Saturday, May 05, 2018

ஹெச்.எஃப் ஒலிபரப்பு





பொதுவாக நாம் உள்ளூர் வானொலி நிலையங்களைத் தொடர்பு கொள்வதை விட வெளிநாட்டு ஹாம் வானொலிகளைத் தொடர்பு கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்போம். அந்த வகையில் ஹெச்.எஃப் ஒலிபரப்புகளை செய்யும் பொழுது, எப்படி தொடங்குவது? என்பதை அறிந்து கொள்வோம்.

1. நிலையங்களைத் தேடுதல்
ஒரு பரந்த ஒலி வெளியில் தேடுதல் என்பது சாதாரண விடயம் அல்ல. சாதாரணமாக தொலைப்பேசியில் அழைப்பது போன்று ஹாம் வானொலியில் அழைக்க முடியாது, அழைக்கவும் கூடாது. அதற்கு என்று ஒரு முறை உள்ளது. ஆங்கிலத்தில் சி.க்யூ (CQ) என்பர். தொடக்க காலத்தில் Calling CQ என்று அழைப்பு விடுத்தனர். இன்று “CQ CQ CQ, this is Victor Uniform Three Uniform Oscar Mike, standing by….” என்று அழைப்பு விடுப்பது நடைமுறையில் உள்ளது. இதில் Uniform Oscar Mike என்பது எனது அழைப்புக் குறியீட்டின் (Call Sign) முதல் எழுத்துக்களின் சுருக்கம் அதாவது UOM என்பதாகும். ஒலிபரப்பின் போது ஒரே சத்தம் உள்ள எழுத்துக்களின் குழப்பத்தினைப் போக்க வேண்டியே, இதற்கு ஒவ்வொரு வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக B, E, T, P ஆகிய வார்த்தைகளைக் கூறலாம். இந்த வார்த்தைகளை வானொலியில் ஒலிபரப்பும் பொழுது பெரிய குழப்பங்கள் ஏற்படுகிறது.

சர்வதேச தொலைத்தொடர்பு குழுமம் அனைத்து ஆங்கில எழுத்துக்களும் பொதுவான ஒலிப்பியல் முறையை வழங்கியுள்ளது. ஒரு சில சமயங்களில் G என்பதற்கு Golf என்று கூறவேண்டும், ஆனால் அதுவும் புரியவில்லை என்றால், சற்றே விளக்குவதற்காக அதனை Germany என்றும் கூறுவதுண்டு. ஆனால், இது எல்லா சமயங்களிலும் பயன்படுத்தப்படுவதில்லை.

2. கவனியுங்கள்
ஹாம் ஒலிபரப்பின் போது, உங்கள் எதிர் புறம் தொடர்பு கொள்பவரின் அழைப்புக் குறியீட்டை நன்றாக கவனித்து குறித்துக் கொள்வது அவசியம். ஒலிபரப்பு தெளிவாக இருந்தால், எளிதில் குறித்துக் கொள்ளலாம், ஒரு சில சமயங்களில் தெளிவில்லாமல் இருக்கும். அந்த சமயங்களில் ஒரு முறைக்கு மூன்று முறை உங்களின் அழைப்புக் குறியைச் சொல்வது அவசியம் ஆகும். அதே சமயத்தில் நீங்கள், அவர்களின் அழைப்புக் குறியீட்டை ஒரு முறை சொன்னால் போதுமானது. ஆங்கிலத்தில் இதனை 1-by-3 call என்பர்.

3. பதில் தாருங்கள்
உங்களைப் போன்றே, உங்களைத் தொடர்பு கொள்பவரும், உங்களின் அழைப்புக் குறியீட்டினை தெளிவாக அறிந்து கொள்ள விரும்புவார். அதனால், உங்களின் அழைப்புக் குறியீட்டினை தெளிவாக மூன்று முறை கண்டிப்பாக சொல்லவும். அதன் ஊடாகத் தான் அவர் உங்களின் முகவரியைக் குறித்துக் கொண்டு, உங்களுக்கான க்யூ.எஸ்.எல். அட்டையை அனுப்புவார். அதேப் போன்று அவருக்கு, உங்கள் வானொலிப் பெட்டியில் கிடைக்கும் சிக்னல் ரிப்போர்டை தெரிவியுங்கள். தொடர்பு கொள்பவரின் விபரங்களை உங்களின் log book-ல் கண்டிப்பாக தெளிவாக குறித்துக் கொள்ளவும். அதன் துணை கொண்டே அவருக்கான க்யூ.எஸ்.எல். அட்டையை அனுப்ப வேண்டியிருக்கும்.

No comments: