சான்பிரான்சிஸ்கோ : கலிஃபோர்னியா மாநிலத்தின் சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியின் புகழ் பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகம் இப்பகுதியில் வாழும் பல்வேறு தரப்பு, பன்னாட்டு மக்களின் நலனுக்காக ஒரு சமூக வானொலியை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மூன்று மணி வானொலி நேரத்தையும் ஒவ்வொரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் எடுத்துக் கொண்டு பல்வேறு வகையான வானொலி நிகழ்ச்சிகளை பல உலக மொழிகளிலும் கே.இசட்.எஸ்.யூ 90.1 என்னும் பண்பலை அலை வரிசையில் நடத்தி வருகிறார்கள். இது ஒரு சமூக பயன்பாட்டு இலவச வானொலிச் சேவையாகும். இந்த வானொலிச் சேவையின் ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் காலை 6 மணி முதல் 9 மணி வரையான பகுதியை எடுத்து இட்ஸ் டிஃப் என்னும் இந்திய மொழிகளுக்கான நிகழ்ச்சியில் பெரும்பாலும் தமிழ் நிகழ்ச்சிகளை கடந்த 8 ஆண்டுகளாக தயாரித்து வழங்கி வருபவர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன். இந்த அமைப்பின் சார்பாக இதன் நிறுவனரும் வானொலி நிகழ்ச்சி நடத்துனருமான ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் இப்பகுதி வாழ் இந்தியர்களின் கலாச்சார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் ஆகியவற்றுக்காக கடந்த எட்டு ஆண்டுகளாக 400 வானொலி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியை இப்பகுதி வாழ் மக்களும் உலகெங்கிலும் இருந்து நேயர்களும் www.itsdiff.com தளம் மூலமாகவும் கேட்டு வருகிறார்கள். இட்ஸ் டிஃப் வானொலி நிகழ்ச்சி இப்பகுதியின் பல்வேறு சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்து ஏராளமான சமூக சேவைகளிலும் கூட தன்னை ஈடுபடுத்தி வருகிறது.
இந்த ரேடியோ நேர்காணலில் தமிழ் நாட்டின் அனைத்துப் பிரபலமான கர்நாடக இசைக் கலைஞர்களும் பங்கு கொண்டிருக்கிறார்கள். பி.பி.ஸ்ரீநிவாஸ், எஸ் பி பி போன்ற திரையிசைப் பாடகர்களும் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், பி ஏ கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி போன்ற இலக்கியவாதிகளும் கிரேசி மோகன் போன்ற நடிகர்களும் இன்னும் ஏராளமான பிரமுகர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகள் குறித்தான விமர்சனங்களும் கலந்துரையாடல்களும் இச்சிறப்பு நிகழ்ச்சியில் இடம் பெற்று வருகின்றன. குழந்தை வளர்ப்பு, உணவு, கல்வி, சுகாதாரம், தியானம், யோகா, ஆளுமை வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், சுய தொழில், வேலை வாய்ப்புகள், திட்டமிடுதல், பொருளாதாரம், நிதி முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்பு, இலக்கியம், புத்தக வாசிப்பு, சினிமா, சங்கீதம் போன்ற ஏராளமான பயன் தரும் நிகழ்ச்சிகளும் இச்சிறப்பு நிகழ்ச்சியில் அளிக்கப்பட்டு வருகின்றன. இட்ஸ் டிஃப் வானொலி கடந்த எட்டு வருடங்களாக தொடர்ந்து வெற்றிகரமாக நடந்து வருவதைக் கொண்டாடும் விதமாக எட்டு வருடங்களாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உதவிய நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுடன் இணைந்து ஒரு ஆண்டு விழா நிகழ்ச்சியை மே 5ம் தேதி 2 மணி முதல் 6 மணி வரை ஃப்ரீமாண்ட் மிஷன் சான் ஓசே பள்ளி அரங்கத்தில் நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் கடந்த எட்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தயாரித்தளித்த தயாரிப்பாளர்களும் வானொலியின் நேயர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் பொழுது ஏராளமான கலை நிகழ்ச்சிகளும், கலந்துரையாடல்களும், உரைகளும் நிகழ்த்தப் பட்டன.
- தினமலர் வாசகர் ராஜன் சடகோபன்
நன்றி: http://www.dinamalar.com மே 28,2013
No comments:
Post a Comment