Saturday, September 29, 2012

திரிகோணமலை: இலங்கை வானொலி

திரிகோணமலை: இலங்கை வானொலியானது சமீப காலமாக திரிகோணமலையில் உள்ள ஒலிபரப்பிகளைக் கொண்டு சோதனை ஒலிபரப்புகளைச் செய்து வருகிறது. இந்த ஒலிபரப்புத் தளமானது ஜெர்மன் வானொலி தனது சிற்றலை மற்றும் மத்திய அலை ஒலிபரப்புகளுக்காக பயன்படுத்தியது ஆகும்.
கடந்த ஆண்டு இந்த தளத்தினைவிட்டு ஜெர்மன் வானொலி சென்றுவிட்டதால், அந்த ஒலிபரப்பிகளை வாடகைக்கு விட இலங்கை வானொலி தீர்மானித்தது. அதன் பயனாக இப்பொழுது அட்வண்டிஸ்ட் உலக வானொலி மற்றும் குடும்ப வானொலி ஆகியவை தனது ஒலிபரப்புகளைத் இங்கே இருந்து அஞ்சல் செய்யத் துவங்கியுள்ளன. இங்கு அமைந்துள்ள மத்திய அலை ஒலிபரப்பி மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும்.
எனவே அதனைக் கொண்டு இலங்கை வானொலி ‘தென்றல்’ ஒலிபரப்பினைச் தமிழக நேயர்களுக்கு அஞ்சல் செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தமிழக மக்கள் எதிர்பார்கின்றனர். எண்ணம் நிறைவேற ஹட்சன் சமரசிங்கே மனது வைக்கவேண்டும்.

Saturday, September 22, 2012

போல்ஸ்கி வானொலி

போலந்து: போல்ஸ்கி வானொலி - சிற்றலையில் ஒலிபரப்பில் இருந்து கடந்த 30 மார்ச் 2012-ல் போலந்தின்தேசிய வானொலியான போல்ஸ்கி வானொலி நிறுத்திக் கொண்டது. தனது 80 ஆண்டுகால சிற்றலை சேவையில் இருந்து நிறுத்தப்படும் மற்றும் ஒரு பழமையான வானொலியாகும்.

Saturday, September 15, 2012

க்யூ.ஆர் குறியீட்டில் சர்வதேச வானொலி

அறிவிப்பு: உங்களிடம் க்யூ.ஆர் குறியீட்டினை ஸ்கேன் செய்யும் வசதி கொண்ட மொபைல் இருந்தால், அருகில் உள்ள படத்தினை ஸ்கேன் செய்து இனி சர்வதேச வானொலியைப் படிக்கலாம். –ஆசிரியர்

Thursday, September 13, 2012

சர்வதேச வானொலி விழா



சர்வதேச வானொலி விழா (IRF) ஜூரிச், சுவிட்சர்லாந்தில் 12 முதல் 16 செப்டம்பர் 2012 வரை நடைபெற உள்ளது.  உலகின் மிக முக்கிய மற்றும் செல்வாக்கு மிகுந்த நடுத்தர, இசை வானொலிகள் பல இதில் கலந்துகொள்ள உள்ளன.  இது போன்ற பொது விழா நிகழ்வு வடிவம் உலகிலேயே இது தான் முதன் முறை. விழாவில் இசை வானொலி துறையில் புகழ்பெற்ற பல வானொலிகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளது. இதற்கென ஒரு தனிப்பட்ட இணைதளம் தொடங்கப்பட்டு, அதிலும் ஒலிபரப்பினை வழங்குகிறது. முகவரி: http://www.internationalradiofestival.com

இந்தோனேசியாவிற்கு இலவச பயணம்



ரேடியோ இந்தோனேசியா(RRI) தனது சிற்றலை நேயர்களுக்கு ஒரு போட்டியை வைத்து, அதில் வெற்றி பெற்றவர்களை இலவசமாக தனது நாட்டிற்கு அழைத்து சிறப்பித்து வருகிறது. இந்தப்போட்டியில் கடந்த ஆண்டு இந்தியாவை சார்ந்த சுவப்பன் சக்ரவர்த்தி இலவச பயணம் மேற்கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் வெற்றியாளார்கள்:
1. Christian Milling, from Euskirchen, Germany :
2. Tarek Zeidan from Helwan Cairo Egypt.
2. Didarul Iqbal, from Dhaka, Bangladesh :
3. Keith Sedgwick from London, GB
5. Mauno Ritola from Heinävaara, Finland

Wednesday, September 12, 2012

குடியரசு தலைவர் பிரணாப் சென்னை வானொலியைப் புகழ்ந்தார்



சென்னை அகில இந்திய வானொலி (AIR) நிலையத்தினை தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தினை பிரபலப்படுத்துவதில் "மகத்தான" பங்களிப்பிற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டுத் தெரிவித்தார்.
"பல ஆண்டுகளாக தரமான நிகழ்ச்சிகளை தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தினை வளர்த்தெடுப்பதில் சென்னை வானொலியின் பங்களிப்பு அபரிமிதமாக இருந்துள்ளது”. குறிப்பாக கர்நாடக சங்கீதத்திற்கு இது செய்த பங்களிப்பு மிக அதிகம்.

இது இளைஞர்களின் திறனை மெம்படுத்தும் வகையான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வந்துள்ளது மற்றும் பாரம்பரிய இசையை பிரபலப்படுத்த உதவி செய்திருக்கிறது. சென்னை வானொலி இன்று சமூகத்தில் பரந்துபட்ட அனைத்து மக்களுக்கும் உதவுகிறது," என்று கூறினார்.

இந்த நிலையமானது விவசாய விரிவாக்க திட்டங்கள் மற்றும் கல்வி திட்டங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் மாணவர்களை மெம்படுத்த உதவியது என்றும் குறிப்பிட்டார். சென்னை வானொலி எழும்பூரில் ஒரு சிறிய ஸ்டூடியோவில் சென்னை மாகாணத்தின் ஆளுநர் எர்ஸ்கின் கோமகனால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஜூன் 16, 1938 அன்று திறக்கப்பட்ட இந்த நிலையமானது ஒரு 250W மத்திய அலை டிரான்ஸ்மிட்டர் கொண்டு தொடக்க காலத்தில் ஒலிபரப்பி வந்தது குறிப்பிட்த்தக்கது. ஜூலை 1954 ல் இருந்து இன்றுள்ள காமராசர் சாலை வளாகத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

Tuesday, September 11, 2012

தமிழோசையின் முன்னாள் தலைவர் ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்தார்


தமிழோசையின் முன்னாள் துறைப் பொறுப்பாளரும் பிரபல ஒலிபரப்பாளருமான ஷங்கரன் சங்கரமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

 அந்தக் கம்பீரமான குரலை தமிழோசையின் நீண்ட நாள் நேயர்கள் மறந்திருக்க முடியாது.
சுமார் இரண்டரை தசாப்தங்கள் தமிழோசை மூலமாக வானலைகளில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்தும் தமிழோசையைக் கேட்டு வந்த அந்தக்கால நேயர்களை மயக்கிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்துவிட்டார்.
கடந்த சில மாதங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த சங்கரமூர்த்தி, லண்டன் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக மற்றும் இருதய நோயால் காலமானார். அவருக்கு வயது 82. மறைந்த சங்கரமூர்த்தி, 1966லிருந்து 1991 வரை தமிழோசையின் பணியாற்றினார். அவர் பணியாற்றிய காலப் பகுதியில் தமிழோசை வாரமிருமுறை என்ற நிலையிலிருந்து வாரம் ஐந்து நாட்கள் ஒலிபரப்பு என்ற அளவுக்கு வளர்ந்தது.
தமிழோசையில் 1970கள் மற்றும் 80களில் பெரும்பாலும் சஞ்சிகை வடிவில் இருந்த நிகழ்ச்சி, சங்கரமூர்த்தியின் தமிழ்ப் புலமைக்கு ஒரு பெரிய களத்தைத் தோற்றுவித்துத் தந்தது.
ஆழ்ந்த தமிழ்ப் புலமை கொண்ட சங்கரமூர்த்தி, அந்தக் காலகட்டத்தில் ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் பிரபல நாடகங்கள் பலவற்றையும், கிரேக்க மகாகவி ஹோமரின் இதிகாசங்களான இலியட், ஒடிசி போன்றவற்றையும், தமிழில் கவிதை நாடக வடிவிலேயே தந்து, அவை நேயர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.
மற்றொரு பிரிட்டிஷ் நாடகாசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் புகழ் பெற்ற நாடகமான “பிக்மேலியன்” என்ற நாடகத்தையும் ஷங்கர் தமிழில் மொழிபெயர்த்து, அதில் தமிழ் திரைப்பட நடிகை ராதிகா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர அவரே சொந்தமாக பல வானொலி நாடங்கங்களையும் இயற்றியிருக்கிறார். தமிழோசை நேயர்கள் அடிக்கடி கேட்ட அந்தப் பாடல் கூட அவர் இயற்றி சீர்காழி கோவிந்தராஜன் இங்கே லண்டன் வந்தபோது பாடி ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒன்றுதான்.
சங்கரின் மொழிபெயர்ப்புத் திறன் மற்றும் அவரது குரல் வளம், அவருக்கு பல்லாயிரக்கணக்கான விசிறிகளைப் பெற்றுத்தந்தது.
தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் அவர் பல முறை சென்று நிகழ்ச்சிகளைத் தந்திருக்கிறார்.
(நன்றி: பிபிசி தமிழோசை)

Monday, September 10, 2012

இந்தியாவின் முதல் 1000 கிலோ வாட் டி.ஆர்.எம்


இந்தியாவின் முதல் 1000 கிலோ வாட் டிஜிட்டல் ரேடியோ மொண்டியல் (டி.ஆர்.எம்) சூப்பர் பவர் ஒலிபரப்பி குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள லியாரே கிராமத்தில் உள்ள அகில இந்திய வானொலியில் தொடங்கப்பட்டது.

 இந்த விழாவில் பேசிய பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஜவஹர் சிர்கார், அகில இந்திய வானொலி விரைவில் மற்ற நிலையங்களிலும் டி.ஆர்.எம் எனும் டிஜிட்டல் தொழில்நுட்ப டிரான்ஸ்மிட்டர்களை நிறுவவுள்ளது என்று கூறினார். 
இந்த டிஆர்எம் தொழில்நுட்ப சூப்பர் பவர் ஒலிபரப்பி கொண்டு ஒரே நேரத்தில்  டிஆர்எம், ஏ.எம் மற்றும் சைமல்காஸ்ட் முறைகளில் ஒலிபரப்பும் திறன் வாய்ந்தது ஆகும். இதுவே நாட்டின் முதல் சைமல்காஸ்ட் ஒலிபரப்பி என்பதில் நமக்கெல்லாம் பெருமையே. இந்தத் திட்டத்திற்காக 42 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியிருந்த்து குறிப்பிட்த்தக்கது.

இந்த ஒலிபரப்பி கொண்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் வட மேற்கு திசையில் உள்ள சில வளைகுடா நாடுகளுக்கும் ஒலிபரப்பப்படுகிறது. அகில இந்திய வானொலியின் வெளிநாட்டு சேவைகளான உருது, சிந்தி மற்றும் பெலுசி ஆகிய மொழிகள் இதன் மூலம் ஒலிபரப்பப்படுகின்றன. மத்திய அலையில் 1071 கிலோ ஹெர்ட்ஸிலும் டி.ஆ.எம் சேவையானது 1080 கிலோ ஹெர்ட்ஸிலும் ஒலிபரப்பப்படவுள்ளது. தற்சமயம் சோதனை ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் உருது மற்றும் விவித பாரதியின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வருகிறது.

Saturday, September 08, 2012

புதிய வண்ண அட்டை

அமெரிக்கா: WWRB– ஓவர் கம் மினிஸ்ட்ரியால் நடத்தப்படும் இந்த வானொலி தற்பொழுது, தனது நேயர்களுக்கு புதிய வண்ண அட்டையை(QSL) அனுப்பி வருகிறது. நேயர்கள் அனுப்பும் கடிதங்களுக்கு பதில் எழுதவே தயங்கும் வானொலிகளுக்கு மத்தியில் இந்த வானொலி புதிய வண்ண அட்டைகளை அனுப்புவது ஒரு மகிழ்ச்சிக்கு உரிய செய்தியாகும். இவர்களை நீங்களும் தொடர்பு கொள்ளலாம். வான் அஞ்சல் முகவரி: WWRB, Airline Transport Communications Inc., Listeners Services, P.O. Box: 7, Manchester, TN 37349-0007, USA.
 

புதிய வண்ண அட்டை

ரேடியோ ப்ரீ ஆசியா வானொலியானது தனது 16ஆவது ஆண்டு விழாவினைக் கொண்டாடி வரும் இந்தத் தருணத்தினில் புதிய வண்ண அட்டையை வெளியிட உள்ளது. 1996 செப்டம்பர் 29 அன்று மாண்டரின் மொழியில் தனது முதல் ஒலிபரப்பினை ஆசிய நேயர்களுக்காக செய்தது. ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்ட நாடுகளுக்காக இந்த வானொலியானது அமெரிக்காவினால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வண்ணமயமான இந்த வண்ண அட்டையில் ஆசிய நாட்டின் வரைபடமும், அதன் மேல் ரேடியோ ப்ரீ ஆசியா முத்திரையுடன் கூடிய மைக்கும் உள்ளது மிக அழகாக உள்ளது. தேவைப்படும் நேயர்கள் அவர்களது நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு Reception Report அனுப்பினால் இந்த வண்ண அட்டையை (QSL) அனுப்பி வைப்பர். சேகரிப்பாளர்கள் அனைவரின் கையிலும் இருக்க வேண்டிய முக்கிய வண்ண அட்டை ஆதலால், தவராமல் பெற்றுக்கொள்ளுங்கள். தொடர்பு முகவரி:

            Reception Reports
            Radio Free Asia
            2025 M. Street NW, Suite 300
            Washington DC 20036
            United States of America.  
             email at qsl@rfa.org 

Tuesday, September 04, 2012

பேங்காக் வானிலை வானொலி

தாய்லாந்து: பேங்காக் வானிலை வானொலி – பொதுவாக சாதரண சர்வதேச வானொலிகளே நேயர்களுக்கு வண்ண அட்டைகளை அனுப்ப தயங்குகின்ற இந்த காலகட்டத்தில் பேங்காக் வானிலை வானொலி தற்பொழுது கடிதம் எழுதும் நேயர்களுக்கு வண்ண அட்டைகளை உடனுக்குடன் அனுப்பி வருகிறது. அதுவும் மின் அஞ்சலில் அனுப்பிய கடிதத்திற்கு ஒரு மாத காலத்தினில் பதிலினை அனுப்பியுள்ளது இந்த வானொலி. இவர்களது ஒலிபரப்பானது 8743 அலை எண்களில் இந்திய நேரம் மாலை 05.08-க்கு கேட்கலாம். தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி: info_service@tmd.go.th ApXÕ tmd@metnet.tmd.go.th   (JENSEN – USA, Bruce Jensen)