Saturday, February 04, 2017

மீனவர்களுக்கான முதல் வானொலி


உலகிலேயே மீனவர்களுக்கான முதல் பிரத்யேக வானொலி 'கடல் ஓசை' : வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீது தகவல்

உலகிலேயே மீனவர்களுக்கான முதல் பிரத்யேக வானொலி 'கடல் ஓசை' என முன்னோடி வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்.

ராமேசுவரம் அருகே பாம்பனில் கடல் ஓசை சமுதாய வானொலியின் துவக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இலங்கை வானொலியின் முன்னொடி வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீது கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பி.ஹெச். அப்துல் ஹமீது பேசியதாவது,

'' எண்பதுகளின் தொடக்கத்தில், மீன்பிடி வலைகளைத் தயாரிக்கும் தனியார் நிறுவனம் 'மீனவர் விரும்பிக்கேட்ட பாடல்கள்' என ஒரு விளம்பர நிகழ்ச்சியை நடத்தித் தருமாறு என்னிடம் கேட்டார்கள். இலங்கை வானொலியில் அப்போதே நீங்கள் கேட்டவை, நேயர் கேட்டவை நிகழ்ச்சிகள் உண்டு, அவற்றில் மீனவர்களும் பாடல்களை விரும்பிக் கேட்பதுண்டு. 

இதனால் மீனவர்களையே நேரில் சந்தித்து அவர்களது வாழ்வியல் மற்றும் தொழில் அனுபவங்களையும் கேட்டறிந்து, அவர்களது கலைத்திறமைகளையும் பதிவு செய்து, ஒரு சஞ்சிகை நிகழ்ச்சியாக வாரந்தோறும் வழங்கலாமே என்று முடிவாகி மூன்று மாதங்கள் மட்டும் நிகழ்ச்சியை வழங்குவது என ஒப்பந்தம் ஆனது.

இதற்காக தமிழ் மீனவர்கள் வாழும் பகுதிகளுக்கெல்லாம் நேரில் சென்று மீனவ நண்பர்களைச் சந்தித்து, ஒலிப்பதிவு இயந்திரத்தையும் சுமந்துகொண்டு, அவர்களோடு படகிலேறி, ஆழ்கடல் வரை சென்று, அவர்கள் தொழிலில் ஈடுபடும்போது பாடும், பாரம்பரிய பாடல்களை அலைகடல் ஓசையின் பின்னணியில் ஒலிப்பதிவு செய்ததுவும். அவர்களது வரலாற்றின் தொன்மை, மற்றும் தொழில் அனுபவங்களைக் கேட்டறிந்து பதிவு செய்யப்பட்டது. 
அந்த நிகழ்ச்சி மீனவ நண்பன் என்ற பெயரில் ஓராண்டுக்கும் மேல் தொடர்ந்து ஒலிபரப்பானது. இப்போது முப்பது ஆண்டுகள் கழித்து தென்னிந்தியாவின் கடைக்கோடியில் புகழ்மிகு ராமேசுவரத்தில் மீனவ நண்பர்களை இன்று சந்திக்கிறேன். 

உலகத்திலேயே மீனவர்களுக்கென்று முதலாவதாக பிரத்யேமாக வானொலி இன்று துவங்கப்பட்டுளளது. எனவே இன்று வானொலி வரலாற்றிலேயே மிக முக்கியமான நாள் ஆகும். வானொலி என்பது ஒரு தகவல் தொடர்பு சாதனம். பெரும்பாலான வானொலிகள் வெறும் பாட்டுப் பெட்டிகளாக உள்ளன. அல்லது அவசியமற்ற தொலைப்பேசி உரையாடல்கள் மட்டுமே நிறைந்து காணப்படுகின்றன. பேரிடர் காலங்களில் ஹாம் வானொலி நிலையங்கள் அமைத்து எத்தனையோ உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. கடல் ஒசை வானொலி ஒரு முன்னோடி வானொலியாக அமைய வேண்டும். கடல் ஓசை வானொலி பொங்கம் அலையோசை வானொலியாக உலகெங்கும் பரவ வேண்டும், என்றார். (நன்றி: எஸ்.முஹம்மது ராஃபி, தி இந்து, 4 பிப். 2017)

No comments: