Wednesday, July 15, 2009

புவிகாந்தப் புயல்

சூரியனில் ஏற்படும் பளிச்சிடும் வெடித்துச் சிதறலால் சூரியப் புயல் உண்டாகிறது. பல ஆயிரம் கி.மீ. வேகத்தில் அது பூமியை நோக்கி வந்து நம் பூமியின் காந்த மண்டலத்தினுள் நுழைந்து காந்த மண்டலத்தைக் கலக்கி புவிகாந்தப்புயலை ஏற்படுத்துகிறது. இந்தப் புவிகாந்தப் புயலை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1) முதலில் குறுகியகால நேர்மறை பகுதி:
காந்த மண்டலத்தின் சமதள காந்தக் கோடுகளின் பயனாய் (துருவப் பிரதேசங்களில்) - ""அரோரா போரியாலிஸ்'' என்ற ஒளிமிக்க வானத்தை ஏற்படுத்துகிறது. இது ஏறத்தாழ நம் விளையாட்டு போட்டிகளில் காணும் வண்ணமிகு வான வேடிக்கை போன்று தென்படும்.

2) எதிர்மறை பகுதி காந்த மண்டலத்தைத் தீவிரமாக்கி பல நாட்களுக்கு நிலை நிறுத்தி இருக்கச் செய்கிறது. அயன மண்டலத்தில் எலக்ட்ரான் செறிவூட்டுவதை கணக்கெடுப்பதன் மூலம், அயன மண்டலப் புயலுக்கும் புவிகாந்த மண்டலப்புயலுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அது ஏற்படும் நேரத்தை வைத்து அறியலாம்.

அயனமண்டலப் புயல் விண்ணில் தொலைதூர வானொலி தொடர்புக்கு நாம் பயன்படுத்தும் அதிக உயர அலை எண் அலைகளைப் பெரிதும் பாதிக்கிறது. மேலும் நாம் பயன்படுத்தும் உயர்ந்தபட்ச அலை எண்களை அயன மண்டலப் புயல் பாதிக்கிறது. அயன மண்டலப் புயல் புவியின் காந்தமண்டலப் புயலின் விளைவாக ஏற்படுகிறது. புவியின் காந்த மண்டலம் சூரிய வெடிப்புகளால் ஏற்படும் சூரியப் புயலின் விளைவாகக் கலக்கமடைந்து புயலாக மாறுகிறது. எனவே இவை ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது. அயன மண்டலப்புயலின் மிக முக்கியமான விளைவு F அடுக்கில் எலக்கட்ரான் செறிவு வெகுவாகக் குறைந்து விடுவது ஆகும். எனவே நம்மால் உயர் அலை எண்களில் அதிகமாக வானொலி ஒலிபரப்பு செய்ய இயலாமல் போகிறது.

பகல் நேரங்களில் நம் இந்திய நாட்டைப் பொறுத்தவரை, ஐரோப்பிய நாடுகள் காலை சுமார் 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் 11, 13, 16, 19 மீட்டர்களில் ஒலிபரப்பு செய்கின்றன. இதேபோல் நம் நாட்டுக்குக் கிழக்குப் பகுதியிலுள்ள பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் காலை சுமார் 6.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை உயர் அலை எண்களைப் பயன்படுத்துகின்றன. அயன மண்டலப்புயல் தாக்கும்போது, பகல்நேர ஒலிபரப்புகள் 11 மீட்டர் முதல் 19மீ வரை பாதிக்கப்படுகின்றன. எனவே வானொலி நிலையங்களைச் சரிவரத் தெளிவாகக் கேட்க முடியாது. திடீரென நன்கு தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்து வானொலி, ஒலித்தரம் குறைந்து மறையத் தொடங்கும்.
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்பிரமணி

Sunday, July 12, 2009

பூர்ணம் விஸ்வநாதன்

இவர் பேர் சொன்னால் இந்த தலைமுறையினருக்கு ""மகாநதி'' படம் ஞாபகத்திற்கு வரும். ஒரு தேர்ந்த குணச்சித்திர நடிகராக இன்றைய இளைய தலைமுறையினரால் அறியப்பட்டிருக்கும் பூர்ணம் விஸ்வநாதனுக்கு இன்னும் பிற முகங்களும் உண்டு.
ஆம்! நாடக நடிகர், தேர்ந்த வானொலி அறிவிப்பாளர். 50களில் பூர்ணம் விஸ்வநாதனின் குரல் மிகவும் பிரபலமானது. 50களில் அவர் குரல் மட்டுமல்ல, வானொலியும் மிகவும் பிரபலம்.

அக்காலத்தில் அந்தஸ்தின் அடையாளமாகவும், வீட்டின் அத்தியாவசிய பொருளாகவும் இருந்தது வானொலிப் பெட்டி. அப்போதெல்லாம் ஏராளமான பண்பலைகள் வரிசைகள் கிடையாது. அதனால் செய்திகள் கேட்கவும், பாடல் கேட்கவும், வீட்டுக்கு வீடு வானொலி பெட்டி அருகே குடும்பத்தினரின் அனைவரும் காத்திருப்பார்கள். அதனால் வானொலியில் ஒலிக்கும் குரல் அனைத்து நேயர்களின் இதயங்களோடு இணைந்து பேசியது.

தற்போதுள்ள லேட்டஸ்ட் வசதிகள் அக்காலத்தில் இல்லையென்றாலும், அறிவிப்பாளர்களுக்கு ராஜ மரியாதை கிடைத்தது. அப்படி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி "தென்கிழக்கு ஆசிய நேயர்கள் மத்தியில் முத்திரை பதித்தவர் பூர்ணம் விஸ்வநாதன். இரண்டாகம் உலகப் போர் நடந்தபோது ஆங்கிலேயப் படையினரால் ஏராளமான தமிழர்கள் உலகெங்கும் இடம் மாறியிருந்தார்கள். அந்தச் சூழ்நிலையில் கடல் கடந்து வாழ்ந்த தமிழர்கள் தாய்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளையும், உலகச் செய்திகளையும் தெரிந்து கொள்ள நாடியது வானொலி.
சிற்றலையில் புது தில்லியிலிருந்து ஒலிபரப்பான தென்கிழக்கு ஆசிய சேவை அப்பணியை சிறப்பாகச் செய்தது.

தென்கிழக்கு ஆசிய சேவை மூலம் உலகத் தமிழர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஒலித்த பூர்ணம் விஸ்வநாதன் காற்றோடு கலந்துவிட்ட ஒன்று. அவர் மறைந்தாலும் அவர் பணியை பாராட்டிக் கொண்டிருக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் நினைவில் வைத்திருக்கும். காரணம், இந்தியா 1947ல் சுதந்திரம் அடைந்ததை ""தென்கிழக்கு ஆசிய சேவை'' வானொலி மூலம் உலக தமிழர்களுக்கு அறிவித்த பெருமை பெற்றவர்.
- வண்ணை கே. ராஜா

Sunday, June 14, 2009

சூரியனை ஆராயும் செயற்கைகோள்கள்

விண்வெளியில் உள்ள கோள்கள் அனைத்தும் சூரியனை மையமாக வைத்தே சுழல்கின்றன. ஒவ்வொரு கோள்களும் தங்களுக்கு என வகுத்துள்ள வட்ட மற்றும் நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. சூரியனை அடுத்து மெர்க்குரி, வீனஸ், பூமி, மார்ஸ் (செவ்வாய்), ஜுபிடர், சனி, யுரேனஸ், நெப்டிïன் என்ற வரிசையில் கோள்கள் அமைந்துள்ளன. இது தவிர ஏராளமான துணைக்கோள்களும், நட்சத்திரங்களும், விண்கற்களும் விண் வெளியில் சுற்றி வருகின்றன. இத்தனை கோள்கள், நட்சத்திரங்கள் இருந்தாலும் பூமியில் மட்டுமே மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வசிக்கும் அமைப்பு உள்ளது. பூமி போல வேறு கோள்களில் உயிரினங்கள் இருக்கின்றதா? அல்லது இதற்கு முன்பு இருந்திருக்கிறதா? என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

விண்வெளி ஆராய்ச்சியில் தீவிர ஆர்வம் கொண்ட மனிதன் பல நூறு ஆண்டுகளாகவே அது குறித்து ஆய்வுகள் நடத்தி பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கின்றான். பூமிக்கு அருகில் உள்ள கோளான நிலவுக்குச் சென்று கால்பதித்தான் மனிதன். தற்போது அங்கு ஆய்வு நிலையத்தை அமைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றது. நிலவுக்குச்சென்றது போல சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய்க்கும் விஞ்ஞானிகள் ஆய்வுக்கலங்களை அனுப்பி உள்ளனர். இந்த ஆய்வுக்கலங்கள் செவ்வாயக் கிரகத்தில் இறங்கி பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றது. இதுபோல மற்ற கிரகங்களை ஆராயவும் மனிதன் செயற்கை கோள்களை அனுப்பி இருக்கின்றான்.

பல்வேறு அற்புதங்கள் நிறைந்த விண்வெளியில் மிகப்பெரிய அதிசயமாக திகழ்கிறது சூரியன். ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் நிரம்பிய சூரியன் நெருப்புக்கோளமாகவே உள்ளது. இதில் காணப்படும் கதிர்வீச்சும், காந்தப்புலனும் ஆபத்து நிறைந்தவை. எனவே எந்த ஒரு பொருளும், உயிரினமும் இங்கு நெருங்க முடியாது. எனவே வெகு தூரத்தில் இருந்தே டெலஸ்கோப் மூலம் சூரியனை ஆராய்ந்து வந்தனர். இப்போது சூரியனுக்கு கொஞ்ச தூரத்தில் இருந்து ஆய்வு நடத்த 2 செயற்கை கோள்களை அனுப்ப உள்ளனர். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையமும் , நாசாவும் இணைந்து இந்த செயற்கை கோள்களை அனுப்புகிறது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வுநிலையம் அனுப்பும் இந்த செயற்கைகோளுக்கு `சோலார் ஆர்பிட்டர்' என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். வருகிற 2015 ம் ஆண்டு இந்த செயற்கை கோள் சூரியனை நோக்கி தனது பயணத்தை தொடங்கும். சிறிய கார் அளவு இருக்கும் இந்த செயற்கை கோள் சூரியனின் வெப்பத்தினால் பாதிக்காத அளவுக்கு பாதுகாப்பு கவசம் கொண்டதாக தயாரிக்கப்படுகிறது. இது தவிர சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மற்றும் காந்தப்புல வீச்சினால் பாதிக்கப்படாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இந்த செயற்கை கோள் இருக்கும்.

சோலார் ஆர்பிட்டர் சூரியனை சுற்றி வந்து படம் பிடித்து அதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வுநிலையத்துக்கு அனுப்பி வைக்கும். மேலும் சூரியனின் துருவப்பகுதியையும் இந்த செயற்கை கோள் ஆய்வு செய்யும். சூரியனின் தரைப்பகுதியைவிட வெளிப்புற பகுதி ஏன் அதிக உஷ்ணமாக இருக்கிறது? சூரியனில் ஏன் நெருப்புக்கோள புயல், சூரியப்புள்ளி மற்றும் நெருப்பு பெருவெடிப்புகள் போன்றவை ஏற்படுகின்றன என்பது குறித்தும் ஆய்வுகள் நடைபெறும்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் அனுப்பும் செயற்கைகோளுக்கு `சோலார் புரோப் பிளஸ்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கலம் சூரியனின் மையப்பகுதி குறித்து ஆய்வுகளை நடத்தும். இந்த ஆய்வுகளின் முடிவில் சூரியன் குறித்த பல அதிசய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Source: http://www.dailythanthi.com)

Friday, June 12, 2009

சீனாவில் சுற்றுப்பயணம் செய்த கண்ணன் சேகர்க்கு பாரட்டு விழா


07.06.09 அன்று சீனாவில் சுற்றுப்பயணம் செய்த நண்பர் முனுங்கப்பட்டு கண்ணன் சேகர் அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட நேயர் மன்றம் பாரட்டு விழா நடத்தியது அதில் நாமக்கல் மாவட்ட நேயர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள் மற்றும் பல மாவட்ட நேயர்கள் தொலைபேசி மூலம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். மற்றும் அதன் நிழற்ப்படத்தை இத்துடன் இணைத்து இருக்கிறோம். (க.செந்தில், பேளுக்குறிச்சி / எஸ்.எம்.இரவிசந்திரன், சேந்தமங்கலம்)

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 9

நம் சூரியன் தன் சக்தியெல்லாம் இழந்து சிறிதாகிக் கொண்டே வரும்போது அது கரும்துளையாக மாறி மேற்கூறியது போல் அருகிலுள்ள அத்தனை கோள்களையும் தன் ஈர்ப்பு சக்தியால் உறிஞ்சிவிடும். அப்போது நம்மைச் சுற்றியுள்ள எல்லா கிரகங்களும் பூமி உள்பட சூரியனின் கரும்துளைக்குள் (ஸ்ட்ரா வைத்து ஜூஸ் உறிஞ்சப்படுவது போன்று) உறிஞ்சப்பட்டுவிடும். மறுபடியும் ஆற்றலின் ஏற்றதாழ்வுகளால் வெடிப்பு ஏற்பட்டு புது (சூரியன்கள்) விண்மீன்கள் பிறக்கும். இதுதான் நம் சூரிய குடும்பத்தின் பிறப்பும், இறப்பும் நிறைந்த தகவல்.

இதுவரை நாம் கண்டது. இத்தனை பெரிய ஆகாயமும் இதிலுள்ள எல்லா விண்மீன்களும், கேலக்ஸிகளும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் ஒரு சிறு புள்ளியிலிருந்து ஒரு பெரும் ஆற்றலிலிருந்து பிறந்து விரிந்து இருக்கின்றன. அன்று விரியத் தொடங்கிய ஆகாயம் இன்றும் விரிந்தபடி உள்ளது.

ஆகாயம் விரியும் போது அதிலுள்ள விண்மீன்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகி தள்ளிப் போக வேண்டும். அவற்றுக்கு இடையே உள்ள தூரம் பெருகிக்கொண்டே போக வேண்டும். செம்பெயர்ச்சி என்ற அறிவியல் அடிப்படையில் இதனை அளக்க முடியும். விண்மீன்கள் விலகும் வேகம், தூரம் ஆகியவைகளை அளக்க ஹப்புள் மாறிலியை உபயோகித்தனர். செமபீய்டு வேரியபுள் என்ற ஒரு வகை விண்மீன்கள் உள்ளன. இவை தொடர்ந்து கண் சிமிட்டிய படி இருக்கும். அது அமைந்திருக்கும் தொலைவுக்கேற்ப, அதன் கண் சிமிட்டல் வேகம் அமையும். இதைப் பயன்படுத்தி ஹப்புள் மாறிலியை கணக்கிட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில் இந்த பிரபஞ்சம் பிறந்த தேதியை சரியாக, துல்லியமாக கணக்கிட முடியும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

கடந்த 1995 முதல் 2004 வரை மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக இதுவரை 111 சூரியன்கள் அருகே கோளங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தாய் சூரியனின் குறுக்காக அக் கோளங்கள் நகர்ந்து கொண்டிருப்பது அறியப்பட்டுள்ளது.
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

Wednesday, June 10, 2009

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 8

ஒரு காலத்தில் நம் சூரியனில் போதிய ஆற்றல் உண்டாக்க அணுக்கருக்கள் தீர்ந்து போகும். அன்று நசுக்கத்தை ஈடு செய்ய வெப்ப விரிவு இல்லாது போய்விடும் உடனே நம் சூரியன் சுருங்கி முடிவில் சிறிய கொட்டைப் பாக்கு அளவுக்கு நொறுங்கிப் போய்விடும்! எனினும் எதுவுமே இல்லாத சூரியன் அல்ல அது. ஆரம்பத்தில் அந்த சூரியனில் இருந்த அதன் அளவற்ற எடையும், ஈர்ப்பு விசையும் அந்த சிறிய கொட்டைப் பாக்கு அளவு சூரியனுக்கும் இருக்கும்.

பல மில்லியன் சூரியன்கள் சேர்ந்து நசுங்கி மகா சக்தி வாய்ந்த மையக் கரும்துளைகள் உண்டாகி எப்போதும் இருந்து வருகின்றன. அவற்றைக் காண வானவியல் வல்லுநர்கள் பாடுபட்டு வருகிறார்கள்.

நல்ல வேளையாக நம் விண்வெளி வல்லுநர்கள் ஹப்புள் என்ற டெலஸ்கோப் அனுப்பியதுடன் மேலும் பல கோள்களை ஆராய செயற்கை கோள்களை அனுப்பி பல புதிய தகவல்களைப் பெற்றுள்ளனர். 3சி120 என்ற எண்ணுள்ள விண்மீன் குவியல் (கேலக்ஸி)நடுவில் ஒரு கரும்துளை ஆராய்ச்சி மேற்கொள்ளத் தக்கதாக ஒரு நிகழ்வு அமைந்தது. வாயைப்பிளந்தபடி பிரபஞ்சத்தின் நாடகக் காட்சிகளை வல்லுநர்கள் பார்த்து அதிசயித்தனர்.
கரும்துளைகளின் அபரிவிதமான ஈர்ப்பு விசையால் அதைச் சுற்றி உள்ள பொருள்களை எல்லாம் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும். (நீங்கள் ஸ்ட்ரா வைத்து ஜூஸ் உறிஞ்சுவது போல்). பள்ளத்தில் மண் சரிவது போல் மளமளவென்று அருகில் உள்ள பொருள்கள்யாவும் சரிந்து ஈர்க்கப்படும். தள்ளி நிற்கும் பொருள்கள் ஒரு வளையம் மாதிரி கரும்துளையைச் சுற்றி நின்று விடும். அதன்பிறகு பொருள் சரிவு மிதமாக தொடர்ந்து நடைபெறும்.

மேற்கூறிய வளையத்தை அக்ரீஷன் டிஸ்க் (திரட்சித் தட்டு) என்பார்கள். இந்தத் தட்டிலிருந்து ஆவேசமாக பல எக்ஸ் (ல) கதிர்கள் அடிக்கடி வெளிப்படும். இடைஇடையே ரேடியோ நுண் அலைகளும் வெளிப் படும். ஏற்கனவே இந்த நிகழ்வுகளைப் பற்றி நன்கு அறிந்த பிரபஞ்சவியல் வல்லுநர்கள், கரும்துளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்கூடாக அறிந்துள்ளனர்.
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

Monday, June 08, 2009

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 7

சுமார் 100 முதல் 250 மில்லியன் ஆண்டு வாக்கில் முதல் தலைமுறை நட்சத்திரங்கள் உதிக்க ஆரம்பித்தன. ஆற்றல் ஏற்ற தாழ்வுகளால் மேகம் போன்ற ஆதி கேலக்ஸிகள் ஆங்காங்கே குவிய ஆரம்பித்தன. அவற்றிடையே முதல் தாரகைகள் கண் விழித்தன.

ஆரம்பத்தில் ஆதி கேலக்ஸிகள் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களைத் தவிர வேறு ஏதும் உருவாகாத நிலையில், ஆதி விண்மீன்கள் பெரிய ஹைட்ரஜன் கோளங்களாக பல்லாயிரம் மடங்கு ஒளி வீசிய படி இருந்தன.

பல விண்மீன்கள் சீக்கிரமே பழுத்து வெடித்துச் சிதறின. அந்தச் சிதறல்களில் ஏராளமான கனரக அணுக்களும் இருந்தன. சில சுருங்கி கரும்துளைகளாக மாறி கேலக்ஸி குவியல்களின் மையமாக விளங்க ஆரம்பித்தன.

ஒவ்வொரு சூரியனும் (அதாவது நட்சத்திரங்களும்) எப்போது நாம் சுருங்கி பாக்கு அளவுக்கு குறைந்து போவோம் என்று காத்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அந்த நசுக்கமே அதன் விரிவுக்கும் காரணம். நசுக்கத்தால் ஏற்படும் அணுக்கரு பிணைவுகளால் அணுசக்தி வெளிப்படுகிறது. அந்த அணுசக்தியின் வெப்பம் சூரியனை பன் மாதிரி உப்ப வைக்கிறது. ஒரு பக்கம் நசுக்கமும், மறுபக்கம் விரிவும் சேர்ந்து சூரியனை ஒரு நிரந்தர கோளமாக நிறுத்தி வைக்கிறது.
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358