(சமீபத்திய எனது டெல்லி பயணத்தின் போது நான் சென்று பார்த்து வந்த வானொலி நிலையங்களை பற்றிய ஒலி அலைகளைத் தேடிய பயணத்தின் தொடர்ச்சி)
நான் அமர்ந்தது ஜன்னல் அருகில். டிக்கெட் புக் செய்யும் போதே ஜன்னல் அருகில் ஒரு சீட் காலியாக இருந்ததால் அதனை புக் செய்தேன். விமானத்தில் ஏறியபின் தான் தெரிந்தது, நான் அமர்ந்த அந்த சீட் மட்டும் யாராலும் புக் செய்யாமல் இருந்ததற்கான காரணம். ஆம், விமானத்தின் இறக்கை அந்த இடத்தில் தான் இருந்தது. இதனால் விமானம் பறக்கும் பொழுது, கீழே உள்ள நிலப் பகுதியைக் காண முடியாது. அதே சமயத்தில் அந்த இடம் ஒரு விதத்தில் ஆபத்தானதும் கூட.
ஏனெனில் விமானத்தில் இறக்கைகளின் கீழே தான் விமானத்தின் என்ஜின் இருக்கும். மேலும், விமானத்திற்கான எரிபொருளும் அந்த இறக்கைகளில் தான் நிரப்பப்படும். விமான விபத்துகள் நடக்கும் பொழுது பெரிதும் பாதிக்கப்படுவது இறக்கைகளுக்கு அருகில் உட்கார்ந்து இருப்பவர்களே.
விமானம் 30,000 அடிகளுக்கு மேல் பறக்கும் பொழுது, நாம் மேகக் கூட்டங்களுக்கு மேல் பறப்பதால் கீழே உள்ளவற்றைப் பார்க்க முடிவதில்லை. ஆனால் அதே சமயம் விமானம் பறக்க தொடங்கும் பொழுதும் இறங்கும் பொழுது மட்டுமே உதறல் எடுக்கிறது.
அதுவும் இறங்கும் பொழுது, விமானத்தின் வேகத்தினை கட்டுப்படுத்திப் படிப்படியாக இறங்குவது வயிற்றினுள் ஒரு குமட்டலை ஏற்படுத்துகிறது. வாந்தி எடுப்பவர்களுக்கு என்றில்லாமல் அனைவருக்கும் வாந்தியை சேமிப்பதற்காக ஒரு பேப்பர் பையைக் சீட்டில் அமரும்போதே கொடுத்து விடுகின்றனர்.
புது தில்லி விமான நிலையத்தில் இறங்கியப் பின்தான் உணர்ந்தேன். அங்கு கடும் வெப்பம் இருப்பதை. விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்து எனது கைப்பேசியை இயக்கிய போது, தான் தெரிந்தது, அது ரோமிங்கில் இயங்காது என்று.
இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே வந்து பொது தொலைபேசி நிலையத்தினைத் தேடினேன். மிகுந்த தேடுதலுக்கு பின்பே என்னை அழைக்க வந்தவர்களைக் கண்டுபிடித்தேன். மதிய உணவுக்கு புது தில்லி கானாஃட் சதுக்கத்தில் உள்ள ஹோட்டல் சரவண பவனுக்கு செல்ல நினைத்தோம். ஆனால் கூட்டம் காரணமாக அங்கு உணவு உண்ண முடியவில்லை.
அதனால் புது தில்லிக்கு வெளியே வந்து ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ரோஹ்தக் நோக்கி பயணமானோம். இந்த ஊர் புது தில்லியில் இருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ளது. ஹரியானா மாநிலத்தின் தலைநகரும் ரோஹ்தக் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இரவு 8 மணிக்கு நான் தங்கக்கூடிய விடுதிக்கு சென்ற பின் எனது சோனி வானொலிப் பெட்டியின் துணை கொண்டு அங்கு எடுக்கக் கூடிய வானொலி நிலையங்களைத் தேடினேன். மத்திய அலைவரிசையில் ஒரு சில பாகிஸ்தான் வானொலிகள் கிடைத்தன. சிற்றலை மற்றும் பண்பலையில் கூட பல வானொலிகள் கிடைத்தன. ஆனால் அவை எந்த வானொலிகள் என்று உறுதிப்படுத்த முடியவில்லை. அப்பொழுது தான் உணர்ந்தேன், இது போன்ற இடங்களுக்குச் செல்லும் பொழுது உலக வானொலித் தொலைக்காட்சி புத்தகத்தினையும் கையோடு எடுத்துச்செல்ல வேண்டும் என்று.
அடுத்த இரண்டு நாட்களும் எனது பணி நிமித்தமாக ரோஹ்தக்கில் கழிந்தது. மாலை வேலையில் ரோஹ்தக் அகில இந்திய வானொலிக்குப் பயணமானேன். இந்த வானொலி மத்திய அலை மற்றும் பண்பலையில் தனது ஒலிபரப்பினை செய்து வருகிறது. ஹரியானா மாநிலத்தில் இருந்து ஒலிபரப்பாகி வரும் ஒரே அரசு வானொலி இது மட்டுமே.
இந்த வானொலியில் எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லாததால், பெரிதாக ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை. காரணம் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் நான் அங்கு சந்தித்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. ஒரு சில தனியார் பண்பலை வானொலிகளும் ரோஹ்தக்கில் இருந்தன.
ரோஹ்தக்கை அடுத்து எனது பயணம் ஜின்ந் மற்றும் ஹைத்தல் நோக்கியதாக அமைந்தது. ஆனால் அந்த ஊர்களில் எந்த ஒரு வானொலிகளும் இல்லை. அதன் பின் நான் சென்றது குருசேத்திரம். இந்த ஊரைப் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. குருசேத்திரத்திற்கு என்னை அழைத்துச்சென்ற கார் ஓட்டுனரைப் பார்த்து அதிர்ச்சி. காரணம் அவரது இடுப்பினில் ஒரு கைத்துப்பாக்கியைத் தோட்டாக்கள் நிரப்பி வைத்திருந்தது தான். (தொடரும்…)
No comments:
Post a Comment