கடந்த மூன்று நாட்களாக சென்னையில் யாரும்
யாருடனும் தொலைப்பேசி ஊடாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை. 24 மணி நேரமும் 3ஜி மற்றும்
4ஜியில் நொடிக்கு நொடி அப்டேட் வழங்கிய ஜீவன்கள் எல்லாம் போன இடம் தெரியவில்லை. பாவம்
இப்பொழுது என்ன செய்து கொண்டு இருக்கின்றார்களோ! சென்னையில், முதலில் அனைத்து பகுதிகளிலும்
தண்ணீர் குறைந்த அளவுதான் வந்தது. தெருக்களில் படிப்படியாக தண்ணீர் உயந்தபடி இருந்தது.
ஒரு கட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் மின்சாரம் வந்துவிடும்
என்ற எண்ணத்தில் தான் அனைவரும் இருந்தனர். அதனால் மொபைல் போனை வழக்கம் போல் பயன்படுத்தி
வந்தனர். இரவு முழுவதும் மின்சாரம் வந்தபாடு இல்லை. அதன் பின் தான் நிறைய பேருக்கு
விபரீதம் புரிய ஆரம்பித்தது. காரணம் போனின் பேட்டரி ட்ரை ஆகிவிட்டது. அடுத்து சார்ஜ்
செய்ய வேண்டும். ஒரு சிலர் கைவசம் வைத்திருந்த பவர் பேங்க் மூலம் சார்ஜ் செய்து கொண்டனர்.
ஒரு கட்டத்தில் அதுவும் கரைந்தது.
ஒரு சிலர் தங்கள் வீட்டில் இன்வெட்டர்
இருந்ததால் அடுத்த ஒரு நாளுக்கு பயமின்றி இருந்தனர். அதுவும் காலியானதும் மீண்டும்
பயம் தொற்றிக் கொண்டது. இப்பொழுது போன் பேச பேட்டரி இல்லை. நண்பர்களையும் உறவினர்களையும்
தொடர்பு கொள்ள முடியவில்லை, முதலில் இதனால் பெரிய சிரமம் ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு
கட்டத்தில் பத்திரிகை செய்திகளில் வெள்ளத்தின் விபரங்கள் படத்துடன் வெளியாகத் தொடங்கியவுடன்
நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து விசாரிக்க எண்ணிய போது தான் விபரீதம் புரிந்தது.
தாங்கள் அனைவரும் வெள்ள நீரால் சூழப்பட்டது மட்டுமல்லாமல் தொலைதொடர்பு வசதிகள் இல்லாததால்
தங்களின் நிலைமையை நண்பர்களுக்கும் சொல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதனால் யாருக்கு என்ன நடந்தது, யார்
யார் பாதுகாப்பாக உள்ளனர் என்ற கவலை ஏற்படத் தொடங்கியது. ஐ.டி துறையினர் பலரும் தன்
சொந்த ஊர்களில் இருந்து இங்கு வந்து வேலை செய்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இதே நிலைமை.
ஒரு சில ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை மழைக்காரணமாக அலுவலகத்திலேயே தங்கச்
சொன்னது. மழை வடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் தங்கியவர்கள் அனைவரும் மாட்டிக்கொண்டனர்.
ஒரு கட்டத்தில் அங்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஜெனரேட்டர்கள் டீசல் இருக்கும்
வரை ஓடியது. அதுவும் தீர்ந்தவுடன் முற்றிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அது வரை
வாட்ஸ் அப்பிலும், பேஸ் புக்கிலும் அப்டேட் கொடுத்தவர்கள் காணாமல் போயினர். நிமிடத்திற்கு
ஒரு முறை செல்போனை பார்த்தவர்கள் பித்து பிடித்தவர்கள் போல் ஆயினர். தங்களது நண்பர்களிடமும்,
அலுவலக டீம் லீடர்களிடமும் எரிந்து விழுந்தனர். யாருக்குத் தான் கோபம் வராது, தங்கள்
குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முடியாமல் இவர்கள் அலுவலகத்தில் இருக்க, குடும்பத்தினர்
அவர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் வருந்தினர். இரு தரப்பும் குழப்பத்தில் ஆழ்ந்தது.
யாரும் வெளியிலும் செல்ல முடியாது, தகவல் தொடர்பும் இல்லை, என்ன செய்வது என்று நிர்வாகமும்
ஒரே நேரத்தில் குழம்பித்தான் போனது.
எனக்குத் தெரிந்து எந்த அலுவலகத்திலும்
வானொலிப் பெட்டிகள் இருந்ததாக பார்த்தது இல்லை. வானொலிப் பெட்டிகள் இருந்திருந்தால்
மழை பாதித்த அந்த நேரங்களில் பேட்டரியில் இயங்க வைத்து வெளியில் என்ன நிலவரம் என்பதையாவது
அறிந்து இருக்கலாம். எப்பொழுது வானொலியின் மகத்துவத்தை பற்றி நண்பர்களுடன் பேசினாலும்
கேளிக்கு உள்ளாகுபவனாக நான் இருந்துள்ளேன். இன்று வானொலி இருந்திருந்தால்! என்ற ஏக்கத்தில் இருந்தவர்களை அந்த நேரத்தில் பார்க்க
முடிந்தது. அதற்கு காரணம் அந்த அலுவலகத்தில் இருந்த ஒரு சில நண்பர்கள் பண்பலை வானொலிகளைத்
தொடர்ந்து கேட்டதன் பயனாகவே நகரில் என்ன நடக்கிறது என்று அறிந்து தனது சக நண்பர்களுடன்
பகிர்ந்து கொண்டனர். அப்பொழுது அவர்கள் தான் அங்கு ஹீரோவாக பார்க்கப்பட்டனர். எனக்குத்
தொரிந்து கிரிக்கெட் ஸ்கோருக்காக அலைந்தவர்கள் ஒரு காலத்தில் உண்டு.
கடந்த ஒரு வாரகாலமாக சென்னை மக்கள்
வெள்ளத்தால் பெரிதும் அவதிப்பட்டு வருவதை நாம் அறிவோம். நகர் முழுவதும் வெள்ளக்காடாக
இருக்கிறது. காங்கிரீட் காடுகள் வெள்ளத்தில் மிதக்கிறது. வெளியே எங்கும் செல்ல முடியவில்லை.
மின்சாரம் இல்லை. அத்தியாவசியப் பொருட்களும் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு. தொலைத்தொடர்பு
சாதனங்கள் அனைத்தும் செயல் இழந்துவிட்டன. இப்படியான சூழலுக்கு உகந்தது வானொலி மட்டுமே.
காரணம் இதற்கு குறைந்த சக்தி மின்சாரம் இருந்தால் போதுமானது. இன்றைய தொழில்நுட்ப உலகத்தில்
டைனமோ வானொலிப் பெட்டிகள் எல்லாம் மார்கெட்டில் கிடைக்கிறது. பத்து முறை சுற்றினால்
பேட்டரி சார்ஜ் ஆகி இரண்டு மணி நேரம் பாடும். ஆனால் நாம் அதனை மறந்து விட்டோமே!
எனக்கு 75 வயது மதிக்கதக்க ஒரு வானொலி
நண்பர் உள்ளார். அவர் தனக்கு எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதொல்லாம் வானொலியைக்
கேட்டுக்கொண்டே இருப்பார். ஒரு சில நேரங்களில் தான் வேலை செய்துகொண்டு இருக்கும்போது
கூட வானொலிப் பெட்டி ஒலித்துக்கொண்டே இருக்கும். அவர் இருப்பது வெள்ளம் அதிகம் பாதித்த
தாம்பரம் பகுதியில். தனியொருவராக தங்கியுள்ளார். இந்த வெள்ளத்தில் என்ன ஆனரோ என்று
தொடர்ந்து நான்கு நாட்கள் முயன்று ஐந்தாவது நாள் தான் அவரைப் பிடிக்க முடிந்தது. எப்படி
இருக்கிறாரோ என்று பயந்த எனக்கு அவர் கூலாகச் சொன்னார் வானொலி கேட்டுக்கொண்டு இருப்பதாக.
நகரமே நீரில் மூழ்கிக் கொண்டு இருக்கிறது நீங்கள் வானொலி கேட்டுக் கொண்டு இருக்கிறீர்களே
என்றேன். அதற்கு அவர் கூறினார், இதைத்தான் அவர்கள் வானொலியில் தொடர்ந்து அறிவித்து
வந்தனரே!
இதில் என்ன ஆச்சர்யம் என்றார். அகில இந்திய வானொலியில் வானிலை அறிக்கையைத்
தொடர்ந்து கேட்டதன் பயனாக தனக்கு ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி
ஸ்டாக் வைத்துக் கொண்டார். அப்படியிருக்க அவர் ஏன் இந்த பேய் மழைக்கெல்லாம் பயப்பட
வேண்டும். அவர் கடைசியில் கூறியது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நான் பயந்தது எல்லாம்
உங்களை நினைத்துத் தான்!! இன்றைய தலைமுறை தான் வானொலியை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையே.
அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன்கள் மட்டுமே கூத்தாடுகின்றன. என்ன சொல்ல என்று ஆதங்கப்பட்டுக்
கொண்டார். சமீபத்தில் நான் அவருக்கு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்திருந்தேன்.
ஆனால் அது ஒரே வாரத்தில் மூலைக்கு சென்றுவிட்டது ஒன்றும் இப்பொழுது ஆச்சரியமாகப் படவில்லை.
இன்னும் ஒரு நண்பர் ஊரபாக்கத்திற்கு
அருகில் உள்ளார். அவரும் வானொலிப் பிரியர். இலங்கை வானொலி என்றால் அவருக்கு உயிர்.
எனக்கும் தான். வானொலி நேயர்களுக்காக என்றே ஒரு இதழை ‘தமிழ் ஒலி’ என்றப் பெயரில் நடத்தினார்.
நானும் ‘சர்வதேச வானொலி’ என்ற இதழை நடத்தி வருபவன் தான். அவரது பகுதியிலும் ஐந்து நாட்களாக
மின்சாரம் இல்லை. அவருக்கும் கடந்த நான்கு நாட்களாக உற்றத் துணைவன் அவரின் கையடக்க
வானொலிப் பெட்டிதான். ஊரே பயந்து நடுங்கிக்கொண்டு இருக்கிறது. இவரோ கூலாக வானொலிக்
கேட்டுக்கொண்டு இருக்கிறார். அதுவும் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஏரிக்கரையில் அமர்ந்தவாறு.
இந்தக் கட்டுரையை படிக்கும் நீங்கள்
யாராவது மனம் மாறி ஒரு வானொலிப் பெட்டியை வீட்டில் இனிமேலாவது வாங்கி வைத்துக்கொள்ளலாம்
எனத் தேடினால் உங்களுக்கு வானொலிப் பெட்டிகள் கிடைப்பது கடினமே! காரணம் நாம் தான் வானொலிப்
பெட்டிகளை வாங்காமல் உற்பத்தியாளர்களை ஓட ஓட விரட்டிவிட்டோமே?!
வானொலி பெட்டியைப் பற்றி பேசும் போது
இன்னும் ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. நம்மில் எத்தனை பேருக்கு ஹாம் அல்லது அமெச்சூர்
வானொலிகளைப் பற்றித் தெரியும். போலீசாரின் கைகளில் உள்ள வயர்லெஸ் வாக்கி டாக்கிக்களைப்
பார்த்து இருப்பீர்கள். அதனை வாக்கி டாக்கி என்று கூறுவதேத் தவறு. வாக்கி டாக்கி என்பது
நகரின் பெரிய மால்களிலும் தியேட்டர்களிலும் உள்ள பணியாளர்கள் பயன்படுத்துவார்களே, அதனைத்
தான் வாக்கி டாக்கி என்பர். போலீஸ் வைத்திருப்பது வயர்லெஸ் வானொலிகள். வாக்கி டாக்கி
என்பவை 500 முதல் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு மட்டுமே தனது சக்தியைப் பொருத்து எடுக்கும்
திறன் கொண்டது. ஆனால் போலீஸார் வைத்திருப்பது ஐந்து முதல் பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு
எடுக்கக் கூடியது. இன்னும் ரிப்பீட்டர்கள் கிடைத்தால் 50 முதல் 100 கி.மீ வரை கூடத்
தொடர்பு கொள்ளலாம்.
சரி, அதனை எதற்கு இங்கு சொல்கிறேன்
என்று கேட்பவர்களுகு ஒரு தகவல். போலீஸ் வைத்திருக்கும் அதேப் போன்ற கருவியை நீங்களும்
வைத்துக் கொள்ள அரசு அனுமதி அளிக்கிறது. நான் வைத்துள்ளேன்! எனது அடையாளக் குறியீடு
VU2UOM. எப்படி எனக் கேட்பவர்களுக்கு ஒருத் தகவல். எப்படி போலீஸ் வைத்துள்ள துப்பாக்கியை
நாமும் லைசென்ஸ் வாங்கி வைத்துள்ளோம், அது போன்றே இதற்கும் லைசென்ஸ் வாங்கி பொதுமக்களும்
வைத்துக்கொண்டு பேசலாம். யாருடன் பேச!? உலகம் முழுவதும் நம்மைப் போல் உரிமம் வாங்கி
வைத்துள்ள அனைவருடனும்.
உரிமம் வாங்கி பயன்படுத்துபவர்ளைத்
தான் நாம் ஹாம் வானொலி உபயோகிப்பாளர்கள் என்கிறோம். இது போன்ற ஆபத்து காலங்களில் இந்த
ஹாம் வானொலி தான் தகவல் தொடர்புக்கு உலகெங்கும் கைக் கொடுத்தது, கொடுத்தும் வருகிறது.
தொடர்ந்து சுனாமியும், நில நடுக்கமும் வரும் ஜப்பானில் தான் உலகிலேயே அதிக ஹாம் வானொலி
உபயோகிப்பாளர்கள் உள்ளனர். ஹாம் வானொலியைப் பயன்படுத்த எந்த ஒரு செல் போன் டவர்களும்
தேவையில். மின்சாரமும் குறைந்த அளவேத் தேவை. எங்கே இருக்கிறோமோ அந்த நொடியில் அங்கு
இருந்து உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள முடியும். மாதம் ஆனதும் சர்வதேச அழைப்புகளுக்கு
பில் தொகை எகிருமே என்ற கவலையும் வேண்டாம்.
ஆனால் யார் இந்த ஹாம் வானொலியைக் கண்டுகொள்கின்றனர்.
நானும் பல நண்பர்களுக்கு இந்த ஹாம் வானொலிப் பற்றி எடுத்துக் கூறியுள்ளேன். ஆனால் அவர்கள்
அனைவரும் ஒரு சேர என்னிடம் கூறியது ஒன்றுதான். “ஸ்மார்ட் போன் காலத்தில என்ன பேசரீங்க
நீங்க” என்று கூறி என் வாயை ஒரு சேர அடைப்பதுடன் ஒரு ஏளனப் புன்னகை வேறு. புன்னகைப்
புரிந்தவர்களின் நிலை இன்று அதோ கதி தான். நான் ஒரு இதழியல் பேராசிரியர் என்ற வகையில்
எங்கள் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முதலில் கூறுவது இதைத்தான். ஜர்னலிஸ்ட்
ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஹாம் தேர்வினை எழுதி லைசென்ஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே!
கடந்த ஒரு சில நாட்களாக நான் எனது ஊடக
நண்பர்களை பல்வேறு வகைகளிலும் தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால் அவர்கள் எல்லோறும் தொடர்பு
எல்லைக்கு வெளியேயே இருந்தனர். எனக்கு மட்டுமல்ல அவர்கள் பணி புரியும் அவர்களின் ஊடகங்களுக்கும்
அவர்களைப் பிடிக்க முடியவில்லை. காரணம் நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாததால் மொபைலை
சார்ஜ் செய்ய முடியவில்லை. அப்படியே சார்ஜ் செய்தாலும் செல் போன் நிறுவனங்களின் டவர்கள்
வேலை செய்யவில்லை. எப்படித் தொடர்பு கொள்வது?
எனக்குத் தெரிந்து சென்னையில் உள்ள
எந்த ஊடகமும் ஹாம் வானொலிப் பிரிவைத் தன்னகத்தே கொண்டதாகத் தெரியவில்லை. எனக்கு தெரிந்த
ஒரு ஊடக நண்பர் ஒரு சில முக்கியத் தகவல்களை ஹாம் வானொலித் துணைக் கொண்டு என்னிடம் பெற்றுத்
தருமாறு கூறினார். இதுவே அவர்களுக்கு இந்த ஹாம் வானொலிப் பெட்டிகள் இருந்திருந்தால்!
இனிமேலாவது அனைத்து ஊடக நண்பர்களும் ஹாம் வானொலித் தேர்வினை எழுதி ஒவ்வொருவரும் தங்களின்
வீட்டில் ஒரு வயர்லெஸ் கருவியை வைத்துக் கொள்வோம். ஊடக நண்பர்கள் மட்டுமல்லாமல் எட்டாம்
வகுப்புத் தேர்வான அனைவரும் ஹாம் வானொலித் தேர்வினை எழுதத் தகுதி வாய்ந்தவர்கள். தேர்வுக்கு
தயாரிக்க சென்னையிலேயே பல தன்னார்வ ஹாம் கிளப்புகள் உள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தின்
இதழியல் துறையும் கற்றுக் கொள்ள ஆர்வமுள்ள ஊடக நண்பர்களுக்கு இலவச பயிற்சியை வழங்கத்
தயாராக உள்ளது.
ஹாம் வானொலி நண்பர்களின் சேவை சென்னை
மழையின் போது அளப்பரியது. சென்னையில் உள்ள உரிமம் பெற்ற ஹாம்கள் எல்லாம் ஒன்றிணைந்து
தகவல் தொடர்பு முற்றிலும் துண்டித்த பகுதிகளுக்குச் சென்று அங்கே இருப்பவர்களுக்கு
தேவையான உதவிகளைச் செய்தனர். இவர்களுக்கு யாரும் ஆனையிடவில்லை, எந்த அரசும் உதவியும்
செய்யவில்லை.
தன்னெழுச்சியாக இவர்களின் வயர்லெஸ் கருவிகளை எடுத்துக் கொண்டு களத்தில்
இறங்கினர். கருவிகள் ஒன்றும் விலைக் குறைந்தவை அல்ல. ஆனாலும் மக்களின் துயர் துடைக்க
களத்தில் நின்றனர். நின்றுகொண்டு இருக்கின்றனர்.
இது போன்ற ஆபத்து காலங்களில் இன்று
நேற்றல்ல, காலம் காலமாக எந்த ஒரு ஆர்பாட்டமும் இன்றி உதவி செய்வது இந்த ஹாம் வானொலி
உபயோகிப்பாளர்கள் தான். இதற்கு முன் வந்த சுனாமியின் போதும் சரி, நேபாள பூகம்பத்தின்
போதும் சரி, உலகின் பல நாடுகளிலும் உள்ள ஹாம்கள் இது போன்ற இயற்கை சீற்றங்களின் போது
ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். அதனால் தான் என்னவோ இவர்கள் தங்களை “ஒரே உலகம், ஒரே
மொழியினர்” (One World, One Language) என்று அழைத்துக் கொள்கின்றனர். இனிமேலாவது நாம்
இந்த பாரம்பரிய ‘வானொலிப்’ பெட்டிகளையும், ஹாம் வானொலிகளையும் மறவாமல் இருப்போமாக!
- தி இந்து நாளிதழில் 8/12/2015 அன்று வெளியான கட்டுரையின் எடிட் செய்யாத முழு வடிவம்
No comments:
Post a Comment