வெள்ள நாட்களில் சென்னையில் யாரும் யாருடனும் செல்பேசி/தொலைபேசி ஊடாகத் தொடர்புகொள்ள முடியவில்லை. நிமிடத்துக்கு ஒரு முறை செல்பேசி மூலம் ‘அப்டேட்’ கொடுப்பவர்கள் அன்றைக்கு யார் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றுகூட அறிந்துகொள்ள முடியாத சூழலில், பித்துப்பிடித்தவர்கள்போல் ஆயினர்.
எனக்கு வானொலிகளின் காலம் ஞாபகத்துக்கு வந்தது. எனக்குத் தெரிந்து இன்றைக்கு எந்த அலுவலகத்திலும் வானொலிப் பெட்டிகள் இல்லை. இப்போது செல்பேசிகள் டார்ச், வானொலி என்று எல்லா வசதிகளையும் உள்ளடக்கியவையாக மாறிவிட்டன. ஆனால், வீட்டுக்கு ஒரு சின்ன வானொலி இருந்திருந்தாலும் மழை பாதித்த நேரத்தில் பேட்டரியில் இயங்கவைத்து வெளியில் என்ன நிலவரம் என்பதை அறிந்துகொண்டிருக்கலாம். ‘இப்போது மட்டும் வானொலி இருந்திருந்தால்’ என்ற ஏக்கத்தில் இருந்தவர்களை அந்த நேரத்தில் பார்க்க முடிந்தது.
வானொலி நண்பன்
கடந்த ஒரு வார காலமாக சென்னை மக்கள் வெள்ளத்தால் பெரிதும் அவதிப்பட்டு வருவதை நாம் அறிவோம். நகர் முழுவதும் வெள்ளக்காடாக இருக்கிறது. கான்கிரீட் காடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெளியே எங்கும் செல்ல முடியவில்லை. மின்சாரம் இல்லை. அத்தியாவசியப் பொருட்களும் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு. தொலைத்தொடர்பு சாதனங்கள் அனைத்தும் செயலிழந்துவிட்டன.
இப்படியான சூழலுக்கு வானொலி மிகச் சிறந்த நண்பன். காரணம், அதற்கு குறைந்த சக்தி மின்சாரம் இருந்தால் போதும். இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் டைனமோ வானொலிப் பெட்டிகள் எல்லாம் சந்தையில் கிடைக்கின்றன. பத்து முறை சுற்றினால் பேட்டரி சார்ஜ் ஆகி இரண்டு மணி நேரம் பாடும். ஆனால், நாம் அதை மறந்துவிட்டோமே!
எனக்கு 75 வயது மதிக்கத்தக்க ஒரு வானொலி நண்பர் இருக்கிறார். செல்பேசி சேவை கிடைத்த பிறகு, நேற்று பேசினேன். பதற்றத்தோடு, எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அகில இந்திய வானொலியில் வானிலை அறிக்கையைத் தொடர்ந்து கேட்டதன் பயனாக தனக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி வைத்துக்கொண்டதைச் சொன்னார். பாதுகாப்பான இடம் நோக்கி நகர்ந்துவிட்டதையும் சொன்னார்.
ஹாம் ரேடியோ தெரியுமா?
வானொலிப் பெட்டியைப் பற்றிப் பேசும்போது இன்னும் ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. நம்மில் எத்தனை பேருக்கு ஹாம் அல்லது அமெச்சூர் வானொலிகளைப் பற்றித் தெரியும்? போலீஸாரின் கைகளில் உள்ள வயர்லெஸ் வாக்கி டாக்கிகளைப் பார்த்திருப்பீர்கள். அதனை ‘வாக்கி டாக்கி’ என்று கூறுவதே தவறு. ‘வாக்கி டாக்கி’ என்பது நகரின் பெரிய மால்களிலும் தியேட்டர்களிலும் உள்ள பணியாளர்கள் பயன்படுத்துவார்களே, அதைத்தான் வாக்கி டாக்கி என்பர். போலீஸ் வைத்திருப்பது வயர்லெஸ் வானொலிகள்.
வாக்கி டாக்கி என்பவை 500 மீட்டர் முதல் ஒரு கி.மீ. சுற்றளவு மட்டுமே தனது சக்தியைப் பொருத்து எடுக்கும் திறன் கொண்டது. ஆனால், போலீஸார் வைத்திருப்பது 10 கி.மீ. சுற்றளவு வரை எடுக்கக் கூடியது. ‘ரிப்பீட்டர்கள்’ கிடைத்தால் மேலும் 50 முதல் 100 கி.மீ வரை கூடத் தொடர்புகொள்ளலாம்.
ஜப்பானியர்களின் பயன்பாடு
எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், காவலர்கள் வைத்திருக்கும் இதே போன்ற கருவியை நீங்களும் வைத்துக்கொள்ள அரசு அனுமதி அளிக்கிறது. நான் வைத்திருக்கிறேன், உரிமத்துடன். யாருடன் பேச? உலகம் முழுவதும் நம்மைப் போல் உரிமம் வாங்கி வைத்துள்ள அனைவருடனும். இப்படி உரிமம் வாங்கிப் பயன்படுத்துபவர்களைத்தான் நாம் ஹாம் வானொலி உபயோகிப்பாளர்கள் என்கிறோம். இதுபோன்ற ஆபத்துக் காலங்களில் இந்த ஹாம் வானொலிதான் தகவல் தொடர்புக்கு உலகெங்கும் கை கொடுத்தது, கொடுத்தும்வருகிறது.
உலகிலேயே அதிகம் ஹாம் ரேடியோக்களைப் பயன்படுத்துபவர்கள் ஜப்பானியர்கள். அவர்கள் அதிக பேரிடர்களை எதிர்கொள்வதே இதற்குக் காரணம்.
ஹாம் வானொலியைப் பயன்படுத்த எந்த ஒரு செல்பேசி கோபுரமும் தேவையில்லை. மின்சாரமும் குறைந்த அளவே தேவை. எங்கே இருக்கிறோமோ அந்த நொடியில் அங்கு இருந்து உலகம் முழுவதும் தொடர்புகொள்ள முடியும். மாதம் ஆனதும் சர்வதேச அழைப்புகளுக்குப் பில் தொகை எகிருமே என்ற கவலையும் வேண்டாம். தனிநபர்களால் வாங்க முடியாத சூழலில் ஒவ்வொரு பகுதியிலும் தொடர்புகள் தெரிவிக்கும் வகையில் அமைப்புகளேனும் வாங்கிப் பயன்படுத்தலாம்.
எனக்குத் தெரிந்து சென்னையில் உள்ள எந்த ஊடகமும் ஹாம் வானொலிப் பிரிவைத் தன்னகத்தே கொண்டதாகத் தெரியவில்லை. இனியேனும் யோசிப்போமா?
- தங்க. ஜெய்சக்திவேல், உதவிப் பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
Source: http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/article7960683.ece?utm_source=vuukle&utm_campaign=vuukle_referral#vuukle_div
No comments:
Post a Comment