Friday, July 31, 2009

ஈரோடு மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத்தின் ஐம்பெரும் விழா


ஈரோடு மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத்தின் சார்பாக ஐம்பெரும் விழா வரும் ஆகஸ்ட் 1, 2009 அன்று பெருந்துறை அருகில் நடைபெற உள்ளது. விபரங்களுக்கு அழைப்பிதழைக் காணவும்.

Wednesday, July 29, 2009

பாஸ்கர் நெப்போலியன்


தஞ்சை மண்ணின் உயர்ந்த மனிதன் நீ!
உலக சிற்றலை வானொலியின் காதலனும் நீ!
ஓய்வு நேரத்திலும் ஓய்வின்றி வானொலி கேட்கும் ரசிகனும் நீ….!
வானொலி உலகின் முத்திரை நேயரும் நீ!
உன் வாழ்க்கை ஒரு தொடர் வண்டி பயணம்
உன் வாழ்வோடு இணைந்து வந்த இணைப்பு பெட்டிகளை கழட்டி விட்டு சென்றது ஏனோ?!
ஆம்! ஓயாது உன் காதோரம் ஒலித்த வானொலிப் பெட்டி உன்னை காணாமல் ஏங்குகிறது!
விண்ணோக்கி செல்லும் டிஸ்கவரி ஓடம்கூட பத்திரமாய் பூமி வந்திறங்குகிறது
நீ சென்ற வாகனமோ உன்னை விண்ணோக்கி அனுப்பிவிட்டு வீதியில் கிடக்கிறதே?
திருச்சி உறவு சங்கமத்திற்கு வந்து அனைவருக்கு ஹாய்…! என்றாய்
நிரந்தரமாய் பூமியை விட்டுச் சென்று விடுவாய் எனத் தெரியாமல் யாருக்கும் பை… பை… சொல்ல மறந்து போனாய்!
வாழ்க்கைப் பயணம் அலுத்துவிட்டதா?
உன் வானொலி தேடல் களைத்து விட்டதா?
காற்றுள்ள வரை ஒலி இருக்கும்
நெஞ்சிருக்கும் வரை உன் நினைவிருக்கும்!
ரயில் சிநேகம் பயணம் முடியும் வரை
உன் வானொலி சிநேகம் எங்கள் வாழ்வு முடியும் வரை
கடல் அலை ஓயாது
உன் நினைவலை மறையாது
நிதம் உன்னை நினைத்து பார்க்க நாங்கள் இருக்கிறோம்
நேரில் பேச நீ இல்லையே!
- வானொலி நேசன் வண்ணை கே. ராஜா

Saturday, July 25, 2009

எல்லையில்லா வானம்

புதுடில்லி விஞ்ஞான் பிரசார் அமைப்பும், அகில இந்திய வானொலியும் இணைந்து 'எல்லையில்லா வானம்' என்ற 54 வார அறிவியல் தொடர் நிகழ்ச்சியை 4.4.2009 அன்று தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சி இந்தியா முழுவதும் 19 மொழிகளில் 118 அகில இந்திய வானொலிகளில் ஒலிபரப்பப் படுகிறது. இந்த அறிவியல் நிகழ்ச்சியை தமிழில் மதுரை அகில இந்திய வானொலி வழங்குகிறது.

சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு சென்னை ஏ, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய வானொலிகள் மத்திய அலைவரிசையிலும், காரைக்கால் பண்பலை வரிசையிலும் கேட்கலாம்.

வானிலை தொடர்பான எண்ணற்ற தகவல்களை அள்ளித் தரும் இந்நிகழ்ச்சி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் சர்வதேச வானொலி நேயர்கள் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய நிகழ்ச்சியாகும். ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் ஏற்படும் சந்தேகங்களை கேட்க விரும்பு பவர்கள், உங்களது கேள்விகளை மதுரை வானொலிக்கு அனுப்பலாம்.

முகவரி: நிலைய இயக்குனர்,
எல்லையில்லா வானம்,
அகில இந்திய வானொலி நிலையம்,
லேடி டோக் கல்லுôரிச் சாலை,
சொக்கிகுளம்,
மதுரை – 625 002.

கேள்விகளுக்கான பதில்களை 9,18,28,37,47 மற்றும் 53வது பகுதிகளில் நிபுணர்கள் மூலம் வழங்கப்படும். சிறந்த கேள்விகள் கேட்கும் நேயர்களுக்கு பரிசுகளும் உண்டு. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தொடரின் நிறைவிலும் இரண்டு கேள்விகள் கேட்கப்படும்.

அதற்கு சரியான பதில் அனுப்பும் நேயர்களில் இருந்து ஒவ்வொரு நிலையத்திற்கும் தலா மூன்று நேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு விஞ்ஞான் பிரசார் வெளியிட்டுள்ள அறிவியல் புத்தகங்கள் மற்றும் மாத இதழ்கள் பரிசாக அனுப்பப்படும். சென்னை-பி அலைவரிசையில் இந்த நிகழ்ச்சியின் ஆங்கில நிகழ்ச்சியைக் கேட்கலாம்.

VIGYAN PRASAR,
A-50, Institutional Area,
Sector-62, Noida - 201307,
U.P. , INDIA.
Telephone No:0120-2404430,31,35,36
Fax : +91-120-2404437
General Info.: info[at]vigyanprasar.gov.in,
Sales Info.:sales[at]vigyanprasar.gov.in
- மீனாட்சி பாளையம் கா. அருண் (ADXC - 2006) 94885 75462

ஊட்டியில் பி.கண்ணன்சேகர் அவர்களுக்கு பாராட்டு விழா

08.07.2009 அன்று ஊட்டியில் நடைபெற்ற முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் அவர்களுக்கு பாராட்டு விழாவில். படத்தில் முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர், கீழ்குந்தா போஜன், ஊட்டி சுரேந்தர், தென்பொன்முடி மணிகண்டன், சேந்தமங்கலம் ரவிச்சந்திரன், பலாயூர் நாச்சிமுத்து, மற்றும் நேயர்கள்.

Wednesday, July 22, 2009

என் வானொலியை கேட்டீர்களா....!!


எந்த ஒரு மின்னணு சாதனங் களின் இடையூறுகளும் சக்தி வாய்ந்த ஒலி அலைகளின் தடங்களும் இல்லாமல் தெளிவான வானொலி நிகழ்ச்சிகள் என் ஊர் போன்ற அமைதியான கிராம சூழலுக்கு பின்னணி இசையாக ஒலித்துக் கொண்டிருந்த எழுபதுகளின் இறுதியில் எங்கள் வீட்டிலும் வானொலி இருந்தது.

வீட்டில் உள்ள வானொலி எப்பொழுது இருந்து இருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது. அந்த பழைய வானொலிக்குப் பதிலாக புதிதாக ஒன்று வாங்கும் எண்ணம் வந்தபொழுது, வானொலியின் வடிவம், வண்ணம் போன்றவை எப்படி இருக்க வேண்டும் என்பதை வீட்டில் உள்ளவர்கள் கூடிப் பேசியது, ஏதோ ஒரு கல்யாணத்தை செய்து முடிப்பதற்கான திட்ட மிடுதலாய் நீண்ட நேரம் போனது. அனைவரின் பேச்சின் முடிவில், அடுத்தநாள் புதிய வானொலி பெட்டி ஒன்று வரப்போகிறது என்று ஆவலோடு இருந்தேன். மாமாவும் வந்தார் கையில் வானொலிப் பெட்டி அளவிற்கு ஒன்றும் பெரிதாக இல்லை. சிறிது நேரத்தில் சட்டைப் பையில் இருந்து நான்காக மடிந்த ஒருதாளை எடுத்து விரித்தார். இந்த காலத்து ஜெராக்ஸ் காப்பி போல இருந்தது. வானொலி பெட்டி களுக்கான விபர அட்டவணை இருந்தது. அதில் அச்சிடப்பட்டிருந்த வானொலி படங்கள் மட்டும் எனக்குப் புரிந்தது.
அனைவரும் கலந்து பேசி புதிதாக வந்திருந்த மற்ற வானொலி பெட்டிகளினும் வித்தியாசமாக இருந்த படுக்கைவச வானொலி பெட்டியை தெரிவு செய்தார்கள். அடுத்தநாள் அந்தப் படுக்கைவச வானொலி பெட்டி வந்தது.

வந்தபின்தான் அதன் அசௌ கரியங்கள் புரிய வந்தது. அதை வைப்பதற்கு தனி மேசை தேவைப்பட்டது. அலைவரிசை தேடும்பொழுது கையில் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. வானொலிப் பெட்டியின் ஒலி பெருக்கி வீட்டின் கூரையைப் பார்த்து இருந்ததால் ஒலியின் அளவை கூட்டி வைத்தால்தான் சுற்றி உள்ளவர்களுக்கு கேட்கக் கூடியதாக இருந்தது.
ஆகையால் விரும்பாத விருந்தாளியாக நான்கு நாட்களுக்கு மேல் திருப்பி அனுப்பி விட்டு வளமையான நிற்கும் வச வானொலியே வீட்டிற்கு வந்தது. நல்ல மெலிதான தோலினால் தைக்கப்பட்ட உறையுடன் தோளில் தொங்கவிடக் கூடிய பட்டையுடன் இருந்தது.

பின்னாட்களில் வானொலியை சுத்தம் செய்ய அந்த உறையை கழட்டும்பொழுது எனது தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு பஸ் கண்டக்டர் என்று சொல்லி வீட்டில் உள்ளவர்களுக்கு டிக்கெட் கொடுத்து விளையாடு வேன். வீட்டுச் சுவற்றில் நல்லதொரு இடமாக தேடி உறுதியான ஆணி ஒன்றை அடித்து தொங்கவிட்ட பொழுது சரியாக எனது காது அளவிற்குத் தொங்கியது.

வீட்டார் அனைவரும் வெளியில் இருக்கும்பொழுது மெதுவாக உள்ளே சென்று தூங்கும் குழந்தையை கிள்ளி விடுவது போல் அமைதியாக தொங்கிக் கொண்டி ருக்கும் வானொலியின் குமிழை திருகி காதை வைத்துக் கேட்பேன். பெரும்பாலான நேரங்களில் கிர்ர்ர்....ர்.. எனும் சப்தம் மட்டும் கேட்கும். பல நேரங்களில் அவசரத்தில் குமிழை திருகி அணைக்காமல் விட்டு விடுவதால் வீட்டாரின் எதிர்பார்ப்புக்கு முன் பாகவே பேட்டரி பலவீனமாகி விடும். அதற்கு தண்டனையாக பேட்டரியை உச்சி வெயிலில் வீட்டுக் கூரையின் மேல் ஏற்றி விடுவார்கள். வெயில் சூடு ஏறினால் அதற்கு பலம் வந்து விடும் என்று ஒரு நம்பிக்கை. விரைவிலேயே எனது திருட்டுத்தனம் கண்டு பிடிக்கப்பட்டு, வீட்டுச் சுவற்றில் பலகை அடித்து அதன் மேல் வைத்து விட்டார்கள். இப்பொழுது என் கண்ணுக்கு மட்டுமே கிட்டியது. கைக்கு எட்டவில்லை.
காலை நேரத்தில் மாநிலச் செய்திகள் முடியும் வரை பெரியவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் வானொலி அதன்பிறகு இளைஞர்களின் செயல் 'பாட்டு' க்கு வந்து விடும்.
வானொலி யார் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அது ஒரு நேரத்தை உணர்த்தும் சாதனமாகத்தான் என்னை போன்ற சிறுவர்களுக்கு உதவியது.

காலையில், டி.எம். சௌந்திரராஜன், "பிறந்த நாள், இன்று பிறந்த நாள்" என்று பாடினார் என்றால் குளிக்கச் செல்ல வேண்டிய நேரம். குளத்துக்குப் போய் குளித்து விட்டு திரும்பினால், புல்லாங்குழலை முதன்மையாக்கி வரும் தலைப்பு இசையுடன் "பொங்கும் பூம்புணல்" என்று கூறுவார்கள். இலங்கை வானொலியில் என்ன நிகழ்ச்சி நடந்தாலும், "விவிதபாரதியின்" உங்கள் விருப்பம் நிகழ்ச்சிக்கு மாற்றி விடுவார்கள். காரணம் உள்ளூர் வானொலியின் தெளிவான ஒலிக்காக. உங்கள் விருப்பம் முடியும்பொழுது "பள்ளிக் கூடத்துக்கு நேரமாச்சு கிளம்பு" என்று வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் அனைவரும் சொல்லி முடித்து விடுவார்கள்.

புறப்பட்டுப் போனால், பள்ளிக்கு அருகே உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் முதல் அலைவரிசை ஒலிபரப்பாகும். ஏதோ ஒரு கர்நாடக இசை வந்து கொண்டிருக்கும். காலையில் பணியாளர் அந்த வானொலிப் பெட்டியை எழுப்பி அறையை பூட்டி விட்டு ஊரில் உள்ள மேல் நிலைத் தொட்டியில் நீரேற்றி முறை வைத்து ஒவ்வொரு பகுதியாக குழாய்களுக்குத் தண்ணீர் திறந்துவிட சென்று விடுவார். பெரும்பாலான நாட்களில் பள்ளி தொடங்கும்பொழுது, கிர்ர்...ர்.... எனும் ஓசை வானொலியில் கேட்கும், அதனுடன் "டேசன் மூடி எவ்வளவு நேரமாச்சி, இந்தப் பய வந்து நிறுத்துரானா பாரு..." எனும் வசவு எங்கள் பள்ளியின் உதவியாளரின் வெள்ளைத் தாடியின் இடையே இருந்து வெளிவரும்.

மதியம் பனிரெண்டு மணி ஆகப் போகிறது என்றால் எனக்கு ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்ளும். காரணம் ஐந்தாம் வகுப்பு ராஜு வாத்தியார், மெயின் ரோட்டில் உள்ள தங்கப்பன் கடைக்கு சுண்டல் வாங்க யாராவது ஒருவரை தேர்வு செய்வார். அவர் கொடுக்கும் நாலனாவை கையில் இறுகப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தால் எதிரில் இருக்கும் போஸ்ட் ஆபிஸ் வீட்டில், இங்கலிஸ் நியூஸ் கேட்கும்.

நான்காக கிழிக்கப்பட்ட செய்தித் தாளில் வாழைத் துண்டை வைத்து சுடச்சுட மசாலா சுண்டலை போட்டு மடித்து சணல் போட்டு கட்டி பத்து பைசா போக மிதி பதினைந்து பைசாவை கையில் திணிக்கும்பொழுது மசாலாவின் மணமும் அதன் சூட்டில் இளகும் வாழை இலையின் வாசனையுடன், தொழிலாளர்களுக்கான நிகழ்ச்சி என்று தங்கப்பன் கடை வானொலியில் இருந்து காற்றில் கலந்து வரும்.

பள்ளி வந்த சிறிது நேரத்தில் மதிய உணவு இடைவேளைக்கு வெளியே வரும்பொழுது 'ஆகாசவானி' என்று டில்லியிலிருந்து தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் வீடு போய் சாப்பிடும் பொழுது தேசபக்திப் பாடல்களோ மெல்லிசையோ பாடிக் கொண்டிருக்கும்.
அடுத்த அரை மணி நேரத்திற்கு பல்சுவை நிகழ்ச்சி அல்லது மகளிர் நிகழ்ச்சி முடிந்தவுடன் "தம்பி நேரமாகிடுச்சு! கிளம்பு.." என்று கட்டளை வருகையில் "நேரம் இப்பொழுது ஒரு மணி முப்பது நிமிடம்" என்று நேர அறிவிப்பு வரும்.

பள்ளியின் பிற்பகல் வேளையில் சில சமயம் அமைதியாக இருக்கும் பொழுது அருகில் உள்ள பானை செய்பவரின் வீட்டில் இருந்து வளைந்த பானையை ஈரபதத்துடன் கட்டை வைத்து தட்டும் பத்.. .பத் ... சத்தத்துடன் இலங்கை வானொலி யில் ஒலிக்கும் திரைப்படப் பாடல்கள் மெலிதாக கேட்கும்.

பஞ்சாயத்து ஆபிஸ் வானொலிப் பெட்டி பாட ஆரம்பித்து விட்டால், பள்ளி விடும் நேரம், எல்லாம் தயாராகி மணி அடித்தவுடன் மாணவர்களின் 'ஓ….ஓ….' என்னும் சத்தத்திற்கு இடையிலும், இலங்கை வானொலியின் காட்சியின் கானமும், மங்கையர் மஞ்சரி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கு பவர்களின் மென்மையான குரலில் இனிமையான தமிழ் என் காதுகளில் கேட்கும்.

மாலை நேர விளையாட்டு நேரங்களில் வீட்டார் சொல்லும் சிறு, சிறு வேலைகளை செய்வ தற்காக வீட்டினுள் வந்து போகும்பொழுது மாலை நேர 'விவத பாரதியில்' தமிழ் பாட்டு பாடிக் கொண்டிருக்கும். அவ்வாறு இல்லா மல் முதல் அலை வரிசையின் மாநிலச் செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தார்கள் என்றால் எனது விளையாட்டு நேரம் முடியப் போகிறது என்று அர்த்தம்.

செய்திகள் முடிந்தவுடன் பெரிய வர்களின் கவனம் என் மீது விழ "கால் கைய கழுவிட்டு உட்கார்ந்து படி" என்று உத்தரவு வரும். படிக்க உட்கார்ந்த சிறிது நேரத்தில் ஆகாசவானி என்று டில்லி செய்திகள் வாசிக்க ஆரம்பித்தால் எனக்கு தாலாட்டுவது போன்று இருக்கும். அரைகுறை தூக்கத்தில் இருக்கும் என்னை எழுப்பி சாப்பிட வைக்கும் பொழுது "மண்ணை எல்லாம் பொன் கொழிக்க செய்திடுவோம். அதில் பன்மடங்கு உற்பத்தியை பெருக்கிடுவோம்" என்று விவசாய நிகழ்ச்சிப் பாடலை கேட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்தால், "உடனே படுக்கக் கூடாது கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு படு" என்னும் பெரியவர்களின் வார்த்தைக்கு மதிப்பளித்து விட்டு படுக்கும்பொழுது மீண்டும் விவித பாரதிக்கு மாற்றப்பட்டு தேன் கிண்ணத்தின் ஓரிரு பாடல்கள் மட்டும் என் காதுகளில் தூக்கத்தில் கரைந்து விடும்.
இரவு வண்ணச்சுடரில் இடம் பெற்ற நாடகத்தைப் பற்றி மறுநாள் காலை பெரியவர்கள் பேசிக் கொள்ளும்பொழுது தான் வானொலியில் அப்படி ஒரு நிகழ்ச்சி உள்ளது என்பதே தெரியும்.
ஒருநாளின் ஒவ்வொரு பொழு தையும் வானொலி உணர்த்திக் கொண்டிருந்தபோது உயர்நிலைப் பள்ளியின் கடைசி மூன்று வகுப்புகளை முடிப்பதற்காக விடுதியில் தங்க நேரிட்டது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த பொழுது, நீள் செவ்வக வடிவத்தில் மின்சாரத்தால் இயங்கக் கூடிய பெரிய வானொலி பெட்டி இருந்தது. பேட்டரி தீர்ந்து விடுமே என்ற கவலை இல்லாது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று ஆவல் கூடுதலானது. தட்டச்சு வகுப்பிற்கு போன நேரம் போக மீதி நேரத்தை இந்த வானொலியில் செலவிடலாம் என்று திட்ட மிட்டேன்.

காலை நேரத்தில் வானொலியை இயக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே "தம்பி ரேடியோவை ஆஃப் பண்ணு. மிக்சி போடணும்" எனும் குரல் வரும். சொல்லி விட்டு ஓடும் எங்கள் வீட்டு மிக்சிக்கும் சொல்லாமல் ஓடும் பக்கத்து வீட்டு மிக்சிக்கும் நிறுத்த வேண்டி இருந்தது. பகல் நேரங்களிலோ, "இந்த கேசட்ட போடுப்பா நல்லா இருக்கும்" என்று ஒலி நாடாக்களுக்கு ஆதரவு கூடும். இரவு நேரத்தில் குழல் விளக்குகளால் 'கிர்ர்ர்...' என்ற ஓசையும் உறுத்தலாக இருக்கும்.

எனவே, பழைய சின்ன வானொலிப் பெட்டி எங்கே என்று கேட்டபொழுது ஏதோ ஒரு பெட்டிக்குள் இருந்து எடுத்துக் கொடுத்தார்கள். அதற்கு பேட்டரியை போட்டு விடுமுறையை கழித்தேன். மீண்டும், கூடுதல் இரண்டு வகுப்புகளுக்காக விடுதிவாசம் முடித்து விட்டு வீட்டிற்கு வந்தால் சாம்பல் நிற கண்ணாடி திரையுடன் தொலைக்காட்சி பெட்டி ஒன்று தனி சிம்மாசனத்தில் வீற்றிருந்தது.

இப்பொழுதெல்லாம், காலை நேரத்தில் ஊரில் யாரும் வானொலிப் பெட்டியை தொடுவதாகக் கூடத் தெரியவில்லை. பெரும்பாலான வீடுகளில் அவரவர் விருப்பத் திற்கேற்ப டி.எம்.எஸ். சீர்காழி, எல்.ஆர். ஈஸ்வரி என யாராவது ஒருவர் ஒலி நாடாவில் பக்தியுடன் பாடிக் கொண்டிருந்தார்கள்.

மாலை நேரங்களில் அந்த சாம்பல் நிற கண்ணாடி திரை உமிழ்ந்து கொண்டிருந்த கறுப்பு, வெள்ளை உருவங்களை பார்த்துக் கொண்டிருந் தார்கள். யாருக்கும் வானொலி ஞாபகமில்லை.
நான் எனது வானொலி பெட்டியை தேடிப் போனேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வைத்த அதே இடத்தில் தூசி, ஒட்டடையுடன் படுத்திருந்தது. உள்ளே பேட்டரி இருப்பதற்கான அடையாளமாய் கனமாய் இருந்தது. குமிழை திருகினேன். டிக்டிக் எனும் சப்தம் மட்டும் கேட்டது. அவசரமாய் உறைகளை கழட்டி னேன்.

பேட்டரி திரவமாக கசிந்து அதன் உட்பாகமெல்லாம் திராவக புற்றுக் களாய் பரவி இருந்தன. யாரும் மதிக்காமல் வீட்டில் இருக்கக் கூடாது என்று எண்ணி கொடுத்த உணவையே விஷமாக்கி உறைந்து போயிருந்தது.

என்னை எழுப்பி குளிக்க வைத்து பள்ளிக்கு அனுப்பி சாப்பாடு ஊட்டி உறக்கத்திற்குத் தாலாட்டுப் பாடிய அந்த வானொலி மௌனித்துக் கிடந்தது. அதற்கு செவி சாய்க்க யாரும் தயாராயில்லை ஓசை அதிகமாகிப் போன இக்கிராமமும் அதற்கு ஒத்துழைப்பதாய் இல்லை. கல்லூரியில் சேர்ந்தபொழுது வாழ்த்துச் சொல்ல வராமல் போன அந்த என் வானொலியை, உங்களுடைய ஊரில எங்காவது கேட்டீர்களா?.. - திருச்சி ஆர். கல்யாண்குமார் (9842412363)

Saturday, July 18, 2009

கொல்லம் ஹாம் சந்திப்பு


ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் உள்ள கொல்லத்தில் ஹாம் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதனை கொல்லம் அமெச்சூர் ரேடியோ கிளப் நடத்தி வருகின்றது. QARL என்ற பெயரில் நடந்து வரும் இந்த மன்றமானது இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள ஒரு சில மன்றங்களில் இதுவும் ஒன்றாக ஹாம் வானொலி உபயோகிப்பாளர்களால் கருதப்படுகிறது.

நாம் பெரும்பாலும் இதுபோன்ற சந்திப்பு என்றால் ஏதேனும் ஒரு மண்டபத்திலோ பள்ளியிலோ அல்லது ஹோட்டல்களிலோ மட்டுமே நடக்கும், ஆனால் இந்த ஆண்டு சந்திப்பினை சற்றே வித்தியாசமாகச் செய்திருந்தனர்.

கொல்லம், கடற்கரையோர ஆறு களால் புகழ்பெற்ற ஒரு நகரம் ஆகும். இங்கே உள்ள அஸ்தமுடி ஏரி படகுச் சவாரிக்கு பெயர் போனது. இந்த ஆண்டின் சந்திப்பினை படகிலேயே வைத்திருந்தனர். ஒவ்வொரு படகும் பிரம்மாண் டமானதாக இருந்தது என்றால் அது மிகையில்லை. நிலத்தில் உள்ள வீட்டினைப் போன்றே அந்தப் படகுகளை அழகாகக் கட்டி யிருந்தனர்.

Hamfair என்றே இந்தச் சந்திப்பினை இவர்கள் அழைத்து வருகின்றனர். காரணம் இந்தச் சந்திப்பில் ஹாம் வானொலி உபயோகிப்பாளர்களுக்குத் தேவை யான பல புதியதும் பழையதுமான பொருட்களை வாங்கலாம் விற்கலாம். மகாபலிபுரம், ஏற்காடு ஹாம் சந்திப்புகளுக்குப் பிறகு நாம் கலந்து கொள்ளும் இந்த சந்திப்பு உண்மையில் வேறுபட்டு இருந்தது.

நமது சர்வதேச வானொலி இதழில் இது பற்றி ஏற்கனவே தகவல் கொடுத்திருந்தபடியால், ஒரு சிலர் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வருவதாகக் கூறினர். ஆனால் மற்ற சந்திப்புகளைப் போன்ற நினைத் தவுடன் கலந்து கொள்ள இயலாது. காரணம், படகில் சந்திப்பு நடைபெறுவதால் முன் கூட்டியே பதிவு செய்யுமாறு கூறியிருந்தனர். திருநெல்வேலி தியாகராஜ நகர் செல்வகுமார் அவர்களும், நானும் நமது இதழின் சார்பாக இதில் கலந்து கொண்டோம்.

நான் சென்னையில் இருந்து 17 ஏப்ரல் 2009 அன்று கொல்லம் புறப்பட்டேன். சனிக்கிழமை முழு வதும் திருவனந்தபுரத்தில் உள்ள வானொலி நிலையம் மற்றும் வானொலி நேயர்களை சந்திக்க எண்ணியிருந்தேன். ஆனால், முன் கூட்டியே திட்டமிடாததால் அனைத் தும் நடக்கவில்லை.

முதலில் திருவனந்தபுரத்தின் மையப்பகுதியில் உள்ள பத்மநாபா கோவிலுக்கு சென்றேன். ஆண்கள் மேலாடை இல்லாமல், வெள்ளை வேஷ்டியுடன் மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றனர். அதன் பின் அருகில் இருந்த அரண்மனை அருங்காட்சியகத்திற்குச் சென்றோம். மதியம் அருகில் உள்ள கோவலத் திற்குச் சென்று வந்தோம்.

மாலை திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம் புறப்பட்டு சென்றோம். இரவு இங்கேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அங்கே சென்றபின்தான் தெரிந்தது பல ஹாம்கள் சென்னையில் இருந்து வந்துள்ளனர் என்பது.


ஞாயிறு காலை 9 மணியளவில் நாங்கள் Backwaters எனப்படும் பின்னோக்கிய நீரோட்டத்திற்கு சென்றோம். அப்போது எங்களுடன் பெங்களூர் அமெச்சூர் கிளப்பின் லயன் அஜய் அவரது மகளுடன் இணைந்து கொண்டார். சரியாக 10.45க்கு புறப்பட்ட படகு 1 மணிக்கு அஸ்தமுடி ஏரிக்கு அருகில் உள்ள ஒரு கரையோர ரிசார்டில் இறக்கி விடப்பட்டோம்.

முதலில் அங்கே ஆண்டு விழா மலர் மற்றும் ஹாம் வானொலியில் நுழைய விரும்புபவர்களுக்கான அடிப்படை பாட புத்தகம் வெளியிடப்பட்டது. இவர்கள் அஞ்சல் வழியில் ஹாம் வானொலித் தேர்வுகளுக்கு பாடம் எடுக்கின்றனர் என்பதையும் இங்கே கூறியே ஆக வேண்டும்.

படகில் நீண்ட கால வானொலி நேயர்கள் பலரைச் சந்திக்க ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக சனில் தீப்பைக் கூறலாம். VU3SIO எனும் அடையாள குறியீட்டை கொண்ட இவர் BC DX NET ன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் ஆவார்.


எனது வானொலி கேட்டலின் தொடக்க காலத்தில் இவர்கள் 40 மீட்டரில் (7085 அலை எண்கள்) ஞாயிற்றுக் கிழமை 7.30 முதல் 9.30 வரை ஏராளமான வானொலித் தொடர்பானத் தகவல்களை வழங்கி வந்தனர். அதன் துணை கொண்டே இன்று உலகின் பல வானொலி களைக் கேட்கும் ஆர்வம் ஏற்பட்டது என்றால் அது மிகையில்லை.

சனில் அவர்கள், அவரது குடும்பத்தாருடன் இதில் கலந்து கொண்டார். நீண்ட நாட்களாகச் சந்திக்க வேண்டும் என எண்ணி யிருந்த ஒருவரை சந்தித்ததால், அவருடன் என்ன பேச வேண்டும் என எண்ணியிருந்தோமோ அவை அனைத்து மறந்து விடும். அந்த அளவிற்கு அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் ஏராளம் இருந்தன.

மதிய உணவு அந்த ரிசார்டிலேயே அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அதன் பின் புறப்படத் தயாரானபோது, படகின் என்ஜினில் சிக்கல், என்றனர். எங்களுக்கோ மாலையில் தொடர்வண்டியைப் பிடித்தாக வேண்டிய கட்டாயம். எனவே, பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்த VU2DX அவர்களின் குழுவினரோடு இணைந்து நாங்களும் பேருந்தில் புறப்படத் தயாரானோம். முதல் முறையாக படகிலேயே வானொலி நேயர்களை சந்தித்தது மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. அடுத்து மீண்டும் இதே போன்றதொரு சந்திப்பானது அடுத்த ஆண்டும் நடக்கவுள்ளது. அனை வரும் தவறாமல் அதில் கலந்து கொண்டு புதிய தகவல்கள் மட்டுமின்றி, புதிய நண்பர்கள் பலரையும் பெறலாம்.

QARL President: Shri. K.G. Nadarajan VU2KGN, Tel: 0474-2742661
Secretary Shri P. Surendran. VU2 SYT, Tel: 0474-2552749
Repeater Frequency:
Receiving (Rx): 145. 350 (MHz), Transmitting(Tx): 144.750 (MHz)
Address: Quilon Amateur Radio League, P.O. Box: 335, Kollam - 691001 Kerala.

Thursday, July 16, 2009

சீனா சென்று வந்தார் செல்வம்


சமீபத்தில் அகில இந்திய சீன வானொலி மன்றத்தின் தலைவர் செல்வம் அவர்கள் சிறப்பு நேயராக தேர்வு செய்யப்பட்டு சீன வானொலியின் சார்பாக இலவசமாக சீனா மற்றும் நமது அண்டை நாடன திபெதிற்கும் சென்று வந்தார். 13 நாள் சுற்றுப் பயணத்தின் புகைப்படங்கள் மற்றும் அவரது அனுபவங்களை படிக்க மற்றும் அவரது குரலிலேயேக் கேட்க இங்கே சொடுக்கவும்

Wednesday, July 15, 2009

புவிகாந்தப் புயல்

சூரியனில் ஏற்படும் பளிச்சிடும் வெடித்துச் சிதறலால் சூரியப் புயல் உண்டாகிறது. பல ஆயிரம் கி.மீ. வேகத்தில் அது பூமியை நோக்கி வந்து நம் பூமியின் காந்த மண்டலத்தினுள் நுழைந்து காந்த மண்டலத்தைக் கலக்கி புவிகாந்தப்புயலை ஏற்படுத்துகிறது. இந்தப் புவிகாந்தப் புயலை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1) முதலில் குறுகியகால நேர்மறை பகுதி:
காந்த மண்டலத்தின் சமதள காந்தக் கோடுகளின் பயனாய் (துருவப் பிரதேசங்களில்) - ""அரோரா போரியாலிஸ்'' என்ற ஒளிமிக்க வானத்தை ஏற்படுத்துகிறது. இது ஏறத்தாழ நம் விளையாட்டு போட்டிகளில் காணும் வண்ணமிகு வான வேடிக்கை போன்று தென்படும்.

2) எதிர்மறை பகுதி காந்த மண்டலத்தைத் தீவிரமாக்கி பல நாட்களுக்கு நிலை நிறுத்தி இருக்கச் செய்கிறது. அயன மண்டலத்தில் எலக்ட்ரான் செறிவூட்டுவதை கணக்கெடுப்பதன் மூலம், அயன மண்டலப் புயலுக்கும் புவிகாந்த மண்டலப்புயலுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அது ஏற்படும் நேரத்தை வைத்து அறியலாம்.

அயனமண்டலப் புயல் விண்ணில் தொலைதூர வானொலி தொடர்புக்கு நாம் பயன்படுத்தும் அதிக உயர அலை எண் அலைகளைப் பெரிதும் பாதிக்கிறது. மேலும் நாம் பயன்படுத்தும் உயர்ந்தபட்ச அலை எண்களை அயன மண்டலப் புயல் பாதிக்கிறது. அயன மண்டலப் புயல் புவியின் காந்தமண்டலப் புயலின் விளைவாக ஏற்படுகிறது. புவியின் காந்த மண்டலம் சூரிய வெடிப்புகளால் ஏற்படும் சூரியப் புயலின் விளைவாகக் கலக்கமடைந்து புயலாக மாறுகிறது. எனவே இவை ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது. அயன மண்டலப்புயலின் மிக முக்கியமான விளைவு F அடுக்கில் எலக்கட்ரான் செறிவு வெகுவாகக் குறைந்து விடுவது ஆகும். எனவே நம்மால் உயர் அலை எண்களில் அதிகமாக வானொலி ஒலிபரப்பு செய்ய இயலாமல் போகிறது.

பகல் நேரங்களில் நம் இந்திய நாட்டைப் பொறுத்தவரை, ஐரோப்பிய நாடுகள் காலை சுமார் 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் 11, 13, 16, 19 மீட்டர்களில் ஒலிபரப்பு செய்கின்றன. இதேபோல் நம் நாட்டுக்குக் கிழக்குப் பகுதியிலுள்ள பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் காலை சுமார் 6.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை உயர் அலை எண்களைப் பயன்படுத்துகின்றன. அயன மண்டலப்புயல் தாக்கும்போது, பகல்நேர ஒலிபரப்புகள் 11 மீட்டர் முதல் 19மீ வரை பாதிக்கப்படுகின்றன. எனவே வானொலி நிலையங்களைச் சரிவரத் தெளிவாகக் கேட்க முடியாது. திடீரென நன்கு தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்து வானொலி, ஒலித்தரம் குறைந்து மறையத் தொடங்கும்.
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்பிரமணி

Sunday, July 12, 2009

பூர்ணம் விஸ்வநாதன்

இவர் பேர் சொன்னால் இந்த தலைமுறையினருக்கு ""மகாநதி'' படம் ஞாபகத்திற்கு வரும். ஒரு தேர்ந்த குணச்சித்திர நடிகராக இன்றைய இளைய தலைமுறையினரால் அறியப்பட்டிருக்கும் பூர்ணம் விஸ்வநாதனுக்கு இன்னும் பிற முகங்களும் உண்டு.
ஆம்! நாடக நடிகர், தேர்ந்த வானொலி அறிவிப்பாளர். 50களில் பூர்ணம் விஸ்வநாதனின் குரல் மிகவும் பிரபலமானது. 50களில் அவர் குரல் மட்டுமல்ல, வானொலியும் மிகவும் பிரபலம்.

அக்காலத்தில் அந்தஸ்தின் அடையாளமாகவும், வீட்டின் அத்தியாவசிய பொருளாகவும் இருந்தது வானொலிப் பெட்டி. அப்போதெல்லாம் ஏராளமான பண்பலைகள் வரிசைகள் கிடையாது. அதனால் செய்திகள் கேட்கவும், பாடல் கேட்கவும், வீட்டுக்கு வீடு வானொலி பெட்டி அருகே குடும்பத்தினரின் அனைவரும் காத்திருப்பார்கள். அதனால் வானொலியில் ஒலிக்கும் குரல் அனைத்து நேயர்களின் இதயங்களோடு இணைந்து பேசியது.

தற்போதுள்ள லேட்டஸ்ட் வசதிகள் அக்காலத்தில் இல்லையென்றாலும், அறிவிப்பாளர்களுக்கு ராஜ மரியாதை கிடைத்தது. அப்படி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி "தென்கிழக்கு ஆசிய நேயர்கள் மத்தியில் முத்திரை பதித்தவர் பூர்ணம் விஸ்வநாதன். இரண்டாகம் உலகப் போர் நடந்தபோது ஆங்கிலேயப் படையினரால் ஏராளமான தமிழர்கள் உலகெங்கும் இடம் மாறியிருந்தார்கள். அந்தச் சூழ்நிலையில் கடல் கடந்து வாழ்ந்த தமிழர்கள் தாய்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளையும், உலகச் செய்திகளையும் தெரிந்து கொள்ள நாடியது வானொலி.
சிற்றலையில் புது தில்லியிலிருந்து ஒலிபரப்பான தென்கிழக்கு ஆசிய சேவை அப்பணியை சிறப்பாகச் செய்தது.

தென்கிழக்கு ஆசிய சேவை மூலம் உலகத் தமிழர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஒலித்த பூர்ணம் விஸ்வநாதன் காற்றோடு கலந்துவிட்ட ஒன்று. அவர் மறைந்தாலும் அவர் பணியை பாராட்டிக் கொண்டிருக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் நினைவில் வைத்திருக்கும். காரணம், இந்தியா 1947ல் சுதந்திரம் அடைந்ததை ""தென்கிழக்கு ஆசிய சேவை'' வானொலி மூலம் உலக தமிழர்களுக்கு அறிவித்த பெருமை பெற்றவர்.
- வண்ணை கே. ராஜா