கிருஸ்த்துமஸ் வானொலிகள்
வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் ஒலிபரப்பும் வானொலிகள் உலகம் முழுதும் பல உள்ளன. அவை அனைத்தும் சிற்றலையில் மட்டுமே ஒலிபரப்பி வருகின்றன. சமீப காலமாக பல சிற்றலை வானொலிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. அதில் குறிப்பாக தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயின்ட் ஹெலீனாவில் இருந்து ஒலித்த ‘ரேடியோ செயின்ட் ஹெலீனா’ வானொலியும் அடங்கும். இந்த வானொலி வருடத்தின் டிசம்பர் மாதத்தில் நான்காவது ஞாயிற்றுக்கிழமை அரைமணி நேரம் மட்டும் ஒலிபரப்பும். அந்த ஒலிபரப்பினைக் கேட்க உலகம் முழுவதும் தீவிரமான வானொலி நேயர்கள் விடிய விடிய காத்திருந்தது ஒரு காலம்.
தமிழகத்தில் செயின்ட் ஹெலீனா வானொலியை நள்ளிரவு 12.30 முதல் 1.00 மணிவரை கேட்ட ஞாபத்தினை மறக்கவும் முடியுமா?. இந்த ஒலிபரப்பினை கேட்பதற்காகவே பல்வேறு இடங்களைத் தேடி, கடைசியில் எங்களுக்கு கிடைத்த இடம் தான் தாம்பரம் கிருஸ்த்துவ கல்லூரிக்கு பின்புறம் உள்ள மைதானத்திற்கு அருகில், காட்டின் ஓரத்தில் இருந்த திரு.பாலு (எ) பாலசுப்பிரமணியன் அவர்களின் இல்லம். பல வருடங்கள், இவர் வீட்டின் மொட்டைமாடியில் உள்ள Long Wire ஆண்டனாவின் துணை கொண்டு Radio Saint Helena ஒலிபரப்புகளைக் கேட்டதை மறக்க முடியாது. இன்றும் அவர்கள் அனுப்பிய QSL Cards அந்த நினைவுகளின் எச்சத்தினைத் தக்கவைத்துள்ளது.
சமீபத்தில் International DX Club of India (IDXCI) புலனக் குழுமத்தில் ஒரு தகவல். அது வருடத்தின் ஒரு நாள் மட்டும் CW Mode (Morse Code)ல் ஒலிபரப்பும் வானொலியைப் பற்றியது. அந்த வானொலியின் கிருஸ்மஸ் சிறப்பு ஒலிபரப்பின் முழுமையான You Tube பக்கத்தினையும் அதில் பதிவேற்றியிருந்தனர்.
அந்த வானொலியின் சிறப்புகளில் ஒன்று, அது யுனஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ள உலகின் ஒரே வானொலி ஒலிபரப்பு நிலையமாகும். இந்த க்ரிமெட்டன் வானொலி நிலையம் ஸ்வீடனின் தெற்கு பகுதியில் உள்ள வர்பெர்க் நகரின் வெளிப்புரத்தில் அமைந்துள்ளது.
வர்பெர்க்கில் உள்ள க்ரிமெட்டன் வானொலி நிலையம் 1922-24 கட்டப்பட்டது. ஆரம்பகால வயர்லெஸ் அட்லாண்டிக் தகவல்தொடர்புக்கு இது பெரிதும் பயன்பட்டுள்ளது. தற்பொழுது நன்கு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக இது உள்ளது. இங்கு ஆறு 127 மீட்டர் உயரமுள்ள எஃகு கோபுரங்களில் சிற்றலை ஒலிபரப்பிற்கான டிரான்ஸ்மிட்டரை அமைத்துள்ளார்கள்.
வழக்கமான பயன்பாட்டில் தற்பொழுது இல்லை என்றாலும், இங்குள்ள ஒலிபரப்பு சாதனங்கள் இயக்க நிலையில் பராமரிக்கப்படுகிறது. வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் இவர்கள் இன்றும் ஒலிபரப்புகிறார்கள். 109.9 ஹெக்டேர் தளத்தில் அலெக்சாண்டர்சன் டிரான்ஸ்மிட்டரைக் கொண்ட கட்டிடங்கள் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. கட்டிடக் கலைஞர் கார்ல் அகெர்ப்லாட் அவர்கள் நியோ கிளாசிக்கல் பாணியில் இந்த கட்டிடங்களை வடிவமைத்துள்ளார். கட்டமைப்பு பொறியாளர் ஹென்ரிக் க்ரீகர் ஆண்டெனா கோபுரங்களை வடிவமைத்துள்ளார்.
அந்த காலகட்டத்தில் ஸ்வீடனில் கட்டப்பட்ட மிக உயரமான கட்டமைப்பாக இதனைக் கருதலாம். இந்த சிற்றலை ஒலிபரப்பு நிலையம், தொலைத்தொடர்பு வளர்ச்சிக்கு ஒரு சிறந்த உதாரணம் எனலாம். 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த சிற்றலை ஒலிபரப்பு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பெரிய டிரான்ஸ்மிட்டர் நிலையமாக இது உள்ளது. உலகில் எஞ்சியிருக்கும் ஒரே உதாரணமாக இந்த வானொலி இன்றும் அமைந்துள்ளது.
இந்த ஆண்டு 24 டிசம்பர் 2021 இந்திய நேரம் மதியம் 2.00 மணி முதல் 2.30 வரை சிற்றலைவரிசை 17,200 கிலோ ஹெர்ட்ஸில் (16 மீட்டர்) மோர்ஸ் குறியீட்டின் ஊடாக ஒலிபரப்பியது இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் மகிழ்ச்சியான செய்தி, இந்த ஒலிபரப்பு முழுவதையும் யூடியூப்பிலும் ஒளிபரப்பினார்கள். ஒலிபரப்பினைத் தவரவிட்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் சென்று இப்பொழுதும் கேட்கலாம். வானொலி ஒலிபரப்பில் தான் எத்தனை சுவாரஸ்யமான தகவல்கள்.
இந்த வானொலியைத் தொடர்புகொள்ள:
World Heritage Grimeton Radio Station
Grimeton 72
SE-432 98 Grimeton
Sweden
Email: info@grimeton.org
Phone: (+46) 0340-67 41 90
4 comments:
யூட்யூபில் ஒளிபரப்பாகும் வானொலி நிகழ்ச்சியின் முகவரியை இதில் தெரியப்படுத்துங்கள்
கேட்கக்கிடைக்காத அழகிய அபூர்வ தகவல்கள்.வானொலி உலகில் இவ்வளவு ஆச்சரியங்களா?
அரிய தகவல் கிடைத்தது நன்றி
நிச்சயமாக தொடுப்பினை இணைக்கிறேன்
Post a Comment