Showing posts with label பிபிசி உலக சேவை. Show all posts
Showing posts with label பிபிசி உலக சேவை. Show all posts

Thursday, April 13, 2017

பிபிசி தமிழோசை வானொலியின் சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்படுகிறது

பிபிசி உலக சேவை வரலாற்றில் மிக நீண்ட காலம் நடத்தப்பட்டு வந்த மொழிப் பிரிவுகளில் ஒன்றான தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு, இந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியோடு நிறுத்தப்படுகிறது.



கடந்த 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிபிசி தமிழோசை வானொலிச் சேவையின் சிற்றலை ஒலிபரப்பு, இந்த ஆண்டுடன் ஏறக்குறைய 76 ஆண்டுகளை தொடுகிறது.
சிற்றலை என்ற தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்படும் வானொலிச் சேவைகள், இந்தியா மற்றும் இலங்கையில் தொலைக்காட்சி, இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் ஆதரவை இழந்து வருவதே தமிழோசையின் ஒலிபரப்பு நிறுத்தப்படுவதற்கான காரணமாகும்.

ஆனால் தற்போது இலங்கையின் சக்தி எஃப் எம் மூலம் நடத்தப்பட்டு வரும் பிபிசி தமிழின் ஐந்து நிமிட பண்பலை ஒலிபரப்பு தொடரும்; அதில் எந்த மாற்றங்களும் இல்லை.
பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்புகள் 1980களிலிருந்து இலங்கையின் போர்க் காலத்தில் அப்பகுதி மக்களுக்கு ஓர் இன்றியமையாத முக்கிய சேவையை ஆற்றி வந்தன;
அந்த காலக்கட்டத்திலும், அதற்கு முன்னும் சங்கர் என்கிற சங்கரமூர்த்தி தலைமையில், ஷேக்ஸ்பியர் மற்றும் பெர்னாட்ஷா போன்றோரின் நாடக மொழிபெயர்ப்புகள் மற்றும் பிற சஞ்சிகை வடிவ நிகழ்ச்சிகளுக்கு பெயர் போனதாக பிபிசி தமிழோசையின் நிகழ்ச்சிகள் இருந்தன.
பின்னர் 1990களின் பிற்பகுதியில் முழுமையான செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான செய்தி ஒலிபரப்பாக தமிழோசை மாறியது.
இந்த நீண்ட வரலாற்றில் பிபிசி தமிழோசைக்கு ஆதரவளித்து வந்த நேயர்களுக்கு பிபிசி தமிழ் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் தொலைக்காட்சி, இணையம் மற்றும் சமூக ஊடகம் போன்ற நவீன தளங்களில் பிபிசி தமிழை தொடர்ந்து ஆதரிக்குமாறு நேயர்களை கேட்டுக் கொள்கிறோம்.
Source: bbctamil.com

Friday, August 24, 2012

80 வயதை எட்டும் பிபிசி உலக சேவை

பிபிசி உலக சேவை வானொலியானது பிபிசியின் சாம்ராஜ்ஜிய சேவையாக 1932ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தது. அந்தக் காலத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருந்த சிற்றலை ஒலிபரப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைதூரப் பிரதேசங்களுக்கு இந்த வானொலி ஒலிபரப்பப்பட்டது. இந்த வானொலியில் வரும் செய்திகள் சிறப்பாகவோ சுவாரஸ்யமாகவோ இருக்காது என்று பிபிசியின் அந்நாளைய தலைமை இயக்குநர் ஜான் ரீத் கணித்திருந்தாலும், அக்கணிப்பு பொய்யாகிப்போய் லண்டனின் பிராட்காஸ்டிங் ஹவுஸில் இருந்து ஒலிபரப்பபட்ட இந்த வானொலிக்கு நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தன.
இந்த வானொலி ஆரம்பிக்கப்பட்டு ஆறே நாட்களில் பிரிட்டனின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்த வானொலியில் சாம்ராஜ்ஜியத்து மக்களுக்கு தனது நத்தார் வாழ்த்துக்களை வழங்கினார்.

பிரிட்டிஷ் மாமன்னரோ மஹாராணியோ தமது சாம்ராஜ்ஜியப் பிரஜைகளிடம் பிபிசி உலக சேவை மூலமாக கிறிஸ்துமஸ் உரையாற்றுவது என்பது ஒரு பாரம்பரியமாகவே மாறிப்போனது.

பிபிசியின் சரித்திரத்தில் மாபெரும் வெற்றி கிடைத்த நிகழ்ச்சிகளாக மன்னர் மக்களுக்கு ஆற்றிய உரைகள் அமைந்தன.
1940ல் ஜெர்மனியின் ஹிட்லர் தலைமையிலான நாஜிப் படைகளிடம் பிரான்ஸ் சரணடைய நேர்ந்தது. அப்போது பிரான்ஸை விட்டு வெளியேறிய பிரஞ்சு இராணுவத் தளபதி சார்ல் த கோல் லண்டன் பிராட்காஸ்டிங் ஹவுஸில் இருந்தபடிதான் பிரஞ்சு மக்களுக்கு உரையாற்றி வந்தார்.

ஒவ்வொரு நாளும் ஐந்து நிமிடங்கள் என தொடர்ச்சியாக நான்கு வருடங்களுக்கு அவரது உரை பிபிசி உலக சேவையில் ஒலிபரப்பப்பட்டு வந்தது.
இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தினால் பிபிசி சாம்ராஜ்ஜிய சேவை பிபிசியின் கடல் கடந்த வானொலிச் சேவையாக புதிய பெயர் பெற்றது. அரபு மொழி, தென்னமெரிக்கர்களுக்கான ஸ்பானிய மொழிச் சேவை, ஜெர்மன், பிரஞ்சு, போர்ச்சுகீஸியச் சேவை மற்றும் பல புதிய மொழிகளில் ஒலிபரப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. 1940 ஆண்டின் இறுதியில் பிபிசி கடல் கடந்த சேவையில் மொத்தம் 34 மொழிச் சேவைகள் இருந்தன.
பிராட்காஸ்டிங் ஹவுஸுக்கு வெளியே 1940 டிசம்பரில் ஒரு நிலக்கண்ணி வெடித்து தீ மூண்டு, கட்டிடம் சேதம் அடைய, பிபிசி கடல் கடந்த சேவை புஷ் ஹவுஸுக்கு 1941ல் இடம் மாறியது. அந்த மாற்றத்தை ஒட்டி புதிதாக தமிழ் சேவையான தமிழோசையும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அது முதல் கடந்த 71 வருடங்களாக இந்நிறுவனத்தின் தலைமையகமாக விளங்கிவருவது புஷ் ஹவுஸ்தான்.

1960களில் டிரான்ஸிஸ்டர் தொழில்நுட்பத்தின் வரவால் கையில் சுமந்துசெல்லக்கூடிய அளவுக்கு சிறியதாகவும், மின் கலங்களின் சக்தியைக் கொண்டே இயங்கக்கூடியதாகவும் வானொலிப் பெட்டிகள் உருமாறின. சமானியர்கள் எல்லோர் கைகளிலும் ரேடியோ புழங்க ஆரம்பித்தது. உலகெங்கிலும் இருந்து ஏராளமான புதிய நேயர்கள் கிடைக்க கடல் கடந்த சேவை பிபிசியின் உலக சேவையாக புதுப் பெயரும் புதுப் பொலிவும் பெற்றது.


பிபிசி உலக சேவையானது தனது எண்பது வருட சரித்திரத்தில் 68 மொழிகளில் ஒலிபரப்புகளைச் செய்துள்ளது. இந்த எண்பது வருடத்தில் உலக சரித்திரத்தை திசை திருப்புவதாக நடந்த பல சம்பவங்கள் பற்றியும் அந்தந்த இடங்களில் இருந்து உடனடியாக செய்தி வழங்கும் ஒரு சேவையாக பிபிசி உலக சேவை விளங்கிவந்துள்ளது. பெர்லின் சுவர் விழுந்த சமயத்தில் அங்கும் பிபிசி உலக சேவையின் செய்தியாளர் இருந்தார்.
1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோவியத் ஒன்றியத்தின் அப்போதைய அதிபரான மிக்காயல் கோர்பஷெவ் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் அங்கமாய் மூன்று நாள் முற்றுகையிடப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் வெளியுலகில் நடப்பதை அறிந்துகொள்வதற்கான ஒரே வழியாக இருந்தது பிபிசி உலக சேவையின் ரஷ்ய மொழி ஒலிபரப்பு மட்டும்தான். பிபிசி நிகழ்ச்சிகள் தனக்கு மிக முக்கிய சேவையை வழங்கியதாக பின்னர் கோர்பஷெவ் குறிப்பிட்டிருந்தார்.

கோர்பஷெவ்வின் கருத்து பிபிசி உலக சேவையின் நிகழ்ச்சித் தரம் மற்றும் ஒலித் தரத்துக்கு ஒரு பெரிய பாராட்டாக அமைந்தது.
பிபிசி உலக சேவை எண்பதாவது வருடத்தில் கால் பதிக்கும் இந்த நேரத்தில் நிகழ்ச்சிகள் மீண்டும் லண்டனின் பிராட்காஸ்டிங் ஹவுஸுக்கு இடம் மாறவுள்ளன. பழைய பிராட்காஸ்டிங் ஹவுஸ் உள்ள இடத்திலேயே அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்துக்கு பிபிசியின் ஏனைய அங்கங்களைப் போல உலக சேவையும் செல்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் பிபிசி தமிழோசையும் இந்தப் புதிய கட்டிடத்திலிருந்து செயல்படும்.


ஏராளமான புதிய வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என உலகில் தகவல் ஊடகங்கள் பல்கிப் பெருகிவிட்டன என்றாலும், சுதந்திரமான, நடுநிலையான, துல்லியமான செய்திகளுக்கு உலகின் பல பாகங்களிலும் மக்கள் சார்ந்திருக்கின்ற ஒரு முக்கிய செய்தி ஆதாரமாக இன்றளவும் பிபிசி உலக சேவை விளங்குகிறது.

Wednesday, August 10, 2011

பிபிசி கேட்கும் நேயர்களின் எண்ணிக்கை சரிவு

பிபிசி உலக சேவை சமீபத்தில் தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளனர். 186 மில்லியன் நேயர்களைக் கொண்ட பிபிசி 14 மில்லியன் நேயர்கள்களை இழந்து தற்பொழுது 164 மில்லியன் நேயர்களை மட்டுமே தன்னகத்தே கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் அதே சமயத்தில் தனது இணையதளத்தினை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது பிபிசி. ஐந்து வெளிநாட்டு மொழிகளை நிறுத்தவுள்ளதாக அறிவித்தப் பின்பே இந்த சரிவு ஏற்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Sunday, August 24, 2008

சர்வதேச வானொலிகளில் இருந்து எமக்கு வந்தவை-1

இந்தியா : ஃபீபா வானொலி: சகோதரி செல்வி அவர்களின் கடிதம், மற்றும் நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

ஜெர்மனி : வாய்ஸ் ஆப் ஜெர்மனி : Margot Forbes அவர்களின் கடிதம் , ஜெர்மனி வானொலிப் பற்றிய புதிய பாக்கெட் புத்தகம், கைப்பை, பேட்ஜ், பேனா, ஜெர்மனி Map, டி.சர்ட், பாட்டில் திறப்பான், கீ செயின் உலகப் பந்து, செல்போன் தொங்கான், மாணிட்டரிங் படிவம்.

செக் குடியரசு : ரேடியோ பிராக்: புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், 85-ஆவது ஆண்டு சிறப்பு வண்ண அட்டை மற்றும் பென்சில் சீவும் கத்தி.

சீனா : சைனா ரேடியோ இண்டர்நேசனல் (தமிழ் பிரிவு): சீனத் தமிழொலி இதழ், ஒலிம்பிக் வண்ண அட்டை, சகோதரி மீனா அவர்களின் கடிதம், இலவச கடித உரைகள்.

இந்தியா : டிராண்ஸ் உலக வானொலி: கிருஸ்துவ இலக்கியப் புத்தகம், நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

ஆஸ்திரேலியா : சி.வி.சி. வானொலி : டி.சர்ட், தொப்பி, டவல், கங்காரு பொம்மை, பேனா, கைப் பட்டை ரப்பர்-2, 2008 நாள்காட்டி, பூமராங், ஸ்டிக்கர், கிருஸ்துவ இலக்கிங்கள் , சி.டி .

அமெரிக்கா : வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா : புதிய நிகழ்ச்சி நிரல் புத்தகம், புத்தக வடிவ நாள்காட்டி.

வத்திகான் : வத்திகான் வானொலி : தமிழ் மற்றும் ஆங்கில மாத இதழ்கள்.

ஆஸ்திரேலியா : ஹெச்.சி.ஜெ.பி : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், இலவச கடித உரை, செய்தி இதழ், வண்ண அட்டை, தபால் தலைகள்.

இங்கிலாந்து : ஃபீபா வானொலி : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

கனடா : ரேடியோ கனடா இண்டர்நேசனல் : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், ஸ்டிக்கர்.

அமெரிக்கா : கிறிஸ்துவ அறிவியல் சென்டினல் ரேடியோ : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், சென்டினல்இதழ்கள்.

இங்கிலாந்து : பிபிசி உலக சேவை (ஆங்கிலப் பிரிவு) : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

நெதர்லாந்து : ரேடியோ நெதர்லாந்து : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், வெவ்வேறு வண்ணங்களில் மூன்று சிறிய ஸ்டிக்கர்கள்.