தமிழ் வளர்ச்சிக்கு உதவ பெய்ஜிங் பல்கலை. குழுத் தலைவரிடம் தருண் விஜய் வேண்டுகோள்
தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுடன் சேர்ந்து தமிழ் மொழித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று சீனாவில் உள்ள பெய்ஜிங் (பீகிங்) பல்கலைக்கழகக் குழுத் தலைவர் ஜூ ஷான்லுவிடம் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் வலியுறுத்தினார்.
இந்தியா சீனா இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்காக பகத் சிங் கோஷ்யாரி தலைமையில் 13 பாஜக எம்.பி.க்கள் கடந்த சனிக்கிழமை சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தக் குழுவில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தருண் விஜய் இடம் பெற்றுள்ளார்.
வட மாநிலத்தில் பிறந்திருந்தாலும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அவர் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுத்து வருகிறார்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், வாராணசியில் பாரதியார் வாழ்ந்த இடத்தை தேசிய நினைவிடமாக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர் வலியுறுத்தி வருகிறார்.
இதையடுத்து, தருண் விஜயை கௌரவிக்கும் வகையில் அண்மையில் சென்னையில் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பாராட்டு விழா நடத்தினர். இந்த நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்றுள்ள தருண் விஜய், அங்குள்ள பழைமையும் பாரம்பரியமும் மிக்க பெய்ஜிங் (பீகிங்) பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். உலகின் பன்னாட்டு மொழிகளும் அந்தப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுவது குறித்து அவர் கேட்டறிந்தார். அந்தப் பல்கலைக்கழகக் குழுத் தலைவர் ஜூ ஷான்லுவிடம் பன்னாட்டு மொழிகளைப் பயிற்றுவிக்கும் போது உலகின் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியையும் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தருண் விஜய் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து "தினமணி' நிருபரிடம் தருண் விஜய் தொலைபேசி மூலம் அளித்த பேட்டியின் விவரம்:
"சீனத் தலைநகர் பெய்ஜிங்கின் மேற்குப் பகுதியில் உள்ள ஹைதியான் மாவட்டத்தில் இந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கலை, அறிவியல், உலகப் பொறியியல், பல்துறை ஆராய்ச்சி ஆகியவற்றில் அந்தப் பல்கலை. தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது. சீனாவின் பழைமையான, முதலாவது பல்கலைக்கழகமாக இது விளங்குகிறது. அதன் குழுத் தலைவர் ஜூ ஷான்லு, மொழி வளர்ச்சியில் பெய்ஜிங் பல்கலைக்கழகம் ஆற்றி வரும் சேவைகளை விளக்கினார்.
அப்போது, அவரிடம் இந்தியாவிலும் உலகின் பழைமையான மொழியான தமிழ் உள்ளது. உலகப் பொதுமறையான திருக்குறளை தமிழ் மொழி அளித்துள்ளது. உலக நெறிகள் பலவற்றுக்கும் தமிழ் முன்னுதாரணமாக உள்ளது என்று கூறினேன். அதைக் கேட்ட அவர், தமிழ் மொழியின் சிறப்பை நாங்களும் அறிவோம். சீன அரசால் தமிழ் மொழி வானொலி சேவை வழங்கப்படுகிறது. சீனாவில் வசிக்கும் தமிழர்களிடையே சீன வானொலிக்கு வரவேற்பு உள்ளது என்றார்.
இதையடுத்து, தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுடன் கூட்டுச் சேர்ந்து தமிழ் மொழியை சீனாவில் வளர்க்க நடவடிக்கை எடுங்கள் என்று ஜூ ஷான்லுவிடம் கேட்டுக் கொண்டேன். இந்த யோசனையை ஏற்றுக் கொண்ட அவர், விரைவில் இது தொடர்பாக பல்கலைக்கழக கவுன்சிலில் பேசி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்' என்று தருண் விஜய் கூறினார்.
சீனப் பயணத்தையொட்டி அந்த நாட்டு வானொலியின் தமிழ் சேவைக் குழுவினர் தருண் விஜயை பேட்டி எடுத்தனர். அந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள வைரமுத்துவிடமும் சீன தமிழ் வானொலி சேவைக் குழுவினர் பேட்டி கண்டனர்.
நன்றி: தினமணி 21-Nov-2014
நன்றி: தினமணி 21-Nov-2014
No comments:
Post a Comment