Thursday, July 05, 2012

ஒலி அலைகளைத் தேடி - 1


(சமீபத்திய எனது டெல்லி பயணத்தின் போது நான் சென்று பார்த்து வந்த வானொலி நிலையங்களை பற்றிய ஒலி அலைகளைத் தேடிய பயணத்தின் தொடர்ச்சி)

விமான நிலையத்தில் என்னைத் தடுத்தக் காவலாளி கையில் தானியங்கி துப்பாக்கி வேறு வைத்து இருந்தார். அவர் எனது கைப்பையைக் சோதனையிட்டு அதில் சோதனைச் செய்ததற்கான முத்திரையை உரிய அலுவலரிடம் இருந்து பெற்று வருமாறு திருப்பி அனுப்பினார். இங்கே தான் எனக்கு மற்றும் ஒரு பிரச்சனை உருவாகியது. காரணம் எனது கைப்பையில் நான் சோனி டிஜிட்டல் ரேடியோவை வைத்திருந்தேன்.

சமீப காலமாக வானொலிப் பெட்டி வடிவில் வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக செய்திகளில் படித்தது, தொண்டையில் எச்சிலை விழுங்க வைத்தது. மேலும் விமான நிலையத்தின் அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு பற்றிய எச்சரிக்கை செய்திகள் ஒட்டப்பட்டு இருந்தன.

அதில், எங்கேனும் எலக்ட்ரானிக் பொருட்கள் கேட்பாரற்று கிடந்தால் உடனே அருகில் உள்ள காவலாளியிடம் கூறுங்கள் என்று இருந்தது. எனது கைப்பையை எக்ஸ் ரே ஸ்கேனிங்கிற்கு கொடுத்தேன். அதனை இயக்கிய அதிகாரி பையைச் சோதனைச் செய்தவுடன், அதில் ஏதோ புதிதாக அகப்பட்டு விட்டதாக நினைத்து தனது மேல் அதிகாரியை அவசரமாக அழைத்தார்.

நானும் ஏதேனும் விமான நிலையத்தில் கொண்டு வரக்கூடாததைக் கொண்டு வந்துவிட்டேனோ எனப் பயந்து விட்டேன். அதனாலேயே முகச்சவரம் செய்யக் கூடிய பொருட்களை முதலிலேயேத் தவிர்த்து இருந்தேன். அதன் பின் தான் தெரிந்தது, அந்தக் காவலாளி எதைப் பார்த்து மிரண்டார் என்று. ஆம் அது வேறொன்றுமல்ல எனது சோனி டிஜிட்டல் வானொலிப் பெட்டி தான்.

விமான நிலையங்களில் இது போன்ற வானொலி பெட்டிகளைக் கொண்டு செல்பவர்கள் அறிதாக இருப்பதால், அவரும் ஏதோ ஒரு புதிய ஜந்துவைப் பார்த்தது போல் பயந்துள்ளார். உயர் அதிகாரி அதனைப் பார்த்து அது என்னவென்றுக் கேட்டார், நான் வானொலிப் பெட்டி என்றவுடன் திருப்தி அடைந்தார். அதன் பின் பையைத் திறந்து பார்க்க அவசியம் இல்லை என்றார்.

இதில் மற்றொன்றையும் கூறியாக வேண்டும், போர்டிங் பாஸ் கொடுக்கும் இடத்திலேயே அவர்கள் எனது கைப்பையினைச் சோதனை செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை. அப்படியிருக்க, எப்படி முதல் சோதனையை நீங்கள் தாண்டி வந்தீர்கள் எனக் கேட்டனர்.

’ஐயா, இது வானொலிப் பெட்டி மட்டுமே’ என அதனை இயக்கி காட்டியப் பின் தான் என்னை உள்ளே செல்ல அனுமதி அளித்தனர். அதன் பின்னர் அனுமதியளிக்கப்பட்ட நுழைவாயிலுக்கு சென்று விமானத்திற்கு செல்லவேண்டியப் பேருந்தில் ஏறினேன்.

பேருந்து எங்களை விமானம் நின்று இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றது. என்னைப் போன்றே புதிதாக வந்தவர்கள் குடும்பத்துடன் விமானத்திற்கு முன் நின்று புகைப்படம் எடுக்க முற்பட்டனர், ஆனால் ஸ்பைஸ் ஜெட் பணியாளர்கள் அதனை அனுமதிக்கவில்லை.

விமான நிலையத்தில் இருந்து விமானம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு இடையே இயக்கப்பட்ட பேருந்தில் சூரியன் எப்.எம். ஒலித்துக் கொண்டு இருந்தது. ஆனால் அதனை யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன் பாதுகாப்பு வழிமுறைகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் கூறினர். (தொடரும்...)

1 comment:

J.P Josephine Baba said...

சுவாரசியமான நல்லதொரு அனுபவ பகிர்ப்பு.