Sunday, March 29, 2026

எஞ்சியிருக்கும் தமிழ் சிற்றலை வானொலிகள்! ('DX South Asia' A26)

 

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் அனைத்து சிற்றலை வானொலிகளும் புதிய அலைவரிசைகளுக்கு மாறும். அந்த வகையில் தமிழில் ஒலிபரப்பாகும் சிற்றலை வானொலிகளின் புதிய அலைவரிசையை இந்தக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

உலகெங்கிலும் உள்ள தமிழ் நேயர்களுக்காக பல்வேறு சர்வதேச வானொலி நிலையங்கள் சிற்றலை வரிசையில் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை நீண்டகால நேயர்கள் அறிவீர்கள். ஜோஸ் ஜேக்கப் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தொகுத்து 'DX South Asia' (A26) என்ற தலைப்பில் அவரது இணையதளத்தில் வெளியிடுகிறார். தரவுகளின்படி, சீனா, ஆஸ்திரேலியா, வத்திக்கான் மற்றும் குவாம் போன்ற நாடுகளிலிருந்து இந்தத் தமிழ் சிற்றலை ஒலிபரப்புகள் இன்றும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சேவைகள் முக்கியமாகத் தமிழ்நாட்டை இலக்காகக் கொண்டு 100 முதல் 250 kW வரையிலான சக்திவாய்ந்த டிரான்ஸ்மிட்டர்கள் மூலம் ஒலிபரப்பப்படுகின்றன. சிற்றலை வானொலி அலைவரிசைகள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றங்களுக்கு உள்ளாவதால், நேயர்கள் தற்போதைய அலைவரிசைகளைத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

சீனா வானொலி காலை நேரங்களில் இரண்டு மணி நேர தமிழ் நிகழ்ச்சிகளை வழங்குகிறது. காலை 07.30 முதல் 08.30 வரை சீனாவிலிருந்து 9800 மற்றும் 11870 kHz அலைவரிசைகளில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த ஒலிபரப்பு முன்னதாக 13600 மற்றும் 17655 kHz இல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, 08.30 முதல் 09.30 வரை 13600 மற்றும் 13730 kHz அலைவரிசைகளில் தமிழ்நாட்டை இலக்காகக் கொண்டு அதே நிலையத்திலிருந்து நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.

ஆஸ்திரேலியாவின் குனுனுர்ரா தளத்திலிருந்து 'ரீச் பியாண்ட் ஆஸ்திரேலியா' 100 kW திறனுடன் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.00-6.15 வரை 15400 kHz அலைவரிசையிலும், செவ்வாய், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.15 முதல் 6.30 வரை 11900 kHz அலைவரிசையிலும் ஒலிபரப்பு செய்கிறது. மேலும், வாரத்தின் அனைத்து நாட்களிலும் 6.30 முதல் 6.45 வரை 11900 kHz அலைவரிசையில் தமிழ் நிகழ்ச்சிகளை இந்த நிலையம் ஒலிபரப்புகிறது.

மாலை நேரங்களில் சீனா வானொலி தனது தமிழ் சேவையை மீண்டும் தொடர்கிறது. 7.30 முதல் 8.30 வரை சீனாவிலிருந்து 5965 மற்றும் 9610 kHz அலைவரிசைகளில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த நேரத்தில் 11685 மற்றும் 13600 kHz ஆகிய பழைய அலைவரிசைகள் தற்போது மாற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து, 8.30 முதல் 9.30 வரை 7360 மற்றும் 9490 kHz அலைவரிசைகளில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது; இது முன்னதாக 9690 மற்றும் 11685 kHz இல் ஒலிபரப்பப்பட்டு வந்தது.

சமய ஒலிபரப்புகளில் வத்திக்கான் வானொலி மற்றும் அட்வென்டிஸ்ட் உலக வானொலி (AWR) முக்கிய பங்கு வகிக்கின்றன. வத்திக்கான் வானொலி 8.20 முதல் 8.40 வரை 15490 மற்றும் 17790 kHz அலைவரிசைகளில் 250 kW திறனுடன் வத்திக்கானின் SMG தளத்திலிருந்து இந்தியாவிற்காக நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்கிறது. அதேபோல், அட்வென்டிஸ்ட் உலக வானொலி குவாமின் (Guam) அகத் (Agat) தளத்திலிருந்து 8.30 முதல் 9.00 வரை 15530 kHz அலைவரிசையில் 100 kW திறனுடன் தமிழ்நாட்டை இலக்காகக் கொண்டு தனது சேவையை வழங்குகிறது.

இந்தச் சிற்றலைத் தமிழ் சேவைகள் தொழில்நுட்ப ரீதியாக 100 kW முதல் 250 kW வரையிலான ஆற்றலைப் பயன்படுத்துவதால், இவை தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தெளிவாகக் கிடக்கிறது. 'DX South Asia' வழங்கும் இந்தத் தகவல்கள் 2026 மார்ச் 29 நிலவரப்படி இங்கு வழங்கியுள்ளேன். சர்வதேச அளவில் சிற்றலையில் தமிழ் நிகழ்ச்சிகளைக் கேட்க விரும்பும் நேயர்களுக்கு இந்த அலைவரிசைகள் இன்றும் ஒரு சிறந்த பாலமாகத் திகழ்கின்றன. வரும் காலத்தில் சிற்றலை ஒலிபரப்புகள் இருக்குமா என்பது ஐயமே. எனவே இன்றே இவற்றை ஒலிப்பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். இந்திய நேயர்களுக்காக மற்ற மொழிகளில் ஒலிபரப்பு செய்யும் வானொலிகளின் பட்டியலை இந்த இணைய தளத்தில் காணலாம்.

https://qsl.net/vu2jos/DXSA1.htm

No comments: