சிற்றலை வானொலி நேயர்களுக்கு ஒரு கலைக்களஞ்சியமாகத் திகழும் “உலக வானொலி தொலைக்காட்சி கையேடு” தனது 76 ஆண்டுக்கால பயணத்தினை இந்த 2022 ஆண்டுடன் நிறைவு செய்வது, எங்களைப் போன்ற வானொலி ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் வருத்தம் கொடுக்கக்கூடிய ஒரு செய்தி.
76 ஆண்டு மலர்களில், ஒரு சில வருடங்களைத் தவிரப் பெரும்பான்மையான வருடங்களின் பதிப்பு என்னிடம் உண்டு. அந்த புத்தகங்கள் அனைத்தும் அடங்கிய ஐந்து அட்டைப்பெட்டிகள், ஒவ்வொரு முறை வீடு மாறுதல்களின் போதும் குடும்பத்தாரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகியுள்ளது.
நாங்கள் 15 வருடங்கள் மாத இதழாக வெளியிட்ட “சர்வதேச வானொலி” இதழாகட்டும், 16 வருடம் காலாண்டு இதழாக வெளிவந்த “Dxers Guide” இதழுக்கும், 54 வாரங்கள் அகில இந்திய வானொலியின் திரை கடல் ஆடிவரும் தமிழ்நாதத்தில் ஒலிபரப்பான “வானொலி உலகம்” நிகழ்ச்சிக்கும், NCBH வெளியிட்ட எனது முதல் தமிழ்ப் புத்தகமான “உலக வானொலிகள்” எனும் புத்தகத்திற்கும், பேருதவியாக இருந்தது தான் இந்த WRTH எனும் World Radio TV Handbook.
எனக்கே எனக்கான முதல் WRTH கிடைத்தது, 1999ல் திரு.அட்ரியன் பீட்டர்ஸன் AWR நேயர் சந்திப்புக்காக ஈரோடு வந்த போது, நேரடியாக 2000ஆம் ஆண்டு பதிப்பினைக் கைகளில் கொடுத்தார்கள். அந்த முதல் புத்தகத்தின் வாசனை இன்னும் நினைவுகளில் ஊசலாடுகிறது.
என்னிடம் உள்ள WRTH ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு கதை உண்டு. இந்தத் தருணத்தில் ஜெர்மன் நாட்டின் தேசிய வானொலியான DW எனும் Deutsch Welleவின் Technical Monitor பணியிலிருந்த போது கிடைத்த புத்தகங்களே அதிகம் என்பதைப் பதிவு செய்தே ஆகவேண்டும்.
அதனை அடுத்து நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருப்பது திரு.அரசு (VU2UR) அவர்கள். 30 வருடங்களுக்கும் அதிகமான புத்தகங்களை வாஞ்சையுடன் கொடுத்து உதவினார்.
திரு.சண்முக சுந்தரம்(VU2FOT), திரு. இளம்பூரணன், திரு. ஜோஸ் ஜேக்கப்(VU2JOS), திரு. அலோக்கேஷ் குப்தா(VU3BSE), திரு.சந்திபன் பாசு (VU3JXD) ஆகியோர் எனக்கும் WRTHக்கும் பாலத்தினை அமைத்தவர்களில் முக்கியமானவர்கள்.
வானொலிகளில் AWR, BBC, CRI, DW, RN, RV, RVA, SLBC, RTI, RFA, VOA, NHK மற்றும் TWR ஆகியவை ஏதேனும் ஒரு விதத்தில் WRTH பெற உதவியுள்ளது.
சென்னையின் மழை வெள்ளத்திலும் தப்பித்து, இன்றும் என் பொக்கிஷங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இவ்வளவு தகவல்களையும் தாங்கிய புத்தகம் இனி வெளிவராது என்று சொன்னது, நெருங்கிய நண்பன் ஒருவன் நம்மை மீளாத்துயரில் ஆழ்த்திச் செல்வது போன்றதே!
3 comments:
அந்த புத்தகம் என்னிடமும் இருந்தது என்பதை பெருமையுடன் பதிவு செய்கிறேன். அது 1984 ஆம் வருடம் என நினைக்கிறேன். வாய்ஸ் ஆப் அமெரிக்கா நடத்திய ஒரு போட்டியில் எனக்கு பரிசாக கிடைத்தது. அந்த கால கட்டத்தில் அதன் விலை 20 அமெரிக்க டாலர்கள். அதை பரிசாக பெற்று சக டி எக்ஸர்களிடம் பெருமையாக காட்டியது நினைவுக்கு வருகிறது. அந்த இதழ் பல சிற்றலை தகவல்களை தாங்கி வந்து எங்களை போன்றோருக்கு மிகவும் உதவியாக இருந்தது. அந்த இதழ் வெளியீடு முடிவுக்கு வருவது அறிவதில் நானும் வருத்தம் அடைகிறேன்.
நெருக்கமான மற்றும் உருக்கமான பதிவு✍️
It's asd. news.Do many DX enthusiasts are deprived of pleasure of reading the Hand Book.
All Hand Books are knowledge treasures.
de Ratna 2LT
Post a Comment