Wednesday, December 04, 2013

நெல்லை வானொலி நிலையப் பொன் விழா

திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பொன்விழா நிறைவு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. விழாவில் நிகழ்த்தப்பட்ட கிராமிய கலைஞரின் காவடியாட்ட நிகழ்ச்சி நேயர்களை பெரிதும் கவர்ந்தது.
திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலையம் 1963-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி திருச்சி வானொலி நிலையத்தின் துணை வானொலி நிலையமாக நிகழ்ச்சி ஒலிபரப்பைத் தொடங்கியது. பின்னர், 1977ஆம் வருடம் ஜனவரி 12-ம் தேதிமுதல் தனது முழுநேர ஒலிபரப்பு சேவையைத் தொடங்கியது.
50 ஆண்டு நிறைவு பெறுவதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை சங்கீத சபாவில்  பொன் விழா நிறைவு நிகழ்ச்சி பிரசார் பாரதி வாரிய உறுப்பினர் பிரிகேடியர் வி.ஏ.எம்.  ஹுசேன் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய வானொலி நிலைய  தென்மண்டல தலைமை இயக்குநர் க.பொ. ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பி. சுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினார்.
ஓய்வுபெற்ற திருநெல்வேலி வானொலி நிலைய இயக்குநர் பாலக்காடு எஸ். கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் வி. அப்பாக்குட்டி, முதல்  அறிவிப்பாளர் வி. நல்லதம்பி ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சித் தொகுப்பாளர் க. தெட்சிணாமூர்த்தி, தூர்தர்சன் தொழில்நுட்ப உதவி இயக்குநர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான நேயர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி தொடக்கமாக கிராமிய கலைஞர் கே.பி. முத்துலட்சுமி குழுவினரின்  வில்லுப்பாட்டு நிகழ்ச்சி, இசக்கியம்மாள் குழுவினரின் கரகாட்டம், காவடியாட்டம் நடைபெற்றது. காவடியாட்டம் நேயர்களைப் பெரிதும் கவர்ந்தது.
முடிவில் உமா, ராதிகா குழுவினரின் பாட்டு, உஷாராஜகோபாலன் வயலின், ஆர். ரமேஷ் மிருதங்கம், ஆர். ராமன் முகர்சங்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியை வானொலி அறிவிப்பாளர்கள் கரைசுற்றுபுதூர் குருசாமிகவிபாண்டியன், சந்திரபுஷ்பம், உமாகனகராஜ் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
 
நன்றி: http://dinamani.com

No comments: