்டு சவாலையும் வெற்றிகொள்ள வேண்டியது கூட்டுத்தானபத்தின் கடமையாகும். மிகக் கடுமையான சவால் என்றுகூட இதனைச் சொல்வேன். மக்களை நல்லனவற்றை ரசிக்கச் செய்து மக்களை நல்லவற்றின்பால் ஈர்த்துக்கொள்வதின் மூலம்தான் இதனை வெற்றிகொள்ள முடியும். அதனை இப்போது செய்து வருகிறோம். நல்லவற்றைப் புறந்தள்ளிவிட்டு வர்த்தகமயமானால் நாட்டின் நிலை என்னவாகும்?"
"என்றாலும், ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இந்த வர்த்தகமயமான போட்டியின்காரணமாக அதன் பாரம்பரிய கட்டுக்கோப்பிலிருந்து விலகி, தன்னை மாற்றிக்கொண்டுவிட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். நீங்கள் இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?"
"இல்லை. நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். யாரையாவது ஆதாரபூர்வமாக நிரூபிக்கச் சொல்லுங்கள். மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளன. தொழில்நுட்ப ரீதியிலான மாற்றம் காலத்திற்குத் தேவையானது. முன்பு, நான் கொழும்பிலிருந்து பேசுகிறேன் என்று ஆரம்பித்த இலங்கை வானொலியில் இன்று அப்படியா பேசுகிறோம்! காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளத்தானே வேண்டும். அப்போதைய அறிவிப்பாளர்களின் பாணி வேறு தற்கால அறிவிப்பாளர்களின் பாணி வேறு, அதேநேரம் எமது தனித்துவத்தைப் பேணிக்கொள்ளவும் வேண்டும். எமது மொழிப்பிரயோகம், சொற்களின் அர்த்தங்கள் மாறக்கூடாது, சிதையக்கூடாது. பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களும் காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு அறிவிப்புச் செய்கிறார் அல்லவா! நானும் ஓர் அறிவிப்பாளன். நான் 1983 ஆம் ஆண்டு அறிவிப்பாளனாகச் சேர்ந்து அறிவிப்புச் செய்ததைப்போன்று இன்று செய்ய முடியுமா? தொழில்நுட்பரீதியாக நாம் மாறியிருக்கிறோம். சமூகத்தில் நேயர்களின் ரசனை மாறியிருக்கிறது. இவற்றையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு நாம் மாறியிருக்கிறோம். ஆனால், நாம் இந்த மாற்றத்தின் மூலம் தமிழையும் ஆங்கிலத்தையும் கலக்கவில்லை. சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் கலக்கவில்லை. ரெங்கிழிஷ் சிங்கிளிஷ் எம்மிடம் கிடையாது. செய்தி வாசிப்பில் நாம் எமது தனித்துவத்தை விட்டுக்கொடுக்கவில்லை. நான் பாடசாலையில் கல்வி கற்ற காலத்தில் எனது சிங்களப்பாட ஆசிரியை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன செய்தி அறிக்கையைச் செவிமடுக்கச் சொல்வார். ஏன்? மொழியைக் கற்றுக்கொள்ள. தமிழ் மொழியும் அவ்வாறுதான். குரல்கள் மாறியிருக்கலாம். எமது அடிப்படை மாறவில்லை. எம்மை அழித்துக்கொள்ளாமல், தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொண்டு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்! அதுமட்டுமல்ல, கூட்டுத்தாபனம் 2017ஆண்டின் முற்பகுதியில் முற்றிலுமாக நவீனமாகிவிடும். புதிய கலையகம், ஒலிப்பதிவுக்கூடம் எனச் சகல பிரிவுகளும் நவீனமயமாகிவிடும். இதற்கு 283 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என்கிறார் நம்பிக்கை கலந்த மகிழ்ச்சியுடன்!
Via 
Sahadevan Vijayakumar, Published on 06 July 2016 Written by SLBC admin

Sunday, September 18, 2016

வளரும் ஒலிபரப்புக்கலை - நூல் வெளியீடு


சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் அகில இந்திய வானொலியின் மேனாள் இயக்குநர்கள் திரு.கோ.செல்வம் மற்றும் திரு.விஜய திருவேங்கடம் அவர்கள் தொகுத்த 'வளரும் ஒலிபரப்புக்கலை' நூல் வெளியீடு வரும் வியாழன் 22 செப் 2016 காலை 11.00 நடக்கவுள்ளது.