Wednesday, October 01, 2014

லண்டன் BBC தமிழோசையைக் காக்க, கை தாருங்கள்..!

BBC_Tamilosai                                                                                                                                                                                                             கடந்த 74 ஆண்டு காலமாக லண்டனில் இருந்து இயங்கி வரும் தமிழோசையை இந்தியத் தலை நகர் டெல்லிக்கு நாடு கடத்த BBC நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

வாரம் இரண்டு நாள் 15 நிமிட ஒலிபரப்பு என இருந்து வந்த தமிழோசை தினமும் 30 நிமிடம் என வளர்ந்தது இலங்கையில் நடந்த போருடன் சேர்ந்து.

ஆனால் தற்போது சைக்கிள் டைனமோ சக்தியில் செய்தி கேட்ட மக்களை விட்டு தமிழோசையை 'India Policy' எனும் திட்டத்தின் கீழ் இந்திய சாகரத்துக்குள் சேர்த்து விட BBC நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

ஈழத்தமிழரைப் பொறுத்தவரை உள்ள ஒரே ஒரு பக்க சார்பற்ற சர்வதேச தமிழ் செய்தி நிறுவனம் தமிழோசை தான். இது இலங்கை அரசியலில் பல்வேறு பட்ட தரப்பினரின் ஆதரவையும், அதே சமயம் விமர்சனத்தையும் தமிழோசை பெறுவதன் மூலம் தெளிவாகிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு மட்டுமன்றி முஸ்லிம் சிறுபான்மையின மக்களுக்கும் BBC தமிழோசை இன்னமும் அவசியமானதாக உள்ளது.

இந்த நிலையில் தமிழோசையை லண்டனில் இருந்து டெல்லிக்குக் கொண்டு செல்வது தமிழ் பேசும் இலங்கை சிறுபான்மை சமூகங்களுக்கு பெரும் இழப்பு.
BBC சிங்கள சேவை லண்டனில் இருக்க, தமிழோசையை மட்டும் டெல்லிக்கு அனுப்புவது அந்த சேவை அதிகம் தேவைப்படும் மக்களுக்கு பெரும் இழப்பாக இறுதியில் அமையும்.

India Policy எனும் பெரிய இந்திய சமுத்திரத்துக்குள் தமிழோசை விழுந்து அமிழ்ந்து விடாமல் இருக்க….

***தயவுசெய்து BBC நிர்வாகத்துக்கும், UK நாடாளுமன்றத்துக்கும் அனுப்புவதற்கான இந்த petitionஇல் உங்கள் பெயரையும் பதிவு செய்யுங்கள். அத்துடன் இந்த petitionஐ உங்கள் Facebook இலும் share பண்ணுங்கள்.. http://www.petitions24.com/signatures/save_the_london_bbc_tamil_broadcast/start/0

Source: http://www.athirady.com/

அகில இந்திய வானொலி ஒலிபரப்பு டிஜிட்டல் மயமாக்கப்படும்: மத்திய அமைச்சர் பேட்டி

கேபிள் டி.வி. ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
இதுகுறித்து அவர் டெல்லியில் நேற்று கூறும்போது, “கேபிள் டி.வி. ஒளிபரப்பை டிஜிட்டல் மய மாக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. 2015-ல் 3-ம் கட்டப் பணிகளும் 2016-ல் 4-வது கட்டப் பணிகளும் நிறைவு பெறும்.
இப்பணிகளை தாமதப்படும் நோக்கம் எனது துறைக்கு இல்லை. கிராமப்புற மக்களும் டிஜிட்டில் ஒளிபரப்பை பெறவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
ஊடகம் மற்றும் கேளிக்கை துறையில் மிகப்பெரிய வளர்ச் சிக்கு வாய்ப்புள்ளது. இத்துறை யில் தற்போது ரூ. 5 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட் டுள்ளது. 2020-ல் இந்த முதலீடு இரு மடங்குக்கும் அதிகமாக இருக்கும்.
அகில இந்திய வானொலி ஒலிபரப்பு மற்றும் தூர்தர்ஷன் ஒளிபரப்பு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இவற்றின் சிறந்த நிகழ்ச்சிகள் இணைக்கப்பட்டு, புதிய பெயரில் மொபைல் அப்ளிகேஷன்களிலும் தரப்படும்.
பண்பலை வானொலியில் செய்தி
பண்பலை வானொலி சேவையில் 3-வது கட்டமாக 294 நகரங்களில் 839 புதிய வானொலி நிலையங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதற்கான ஏலம் வரும் டிசம்பருக்கு முன் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். தனியார் பண்பலை வானொலிகளுக்கு செய்திகள் ஒலிபரப்பும் உரிமை தரப்படும். முதல்கட்டமாக இவர்கள் அகில இந்திய வானொலி செய்திகளை ஒலிபரப்பலாம். இதற்கு கட்டணம் வசூலிக்க மாட்டோம்” என்றார்.
இலவச செய்தி எஸ்எம்எஸ்
அகில இந்திய வானொலியின் இலவச செய்தி எஸ்எம்எஸ் சேவையை அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்.
ஏற்கெனவே ஆங்கிலத்தில் இலவச செய்தி எஸ்எம்எஸ் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தி, மராத்தி, சமஸ் கிருதம், டோக்ரி, நேபாளி ஆகிய 5 மொழிகளில் இச்சேவை தொடங் கப்பட்டுள்ளது.

Published: September 20, 2014 10:43 IST

Source: http://tamil.thehindu.com/

Tuesday, September 30, 2014

சொல்லத் தோணுது: வானொலிக் காதலி


நான்கு வயதில் நான் பார்த்த முதல் சினிமா 'பெற்றால்தான் பிள்ளையா'. மாடு மேய்க்கும்போதும் பள்ளிக்குப் போகும்போதும் தோளில் வானொலிப் பெட்டியோடு அலைந்தவன்.
எனக்குத் தெரியாத பாடல்களே இல்லை என்று அடித்துச் சொல்லலாம். 5-ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த என்னை, எங்கள் ஊர் உயர்நிலைப் பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியர் அழைப்பதாக கூட்டிக்கொண்டுப் போனார்கள். அனைத்து ஆசிரியர் களுக்கும் இடையில் சின்னஞ் சிறுவனாகிய என்னைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.
'ஆகாய வீதியில்… அழகான வெண் ணிலா…' இது எந்தப் படத்தின் பாடல்? யார் யார் பாடினார்கள் என்று கேட்டார் கள். அவர்களுக்குள்ளான பந்தயத்தில், என் பதிலை வைத்து ஒரு முடிவுக்கு வரக் காத்திருந்தார்கள்.
சற்றும் யோசிக்காமல், படம் 'மஞ்சள் மகிமை'. பாடியவர்கள் பி.சுசீலா, கண்டசாலா எனச் சொன்னதும், தமிழாசிரியர் சுப்பிரமணியம் என்னைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டார். சரியான பதிலைச் சொன்னதற்காக 5 ரூபாயைப் பரிசாகக் கொடுத்தார்கள்.
'பத்திரக்கோட்டை தங்கராசு' என்று சொல்லாத வானொலியே அந்த நாளில் இல்லை. ரேடியோ மாஸ்கோ (ரஷ்யர), ரேடியோ பீகிங் (சைனா), ரேடியோ வெரித்தாஸ் (மணிலா), ரேடியோ கோலாலம்பூர் (மலேசியா), இலங்கை வானொலி, ரேடியோ பிபிசி என அனைத்து வானொலிகளுக்கும் கடிதம் எழுதி, என் பெயரைக் கேட்பதிலேயே அப்போது என் காலம் கழிந்துகொண்டிருந்தது. அதிகாலை 4 மணிக்கே எழுந்து உட்கார்ந்துகொண்டு ரேடியோ கோலாலம்பூர் கேட்க ஆரம்பித்துவிடு வேன். பாதிப் பாடல்தான் தெளிவாகக் கேட்கும். மீதியைக் கேட்க கண்களை மூடிக்கொண்டு அதன் கொர... கொர... சத்தத்தோடு கற்பனையில் நானும் ஒன்றிவிடுவேன்.
என் பெரிய அண்ணன் மெட்ராஸ் மூர் மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்திருந்த இங்கிலாந்து வால்வு ரேடியோதான் எனக்குத் தோழனாக இருந்தது. எப்படியும் குறைந்தது 15 கிலோ எடை இருக்கும். ஒரு நிலையில் வைத்தால் பாடல் தெளிவாகக் கேட்காது என்பதால், எல்லாத் திசைகளிலும் திருப்பிப் பார்த்து, பின் தலைகீழாகவும் கவிழ்த்து வைத்துவிடுவதும் உண்டு. இந்த வானொலிப் பெட்டியைப் பாடாய்ப்படுத்தியதாலேயே என் அண்ணன்களிடம் கணக்கில்லாத அடி, உதை வாங்கியிருக்கிறேன். அழகுப் பெட்டகமாக இருந்த வானொலிப் பெட்டி அதன் கடைசிக் காலத்தில் உருக்குலைந்து, மேல்பகுதி இல்லாமல் வெறும் எலும்புக்கூடாகக் கிடந்தும்கூட அதனால் முடிந்தவரை பாடிக்கொண்டேதான் இருந்தது.
இருப்பதிலேயே மிகப் பெரிய சவுக்கு மரத்தினை வெட்டிவந்து, அதன் உச்சியில் ஒரு கம்பியைக் கட்டி, ஒயர் ஒன்றினை இணைத்து ஏரியல் ஏற்பாடு செய்திருந்தோம். செடிக்குத் தினமும் தண்ணீர் ஊற்றுவதைப் போல் வானொலிப் பெட்டியில் இருந்து தரைக்குள் இழுத்து புதைக்கப்பட்ட ஒயருக்கும் தண்ணீர் ஊற்றுவது தினசரி என் முதல் கடமையாக இருந்தது.
எல்லாப் பிள்ளைகளும் நேரத்துக்கு பள்ளிக்குச் சென்றுவிட்டாலும் நான் மட்டும் எதையோ படிக்கிற மாதிரியோ, எழுதுகிற மாதிரியோ பாவனை செய்தபடி வானொலியின் காலை இறுதி நிகழ்ச்சியான 'பொங்கும் பூம்புனல்' பாடல்களைக் கேட்டுவிட்டுத்தான் பல நாட்கள் பள்ளிக்குப் போயிருக்கிறேன். பாவிகள்! காலை 9.30-க்குத்தான் நல்ல நல்லப் பாடல்களாக ஒலிபரப்புவார்கள். அதிலும் இந்த இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா வந்து விட்டால் அன்றைக்கு எந்தப் பரீட்சை யாக இருந்தாலும் அந்த இடத்தைவிட்டு நகரவே மாட்டேன். என் தொல்லை தாங்காமல் ஒருநாள் என் அப்பா, விறகு உடைக்கும் கோடாரியோடு வந்துவிட்டார். சொல்லிச் சொல்லிப் பார்த்துவிட்டு இறுதியாக பாடிக்கொண் டிருந்த இங்கிலாந்து வானொலிப் பெட்டியைப் பார்த்து கோடாரியாலேயே ஒரு போடு போட்டார். அன்றோடு அதன் ஆயுள் முடிந்தது.
எப்படி ஒன்றுக்குள் ஒன்றாகப் பழகி உயிரோடு இணைந்துவிட்ட காதலியை மறக்க முடியாதோ, அப்படித்தான் நானும் என் வானொலிப் பெட்டியை மறக்க முடியாமல் அலைந்தேன். இன்று நான் போகிற இடங்களில் எல்லாம் அலுவலகமானாலும், வீடானாலும் எல்லா அறைகளிலும் வெவ்வேறு வடிவங்களில், உருவங்களில் பாடல்களைக் கேட்கும் கருவிகள் இருந்தாலும் எதிலும் நாட்டமில்லை. என் மனது இளம் பருவத்திலேயே சிக்கித் தவிக்கிறது. அழகுத் தமிழ் பேசி ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம் சொல்லி ஒலிபரப்பும் அறிவிப்பாளர்களின் குரல் கேட்க மனம் அலைகிறது.
பண்பலை எனச் சொல்லி இன்று என் மொழியை சீர்குலைத்து கொலை செய்யும் போக்கினைக் கண்டு கொதித்துப் போயிருக்கிறேன். வானொலியைத் தொடவே அச்சமாக இருக்கிறது. தமிழை ஆங்கிலம் மாதிரி உச்சரிப்பதும், ஆங்கிலத்தோடு கலந்து பேசுவதும்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?
ஒரு மொழி என்பது காலம் காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட ஓர் இனத்தின் சொத்து. மொழி, பண்பாடு, கலாச்சாரம், அரசியல் அறிவு எதுவுமே இல்லாமல் இவர்கள் பணம் பறிப்பதற்காக இந்தப் பிழைப்பு பிழைப்பதை எவ்வாறு அனுமதிப்பது? இந்தக் கூட்டத்தைப் பார்த்து தனியார் தொலைக்காட்சிகளும் இந்த மொழிக் கொலையைச் செய்கின்றன. பணம் கொடுத்து, எவ்வளவு விலையானாலும் எதையும் வாங்கிக் கொள்ளலாம் என்பது மாதிரி மொழியை விலைக்கு வாங்கிவிட முடியுமா?
ஒருத்தரும் இதைப் பற்றி சிந்திப்பது இல்லை; பேசுவதும் இல்லை; கண்டனக் குரல் எழுப்புவதும் இல்லை. அடித்தட்டு மக்களிடத்தில்தான் தமிழ் கொஞ்சமாவது பிழைத்திருந்தது. இப்போது இந்த மொழிக் கொலையால் மேலும் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. என் மக்களும் அது போலவே வேறுமொழி கலந்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
இவர்களின் பேச்சு போலவேதான் இவர்கள் ஒலிபரப்புகிற பாடல்களும் இருக்கிறது. பேசுகிறார்களா? பாடுகிறார் களா? அது எந்த மொழிப் பாடல்? எதைப் பற்றி பாடுகிறான்? யாருக்காகப் பாடு கிறான் என்று எதுவுமே புரியாமல் எல்லா தனியார் வானொலிகளும் இதையே தான் போட்டு கத்திக்கொண்டிருக் கிறார்கள். அதிலும் ஒரு வானொலி தமிழ் மக்களைப் பார்த்து மச்சான் (மச்சி) எனச் சொல்லி அழைக்கிறது. ஒரு நடிகை தமிழர்களைப் பார்த்து மச்சான் என அழைக்கிற மாதிரி இரண்டுமே வடநாட்டு கைங்கர்யம்தான்.
நானும் நீங்களும் இப்படிப்பட்ட வானொலிகளிடமிருந்து தப்பித்துவிட லாம். நம் மொழி தப்பிக்க என்ன செய்யப் போகிறோம்?

எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmail.com

Wednesday, September 24, 2014

வானொலியில் எனது முதல் நிகழ்ச்சி

விஜயதசமி நாளான அக்டோபர் 3-ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, வானொலி மூலம் உரை நிகழ்த்துகிறார்.
இதுகுறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது: "வானொலியில் எனது முதல் நிகழ்ச்சி அக்டோபர் 3-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகிறது. அப்போது, எனது சில சிந்தனைகளை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் உரை, அனைத்திந்திய வானொலி நிலையத்தின் மூலம் ஒலிபரப்பப்படும் எனத் தெரிகிறது. இதற்கு முன்பு, ஆசிரியர் தினத்தன்று மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தயில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
எதிர்வரும் வானொலி நிகழ்ச்சிக்காக, பிரதமருக்கு தங்கள் கருத்துகளையும், மேம்பாட்டு முறைகள் குறித்த தங்களின் ஆலோசனைகளையும் மக்கள் பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, அரசின் இணையதளமான mygov.nic.in என்ற முகவரியைத் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம் என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First Published : 24 September 2014 03:44 AM IST
நன்றி http://www.dinamani.com/

Monday, September 22, 2014

எப்.எம். சேனல்களில் ஏ.ஐ.ஆர். செய்திகளை ஒலிபரப்ப அனுமதி: மத்திய அரசு

எப்.எம் ரேடியோ செனல்களில் ஆல் இந்திய ரேடியோ (ஏ.ஐ.ஆர்.) செய்திகளை ஒலிபரப்ப அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறும்போது, "தற்போது எப்.எம். சேனல்களில் போக்குவரத்து மாற்றங்கள், அரசு திட்டங்கள் போன்றவை அறிவிப்புகளாக வெளியிடப்படுகின்றன.
ரோடியோவில் செய்தி வெளியிட அனுமதி தேவை என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனை நடைமுறையாக்க, ஆல் இந்தியா ரேடியோ செய்திகளை பெற்று, பின்னர் அதனை தனியார் ரேடியோ சேனல்கள் வெளியிடலாம்" என்றார்.
இந்த நடைமுறையில் நாளடைவில் மேலும் விரிவான மாற்றங்களை கொண்டு வர இந்த திட்டம், முதல்படியாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

Thursday, August 21, 2014

சீன வானொலியின் மூத்த ஹிந்தி அறிவிப்பாளர் மறைவு

சீன சர்வதேச வானொலி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட "ரேடியோ ஆஃப் பெய்ஜிங்'கின் ஹிந்தி அறிவிப்பாளராகப் பணியாற்றிய ஷியாமா வல்லப் உடல்நிலை சரியில்லாமல் திங்கள்கிழமை காலமானார்.
இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷியாமா வல்லப். இவர் தனது கணவரும் ஹிந்தி மொழி அறிஞருமான ஜானகி வல்லபுடன் கடந்த 1958-ஆம் ஆண்டு சீனாவில் குடியேறினார். அங்கு "ரேடியோ ஆஃப் பெய்ஜிங்'கில் ஹிந்தி அறிவிப்பாளராக கடந்த 1962-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
சீனாவின் வெளிநாட்டு மொழிகளுக்கான அமைப்புடன் நீண்ட காலம் தொடர்பில் இருந்த ஷியாமா வல்லப், குழந்தைகளுக்கான பல சித்திரக் கதைப் புத்தகங்களை ஹிந்தியில் வெளியிட்டுள்ளார்.
தகவல் http://www.dinamani.com/

Thursday, August 14, 2014

விடைபெற்ற ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்

நம்மிடமிருந்து விடைபெற்ற மற்றுமொரு 'வானொலிக் கலைஞன்'
 
இலங்கை வானொலியின் ஆரம்ப கால அறிவிப்பாளர்களில் ஒருவராகிய திரு.ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் அவர்கள் 29.07.2014 இலங்கை  சிலாபம் அரச மருத்துவ மனையில் காலமானார். அன்னாருக்கு வயது 74 ஆகும். 

220px-Rajaguru.jpg 
இளமைக் காலத்தில் 

திரு.இரா.சே.கனகரத்தினம் திரு.கனகரத்தினம் அவர்கள் இலங்கை வானொலியில் மிகவும் பிரபலமான அறிவிப்பாளர் ஆவார். 1960 ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டுவரை சுமார் முப்பது ஆண்டுகள் பிரபல அறிவிப்பாளராகப்  பவனி வந்தார். இலங்கை வானொலியின் புகழ் பூத்த அறிவிப்பாளர்களாகிய கே.எஸ்.ராஜா, பி.எச். அப்துல் ஹமீத், மயில்வாகனம் சர்வானந்தா, வி.என்.மதியழகன், ஜோக்கிம் பெர்னாண்டோ, நடராஜா சிவம், ஜெயகிருஷ்ணா, ஜி.போல் ஆன்டனி, ராஜேஸ்வரி சண்முகம், சற்சொரூபவதி ஆகிய அத்தனை அறிவிப்பாளர்களுடனும் பணி புரிந்தவர் என்ற பெருமை மட்டுமல்லாது, இவர்கள் அத்தனை பேருக்கும் முன்னோடியும் ஆவார்.

இலங்கையின் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த முதலாவதுதமிழ் வானொலி அறிவிப்பாளர் ஆவார்.திரையிசைப் பாடல் வரிகளை சங்க காலப் பாடல்வரிகளோடு தொடர்பு படுத்தும் "பொதிகைத் தென்றல்" முதலான இலக்கியச் சுவையுள்ள நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியவர். திரையுலகின் பல கலைஞர்கள், கவிஞர்கள் பற்றிய பல சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கியவர்.

200px-RSKanagaratnam1.jpg 

வயது முதிர்ச்சியின்போது திரு.கனகரத்தினம் அவர்கள் பிறந்தது இலங்கையின் வடமேல் மாகாணத்தில் உள்ள சிலாபம் அருகே உள்ள 'மருதங்குளம்' என்னும் கிராமம் ஆகும். இவரது பெற்றோர் முத்தையா, பொன்னம்மாள் ஆவர். குடும்பத்தில் ஏழாவது பிள்ளை கனகரத்தினம். தந்தை முத்தையா தமிழ்நாடுஅரசவம்சத்தை சேர்ந்தவர்.கோட்டையை ஆண்ட காளியங்கராயர் என்ற பட்டயம் ஒன்றும் இவரது வீட்டில் இருந்தது. 'ராஜகுரு சேனாதிபதி' என்பது இவர்களின் குடும்பத்தின் பரம்பரைப்  பெயர்.மருதங்குளம் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் சென் மேரீஸ் கல்லூரியில் உயர்கல்வியைப் பெற்றார். இவர் திருமணம் ஆகாதவர்.

 அக்காலத்தில் இலங்கை வானொலியில் இணைந்திருந்தவர்களில் மிகுந்த இலக்கிய புலமை கொண்டவராகத் திகழ்ந்த ராஜகுரு அவர்கள், இதன் காரணமாக 

kanaga_rathinam001.jpg 
இசைஞானி இளையராஜா மற்றும், பி.எச்.அப்துல் ஹமீத் இவர்களுடன்

இரா.சே.கனகரத்தினம் அவர்கள்.
 இலக்கிய கண்ணோட்டத்துடன் பாடல்களை ஒலி பரப்பியதோடு, இலக்கியத் தரம் கொண்ட நிகழ்ச்சிகளையும் அறிமுகம் செய்தார். 'பொதிகைத் தென்றல்', 'காலைக்கதிர்', 'பாட்டொன்று கேட்போம்', இரவின் மடியில் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தினார்.பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடன் இதழில் இவரது 'ராஜகுரு சேனதிபதி' என்ற பெயரின் சிறப்பைக் குறிப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தார்கள். கடந்த 1988 ஆம் ஆண்டில் 'மனம் போன போக்கில்' என்னும் பெயரில் ஒரு சிந்தனை நூலையும்

f-8-4.jpg 
(இ-வ) பின்வரிசையில் - பெனடிக், ஜோசப் ராஜேந்திரன், மயில்வாகனம், மஹதி ஹசன், ஜோக்கிம் பெர்னாண்டோ, சந்திரமோகன், சண்முகம் அமர்ந்திருப்போர் - விசாலாட்சி ஹமீத், ராஜேஸ்வரி சண்முகம், பி. பி. தியாகராஜா, கனகரட்ணம் அப்துல் ஹமீத்.
 
வெளியிட்டிருந்தார்.இலங்கை வானொலி என்னும் மனம் மயக்கும் மந்திர ஊடகத்தில் இணைந்து மூன்று தசாப்தங்களாக எம்மையெல்லாம் மனம் மகிழச் செய்த அந்த வானொலிக் கலைஞனின் மறைவிற்கு அந்திமாலை ஆசிரிய பீடம் தனது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரின் இழப்பால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக.