Sunday, November 30, 2014

நவம்பர் 30, 2014, ஜெகதீஷ் சந்திரபோஸ் பிறந்த நாள்

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை உலகுக்கு உணர்த்திய அறிவியலறிஞர், ஜெகதீஷ் சந்திர போஸ், 1858-ம் ஆண்டு இதே நாளில்தான் பிறந்தார். தற்போதைய பங்களாதேஷின் பிர்காம்பூர் என்ற ஊரில், பிறந்தார் ஜெகதீஷ் சந்திரபோஸ். ஜெகதீஷின் தந்தை பகவான் சந்திரபோஸ், இவர் பரித்பூரின் காவல் துணை ஆணையராக பணிபுரிந்தவர்.

கொல்கத்தாவில் உயர் நிலைப்பள்ளிப் படிப்பை முடித்த போஸ், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தை முடித்தார். 1885 - ல் நாடு திரும்பிய ஜெகதீஷ், சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் துறையில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அக்கல்லூரியில், முதல்முதலில் இயற்பியல் துறைக்கு செய்முறை கூடம் அமைத்தார் போஸ்.

பின்னர், அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்ட போஸ், 1893 - ல் வானொலி கண்டுபிடிப்புக்கான ஆய்வுகளை தொடங்கினார். 1897- ம் ஆண்டு கொல்கத்தாவில் வானொலிக்கான ஆய்வு முழுமைப் பெற்றது. இதே காலகட்டத்தில், மார்கோனியும் வானொலி கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்தார்.

வானொலி கண்டுபிடிப்பைப் பற்றி இருவரும் லண்டனில் விவாதித்தும் இருந்தனர். எனினும், மார்கோனி தான் வானொலி கண்டுபிடித்தறக்கான காப்புரிமையைப் பெற்று, வானொலி கண்டுபிடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

இயற்பியல் தவிர, தாவரவியலிலும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட போஸ், 1927 - ம் ஆண்டு தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதைக் கண்டுபிடித்தார். இயற்பியல் மற்றும் தாவரவியலில் பல்வேறு ஆய்வுகள் செய்து வெற்றி கண்ட போஸ், 1937-ம் ஆண்டு உயிரிழந்தார்.

Monday, November 10, 2014

Friday, November 07, 2014

AIR Delhi


Wednesday, November 05, 2014

வீடியோ மூலம் பாடங்கள் நடத்தும் பல் ஊடக ஆராய்ச்சி மையங்கள்!

பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் அத்தனை பேருக்குள்ளும், 'நாம் வளர்ந்துவிட்டோம்' என்ற எண்ணம், இழையோடும். கல்லூரி வளாகங்களில் கிடைக்கும், நட்பு, சுதந்திரம், பரந்துபட்ட கல்விவெளி, சமூக பங்களிப்பு, வேலை தேடும் முனைப்பு, குடும்பம் பற்றிய சிந்தனைகள் என, வெவ்வேறு நிறங்களில் எண்ணங்கள் முளைவிடும், அந்த பருவத்தில். அந்த காலகட்டங்களில் கற்பனைகள் சிறகு தைக்கும்; கலைகள் எல்லாம் உறவு வைக்கும். அந்த பருவத்தினரை, வெறும் புத்தகங்களால் மட்டுமே அடைகாத்துவிட முடியாது. கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் குதூகலம் கலந்து, சான்றுகள் பல அடுக்கி, செய்முறையின் ஊடே, பாடத்தை நகர்த்தி, தன் பக்கம், அவர்களை ஈர்க்க நினைக்கும் ஆசிரியர்களே, பெரும்பாலும் வெற்றி பெறுகின்றனர். ஆயினும், இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகத்தில், மாணவர்களுக்கு பாடம் எடுப்பது, பெரும்பாலான பேராசிரியர்களுக்கு சிரமமாக உள்ளதாகவே, கூறப்படுகிறது.

புதுசா யோசிக்கணும்... : அதற்கு மாற்றாக, பாடங்களை, அனுபவம் மிக்க பேராசிரியர்களை கொண்டு கற்பித்து, அதை, அப்படியே வீடியோவாக பதிவு செய்து, அவர் போதிப்பதை, தட்டச்சு செய்து, அவர் சொல்லும் விளக்கங்களுக்கு, அனிமேஷன், வீடியோ முறையில் விளக்கம் கொடுத்து, வகுப்பறையில் திரையிட்டு விளக்கினால்... அதை, இணையதளத்தில் பதிவேற்றினால்... தொலைக்காட்சியில் ஒலிபரப்பினால்... நன்றாக இருக்குமே!
அதை தான், கல்வி பல் ஊடக ஆராய்ச்சி மையங்கள் செய்து கொண்டிருக்கின்றன. இந்த பணிக்காக, 22 ஆய்வு மையங்கள், இந்தியா முழுவதும் செயல்படுகின்றன.
தமிழகத்தில் இரண்டு மையங்கள் உள்ளன. அவை, மதுரை, காமராஜ் பல்கலை பல் ஊடக ஆய்வு மையம் மற்றும் சென்னை, அண்ணா பல்கலை பல் ஊடக ஆய்வு மையம் ஆகியவை.
சென்னை, அண்ணா பல்கலை பல் ஊடக ஆய்வு மையம், கடந்த, 1985ம் ஆண்டு துவக்கப்பட்டு, பல்வேறு படிநிலை களை கடந்து, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் இயக்குனர், கவுரியிடம் பேசிய போது, அவர் கூறியதாவது:
இந்த மையம், கடந்த, 1985ம் ஆண்டு, ஒலிக்காட்சி ஆய்வு மையமாக (ஆடியோ விஷுவல் ரிசர்ச் சென்டர்) தான் துவக்கப்பட்டது. அதை துவக்கியது, பல்கலைக்கழக மானிய குழு.
அதன் நோக்கம், கல்வி தொலைக்காட்சி ஒலிபரப்பின் வழியாக, அறிவியல் தொழில்நுட்ப அறிவை, சமுதாயத்தில் பரவச் செய்வது. அந்த வகையில், பல்வேறு கல்வி நிகழ்ச்சிகளையும், சமூக பயன்பாட்டு நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கி வருகிறது. 'எய்ட்ஸ்' குறித்து, தயாரித்து வழங்கிய நிகழ்ச்சிகளுக்காக, இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால், சிறந்த மையத்திற்கான தேசிய விருதும் பெற்றிருக்கிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

காட்சிப்படுத்திய மாணவர்கள் : ''வாருங்கள்! சொன்னால் புரியாது, பார்த்தால் தான் புரியும்,'' என்றவாறே, நம்மை அழைத்தார், அம்மையத்தின் பொறுப்பாளர், ராஜேஷ். அவர் அழைத்து சென்ற இடம், நிகழ்ச்சி தயாரிப்பு கூடம். அங்கு... ஒளிவெள்ளத்தை பாய்ச்சியபடியே, கண்விழித்து கொண்டிருந்தன, விளக்குகள். ஊழிக்காலத்து கண்ணனின் வாய் போல, அங்கு நடப்பவற்றை விழுங்கி கொண்டிருந்தன, மூன்று கேமராக்கள். அவற்றில் ஒன்றை, பிடரி பிடித்து, அடக்கி வழி நடத்திக்கொண்டிருந்தார் ஒரு ஒளிப்பதிவாளர். அவரின் செய்கைகளை, கவனித்தும், விளக்கம் கேட்டும் புரிந்துகொண்டிருந்தனர், சில மாணவியர். இன்னும், இரு கேமராக்களை, இயக்கி, வித்தியாசமாக கோணம் வைத்து, காட்சிகளால் தீனிபோட்டுக் கொண்டிருந்தனர். அடுத்த அறை... பதியப்படும் காட்சி களை வாங்கி, சேமித்துக் கொண்டு, அவற்றை, நெறியாள்கையுடன், 'எடிட்' செய்து கொண்டிருந்தனர், சிலர்.
அவர்கள், வீடியோ காட்சிகளை 'எடிட்' செய்தபின், அது, மற்றொரு 'அனிமேஷன்' கூடத்திற்கு செல்கிறது. அங்கு, பேராசிரியர் தரும் விளக்கங்களுக்கு ஏற்ப, அனிமேஷன் காட்சிகளை உருவாக்கி கொண்டிருந்தனர். அடுத்து ஒருவர்... அவர், ஆசிரியர் நடத்தியவற்றை காதில் வாங்கி, தட்டச்சு செய்து, அவற்றை, மின் கட்டுரையாக மாற்றிக்கொண்டிருந்தார். பின், இசையமைப்பு கூடம். அங்கு, இசை சேர்ப்பு நடக்கிறது.
நிறைவாக, ஒரு பாடம், அரை மணிநேரத்திற்கு, வரையறுக்கப்பட்டு, (எடிட்), அதில், காட்சிகளாகவும், மின் கட்டுரையாகவும், ஒலி வடிவமாகவும் என, பல்வேறு படிநிலைகளில் பதிவேற்றம் செய்யப்பட்டு நிறைவுறுகிறது.

என்ன தான் நடக்குது? : ஒரு சுற்றுலா பயணியை அழைத்து செல்லும் வழிகாட்டி போல, தயாரிப்பு கூடங்களுக்கு அழைத்து சென்று திரும்பிய ராஜேஷ், சொன்ன செய்திகள் தான் இவை...: பல்கலைக்கழக மானிய குழு மூலம், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு தரமான, மின் ஊடகங்களின் வழியாக, தரமான பாடங்களை, மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக, கல்வி பல் ஊடக ஆய்வு மையங்களை உருவாக்கி உள்ளது.
ஐநூறுக்கும் மேற்பட்ட, தேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள், இந்த கல்வி சேவைக்காக பணியாற்றுகின்றனர். இந்த ஆய்வு மையங்கள் மூலம், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடங்களை தயாரித்து, எப்போதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், சேமித்து வைத்துள்ளோம்.

எங்கள் தயாரிப்பில், அண்ணா பல் கலையின் ஊடகவியல் மாணவர்களும் நேரடியாக பங்கேற்று, தயாரிப்பு சார்ந்த விவரங்களை தெரிந்துகொள்கின்றனர்.

யாருக்காக? எப்படி? : இந்த, பாடங்கள், இளநிலை பட்டம் படிக்கும், கலை அறிவியல் மாணவர்களுக்காக, ஒவ்வொரு பாடத்திற்கும், அரை மணிநேர அளவில், ஒருவரால் போதிக்கப்பட்டு, தயாரிக்கப்படுகின்றன. ஒரு பாடம், 30? பாடங்களாக தயாரிக்கப்பட்டு இருக்கும். அவை, வியாஸ், தூர்தர்ஷன் முதல் அலைவரிசை தொலைக்காட்சிகள், ஞானவாணி என்ற, வானொலி, www.cecugc.nic என்ற, இணையதளம் ஆகியவற்றின் மூலம் ஒலிபரப்பப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு, infor.cec@nic.in என்ற, மின்னஞ்சல் வழியாகவோ, 044--22399106,- 22300105, -22300106 ஆகிய தொலைபேசி எண்களின் வழியாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, ராஜேஷ் தெரிவித்தார்.
Source: Dinamalar

பிபிசி தமிழ்ச் சேவையில் இப்பொழுது இருக்கும் நிலையே தொடர வேண்டும்! கி வீரமணி அறிக்கை!

லண்டனைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிபிசி தமிழ்ச் சேவையை, டில்லிக்கு மாற்றி ஹிந்தியுடன் இணைப்பது தமிழர்களுக்குச் செய்யும் கேடு - இப்பொழுது இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

1920-களில் இங்கிலாந்து, தன்னுடைய காலனி நாடுகளுக்கான ஒரு பொது வானொலிச் சேவை உருவாக்கியது.  இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ரெத் என்பவரின் சிந்தனையில் துவங்கிய இந்த வானொலிக்கு ஆரம்பத்தில் ஜான் ரெத் தலைவராக இருந்துவந்தார் 1927 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக இது மூடப்படவேண்டிய நிலையில் இருந்தபோது பிபிசி உலகப் பொது அமைப்பின் (தற்போதைய அய்.நா. போன்ற அமைப்புடன்)  பொது நிதியில் இயங்க ஆரம்பித்தது. (அதுவரை பிரிட்டன் நாடாளுமன்ற கட்டுப்பாட்டில் இருந்து வந்தது) பிபிசி என்ற பெயர் பிரபலமாகிவிட்டதால் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து அழைக்கப்பட்டது.  

பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். 

பிபிசி தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத்தள சேவைகளை வழங்குகிறது. இதன் தலைமையகம் இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும். 

28 மொழிகளில் ஒலிபரப்பு!

இது உலகின் 150 தலைநகரங்களில் ஒலிபரப்புகிறது. உலகின் 28 மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒலிரப்புகிறது.

தமிழோசை நிகழ்ச்சிகளை பிப்ரவரி 2002 இல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் நேரடி ஒலிபரப்பு செய்து வந்தது எனினும் ஈழப்போர்ச் செய்திகளைப் பிபிசி ஒலிபரப்பிய வேளைகளில் அதனைக் குழப்பியதால் பிபிசி 9 பிப்ரவரி 2009 முதல் இலங்கை ஒலிபரப்பு நிலையத்தினுடான ஒலிபரப்பை இடைநிறுத்திக் கொண்டது.

இந்நிலையில் தமிழ்ச் சேவை ஒலிபரப்பினை பிபிசி ஹிந்தி சேவையுடன் இணைந்த நிலையில் டில்லியில் இயங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. செலவுகளைக் குறைக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிபிசி அறிவித்துள்ளது. பிபிசி பேச்சாளர் ஒருவர் இது தொடர்பில் தகவல் தருகையில், பெருகிவரும் நேயர்களுக்கு ஏற்ப பிபிசி தமிழ்ச் சேவை புதுடில்லிக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். பிபிசி தமிழ்ச் சேவை இந்தியாவில் உள்ள தமிழ் நேயர்களை கவர்ந்துள்ளது. இந்தநிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கை நேயர்களைக் கருத்திற்கொண்டு இந்த மாற்றம் இடம்பெறுவதாகவும் பிபிசியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழோசை என்பது பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையாகும். இவ்வானொலி சேவையானது 1941 மே 3 ஆம் நாள் முதல் இயங்கி வருகின்றது. இவ்வானொலி ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் தமிழ் மொழியில் உலகச் செய்திகளையும் வேறு பல நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றது. இங்கு இந்திய, இலங்கைச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதோடு செய்தியரங்கம் பகுதியில் அவை விரிவாக ஆராயப்படுகிறது. தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் இச்சேவை வானலைகளில் ஒலிபரப்பப்படுவதோடு ஏனைய பிரதேசங்களில் இணைய தளத்தில் பரப்பப்படுகின்றன.

பிபிசி தமிழ் நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம்  தனது தேசியச் சேவையில் மறு ஒலிபரப்பு செய்கிறது. 

 இடமாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு

பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 70 லட்சம் நேயர்கள் உள்ளனர்.  முக்கியமாக பிபிசி தமிழோசை நிகழ்ச்சி உலகம் முழுவதிலுமுள்ள புலம்பெயர் தமிழர்களுக்குப் பொதுவான ஓர் தகவல் தளமாக இருந்து வருகிறது.

டில்லிக்கு மாற்றப்படும் நிலையில் இந்தி மொழியின் ஆதிக்கம் தமிழோசையிலும் மேலோங்கும். 
டில்லிக்கு மாற்றப்படும்போது பெருவாரியான இலங்கைத் தமிழர்களின் செய்தியைக் கொண்டு செல்வதில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். இந்திய இலங்கை நட்புறவின் காரணமாக இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகளையே அதிகம் ஒலிபரப்பப்படும், அதே வேளையில் இந்தியத் தமிழர்களுக்கான பயனுள்ள எந்த ஒரு நிகழ்ச்சிகளும் அதில் இடம்பெறாத சூழல் ஏற்படும். 

பிபிசி போன்ற பொது ஒலிபரப்பு கூட்டு நிறுவனங்கள் தலைமையை விட்டு தூரச்செல்லும்போது அங்கு அரசியல் நுழையும் வாய்ப்புள்ளது. மேலும் பிபிசி தமிழோசை டில்லிக்கு மாற்றப்படும்போது ஒரே நிர்வாகத்தின்கீழ் இது வருவதால் பிபிசி தமிழோசைக்கு என்று முக்கியத்துவம் தரப்படுவது நிறுத்தப்படும் அபாயம் உண்டு.

முக்கியமாக சில தமிழ் விரோத சக்திகள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும்போது எதிர்காலத்தில் பிபிசி தமிழோசை முற்றிலும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும்.   எடுத்துக்காட்டாக இலங்கை வானொலியின் சுதந்திரமான அமைப்பில் அரசியல் நுழைந்த பிறகு தமிழ் ஒலிபரப்பு முற்றிலுமாக மக்களின் ஆதரவை இழந்து இன்று பெயருக்கு இயங்கி வருவதுபோல் பிபிசி தமிழோசையின் எதிர்காலமும் அமைந்துவிடும்.  இதனால் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களுக்குப் பொதுவான ஒரு தகவல் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

தமிழக அரசின் கவனத்துக்கு.... 

இத்தகைய காரணங்களால் இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம்  - அதே முறையில் செயல்படுவது தொடரப்பட வேண்டும்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களும், அமைப்புகளும், உலகத் தமிழர்களும், அமைப்புகளும் சிறப்பாக தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மிக முக்கியமான பிரச்சினையில் கருத்தைச் செலுத்துமாறு வலியுறுத்துகிறோம்.

ஏதோ ஒரு வகையில் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கின்றன. எல்லாவற்றையும் அரசியல் கண்கொண்டு பார்க்காமல் தமிழர்களுக்கான பொதுப் பிரச்சினையில் ஒத்த குரல் கிளம்புவது அவசியமாகும்.

இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

உள்ளூர் வானொலி மூலம் இந்தியை திணிக்கும் முடிவை கைவிட வேண்டும்

 
தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 3 மண்டல வானொலி நிலையங்களில் வர்த்தக ஒலிபரப்பு என்ற பெயரில் இந்தியை திணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த வானொலி நிலையங்களில் தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகவுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்திந்திய வானொலியின் தலைமை இயக்குனர் கடந்த 06.08.2014 அன்று அனைத்து மண்டல வானொலி நிலையங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். கோப்பு எண் 13/20/2014&றி-மிமிமி/125 என்ற அந்த சுற்றறிக்கையில் அனைத்து மண்டல வானொலிகளில் ஒலிபரப்பாகும் வர்த்தக ஒலிபரப்பை உள்ளூர் வானொலி நிலையங்கள் மூலமாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி சென்னை வானொலி நிலையத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் கடந்த 20.10.2014 அன்று தமிழகத்தில் உள்ள தருமபுரி, நாகர்கோவில் ஆகிய உள்ளூர் வானொலி நிலையங்களுக்கும், புதுச்சேரியில் உள்ள காரைக்கால் வானொலி நிலையத்திற்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 26.10.2014 ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் 7 மணி நேரம் சென்னை மண்டல வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை உள்ளூர் வானொலிகள் மறு ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதேபோன்று இந்தியா முழுவதும் உள்ள 86 உள்ளூர் வானொலி நிலையங்களிலும் மண்டல வானொலி நிலையங்கள் மூலம்  நாளை மறுநாள் முதல் தினமும் 7 மணி நேரத்திற்கு வர்த்தக ஒலிபரப்பை விரிவுபடுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள உள்ளூர் வானொலிகள் சென்னை வானொலி நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பு நிகழ்ச்சிகளை மறுஒலிபரப்பு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருப்பதைப்  பார்க்கும் போது அவை தமிழ் நிகழ்ச்சிகளாகத் தானே இருக்க வேண்டும்; இதை மறு ஒலிபரப்பு செய்வதில் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடப்போகிறது? என்ற எண்ணம் அனைவர் மனதிலும் ஏற்படலாம்.
ஒவ்வொரு நாளும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து உள்ளூர் வானொலிகளிலும் 4 மணி நேரத்திற்கு இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தியை திணிக்க இதைவிட மோசமான கொல்லைப்புற வழி எதுவும் இருக்க முடியாது.
காரைக்கால் வானொலி நிலையம் தொடங்கப்பட்ட போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, புதுவையில் பேசப்படும் மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில்  மட்டுமே நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட வேண்டும். ஆனால், தமிழ் உள்ளிட்ட மொழிகளின்  நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும் நேரத்தைக் குறைத்துவிட்டு, இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை ஏற்க முடியாது. அதேபோல், தருமபுரி, நாகர்கோவில் வானொலி நிலையங்களிலும் அந்தந்த பகுதிகளில் பேசப்படும் தமிழ் உள்ளிட்ட மொழிகளின் நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்படவுள்ளதால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் கொதிப்படைந்திருக்கின்றனர். இந்த மூன்று உள்ளூர் வானொலி நிலையங்களுக்கும் தலா 50 லட்சம் நேயர்கள் உள்ளனர். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வது சரியல்ல. எனவே, மக்களின் உணர்வுகளை மதித்து உள்ளூர் வானொலிகளில் வர்த்தக ஒலிபரப்பு மூலம் இந்தியை திணிக்கும் முடிவை  அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Source: Dinamani First Published : 25 October 2014 01:25 PM IST

மேலும் 100 வானொலி நிலையங்களில் பண்பலை ஒலிபரப்பு


செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், அவர்களைக் குறிவைத்து மீடியம் (நடுத்தர) அலைவரிசையில் ஒலிபரப்பாகி வரும் மேலும் 100 அகில இந்திய வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளை விரைவில் பண்பலை வரிசையிலும் (எஃப்.எம்) ஒலிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் நடைபெற்ற அகில இந்திய வானொலியின் தமிழ், அஸ்ஸாமி, குஜராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் இலவச எஸ்எம்எஸ் (குறுஞ் செய்தி) செய்தி அனுப்பும் சேவையினை பிரகாஷ் ஜாவடேகர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பண்பலை வரிசையில் ஒலிபரப்பாகும் வானொலி நிலையங்கள் செல்போன் பயன்படுத்துவோரை மிக எளிதாகச் சென்றடைகின்றன. அந்த நிகழ்ச்சிகளை மிகத் தெளிவாகவும் கேட்க முடிகிறது. இதைக் கருத்தில்கொண்டு விரைவில் மீடியம் (நடுத்தர) அலைவரிசையில் ஒலிபரப்பாகும் மேலும் 100 அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சிகளை, பண்பலை வரிசையிலும் ஒலிபரப்ப முடிவு செய்துள்ளோம் என்று ஜாவடேகர் தெரிவித்தார்.

Source: Dinamani புது தில்லி
First Published : 30 October 2014 02:20 AM IST

பிபிசி நிர்வாகக் குழுவின் தலைவராகப் பெண் தேர்வு

உலகப் புகழ்பெற்ற வானொலி, தொலைக்காட்சி செய்தி நிறுவனமான பிபிசி}யின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பிபிசி அறக்கட்டளை நிர்வாகக் குழுவின் புதிய தலைவராக ரோனா ஃபேர்ஹெட் (53) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எச்.எஸ்.பி.சி. வங்கி, பெப்ஸிகோ உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள ரோனா ஃபேர்ஹெட், பிபிசி அறக்கட்டளையின் முதல் பெண் தலைவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப் புகழ்பெற்ற பிபிசி}யில் தலைவர் பொறுப்பு ஏற்கவுள்ளது பற்றிக் கருத்து கூறிய அவர், "திறமை வாய்ந்த பலரைக் கொண்டுள்ள பிரிட்டனின் உன்னதமான நிறுவனத்தின் நிர்வாகக் குழுவுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன் என்றார்.
இவரது நியமனம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பிரிட்டிஷ் கலாசாரத் துறை அமைச்சர் ஸஜித் ஜாவீத் பின்னர் வெளியிடுவார்.
அதன் பிறகு, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் கலாசாரம், ஊடகம், விளையாட்டுத் துறைகளின் தேர்வுக்குழு முன்பாக அவர் ஆஜராக வேண்டும். தேர்வுக்குழு உறுப்பினர்களின் விசாரணைக்குப் பிறகே அவர் பதவியேற்பது உறுதி செய்யப்படும்.
Source: http://www.dinamani.com/