நன்றி: இலங்கை தினகரன் வாரமஞ்சரி
இலங்கை வானொலி என்பது இலங்கையில் முதலில் தோன்றிய முதன்மை வானொலி நிலையகமாகும். சினிமாப் பாடல்களைக் கொண்டே சிறப்பான நிகழ்ச்சிகளை தயாரித்தவர்கள். இசை, நாடகம் மட்டுமன்றி அறிவியல், சமய, அரசியல், இலக்கிய நிகழ்ச்சிகளையும் தயாரித்தவர்கள்.
புலமைசார் பல ஒலிபரப்பாளர்களை உருவாக்கிய வானொலி நிலையமும் அதுவே.
இத்தகைய புகழ்பெற்ற இலங்கை வானொலி நிலையம் பற்றி இலங்கை மற்றும் இந்திய எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஒன்று இப்பொழுது வெளிவந்திருக்கிறது. 'பன்முகப் பார்வையில் இலங்கை வானொலி' என்ற இந்த நூலை சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல்துறைப் பேராசிரியர் தங்க. ஜெய்சக்திவேல் தொகுத்துள்ளார்.
225 பக்கங்களைக் கொண்ட இந்நூல் மூன்று தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளது. நூலில் 30 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
இலங்கை அறிஞர்கள் பலர் எழுதிய சிறப்பு மிக்க கட்டுரைகள் பல இந்நூலை அலங்கரிக்கின்றன.
'வர்த்தக ஒலிபரப்பின் தமிழ் வேர்: எஸ்.பி. மயில்வாகனம் என்ற தலைப்பில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி எழுதிய கட்டுரை சிறப்பிடம்பெறுகிறது.
'இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்' என்ற நூலுக்கு நேர்மையான விமர்சமொன்றை பேராசிரியர் துரைமனோகரன் எழுதியுள்ளார்.
'கொழும்பு வானொலி' என்ற தலைப்பில் மூத்த ஒலிபரப்பாளர் அப்துல்ஜபார் ஆரம்ப கால இலங்கை வானொலியின் வரலாற்றை எழுதியுள்ளார். 'வானொலி நாடகங்கள்' பற்றி இரண்டு கட்டுரைகள் இடம்பெறுகின்றன. 'நாடகங்களின் நோக்கம்' பற்றி மூத்த ஒலிபரப்பாளரான ஜோர்ஜ் சந்திரசேகரன்.
விளக்கக் கட்டுரை எழுதியுள்ளார்.
'வானொலி நாடகங்களில் வரலாறு' என்ற தலைப்பில் முகநூலில் வானொலி பற்றி வசை பாடும் ஜி.பி. வேதநாயகம் வரலாற்றுக் கட்டுரை எழுதியுள்ளார்.
இலங்கை வானொலியின் ஆங்கில சேவையில் பல தமிழ் பேசும் ஒலிபரப்பாளர்கள் கடமையாற்றியிருக்கிறார்கள். இவர்கள் பற்றிய விபரக் கட்டுரையை கே.எஸ். சிவகுமாரன் எழுதியிருக்கிறார்.
இலங்கை ஒலிபரப்பாளர்கள் பலர் பலநூல்களை எழுதியிருக்கிறார்கள். இவர்கள் பற்றிய விபரங்களைத் தொகுத்ததாக தம்பி ஐயா தேவதாஸ் எழுதிய கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.
இலங்கை எழுத்தாளர்கள் மட்டுமன்றி இந்திய எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
இலங்கை வானொலியின் அபிமானியும் சட்ட அறிஞருமான கொண்டேக் கவுண்டன் பாளையம். எஸ். முத்துக்குமார், 'தமிழகம் வந்த இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளனர்.
இலங்கை வானொலியின் இன்னுமொரு அபிமானியான வள்ளியூர் ஏ.ஜீ.எஸ். ரவீந்திரன் 'இலங்கை வானொலி நிலையத்துக்கு தான் வந்த பயண அனுபவங்களைக் கட்டுரையாக எழுதியுள்ளார்.
'வானொலி மஞ்சரிகள்' என்ற தலைப்பில் மதுரைச் செல்வன் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார். இந்நூலைத் தொகுத்து வெளியிட்டுள்ள பேராசிரியர் தங்க ஜெய்சக்திவேல் இலங்கை வானொலி மீது அபிமானம் கொண்டவர். ஏற்கனவே பி.பி.ஸி. தமிழோசையில் கடமையாற்றியவர். இதற்கு முன்பு 'சீனாவில் தமிழ் ஒலிபரப்பு' என்ற நூலை எழுதியிருந்தார்.
சென்னை பல்கலைக்கழக இதழியல் துறையினர் வெளியிட்ட இந்நூலை கொழும்பு பூபாலசிங்கம் புத்தக சாலையினர் இறக்குமதி செய்து வெளியிடுகின்றனர்.
தம்பிஐயா தேவதாஸ்
No comments:
Post a Comment