ஆபத்துகால மேலான்மையில் ஹாம் வானொலி
ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு வகையிலான இயற்கைச் சீற்றங்கள் நமக்கு ஒரு பாடத்தினை கற்றுக்கொடுக்கிறது. சுனாமி, என்ற வார்த்தையே நம்மில் பலருக்கு 2001ற்கு பின் தான் அறிமுகம் ஆயிற்று. அவ்வப்போது கடலோர மாவட்டங்களில் ஏற்படும் புயல் மற்றும் கடல் சீர்றங்களின் போது மட்டுமே நாம் ஆபத்துகால மேலான்மை குறித்து சிந்திக்கிறோம். அதுவரை நாம் இது பற்றி தீவிரமாக சிந்திப்பதே இல்லை.
அந்த வரிசையில் இப்பொழுது இணைந்திருப்பது இமாலய சுனாமி. பருவ மழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது தான் காரணம் என சொல்லப்பட்டாலும் அந்தப் பகுதிகளில் நேரடியாக சென்று பார்த்தபோது நமக்கே ஒரு வித பயம் தொற்றிக்கொள்கிறது. மிகப்பெரிய காட்டாற்றின் அருகிலேயே பெரிய பெரிய கட்டடங்களைக் கட்டி வைத்துள்ளனர். கங்கையின் வேகத்தினை நீங்கள் ஒரு முறை ஹரித்வார் சென்றால் பார்க்கலாம். அப்படியான அசுர வேகத்தினை பெரு வெள்ளம் வரும்பொழுது தடுப்பது என்பது மனித சக்திக்கு அடங்காத ஒன்று.
எப்படி அங்குள்ள அரசு இவற்றை அனுமதித்தது என்று நாம் கேட்க வேண்டியது இல்லை. தமிழ்நாட்டில் எப்படி அனுமதித்தார்களோ அது போன்றே அங்கும் அனுமதி வழங்கியிருப்பர். தமிழ்நாட்டிலும் இது போன்ற ஆக்கிரமிப்புகளை அரசே முன் நின்று நடத்திவந்துள்ளது வரலாறு. அதற்கு உதாரணமாக கோயம்பேடு பேருந்து நிலையம் உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களின் பலப்பேருந்து நிலையங்களைக் கூறலாம். மிகப்பெரிய குளங்களையெல்லாம் இது போன்று ஆக்கிரமிக்கும் பட்சத்தில் அங்கு தேக்கிவைக்கப்படும் நீர் வேறு எங்கு செல்லும் என்ற கேள்வி சாதரண மனிதனுக்கும் கூட எழும். இயற்கை சீரும்பொழுது அய்யோ...அம்மா... எனக் கூக்குரல் இடுவதில் பயன் இல்லை.
இயற்கை சீற்றம் ஒரு புரம், அக்கிரமிப்புகள் மறுபுரம், இடையில் சிக்கித் தவிப்பது மக்கள். சதுப்புநிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டாலே மிகுந்த சிரமப்படவேண்டியுள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் என்பது கரடு முரடானது. அதனை கணிப்பது இயலாத காரியம். அப்படிப்பட்ட பகுதிகளில் ஏற்படும் வெள்ளத்தின் போது மீட்பு நடவடிக்கை என்பது பொது மக்களால் இயலாத காரியம்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலில் தட்டுப்பாடு உணவுக்கு ஏற்படும். அதன் பின் தொலைத்தொடர்பு சாதனங்கள் செயலற்றுப் போகும். இப்படியான சமயங்களில் மீட்புப் பணிகளே ஸ்தம்பித்து போகும். இதனால் அந்தப் பகுதிகள் நாட்டின் வேறு பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும். இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாவார்கள்.
நாம் என்ன தான் தொழில்நுட்பங்களில் முன்னேறி இருந்தாலும் அவை அனைத்தும் ஒன்றைச் சார்ந்தே இருக்கின்றன. உதாரணமாக கம்பியூட்டர் இணைய வசதி இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது. கைப்பேசிக்கு சிக்னல் தேவை. வெள்ள பாதிப்பு ஏற்படும் போது டவர்களும் அடித்துசெல்லப்படுவது இயற்கையே. ஆக, கைப்பேசிகளும் இயங்காது. தொலைப்பேசி நிலையங்களுக்கும் இதே கதிதான். தொலைக்காட்சிகளையும் மின்சாரம் இன்றி பார்க்கமுடியாது. வானொலியை பேட்டரி கொண்டு கேட்கலாம். ஆனால் அதுவும் எவ்வளவு காலம் தாங்கும்? ஆக அனைத்து தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் செயலற்று போகும் போதெல்லாம் ஆபத்துக்கு கைக்கொடுப்பவனாக வந்து சேர்வது அமெச்சூர் வானொலி எனப்படுகின்ற ஹாம் வானொலி தான்.
அமெச்சூர் வானொலி மட்டும் எப்படி இந்த சமயத்தில் செயல்படும்? என்ற சந்தேகம் அனைவர்கும் எழுவதுதான். இதற்கும் மின்சாரம் தேவைதானே? பொதுவாக இது போன்ற வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் நிச்சயமாக மின்சாரம் இருக்காது. ஆனால் இந்த அமெச்சூர் வானொலிகளுக்கு குறைந்த அளவு மின்சாரம் இருந்தால் போதுமானது. மேலும் இதனைக் கொண்டு நாட்டின் மற்ற பகுதிகளை எளிதாகத் தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக மின்சாரமே கிடைக்காவிட்டாலும் இந்த ஹாம் வானொலியை சூரிய சக்தி கொண்டும் இயக்க முடியும். அந்தமான் தீவுகளில் சுனாமி வந்தபோது ஹாம் வானொலி உபயோகிப்பாளர்களின் பணி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மின்சாரமே இல்லாத போது அங்கு அவர்கள் சூரிய சக்தியினைப் பயன்படுத்தி பல்வேறு உயிர்களை காப்பாற்றினார்கள்.
ஹாம் வானொலியானது சிற்றலைவரிசை மற்றும் மிக உயர் அதிர்வெண்ணில் ஒலிபரப்பப்படுவதால் அதிக தொலைவிற்கு செல்கிறது. இதனால் எளிதாக உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள முடிகிறது. ரிப்பீட்டர்களின் துணைகொண்டு மிக உயர் அதிர்வெண்ணில் இந்தியா முழுவதும் ஒலிபரப்ப முடியும். ஆகவே ஹாம் வானொலியானது எந்த ஒரு சூழ்நிலையிலும் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு உன்னத சாதனமாகும்.
ஹாம் வானொலி பயன்பாட்டாளர்கள் உத்தரகாண்டில் ஆற்றிய சேவைப் பற்றிய செய்தி பல்வேறு வடநாட்டு ஊடகங்களில் நீங்கள் படித்து இருக்கலாம். பொதுவாக ஹாம் வானொலியை அனைவரும் பயன்படுத்த முடியாது. இதற்கு இந்தியாவில் தடை உள்ளது. மாறாக இதற்கென மத்திய அரசு வைக்கும் தேர்வினை எழுதுபவர்களுக்கு முறையான உரிமத்தினை வழங்குகிறார்கள். இந்தத் தேர்வினை எழுத விரும்புபவர்களுக்கு முக்கிய ஊர்களில் ஹாம் கிளப்புகள் உள்ளன.
இந்தியாவில் புகழ்பெற்ற கிளப்பானது ஹைத்திராபாத்தில் உள்ளது. 'நேசனல் இன்ஸ்டிடுயூட் ஆப் அமெச்சூர் ரேடியோ' என்ற அந்த நிறுவனமானது இந்தியா முழுவதும் ஹாம் தேர்வு எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு பாடத்திட்டத்தினை வழங்கி தேர்விற்கு தயார்செய்து வருகிறது. இப்பொழுது உத்ரகாண்டில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் இந்த அமைப்பே தேவையான உதவிகளை செய்தும் வருகிறது. எங்கெல்லாம் இதுபோன்ற தொலைத்தொடர்பு சேவைகள் இல்லாமல் இருக்கிறதோ அங்கெல்லாம் இவர்கள் ஆஜர்.
ஹாம் வானொலியானது இதுபோன்ற ஆபத்துகாலங்களில் செய்த சேவை ஏராளம். இது போன்ற சேவைகளில் ஏன் பொது மக்களாகிய நாமும் பங்கேற்கக் கூடாது? உலகின் குறைந்த மக்கள் தொகைக் கொண்ட நாடுகளில் 80 சதவீதம் பேர் ஹாம் வானொலி உரிமம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக உலக அளவில் ஜப்பானில் தான் ஹாம் வானொலி உரிமம் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவின் மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது ஒரு சதவீத மக்கள் கூட ஹாம் உரிமம் பெற்றவர்களாக இல்லை என்பதே நிதர்சன உண்மை.
இந்தியாவில் இதுவரை 20,000 பேர் மட்டுமே ஹாம் வானொலி உரிமம் பெற்றவர்களாக உள்ளனர். முதல் ஹாம் வானொலி உரிமம் 1921இல் வழங்கப்பட்டது. 1930 வரை இந்தியாவில் 30 ஹாம் உரிமங்களே வழங்கப்பட்டு இருந்தது. இந்திய சுதந்திரத்தில் ஹாம் வானொலி வைத்திருப்போரின் பங்கும் மிக முக்கியமானதாக இருந்தது.
இவர்கள் மறைமுகமாக வானொலி ஒலிபரப்புகளில் சுதந்திர வேட்கையை மக்களுக்கு ஊட்டினர். நமது முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும் இன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவியான சோனியா காந்தியும் ஹாம் வானொலி உரிமம் பெற்றவர்களே. 1984 வரை ஹாம் வானொலிப் பெட்டிகளை வெளிநாடுகளில் இருந்து தருவிப்பதில் சிக்கல் இருந்தது. காரணம், அந்த வானொலிப் பெட்டியின் விலையை விட சுங்க வரி அதிகமாக கட்டவேண்டி இருந்தது.
மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் வயர்லெஸ் திட்டமிடல் மற்றும் ஒருங்கினைப்பு பிரிவின் கீழ் இந்தியாவில் உள்ளவர்களுக்கு ஹாம் வானொலி உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பே அதற்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும் இந்திய வான் வெளியில் அலைவரிசைகளை நெறிப்படுத்தி பயன்படுத்துவதற்கும் உரிமத்தினை வழங்கிவருகிறார்கள்.
ஹாம் வானொலி உரிமம் யார் எல்லாம் பெறலாம்? 12 வயது நிரம்பிய அனைவரும் தேர்வினை எழுதலாம். ஹாம் தேர்வினை எழுதி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தனித்துவமான அடையாளக் குறியீடு வழங்கப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Call Sign என்று கூறுகிறார்கள். ஹாம் வானொலிக்கான தகுதித் தேர்வில் அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல் கோட்பாடுகள் மட்டுமல்லாமல் மோர்ஸ் குறியீடுகள் பற்றியும் அறிந்திருத்தல் அவசியமாகிறது. இரண்டு வைகையான தேர்வுகள் நடத்தப்படுகிறது. முதல் வகைத் தேர்வில் தேர்ச்சி பெருபவர்கள் அனைத்து அலைவரிசைகளையும் பயன்படுத்தலாம். இரண்டாவது வகைத் தேர்வில் தேர்ச்சி பெருபவர்கள் குறிப்பிட்ட சக்தியில் குறிப்பிட்ட அலைவரிசைகளில் மட்டுமே ஒலிபரப்ப அனுமதிக்கப்படுவர்.
இந்தியாவின் சார்பாக சர்வதேச அளவில் நடக்கும் கூட்டங்களுக்கும், இந்தியாவில் ஹாம் வானொலியின் பங்கினை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் ஓர் அமைப்பாக இந்திய அமெச்சூர் வானொலி சொசைட்டி உள்ளது. இன்று உத்ரகாண்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் அங்கு தொலைத்தொடர்பு சாதனங்கள் முற்றிலுமாக செயல் இழந்துள்ளது. அதனை இந்த ஹாம் வானொலியே ஈடு செய்து வருகிறது. ஹாம் வானொலியில் இணைந்து நாமும் நாட்டிற்குச் சேவையாற்றலாமே.
- தங்க. ஜெய்சக்திவேல்
நன்றி: தினமணி First Published : 08 July 2013 03:37 AM IST
No comments:
Post a Comment