சாருஹாசன் என்றால் நம் எல்லோருக்கும் அவர் ஒரு சிறந்த நடிகர் என்று மட்டுமே தெரியும். ஆனால் அவர் வானொலியோடும் தொடர்பு கொண்டவர் என்பது மிகச்சிலருக்கு மட்டுமே தெரியும். ஹாம் வானொலித்துறையில் பழுத்த அனுபவம்கொண்ட இவரை ஒரு மாலை வேளையில் நமது சர்வதேசவானொலி நேயர்களுக்காக அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
ஆழ்வார்ப்பேட்டையில், முர்ரேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டைப்பற்றி அங்குள்ளவர்களிடம் யாரைக் கேட்டாலும் மணிரத்தினம் வீடா என்றே கேட்கிறார்கள். 77 வயதாகும் சாருஹாசன் தற்பொழுது தனது மகள் சுஹாசினியுடன் வசித்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு பாரிஸில் ஏற்பட்ட ஒரு விபத்தில் இரண்டு வருட காலம் நகர முடியாமல் இருந்தவர் இப்பொழுது பழைய சுறுசுறுப்புடன் நம்மோடு ஹாம் வானொலி பற்றி உரையாடியதன் எழுத்து வடிவம் இந்த இதழில் இடம்பெறுகிறது.
வானொலித் துறையில் ஆர்வம் வந்தது எப்படி?
பரமக்குடியில் இருக்கும் ஒரு மாணவனை காரைக்குடியில் உள்ள ஒரு கல்லூரிக்கு சேர்க்கச்சென்று இருந்தேன். அங்குள்ள மாணவர் விடுதியில் அந்த மாணவனைத் தங்க வைத்துவிட்டு வரும்போது, அருகில் உள்ள ஒரு அறையில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர் ஒருவர் தபால் அலுவலகங்களில் தந்தி அடிப்பதுபோல் ஏதோ செய்துகொண்டு இருந்தார். அவரிடம் அது என்ன என்று ஆர்வமுடன்கேட்டேன். அதற்கு அவர், அது மோர்ஸ் கீ என்றும், அதன்மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார். அவரது பெயர், சாரி. அவரது Call signVU2SR. அதன்பின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவரிடம் சென்று மோர்ஸ் கற்றுக்கொண்டேன். அதன்பின் அவர் ஜெர்மனிக்கு சென்று விட்டார். அதுவே முதன்முதலில் ஹாம்ரேடியோ மீது ஆர்வம் வரக் காரணமாக இருந்தது.
முதன் முதலில் ஹாம் வானொலியில் பேசியது பற்றி?
உண்மையைக் கூற வேண்டுமாயின் முதலில் ஹாம் வானொலியில் நான் பேசியது எனது Call signல் அல்ல. சாரி அவர்கள் ஜெர்மனி சென்று விட்டதால் அவரது Call sign-ல் பேசினேன். இதை VU2LE எனும் ஹாம் உபயோகிப்பாளர் கேட்டுவிட்டு, Òநீ சாரி அல்ல, உனதுபெயர் என்ன?Ó, என்று ஹாம் ரேடியோவில் கேட்டதுதான் தாமதம். உடனே வானொலிப்பெட்டியை நிறுத்திவிட்டு வெளியே வந்துவிட்டேன். அதன்பின் அவர் யார் எனக் கண்டுபிடித்து, அவரிடமே மீண்டும் பயிற்சி பெற்றேன். அவர் பெயர் பாலகிருஷ்ணன்.
அந்தக் காலகட்டத்தில் இருந்த ஹாம் வானொலி லைசன்ஸ் பெற்றோரின் எண்ணிக்கை?
நான் ஹாம் வானொலி உபயோகிக்க உரிமம் வாங்கியபோது இந்தியாவில் இருந்த ஹாம் வானொலிக்கு உரிமம் பெற்றோரின் மொத்த எண்ணிக்கையே 400தான். ஆனால் 1980களில் சென்னையில் மட்டுமே ஹாம் வானொலிக்கு தேர்வு எழுதியவர்கள் 6000 பேர். அந்த சமயத்தில் இந்தியாவிலேயே அதிக ஹாம் வானொலி உபயோகிப்பாளர்கள் இருந்த மாநிலமாக தமிழகம் இருந்தது, அடுத்த இடத்தில் கேரளா இருந்தது. (தொடரும்)
No comments:
Post a Comment