இலங்கையின் வவுனியா பிரதேசத்திற்கான பிபிசி தமிழோசை செய்தியாளர், பொன்னையா மாணிக்கவாசகம், இன்று திங்கட்கிழமை, பயங்கரவாதப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் விசாரணைக்காக அழைக்கப்பட்டதாக பிபிசி தமிழ் இணையம் தெரிவிக்கிறது.
.
பிபிசி தமிழோசைக்காக கடந்த சுமார் 15 ஆண்டுகளாக வட இலங்கையிலிருந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் மாணிக்கவாசகத்துக்கு, இந்த அழைப்பாணைக்கான காரணங்கள் குறித்து முன்னதாக அறிவிக்கப்படவில்லை.விசாரணையின் போது அவரது வழக்குரைஞருடன் இருக்கவும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
விசாரணையின்போது, மாணிக்கவாசகம் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு விசாரணைக்கைதிகளிடமிருந்து கடந்த சில மாதங்களில் வந்த சில கைத்தொலைபேசி அழைப்புகள், மற்றும் அவர் திரும்ப அவர்களுக்கு விடுத்த அழைப்புகள் பற்றி விசாரிக்கப்பட்டார்.
மகசின் சிறைச்சாலை நீண்ட காலமாகவே அங்கு விசாரணையின்றி மற்றும் நீதி வழிமுறைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ் சிறைக்கைதிகள் விஷயத்தில் செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. இந்தக் கைதிகள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகொண்டதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் மீது முறையான நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்படவேண்டும் அல்லது அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன.
ஒரு செய்தியாளர் என்ற வகையில் பல ஆண்டுகள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைக்கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து இது போன்ற தொலைபேசி அழைப்புகள் வருவது சகஜம் என்று மாணிக்கவாசகம் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அவர்கள் பொதுவாக தங்களது பிரச்சினைகளை விவாதிப்பதுடன், தாங்கள் விரைவாக விடுதலை ஆக ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்றும் கேட்பார்கள் என்றும் அவர் கூறினார்.
பல தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டு, எடுக்கப்படுவதற்கு முன்னர் துண்டிக்கப்படும் போது, அவ்வாறான அழைப்புகளை (missed calls) , தனது தொழில் ரீதியான கடமைகளின் ஒரு பகுதியாக, தான் திரும்ப அழைத்ததாகவும் அவர் கூறினார்.
பிபிசியின் செய்தியாளராக இலங்கையின் வட பகுதியில் நீண்டகாலம் இருப்பதால், தனது தொலைபேசி எண்கள் பலருக்குத் தெரிந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
மாணிக்கவாசகத்துக்கு எதிராக ஏதேனும் வழக்கு பதியப்படுகிறதா என்பது குறித்தோ அல்லது அவர் மீண்டும் விசாரணைக்காக அதிகாரிகளை சந்திக்கவேண்டியிருக்குமா என்பது குறித்தோ எந்தத் தகவலும் அவருக்குத் தரப்படவில்லை.
(நன்றி:பிபிசி தமிழ் Via http://riskyshareef.blogspot.in/)
No comments:
Post a Comment