Monday, June 21, 2010

'கலைக்கோலம்" சற்சொரூபவதி நாதன்

.

கல்வி

சற்சொரூபவதி நாதன் என்பவர் இலங்கையில் 40 வருடகாலம் ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் விளங்கும் ஒரே தமிழ்ப் பெண் ஆவார்

ஆரம்பக் கல்வியை யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும், உயர் கல்வியை சென்னைப் பல்கலைக் கழகத்திலும் பெற்று விஞ்ஞானப் பட்டதாரியானவர். பின்னர் பெளத்த மகளிர் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியையாக பணியாற்றியவர்.

ஒலிபரப்புத்துறை

1965ல் ஒலிபரப்புத்துறையில் இணைந்து கொண்டு அறிவிப்பாளரானார். நாடகத்துறை, பூவையர் பூங்கா, பாடசாலை மாணவர் கல்வி நிகழ்ச்சி என்பனவற்றோடு, 'கலைக்கோலம்" சஞ்சிகை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். 1970ம் ஆண்டில் சிறந்த அறிவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டு, ஜனாதிபதி விருதைப் பெற்றவர். ஒலிபரப்பாளருக்கான 'உண்டா' விருதையும் பெற்றிருக்கிறார்


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

Monday, June 14, 2010

இலங்கை மெல்லிசை பிதா : எஸ். கே. பரராஜசிங்கம்


எஸ். கே. பரராஜசிங்கம்

எஸ். கே. பரராஜசிங்கம் (கட்டுவன், யாழ்ப்பாணம்), இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரும், மெல்லிசை, கர்நாடக இசைப் பாடகருமாவார். இலங்கை மெல்லிசை பிதா என்றறியப்படுபவர். சர்வதேச "உண்டா" விருதினைத் தம் வானொலிப் பணிக்காகப் பெற்றுக் கொண்டவர். தனது சகோதரரான வைத்தியகலாநிதி எஸ். கே. மகேஸ்வரன் உடன் இணைந்து கர்நாடக கச்சேரிகள் செய்திருக்கிறார். வானொலியில் "விவேகச் சக்கரம்" என்ற பொது அறிவு நிகழ்ச்சியை நடத்தியவர்.

மெல்லிசைப் பாடல்கள்

இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் விளம்பர நிறுவனம் ஒன்றின் சார்பில் காவலூர் ராசதுரைதயாரித்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் இவரது பாடல்கள் ஒலிக்கத் தொடங்கியதே இலங்கையில் தமிழ் மெல்லிசையின் ஆரம்பம் என்று கருதப்படுகிறது. இவரது மெல்லிசைப் பாடல்கள் 'ஒலி ஓவியம்' என்ற பெயரில் 1994ல் ஒலி நாடாவாக வெளியிடப்பட்டது. பின்னர் கனடாவில் 'குளிரும் நிலவு' என்ற தலைப்பில் குறுந்தட்டாக வெளிவந்தது.


வெளி இணைப்புக்கள்

Monday, June 07, 2010

செய்திகள் - வாசிப்பது எஸ். புண்ணியமூர்த்தி

எஸ். புண்ணியமூர்த்தி ஊர்காவற்றுறை, கரம்பொன் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல அறிவிப்பாளரும், செய்தி வாசிப்பாளருமாவார். தனது திறமையினால் பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப்பிரிவின் பணிப்பாளராக நியமனம் பெற்றார். வானொலி அஞ்சல், நேர்முக வர்ணனையில் புகழ் பெற்றவர்.கண்டதும் கேட்டதும் செய்திச்சுருள், வளரும் பயிர், எமது அதிதி, சுழலும் ஒலிவாங்கி, நாளைய சந்ததி, இசைச் சங்கமம், இசையும் கதையும் ஆகிய நிகழ்ச்சிகளை தயாரித்து வழ்ங்கியவர்.தனது வானொலி அனுபவங்களை " செய்திகள் - வாசிப்பது எஸ். புண்ணியமூர்த்தி" என்ற பெயரில் ஆங்கில நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

Saturday, June 05, 2010

பிபிசி நேயர் எண்ணிக்கை அதிகரிப்பு

பிபிசியின் உலகச் செய்திகளை வானொலியிலும் தொலைக்காட்சியிலும், இணையதளம் மூலமாகவும் அறிந்துகொள்கின்ற நேயர்களின் வாராந்திர எண்ணிக்கை முன்பில்லாத அளவுக்கு 24 கோடியாக அதிகரித்துள்ளது.

சிற்றலை வரிசை மூலம் பிபிசி வானொலி நிகழ்ச்சிகளை கேட்பவர்கள் எண்ணிக்கையில் 2 கோடி குறைந்துள்ளது என்றாலும்கூட, மொத்த நேயர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவிலும் வங்கதேசத்திலும் சிற்றலை நேயர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது.

பிபிசி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியிலும் இணையம் மூலமாகவும் பெறுகின்ற புதிய நேயர்கள் கோடிக்கணக்கில் வந்து சேர்ந்துள்ளது இந்த அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது.

பிபிசி செய்திகள் பல வெளிநாடுகளில் உள்ள நேயர்களைச் சென்றடைவதற்கான முக்கிய வழியாக ஒரு காலத்தில் விளங்கியது சிற்றலை வானொலி ஒலிபரப்புகள்தான். ஆனால் தற்போது மக்களிடையே சிற்றலை ஒலிபரப்புகளைக் கேட்கின்ற வழக்கம் மிக வேகமாகக் குறைந்துவருகிறது.

பிபிசி தனது நிகழ்ச்சிகளை மென்மேலும் சிற்றலை வானொலி ஒலிபரப்பிலிருந்து பண்பலை வானொலி ஒலிபரப்புக்கும், தொலைக்காட்சிக்கும் இணையதளத்துக்கும் மாற்றி வருகிறது.

இந்த மூன்று வகையான சேவைகளிலும்தான் பிபிசி செய்திகளுக்கான நேயர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

வானொலி, தொலைக்காட்சி, இணையதளம் என்று பல வகைகளிலும் செய்திகளை வழங்குவது என்ற பிபிசியின் உத்தி வெற்றிபெற்றுள்ளது என்பதை இந்த நேயர் எண்ணிக்கை அதிகரிப்பு காட்டுவதாக பிபிசியின் உலகளாவிய செய்திச் சேவைகள் பிரிவுகான இயக்குநர் பீட்டர் ஹாரக்ஸ் தெரிவித்துள்ளார்.

உலக சேவையை நடத்துவதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிதியை பிரிட்டிஷ் வெளியுறவுத் துறையிடம் இருந்து பெறுவதற்கான ஆயத்தப் பணிகளை பிபிசி நிறுவனத்தார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

பெரிய அளவில் செலவுக் குறைப்புகளை அறிவிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் எண்ணியுள்ள நிலையில், பிபிசி உலக சேவைக்கான நிதியைப் பெறுவதில் வெளியுறவுத் துறையுடன் பிபிசி நிறுவனத்தார் அதிகம் விவாதிக்க வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Wednesday, June 02, 2010

மீண்டும் தமிழகத்தில் இலங்கை வானொலி

மீண்டும் தமிழகத்தில் ஒலிக்கத் துவங்கியது இலங்கை வானொலி. கடந்த ஜூன் 1 முதல் சோதனை முறையில் ஒலிபரப்ப உள்ளதாக கூறிய இலங்கை வானொலி ஜூன் 2 முதல் தனது சோதனை ஒலிபரப்பினை தமிழக நேயர்களுக்காக மத்திய அலையில் (873 கி. ஹெ) தொடங்கியுள்ளது. காலை 7 முதல் 11 மணி வரை இந்த சோதனை ஒலிபரப்பினை தமிழக நேயர்கள் கேட்கலாம். இது படிப் படியாக வழமையான ஒலிபரப்பாக்கப் படும் என இலங்கை வானொலியின் இயக்குனர் ஹட்சன் சமரசின்கே தெரிவித்துள்ளார்.