வானொலியின் வரலாறு, வானொலி வளர்த்த இயற்றமிழ், வானொலி வளர்த்த இசைத்தமிழ், வானொலி வளர்த்த நாடகத் தமிழ், வானொலி வளர்த்த அறிவியல் தமிழ் என விரிந்து செல்கிறது இந்நூலின் ஆய்வுப் பரப்பு.
தில்லி, மும்பை, கொல்கத்தா, லக்னோ, சென்னை, திருச்சி ஆகிய ஆறு வானொலி நிலையங்களே நாடு சுதந்திரமடைந்த செய்தியை ஒலிபரப்பின என்பது போன்ற சுவையான தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
வானொலியில் ஒலிபரப்பான உரைகள், கல்வி ஒலிபரப்பு, சிறுகதைகள், வானொலிக் கவியரங்கங்கள், வாசிக்கப்பட்ட கவிதைகள், நேர்முகங்கள் ஆகியவை இயற்றமிழ் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவின என்பதை இந்நூல் விளக்குகிறது.
கர்நாடக - ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சிகள், மெல்லிசை நிகழ்ச்சிகள், வாத்திய விருந்தா எனும் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற இசையை வானொலி பயன்படுத்திக் கொண்டவிதம் ஆகியவற்றை "வானொலி வளர்த்த இசைத் தமிழ்' கட்டுரை விளக்குகிறது.
அகில பாரத நாடகங்கள், சரித்திர நாடகங்கள், புராண இதிகாச நாடகங்கள் உட்பட வானொலியில் ஒலிபரப்பான நாடக வகைகளைப் பற்றியும் தெரிந்து கொள்கிறோம்.
விவசாயம், மருத்துவம் பற்றி வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு உதவின என்கிறார் நூலாசிரியர்.
வானொலி நிகழ்ச்சிகள் பற்றிய நூலாக இருந்தாலும், இதழியல் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒவ்வொரு நிகழ்ச்சிகளின் தனித்தன்மை, தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வானொலி வளர்த்த தமிழ் - இளசை சுந்தரம்; பக்.260; ரூ.150;
மீனாட்சி புத்தக நிலையம், மதுரை
0452- 2560517.
Source: http://www.dinamani.com
'காசிநகர்ப் புலவன் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்குவோம்' என, மகாகவி பாரதியார் கண்ட கனவை நனவாக்கிய கருவி வானொலி. அந்த வானொலி பற்றிய ஆய்வு நூலை, பாரதி பிறந்த எட்டையபுரத்து மண்ணின் மைந்தர், பாரதி வேடமிட்டு உலக மேடைகளில் உலா வரும் பேச்சாளர், எழுத்தாளர் இளசை சுந்தரம் எழுதியிருப்பது பொருத்தமானது.
தகவல் தொடர்பியல் மாணவர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும். வானொலியின் வரலாறு, வானொலி வளர்த்த இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ் என, தனித்தனி அத்தியாயமாக எழுதப்பட்டுள்ளது. தொலைக்காட்சியின் வருகைக்கு பின், வானொலி வாழுமா என்ற கேள்விக்கு இளசையின் பதில் சிந்திக்க தூண்டுவது. இந்த புத்தகம் ஒரு வானொலி ஆவணம்.
-ஜிவிஆர்
Source: http://books.dinamalar.com
No comments:
Post a Comment