Wednesday, October 01, 2014

சில ஆண்டுகளில் தமிழோசை இடை நிறுத்தப்படும் அபாயம்!

பிபிசி தமிழழோசை லண்டனில் இருந்து டெல்லிக்குச் செல்கின்றது!
சில ஆண்டுகளில் தமிழோசை இடை நிறுத்தப்படும் அபாயம்!

75 ஆண்டுகள் தமிழ் கூறும் நல்லுலக மக்கள் மத்தியில் சுயாதீன ஊடகமாக இயங்கிய பிபிசி தமிழோசை இன்னும் சில ஆண்டுகளில் சேவையை இடை நிறுத்திவிடும் ஆபாயத்திற்குள் தள்ளப்பட்டு உள்ளது. இதன் முதற் கட்டமாக பிபிசி தமிழோசை கலையகம் லண்டனில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட உள்ளது. 1941 மே 3இல் லண்டன் புஸ் ஹவுஸில் ஆரம்பிக்கப்பட்ட பிபிசி தமிழோசை அடுத்த ஆண்டு மே மாதத்தில் தனது 75வது சேவை நிறைவுக்கு முன்னதாக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுவிடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

கடந்த காலங்களில் பொருளாதார காரணங்களுக்காக பல பிராந்திய மொழிச் சேவைகளை இடைநிறுத்திய பிபிசி தற்போது அதே பொருளாதார காரணங்களுக்காக தமிழோசையை டெல்லிக்கு நகர்த்த தீர்மானித்து உள்ளது. "அடுத்த சில ஆண்டுகளில் தமிழோசை இடை நிறுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்கிறார் Save Our BBC Thamiloosai என்ற போராட்ட குழுவின் பிரமுகர் நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசன். "எமது தமிழோசையை லண்டனில் இருந்து வெளியேற அனுமதித்தால் தமிழ் மக்கள் தங்களுடைய தொப்பிள்கொடி உறவுகள் பற்றிய சுயாதீனமான செய்திச் சேவையை இழந்துவிடுவார்கள்" எனத் தெரிவித்த அவர், பிபிசி யின் இந்த முடிவுக்கு எதிராக Save Our BBC Thamiloosai  போராட்டக் குழு கையெழுத்துப் போராட்டம் ஒன்றை நடத்துவதுடன் பிபிசிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடாத்த முடிவெடுத்து உள்ளதாகத் தெரிவித்தார்.

பிபிசி தமிழோசையை இந்திய திட்டமிடலின் அடிப்படையிலேயே டெல்லிக்கு மாற்றுவதாக பிபிசி உத்தியோகபூர்வமாக அறிவித்து உள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அங்கு தமிழோசை கேட்போரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்;டுள்ளதைக் காரணமாகக் கொண்டு தமிழோசையைக் கேட்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கமும் இந்த நகர்வில் தங்கியுள்ளது. ஆனால் தமிழோசைக் கலையகத்தை சென்னைக்கு மாற்றாமல் டெல்லிக்கு மாற்றுவது முற்றிலும் பொருளாதார நோக்கத்தின் அடிப்படையே என Save Our BBC Thamiloosai  போராட்டக் குழுவில் உள்ள தேசம்நெற் ஊடகவியலாளர் த ஜெயபாலன் தெரிவிக்கின்றார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்திருந்தாலும் ஊடகங்கள் சுயாதீனமாக இயங்க முடியாத நிலை காணப்படுகின்றது. இச்சூழலில் பிபிசி தமிழோசையை டெல்லிக்கு நகர்த்துவதன் மூலம் இலங்கைச் செய்திகள் முக்கியத்தவத்தை இழக்கின்ற அபாயம் உள்ளது" என்றார்.

பிபிசி தமிழோசை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்து}டாக சிற்றலைவரிசையில் ஒலிபரப்பப்பட்டு வந்தது. ஆனால் யுத்தத்திற்குப் பின் போர்க்குற்றங்கள் பற்றிய செய்திகளை ஒலிபரப்பும் போது அவை தொடர்ச்சியாக இடையூறு செய்யப்பட்டதால் அந்த ஒலிபரப்பு பின்னர் இடைநிறுத்தப்பட்டது. இலங்கையில் தமிழோசையை கேட்போரின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்.

2016இல் BBC Charter Review இடம்பெற உள்ளது. இதன்போது நிதிச் சேமிப்பு விடயம் பிபிசி இன் சகல முகாமைத்துவத்திலும் மேலும் இறக்கமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு தமிழோசை தமிழ் மக்களின் ஆளுமை இல்லாத பகுதிக்கு நகர்த்தப்பட்டால் அச்சேவையை இடைநிறுத்துவது இலகுவாக அமையும் என்பதாலேயே தமிழோசை டெல்லிக்கு நகர்த்தப்படுகின்றது என்ற சந்தேகம் தற்போது வலுவடைந்து வருகிறது.

"2014 முதல் பிபிசி தமிழோசைக்கான நிதி, நேரடியாக தொலைக்காட்சி அனுமதிக் கட்டணத்தில் இருந்தே வழங்கப்படுகிறது. அதனால் பிரித்தானியாவில் வாழ்கின்ற 100,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்த அனுமதிக் கட்டணத்தைச் செலுத்துவதால் அவர்கள் பிபிசி தமிழோசையை லண்டனில் வைத்திருக்கும உரிமையைக் கோர வேண்டும்" என்கிறார் கவுன்சிலர் போல் சத்தியநேசன்.

கட்டுரை: ஜெயபாலன் த | SEPTEMBER 29, 2014 12:06 PM
Source: http://thesamnet.co.uk/

No comments: