Tuesday, April 11, 2017

போர்த்துக்கல் வானொலியின் 80வது ஆண்டு

Renascença வானொலியின் 80வது ஆண்டுக்கு திருத்தந்தை செய்தி


ஏப்.11,2017. இத்திங்களன்று தனது எண்பதாவது ஆண்டு நிறைவைச் சிறப்பித்த, போர்த்துக்கல் நாட்டு Renascença வானொலிக்கு, நல்வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போர்த்துக்கல் நாட்டு கத்தோலிக்கத் திருஅவையின் இந்த வானொலி, கடந்த எண்பது ஆண்டுகளாக ஆற்றி வந்த மகத்தான சேவையைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, இவ்வானொலி, மனித சமுதாயத்தின் இதயத்தில், உடன்பிறப்பு உணர்வையும், கடவுளின் இரக்கத்தையும் விதைப்பதன் வழியாக, இயேசுவின் நற்செய்தியை அறிவித்து வருகிறது எனக் கூறியுள்ளார்.

Renascença வானொலியின் எண்பதாவது ஆண்டு நிறைவு விழாவில், திருப்பீடச் செயலகத்தின் நேரடிச் செயலர் பேரருள்திரு ஆஞ்சலோ பெச்சு அவர்கள் கலந்துகொண்டு, திருத்தந்தையின் இச்செய்தியை வாசித்தார்.

மேலும், இளையோர், தங்கள் வாழ்வுக்குப் பொறுப்பேற்பவர்களாகவும், தாத்தா பாட்டிகளுடன் உரையாடி, அவர்களின் கனவுகளை நனவாக்குகின்றவர்களாகவும் வாழுமாறு கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

32வது உலக இளையோர் நாளை முன்னிட்டு, உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்காவில், ஆயிரக்கணக்கான பல நாடுகளின் இளையோரைச் சந்தித்து உரையாடிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

வாழ்வில் எத்தனைமுறை தவறி விழுந்தாலும் எழுந்து நடக்குமாறும், வாழ்வில், ஒருநாளும் சோர்ந்துவிடாமல், துணிச்சலுடன் இருக்குமாறும் கூறியத் திருத்தந்தை, வத்திக்கானில் இளையோர் பற்றி நடைபெறவிருக்கும், உலக ஆயர்கள் மாமன்றத்தில், எந்த ஓர் இளையோரும் ஒதுக்கப்பட்டவராக உணரக் கூடாது எனத் தெரிவித்தார்.

கத்தோலிக்க இளையோருக்காக ஆயர்கள் மாமன்றம் நடைபெற்றாலும், அது கத்தோலிக்கக் கழகங்களோடு தொடர்புடைய அனைத்து இளையோருக்குமானது எனவும், இளையோரின் குரலைக் கேட்பதற்குத் தேவை உள்ளது எனவும், இளையோர் வருங்காலத்தைக் கண்முன்கொண்டு முன்னோக்கி நடக்க வேண்டுமெனவும், கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments: