Showing posts with label தமிழோசை. Show all posts
Showing posts with label தமிழோசை. Show all posts

Monday, July 29, 2024

பிபிசி டிஜிட்டல் ஊடகப் பயிற்சித் திட்டம்


 பிபிசியின் டிஜிட்டல் ஊடகப் பயிற்சித் திட்டத்தில் இணைய விருப்பமா?


இந்த டிஜிட்டல் ஊடகப் பயிற்சித் திட்டம் ஆறு மாதங்கள் கால அளவுடையது. பயிற்சிக் காலத்திற்கு உரிய ஊதியம் வழங்கப்படும். இதில் எப்படி இணைவது என்பது உட்பட இந்தத் திட்டம் குறித்து விரிவாக விளக்க எங்கள் குழு வரும் 30ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு வருகிறது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை நடக்கும் அமர்வில் கலந்து கொண்டு உங்கள் சந்தேகங்களை நீங்கள் கேட்கலாம். இந்த அமர்வில் கலந்து கொள்ள எந்த முன்பதிவும் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

Tuesday, September 11, 2012

தமிழோசையின் முன்னாள் தலைவர் ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்தார்


தமிழோசையின் முன்னாள் துறைப் பொறுப்பாளரும் பிரபல ஒலிபரப்பாளருமான ஷங்கரன் சங்கரமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

 அந்தக் கம்பீரமான குரலை தமிழோசையின் நீண்ட நாள் நேயர்கள் மறந்திருக்க முடியாது.
சுமார் இரண்டரை தசாப்தங்கள் தமிழோசை மூலமாக வானலைகளில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்தும் தமிழோசையைக் கேட்டு வந்த அந்தக்கால நேயர்களை மயக்கிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்துவிட்டார்.
கடந்த சில மாதங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த சங்கரமூர்த்தி, லண்டன் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக மற்றும் இருதய நோயால் காலமானார். அவருக்கு வயது 82. மறைந்த சங்கரமூர்த்தி, 1966லிருந்து 1991 வரை தமிழோசையின் பணியாற்றினார். அவர் பணியாற்றிய காலப் பகுதியில் தமிழோசை வாரமிருமுறை என்ற நிலையிலிருந்து வாரம் ஐந்து நாட்கள் ஒலிபரப்பு என்ற அளவுக்கு வளர்ந்தது.
தமிழோசையில் 1970கள் மற்றும் 80களில் பெரும்பாலும் சஞ்சிகை வடிவில் இருந்த நிகழ்ச்சி, சங்கரமூர்த்தியின் தமிழ்ப் புலமைக்கு ஒரு பெரிய களத்தைத் தோற்றுவித்துத் தந்தது.
ஆழ்ந்த தமிழ்ப் புலமை கொண்ட சங்கரமூர்த்தி, அந்தக் காலகட்டத்தில் ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் பிரபல நாடகங்கள் பலவற்றையும், கிரேக்க மகாகவி ஹோமரின் இதிகாசங்களான இலியட், ஒடிசி போன்றவற்றையும், தமிழில் கவிதை நாடக வடிவிலேயே தந்து, அவை நேயர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.
மற்றொரு பிரிட்டிஷ் நாடகாசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் புகழ் பெற்ற நாடகமான “பிக்மேலியன்” என்ற நாடகத்தையும் ஷங்கர் தமிழில் மொழிபெயர்த்து, அதில் தமிழ் திரைப்பட நடிகை ராதிகா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர அவரே சொந்தமாக பல வானொலி நாடங்கங்களையும் இயற்றியிருக்கிறார். தமிழோசை நேயர்கள் அடிக்கடி கேட்ட அந்தப் பாடல் கூட அவர் இயற்றி சீர்காழி கோவிந்தராஜன் இங்கே லண்டன் வந்தபோது பாடி ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒன்றுதான்.
சங்கரின் மொழிபெயர்ப்புத் திறன் மற்றும் அவரது குரல் வளம், அவருக்கு பல்லாயிரக்கணக்கான விசிறிகளைப் பெற்றுத்தந்தது.
தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் அவர் பல முறை சென்று நிகழ்ச்சிகளைத் தந்திருக்கிறார்.
(நன்றி: பிபிசி தமிழோசை)