Wednesday, January 09, 2013

அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய நோர்வே புலிகளுக்கான வானொலி கருவிகளை இறக்குமதி செய்தது – விக்கிலீக்ஸ்

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய நோர்வே அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக வானொலி கருவிகளை இறக்குமதி செய்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
 
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
2003ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் திகதி இந்தக் குறிப்ப வெளியிடப்பட்டுள்ளது.
 
இலங்கை அரசாங்க சமாதான செயலகத்தின் கோரிக்கைக்கு அமையவே நோர்வே, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வானொலி தொடர்பாடல் சாதனக் கருவிகளை இறக்குமதி செய்துள்ளது.
 
அப்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஆஸ்லி வில்ஸ் மற்றும் பிரதித் தூதுவர் லுயிஸ் அம்லீம் ஆகியோர் இந்தக் குறிப்பினை அனுப்பி வைத்துள்ளனர்.
 
இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஜோன் வெஸ்ட் பேர்க், தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக வானொலி தொடர்பு சாதனக் கருவிகளை தருவித்து கொடுத்ததாக சிங்கள கடும்போக்குக் கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. எனவே, நோர்வேத் தூதுவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டுமென கோரியிருந்தன.
 
எனினும், இலங்கை சமாதானச் செயலகத்தின் கோரிக்கைக்கு அமைய ராஜதந்திர அடிப்படையில் இந்தப் தொடர்பாடல் சாதனங்களை நோர்வே புலிகளுக்காக தருவித்து கொடுத்ததாக அமெரிக்கத் தூதரகம், அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
 
அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் நோர்வே அரசாங்கத்திற்கும் இடையிலான கடித தொடர்புகளை இதற்கான ஆதாரமாக அமெரிக்கத் தூதரகம் காட்டியுள்ளது.
 
நன்றி : விக்கிலீக்ஸ், கொலம்போ ரெலிகிராப் / 28 டிசம்பர் 2012
http://www.yarl.com/forum3/index.php?showtopic=113804 

No comments: