நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். இந்த வருட இந்து தமிழ் திசை வெளியிட்டுள்ள "இயர் புக் 2024"-ல் வானொலித் தொடர்பான ஒரு கட்டுரையை எழுதியுள்ளேன்.
"புதியத் தொழில்நுட்பத்துடன் இன்றைய வானொலி ஒலிபரப்பு" எனும் தலைப்பிலான நீண்ட கட்டுரை இந்த வருட இயர் புக்கில் வெளிவந்துள்ளது. கட்டுரையை வெளியிட ஊக்குவித்த திரு.ஆதி வள்ளியப்பன் அவர்களுக்கும், தயாரிப்பு குழுவினருக்கும் நன்றி.
தரமானத் தாளில், அதிகப் பக்கங்களுடன், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, முக்கியக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துள்ள இந்த இயர் புக், ஒவ்வொரு ஊடக படிப்பினைப் படித்துவரும் மாணவர்களின் கையிலும் இருக்க வேண்டிய ஒரு முக்கிய புத்தகமாகும்.
800 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ₹ 275. புத்தகக் காட்சியில் 10% கழிவில் கிடைக்கிறது.
கொசுறுத் தகவல்:
ஒவ்வொரு வருடமும் இயர் புக்குகளில் புதுமையாக ஏதேனும் இணைத்துள்ளார்களா? என்று தொடர்ந்து பார்த்து வருவேன். அதுவும் குறிப்பாக ஊடகங்களுக்கு என்று ஏதேனும் இடம் கொடுக்கப்பட்டுள்ளதா என்று.
ஒரு காலத்தில் மனோரமா இயர் புக்குகளில் உலக நாடுகளின் தூதரகங்கள் இந்தியாவில் எந்த இடங்களில் அமைந்துள்ளது போன்ற விபரங்களை முகவரிகளுடன் கொடுப்பார்கள். இதற்கும் ஊடகத்திற்கும் என்னத் தொடர்பு எனக் கேட்பவர்கள், கொஞ்சம் பொறுமை காக்கவும்.
ஆங்கில இயர் புக்குகளில் இன்னும் ஒரு படி மேலேச் சென்று வெளிநாடுகளில் இந்தியாவின் தூதரகங்கள் அமைந்துள்ள முகவரிகளையும், மின் அஞ்சல் முகவரியுடன் கொடுப்பார்கள். ஆனால், சமீப காலமாக எந்த இயர் புக்குகளிலும் இந்த தூதரக முகவரிகள் இடம்பெறுவதில்லை.
இந்த முகவரிகளைக் கொண்டுதான் ஒரு காலத்தில் அனைத்து நாடுகளின் வானொலிகளையும் தொடர்பு கொண்டோம். பெரும்பாலான தூதரகங்கள் புது தில்லியில் உள்ள சாணக்கியபுரியில் தான் அமைந்துள்ளன, என்பதே இயர் புக் மூலமாகத்தான் தெரிய வந்தது. பிற்காலத்தில் அந்த தூதரகங்களுக்கு நேரடியாகச் சென்றது வேறு கதை.
உலக வானொலிகளை எப்படித் தொடர்பு கொண்டோம் என்பதே இங்கு சுவாரஷ்யம் தரக்கூடியது. உதாரணமாக நெதர்லாந்து நாட்டின் Radio Nederland-ஐ தொடர்பு கொள்ள, முதலில் அந்த நாட்டின் தூதரக முகவரியை கண்டுபிடிப்போம். அதன் பின் அந்த முகவரிக்கு முன்
English Section,
Radio Nederland,
என்று எழுதி, அதன் பின்
C/o Embassy of Nederland,
6/50 F, Shantipath,
Chanakyapuri,
New Delhi - 110021
என்று அஞ்சல் அட்டையிலேயே எழுதி அனுப்புவோம். ஒரு மாதத்தில் அந்த வானொலிக்கு தூதரகம் அனுப்பிவிடும். இது போன்றே அனைத்து நாடுகளின் வானொலிகளையும் 25 பைசா அஞ்சலட்டையில் தொடர்பு கொண்ட அனுபவத்தை என்னவென்று சொல்வது!
இணையம் வந்துவிட்டபடியால், அனைத்து தூதரக முகவரிகளையும், இணையம் ஊடாக பெற்றுக் கொள்ள முடிவதால் கூட இன்றைய இயர் புக்குகளில் இது தவிர்க்கப்பட்டு இருக்கலாம். ஆனாலும், இது இயர் புக் அல்லவா, அந்த முகவரிகள் இருந்தால் இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும்.
#
No comments:
Post a Comment